வியாழன், 24 ஜூலை, 2014

சிகண்டியின் அம்புகளும் 
கட்ஜுவின் கணைகளும்!
----------------------------------------   
கட்ஜு! மார்க்கண்டேய கட்ஜு!!
கணைகளை வீசுகிறார்! யார் மீது?
செத்துப்போன ஒருவர் மீது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி அசோக்குமார் 
ஊழல் புகாரில் சிக்கியவர்.  ஊழல் கறை  படிந்த 
அவரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆக்குவதற்கு 
மத்திய காங்கிரஸ் அரசுக்கு  திமுக நிர்ப்பந்தம்
கொடுத்தது என்பதுதான் கட்ஜுவின் குற்றச்சாட்டு.

நல்லது கட்ஜு அவர்களே!திரு அசோக்குமார் 
ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 
நியமிக்கப் பட்டது பெப்ரவரி 2007இல்.
அவர் பணி  ஒய்வு பெற்றது  ஜூலை 2009இல்.
இறந்து போனது அக்டோபர் 2009இல்.
தாங்கள் புகார் கூறுவது ஜூலை 2014இல்.

செத்துப்போன ஒருவர் மீது, செத்து ஐந்து 
ஆண்டுகள் கழித்து இப்போது புகார் கூறும் 
தாங்கள் ஒரு நபும்சகன்! ஒரு பேடி!
ஒரு சிகண்டி!!!

தன்தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லமுடியாமல் 
செத்துப்போன ஒருவர் மீது புகார் கூறுவது 
என்ன வகை நேர்மை?

மறைந்திருந்து வாலியைக் கொன்ற ராமன் 
காலம் முழுதும் பழி சுமந்து நிற்கிறான். 

     வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே
    மறைந்து வில்லால் எவ்வியது என்னை?

என்று வாலி கேட்பதாக கம்பன் எழுதுவான்.
ராமனிடம் பதில் இல்லை.ராமனைத் தெய்வமாக 
வணங்கும் கம்பனால் ராமன் வாலியை மறைந்து 
கொன்ற சிழிசெயலை நியாப் படுத்த முடியாது. 

 அதுபோல் 
கட்ஜு அவர்களே, தாங்கள்  செத்த பிறகும் 
இந்தப் பழி நீங்காது. . 

திரு அசோக்குமார் நேர்மையானவர் என்று 
வாதிடுவது நமது நோக்கம் இல்லை.உச்சந் 
தலையில் இருந்து உள்ளங்கால் வரை 
ஊழல் மலிந்து கிடக்கும் ஒரு நாட்டில் 
எந்த ஒரு நிறுவனமும் நேர்மையானதாக 
இருந்து விட முடியாது, நீதித் துறை உள்பட.

ஒடுக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமைக்கு 
உள்ளாக்கப் பட்ட ஒரு சமூகத்தில் இருந்து 
வந்த ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக 
உயர்த்துவது என்பது பகீரத் முயற்சி.
சமூகநீதியைச் செயலாக்குவது என்பதில் 
பிற காரணிகளைக் கருத்தில் கொள்ள 
முடியாது தகுதி, திறமை, நேர்மை என்பன 
எல்லாம் விரும்பத் தக்கவையே தவிர 
கட்டாயமானவை அல்ல.நீதிபதியாக 
உயர்த்தப் பட்டவர் அடிமட்ட சமூகத்தைச் 
சேர்ந்தவரா என்பது மட்டும்தான் தீர்மானிக்கிற 
அம்சம்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதைப் போல,
பாஜக ஆட்சிக்கு வந்த நேரம் பார்த்து 
கட்ஜு இவ்வாறு கணைகளை வீசுவது 
அவரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தி 
விடுகிறது.வரும் பெப்ரவரி 2015இல் முடியப் போகும் 
 தமது பத்திரிக்கை கவுன்சில் தலைவர் பதவி 
நீட்டிக்கப் படாதா என்ற நப்பாசைதான் 
கட்ஜுவின் செயல்களுக்குக் காரணம்.

2002 குஜராத் படுகொலைகளில் நரேந்திர 
மோடிக்குப் பங்கு இருக்கிறது நரேந்திர மோடி 
ஒரு கொலைகாரன் என்று கூவினார் கட்ஜு.
இவ்வாறு எலும்புத் துண்டு வீசிய காங்கிரசுக்கு 
வாலாட்டினார் கட்ஜு.இப்போது ஆட்சி மாறி 
விட்டதனால் பாஜகவைப் பார்த்து வாலாட்டுகிறது 
கட்ஜு.

ஆனால் இவர் நினைப்பது போல,மோடி
அவ்வளவு சுலபத்தில் ஏமாறுகிறவர் அல்ல.
கட்ஜுவைப் பற்றிய தெளிவான கணிப்பு 
மோடிக்கு உண்டு.பாஜகவிலும் ஆர்.எஸ்.எஸ்சிலும் 
உள்ள பார்ப்பன அதிகார மையங்களைத் தகர்த்துத்தான் 
மோடி பிரதமர் ஆகி உள்ளார். தனக்கு நம்பகமான 
அமித் ஷாவை பாஜக தலைவராக்கி உள்ளார்.
இன்னும் சொல்லப் போனால், தந்தை பெரியார் 
நடத்திய பார்ப்பன எதிர்ப்புப் போராட்டத்தை 
பாஜகவில் நடத்திக் கொண்டு இருக்கிறார் மோடி.

எனவே கட்ஜுவுக்கு எலும்பு கிடைக்க வாய்ப்பு இல்லை.

***************************************************************    
பகுத்தறிவுக்கு எதிரான பாதையில்
மோடி அரசு!
------------------------------------------------------- 
மதச்சின்னங்களை அணிந்து விளையாட
அனுமதி மறுப்பு-- ஆசியக் கோப்பை கூடைப்பந்து--
----------------------------------------------------------------------------------------------------------------------- 

ஆசியக்கோப்பை கூடைப்பந்து   விளையாட்டுபோட்டி 
அண்மையில் ( ஜூலை 2014 இரண்டாம் மூன்றாம் 
வாரங்களில் ) சீனாவில் உஹான் நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் 
இரண்டு சீக்கியவீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அம்ரித்பால்சிங், அம்ஜ்யோத்சிங் ஆகிய இருவரே அவர்கள்.

ஜூலை 12 அன்று ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 
விளையாட இவ்விரு வீரர்களும் ஆடுகளத்துக்குச் 
சென்றனர்.தங்கள் மத வழக்கப்படி தலைப்பாகை 
அணிந்து சென்ற இவர்களை,உலகக் கூடைப்பந்து
சம்மேளன ( FIBA ) அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
 தலைப்பாகையைக் கழற்றினால்தான் அனுமதிக்க 
முடியும்  என்றனர். வீரர்களும் அதை ஏறறுத் 
தலைப்பாகையைக் கழற்றி விட்டுப் போட்டியில் பங்கு 
கொண்டனர். தொடரில் மீதமிருந்த ஆறு ஆட்டங்களிலும் 
தலைப்பாகையைக் கழற்றி வைத்து விட்டுத் தான் ஆடினர்.

நாடு திரும்பியதும் சீனாவில் தங்களுக்கு நேர்ந்த 
அவமதிப்பு(!!!) குறித்துப் புகார் கூறினர். மோடி அரசின் 
விளையாட்டுத் துறை அமைச்சர் சர்வானந்த  சோன்வால்
FIBA அதிகாரிகளுக்குக் கடுமையான கண்டனத்தைத் 
தெரிவித்துள்ளார்.

விளையாட்டுகளில் மதத்தைக் கலக்கும்அமைச்சரின் 
செயல் பிற்போக்குத் தனமானது. தலைப்பாகை அணிந்து 
விளையாட சீக்கியர்களை அனுமதித்தால், நாளை 
அலகு குத்திக்கொண்டு விளையாட அனுமதி கேட்டு 
தமிழ்நாட்டில் இருந்து ஒரு விளையட்டு வீரன் 
(அனேகமாக ஒரு முருகபக்தன் ) புறப்படலாம்.
இதற்கும் அமைச்சர் சர்வானந்த சோன்வால்
வக்காலத்து வாங்க நேரிடும். பின்னர் இது INFINITY  
வரை போகும். அமைச்சர் சர்வ  ஆனந்தத்தையும் 
இழக்க நேரிடும்.

சீக்கிய மதத்தின் மீது தமிழ் மக்கள் பெருமதிப்பு 
வைத்துள்ளனர். மாவீரன் பகத் சிங் நாத்திகர் என்ற 
போதிலும் சீக்கிய மதத்தில் பிறந்தவர்.நீண்ட தலைமுடியைக் 
கத்தரித்து விட்டுக்கொண்டு முகச்சவரம் செய்த 
தோற்றத்துடன் தான் பகத்சிங் சாகும்வரை காட்சி அளித்தவர்.
ஏனெனில் அவர் மெய்யான புரட்சியாளர்.

மறைந்த மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் 
ஹரிகிஷன்சிங் சுர்ஜித் ஒரு சீக்கியர்.தலைப்பாகை 
உள்ளிட்ட அனைத்து சீக்கிய மதப் பழமைகளையும் 
தீவிரமாகக் கடைப்பிடித்தவர். இதில் ஒன்றும் தவறு இல்லை.
ஏனெனில் சுர்ஜித் ஒரு புரட்சியாளர் அல்ல.எனவே 
பகத்சிங்கைப் போன்று அவர் ஒழுக வேண்டியது இல்லை.

சீக்கிய மதம் சடங்குகளுக்கு எதிரான மதம்தான்.
கிபி 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பஞ்சாப்பில் 
தோன்றிய மதம் அது.தோற்றுவித்தவர் குருநானக்.
தோன்றிய காலம்தொட்டு தொடர்ந்து வளர்ந்து 
கொண்டு இருந்த சீக்கிய மதம் ஔரங்கசீப் காலத்தில் 
கடுமையாக ஒடுக்கப் பட்டது.1675இல் சீக்கிய மத குரு 
தேஜ் பஹதூர் ஔரங்கசீப்பால் படுகொலை செய்யப்பட்டார்.

88 வயது வரை  வாழ்ந்த ஔரங்கசீப் (1618-1707)
அரை நூற்றாண்டுக் காலம் ( 1658-1707) இந்தியாவை 
ஆண்டார்.முஸ்லிம்கள் அல்லாத தமது பேரரசின் 
மற்றக் குடிமக்கள் மீது ஜெசியா ( JIZYAH ) வரியை விதித்தார்.
இந்துக்கள் மீது ஜெசியா வரி விதிக்கப் பட்டது.
இந்துவாக இருப்பதற்காகச் செலுத்தப்பட்ட வரி அது.
அரசின் கருவூலத்தைப் பெருக்குவதற்காக விதிக்கப்பட்ட 
வரி அல்ல அது. மாறாக மத மேலாதிக்கத்தை உறுதி 
செய்வதற்காக விதிக்கப் பட்ட வரி இது.

மதவெறி கொலைத்தாண்டவம் ஆடிய ஔரங்கசீப் 
காலத்தில் இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்று கூடி 
ஓரணியில் திரண்டு,  வாழ்வதற்காகப் போராடினர்.
அந்த ஒற்றுமை இன்றும் நீடிக்கிறது.

வீரத்துக்கும் தியாகத்துக்கும் பெயர் பெற்ற 
சீக்கியப் பெருமக்கள் காலமாற்றத்துக்கு ஏற்ப 
பகுத்தறிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
உலக நாடுகள் அனைத்தும் பங்கு கொள்ளும் 
பொதுவான ஒரு விளையாட்டில், தங்கள் மதத்தின் 
அடிப்படையில் தனிச்சலுகை கோருவது அவர்களின் 
வீரத்துக்கு  இழுக்கு ஆகும். விளையாட்டின் 
அடிநாதமான சமத்துவத்துக்கு எதிரானதாகும்.

    சீக்கிய வீரர்கள் வாழ்க!
    கூடைப்பந்து வாழ்க!!
    கூடவே பகுத்தறிவும் வாழ்க!!!

*************************************************************  
  
                

புதன், 23 ஜூலை, 2014

பூப்படையாத சிறுமிகளை 
மஞ்சத்துக்கு அனுப்புவதா?
-------------------------------------------  

( குழந்தைத் திருமணம்-இந்தியாவுக்கு  ஆறாவது இடம்--
   UNICEF  அறிக்கை--மோடிக்கு நடைபெற்ற 
    குழந்தைத் திருமணம்--இன்ன பிற  )
--------------------------------------------------------------------------------  
ஐநா சபையின் உறுப்பு அமைப்பான  யுனிசெப்
( UNICEF) உலகம் முழுவதும் நடைபெறும் 
குழந்தைத் திருமணங்களை  ஆய்வு செய்து அறிக்கை 
வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி,  
குழந்தைத் திருமணம் அதிகம் நடக்கும் 
நாடுகளில், இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
மேலும் உலகில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் 
மூன்றில் ஒன்று இந்தியாவில் நடைபெறுகிறது.

நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு நடைபெற்ற 
திருமணம் குழந்தைத் திருமணமே. அத்திருமணம் 
நடைபெற்ற போது, மோடிக்கு வயது 18; அவரது மனைவி 
யசோதா பென்னுக்கு வயது 13.    

பிரிட்டிஷ் இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் 
அதிக அளவில் நடைபெற்றன. ஒன்றிரண்டைத் தவிர 
நடந்த  எல்லாத் திருமணங்களும் குழந்தைத் 
திருமணங்களாகவே இருந்தன. ராஜாராம் மோகன்ராய் 
என்னும் சீர்திருத்தப் போராளி குழந்தைத் திருமணம், 
சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூகத் 
தீங்குகளுக்கு எதிராகப் போராடினார். இதன் விளைவாக,
1929இல் பிரிட்டிஷ் ஆட்சி  குழந்தைத் திருமணத் தடுப்புச் 
சட்டத்தைக் கொண்டு வந்தது.( CHILD MARRIAGE RESTRAINT 
ACT 1929).

சுதந்திர இந்தியாவில், குழந்தைத் திருமணத் தடைச் 
சட்டம் 2006இல் கொண்டு வரப்பட்டது ( THE PROHIBITION 
OF CHILD MARRIAGES ACT 2006).இச்சட்டப்படி, ஆணுக்கு 
21 என்றும் பெண்ணுக்கு 18 என்றும் திருமண வயது 
வரையறுக்கப் பட்டது. ஆண் பெண் இருவரில், எவர் 
ஒருவருக்கேனும் நிர்ணயிக்கப் பட்ட வயதை விடக 
குறைந்த வயது இருக்குமேயானால், அத்திருமணம் 
குழந்தைத் திருமணம் என்று இச்சட்டம் வரையறுக்கிறது.
இத் திருமணம் சட்டப்படி செல்லத் தக்கது அல்ல.
குழந்தைத் திருமணம் புரிந்த எவர் ஒருவரேனும் 
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், அத்திருமணம் 
செல்லாது ( NULL AND VOID ) என்று அறிவிக்கப் படும்.     

எனினும் இந்தச் சட்டம் இந்து, கிறித்துவ,ஜைன,
பௌத்த மதத்தினருக்கு மட்டுமே பொருந்தும்.
முஸ்லிம்களுக்குப் பொருந்தாது.இந்தியாவில் 
பொது சிவில் சட்டம் இல்லாததால், இசுலாமியப் 
பெருமக்கள் ஷரியத் சட்டத்தைப் பின்பற்றி 
வருகிறார்கள்.ஷரியத் சட்டங்களும் சரி, முஸ்லிம் 
தனிநபர் சட்டங்களும் சரி, திருமண வயதை 
நிர்ணயிப்பதற்கு  காலவயதை (CHRONOLOGICAL AGE)
கணக்கில் கொள்வதில்லை.உடல் ரீதியாக ஏற்படும் 
வளர்ச்சியின் அடிப்படையில் திருமணத்திற்கான தகுதி 
வந்து விடுவதாகக் கருதுகிறார்கள்.எனவே, பெண் 
18 வயதை அடையும் வரை காத்திருப்பது என்பது 
தேவையற்றது என்பது அவர்கள் மனநிலை.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், 18 மற்றும் 
21 வயதுகளில் மனித உடல் முழுவளர்ச்சி அடைந்து 
விடுவதில்லை. வளர்ச்சி இந்த வயதுகளைத் 
தாண்டியும் நீடிக்கிறது.எனவேதான்,சட்டப்படி 
ஏற்கத்தக்க 18 வயதைத் தாண்டி 21 வயதில் பெண் 
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் 
பரிந்துரைக்கிறது.

குழந்தைத் திருமணங்கள் உடல்நலக் கேடுகளை 
உருவாக்கும்.தாய்   சேய் இருவரின் உடல் நலமும் 
கெடும். பல்வேறு நோய்கள் பற்றிக் கொள்ளும்.
டீன் ஏஜ் திருமணங்கள் (TEEN AGE MARRIAGES)
கண்டிப்பாகத் தவிர்க்கப் பட வேண்டும். அறிவியல் 
ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார மற்றும் சமூக 
ரீதியாகவும் டீன் ஏஜ் திருமணங்கள்  நம் நாட்டுக்குப் 
பொருத்தமற்றவை;தேவையற்றவை.

தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய தருமபுரி 
இளவரசனின் காதலும் திருமணமும் தோல்வி 
அடைந்ததற்கான காரணம் அத்திருமணம் ஒரு 
குழந்தைத் திருமணம் என்பதுதான். திருமணத்தின்போது 
இளவரசனின் வயது 18 மட்டுமே என்பது,அத்திருமண 
முறிவுக்கும்  இளவரசனின் துயர மரணத்துக்கும் 
காரணமாக அமைந்தது. 18 வயது என்பது 
வெறும் டீன் ஏஜ் மட்டுமே! முதிராப் பருவம்;
சவால்கள் நிறைந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் 
ஆற்றலும் பக்குவமும் பொறுமையும் இன்னமும்
தேவையான அளவுக்கு வளராத பருவம் 
டீன் ஏஜ் பருவம். டீன் எஜ்களில் ஏற்படும் உணர்வு 
காதல் அல்ல. அது வெறும் வயசுக் கோளாறு 
(. INFATUATION ).

எனவேதான் உலகெங்கும் அரசுகள் குழந்தைத் 
திருமணங்களைத் தடை செய்கின்றன. அரசின் 
இத்தகைய முயற்சிகளை வரவேற்பது பொறுப்புள்ள 
குடிமக்களின் கடமை.

***************************************************     செவ்வாய், 22 ஜூலை, 2014

தன வினை தன்னைச் சுடும்!
---------------------------------------------- 
இன்றைய நாளின் ( ஜூலை 22, 2014) ஏடுகளில்
வந்த ஒரு செய்திநெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தது.
( TIMES OF INDIA, CHENNAI , PAGE_3)

இணையதளம், மின்னஞ்சல் இன்ன பிற நவீன 
அறிவியலின் வாய்ப்புகளைத் தீயநோக்கத்துடன் 
பயன்படுத்தி காவல்துறையால் சிறைப்படுத்தப் பட்டு,  
சென்னை புழல் சிறையில் கம்பி எண்ணும்   
ஒரு இளைஞனைக் குறித்த செய்திதான் அது.

முஹம்மது அசார் ஷெரிப் என்ற 28 வயது இளைஞன்
திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவன். உடன் பணியாற்றிய
பெண்ணிடம் தனது காதலைத தெரிவித்தான். 
அந்தப் பெண் அவன் காதலை ஏற்கவில்லை.

எங்கிருந்தாலும் வாழ்க என்று அந்தப் பெண்ணை 
வாழ்த்தி விட்டு, வேறொரு பெண்ணைக் காதலிக்கத் 
தொடங்கி இருக்க வேண்டும் அந்த இளைஞன்.
ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. காதலிக்க 
மறுத்த பெண்ணைப் பழிவாங்க விரும்பினான்.

முகநூல்கள், மின்னஞ்சல்கள் மூலம் கிடைத்த 
அப்பெண்ணின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு 
அதில் ஒட்டு,வெட்டு வேலைகள் செய்து
( morphed ) ஆபாசப் படமாக மாற்றி, பலருக்கும் 
மின்னஞ்சலில் அனுப்பி வைத்தான்.
மாட்டிக் கொண்டான். சிறையில் கம்பி எண்ணுகிறான்.

வக்கிர சிந்தனையும் நோய் மனமும் கொண்ட 
இந்த இளைஞன் ஓர்  எதிர்மறை உதாரணம். 
எப்படி வாழக் கூடாது  என்பதற்கான உதாரணம்.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் 
என்பது போல இத்தகைய தீச்செயலில் 
ஈடுபடுகிறவர்கள் பிடிபடுவது திண்ணம்;
தண்டிக்கப் படுவதும் திண்ணம். 
சமூகம் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும்.

   தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
   வீயாது அடியுறைந் தற்று.  .    

*******************************************************************************

புதன், 16 ஜூலை, 2014

வேலையற்ற மாமியார்களும்
சிந்தனைக் குள்ளர்களும்!
----------------------------------------------------------------------------------------
(மோடி அரசின் முதல் பட்ஜெட்-அருண் ஜெட்லி- திறனாய்வு)
----------------------------------------------------------- -----------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-------------------------------------------------------------- ----------------------------
எனது முந்திய கட்டுரை குறித்து வாசகர்கள் சில
கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர்.
"புஷ்பராகம் பதித்த மூக்குத்தியும் அந்தாதித் தொடையும்"
என்ற கட்டுரையைத் தான் குறிப்பிடுகிறேன்.
அக்கட்டுரை அ) பட்ஜெட்டை மேலெழுந்தவாரியாக
அணுகுகிறது; ஆ)பாஜக மீது கூர்மையான விமர்சனம்
இல்லை ஆகிய கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன. இவை
குறித்த எனது எதிர்வினையே இக்கட்டுரை.

பட்ஜெட் என்பது எல்லையற்றது அல்ல; வரம்புக்கு உட்பட்டது.
அதுபோலவே பட்ஜெட் மீதான விமர்சனமும் எல்லையற்றது
அல்ல; வரம்புக்கு உட்பட்டது.ஒரு பட்ஜெட்டின் வாழ்நாள்
365 நாட்கள் மட்டுமே.சிதம்பரம் சமர்ப்பித்த இடைக்கால
பட்ஜெட்டின் தொடர்ச்சியான ஜேட்லியின் பட்ஜெட்டின்
வாழ்நாள் 365 நாட்களுக்கும் குறைவு. விரலுக்கு ஏற்ற வீக்கம்
என்பது போல விமர்சனத்தின் தன்மையும் அந்த அளவே
இருக்கும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை விமர்சிப்பது போல
பட்ஜெட்டை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அரசமைப்புச் சட்டம் என்றும் நின்று நிலவுவது;
பட்ஜெட் 365 நாட்களுடன் முடிந்த போவது.ஒரு
ஒர்க் ஷாப்பில், எந்திரத்தை பாகம் பாகமாகக் கழற்றிப்
போட்டு, பின் அவை அனைத்தையும் ஒன்று சேர்ப்பது
போல இந்த பட்ஜெட்டின் உள்ளும் புறமும் புகுந்து
புறப்பட்டு, பின் வெளிவந்து விஷேசங்களை வெளிப்படுத்த
( REVELATION ) வேண்டிய தேவை இல்லை.

போலி கம்யூனிஸ்ட்கள், போலி மார்க்சிஸ்ட்கள்,
போலி   லெனினிஸ்ட்கள் ...இன்ன பிற
சிந்தனைக் குள்ளர்களுக்கு அத்தகைய தேவை
இருக்கலாம்.  அந்த வேலையற்ற மாமியார்கள்
அருண் ஜேட்லியின் கழுதையைச் சிங்காரித்துக்
கொண்டு இருக்கட்டும். 

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் என்ற உத்தியைக்
கையாண்டு அக்கட்டுரை எழுதப் பட்டு இருந்தது.
      " பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
        சிலசொல்லல் தேற்றா தவர் "
என்ற வள்ளுவரின் கண்டனத்தை பெற யான் விரும்பவில்லை.

புள்ளி வைத்தவர் அவர்!
கோலம் போட்டவர் இவர்!!
---------------------------------------
ஒரு புள்ளி விவரத்தைப் பார்ப்போம்:
சிதம்பரத்தின் இடைக்கால பட்ஜெட்டிலும்
அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டிலும்
அரசின் பல்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதி
ஒதுக்கப் பட்டு உள்ளது என்று பார்ப்போம்.

துறை         சிதம்பரத்தின் பட்ஜெட்     ஜேட்லியின் பட்ஜெட்
                                           ( கோடி ரூபாய்கள் )
--------------------------------------------------------------------------------
வேளாண்மை                21951.75                                  22651.75
கிராமப்புற வளர்ச்சி    78408.80                                  79999.80
உணவு (PDS )                   115656.84                                115656.84
நகர்ப்புறவளர்ச்சி         19143.46                                   19989.46
சிறுபான்மை நலம்      3724.01                                      3724.01
சமூகநீதி                          6204.49                                       6204.49
சுற்றுலா                           1356.71                                      1948.71

குறிப்பு::
----------
உணவு ( PDS ), சிறுபான்மை நலம், சமூகநீதி ஆகிய
மூன்று துறைகளிலும் சிதம்பரம் ஒதுக்கிய அதே
தொகையைத்தான் அப்படியே ஒதுக்கி உள்ளார் ஜேட்லி.

ஆதாரம்:  THE HINDU's  CALCULATIONS;
                      HINDU  ஆங்கில ஏடு , ஜூலை 12, 2014  

ஆக அவரேதான் இவர்! இவரேதான் அவர்!!
சிதம்பரத்தின் பட்ஜெட்டில் சிறிது பூச்சு வேலை
( TINKERING WORK ) செய்துள்ளார்.அவ்வளவே!

இடைக்கால பட்ஜெட்டின் தொடர்ச்சியாக
ஜேட்லியின் பட்ஜெட் அமைந்தபடியால்,
முழு சுதந்திரத்துடன் ஜெட்லி இந்த பட்ஜெட்டைத்
தயாரிக்கவில்லை என்பதே  உண்மை! ஒன்றுமே
எழுதப்படாத சிலேட்டில் ஜேட்லி எழுதவில்லை.
மாறாக சிதம்பரத்தின் எழுத்துக்கள் உள்ள சிலேட்டில்
ஜேட்லி எழுதி உள்ளார் ( OVER WRITING ) என்பதே
யதார்த்தம். சிதம்பரத்தின் பட்ஜெட்டுகள் முழுக்க
நனைந்தவை! அவை  எப்படி இருக்கும் என்பது
குறைந்தபட்ச பொருளாதார அறிவு உடைய
எவருக்கும்  தெரிந்ததுதான்.

எனவே  சிதம்பரம்- ஜேட்லி
கூட்டுத் தயாரிப்பான  இந்த பட்ஜெட் குறித்து
அகல்விரிவானதும் ஆழமானதுமான பகுப்பாய்வு
தேவையற்றது என்பது எனது நிலை.
WHY THE HELL SHOULD I BEAT ABOUT THE BUSH? 

நிற்க. சிதம்பரம் பொருளாதார நிபுணராக அறியப் 
பட்டவர். ஜேட்லி சட்ட நிபுணராக அறியப் பட்டவர்.
ஆனால், ஆளும் கலை ( ART  OF GOVERNANCE )
என்பதில் ஜேட்லி சிதம்பரத்தை விடச் சிறந்து 
விளங்குகிறார் என்பதற்கு இந்த பட்ஜெட் ஒரு 
சிறந்த உதாரணம். கடந்த பத்தாண்டுகளின் 
பட்ஜெட்டுகளில்,  ஜேட்லியைப் போல் 
எந்த நிதி அமைச்சரும் இந்த அளவுக்கு வரிக்குறைப்பு 
செய்ததில்லை. வரிகுறைப்பு மாமன்னராக 
ஜேட்லி திகழ்கிறார் இந்த பட்ஜெட்டின் மூலம்.
தங்களுக்கு வாக்களித்த நடுத்தர வர்க்கத்துக்கு 
எதிர்பார்த்ததை விட அதிகமாகவே செய்துள்ளார் ஜெட்லி.
இந்த அம்சத்தில் சிதம்பரத்தை அவர் வெகுவாக 
முறியடித்து உள்ளார்.

தீவிர வலதுசாரிக் கொள்கைகளைச் சொல்லிக் 
கொண்டிருந்த பாஜக இந்த பட்ஜெட்டில் 
அவற்றுக்கான பிள்ளையார் சுழியைப் போடவில்லை.
இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் 
ஒரு அடிப்படை மாற்றம் (PARADIGM SHIFT ) வருமா,
வலதுசாரிச் சாய்வு வருமா என்பன போன்ற 
கேள்விகளுக்கு இந்த பட்ஜெட்டில் விடை இல்லை.
விரைவில் தெரிய வரும்.

ஆக, ஜேட்லியின் பட்ஜெட் குறித்துச் 
சொல்வதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை.   
இதில் நிறைவு அடையாதவர்கள்,
முன்பத்திகளில் குறிப்பிட்ட வேலையற்ற 
மாமியார்களை அணுகவும்.

இறுதியாக ஒன்று!கம்யூனிஸ்ட் சீனாவில் 
தலைவர்   மாவோ, "மாபெரும் முன்னோக்கிய 
பாய்ச்சல்"  (GREAT LEAP FORWARD) என்ற ஒரு 
திட்டத்தை 1958-1961 காலக் கட்டத்தில் 
செயல்படுத்தினார். சீனப் பொருளாதாரத்தை 
வெகுவாக உயர்த்தவும் , சீனத்தில் தொழில் 
வளர்ச்சியை உச்சத்துக்குக் கொண்டு செல்லவும் 
இந்த மாபெரும் பாய்ச்சல் உதவும் என்று கருதி 
இதை வெகு  தீவிரமாகச் செயல்படுத்தினார் மாவோ.
ஆனால், விளைவு தலைகீழானது.முட்டாள்தனமான 
இந்த மாபெரும் பாய்ச்சல் திட்டம் சீனாவில் 
மாபெரும் பஞ்சத்தை உண்டாக்கி விட்டது.இந்தப் 
பஞ்சத்தில் ஐந்து   கோடி சீன மக்கள் இறந்து 
போனார்கள் என்பது வரலாறு.

அருண்  ஜெட்லியின் பட்ஜெட்  மகா மோசமான 
பட்ஜெட்டாக இருந்து விட்டுப் போகட்டும்!
ஆனால் ஐந்து கோடி மக்களை பஞ்சத்தில் 
சாகடித்த மாவோவின் பட்ஜெட் போல 
இது நிச்சயம் இருக்காது என்பது உறுதி!

**************************************************************     


                     

வெள்ளி, 11 ஜூலை, 2014

புஷ்பராகம் பதித்த மூக்குத்தியும்
அந்தாதித்தொடையும்!
----------------------------------------------------------------------

பி. இளங்கோ சுப்பிரமணியன்
----------------------------------------------------------------------

(நிதியமைச்சர் அருண் ஜேட்லி சமர்ப்பித்த
மோடி அரசின் முதல் பட்ஜெட் 2014-2015:
ஒரு திறனாய்வு!)
-----------------------------------------------------------------------
எங்கே சொதப்பி விடுவாரோ என்ற அச்சம் சிலருக்கு.
கசப்பு மருந்து நிறைய இருந்து  தொலைத்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு. வெறும் வாயை மென்று
கொண்டு இருப்பவர்களுக்கு அவல் கொடுத்து
விடுவாரோ என்ற அரிச்சல் சிலருக்கு.

ஆனால் அனைவரின் பதற்றங்களும் அர்த்தமற்றுப்
போக, அருண் ஜெட்லி வெற்றிகரமாக உயரம்
தாண்டி விட்டார். REAL HIGH JUMP!

கசப்பு மருந்து இல்லை!
மக்களைப் பாதிக்கும் வரி விதிப்பு இல்லை!
மானியக் குறைப்பு இல்லை!
ஜேட்லியின் பட்ஜெட்டில் STUFF இருக்கிறதோ
இல்லையோ CRAFT இருக்கிறது!
வரிசையில் நிற்கும் எல்லோருக்கும் ஏதாவது
கிடைக்கிறது.சிலருக்கு வெண்பொங்கல்,
சிலருக்கு மிளகுவடை, சிலருக்கு சுண்டல்,
சிலருக்கு கல்கண்டு.வெறுங்கையுடன் யாரும்
போகவில்லை.

வைரம், வைடூரியம், முத்து, பவழம், மரகதம்,
மாணிக்கம், கோமேதகம், புஷ்பராகம், நீலம்
ஆகிய இவை நவரத்தினங்கள். எண்ணிப்
பாருங்கள், ஒன்பது வரும். நவரத்தினங்களின்
மீதான இறக்குமதிக்கான சுங்க வரியை
அருண் ஜெட்லி குறைத்து விட்டார்.அதனால்
கொற்கைப் பட்டினத்து முத்துக்களும் கோமேதகக்
கற்களும் விலை மலிகின்றன.

இனி குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடித்தனம்
நடத்தும் குப்பம்மா, முனியம்மா, மூக்கம்மா
ஆகிய எல்லோரும் புஷ்பராகக் கல் பதித்த
மூக்குத்திக்கு ஆசைப் படலாம்.

19 அங்குலத்துக்குக் குறைவான LCD, LED  டிவிகளின்
மீதான வரியைக் குறைத்தார் ஜேட்லி. கடைக்காரன்
விலையைக் குறைக்கிறான்.இனி தங்கள் வீடுகளில்
நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருக்கும், ரூ 37000
மதிப்புள்ள CRT   டிவிகளை  எக்சேஞசு மேளாவில்
கொடுத்து, பதிலாக ரூ 1000 பெற்றுக்கொண்டு,
ரூ 53000 விலையில் LED  டிவிகளை வாங்கச் சொல்லி
மனைவிமார்கள் கணவன்மார்களை நச்சரிக்கத்
தொடங்கி விடுவார்கள்.அந்தஸ்தின் அடையாளம்
( STATUS SYMBOL ) அல்லவா LCD டிவி!

LOW TECH டிவியான CRT டிவி என்ன பாவம் செய்தது
என்று நினைத்தார் போலும் ஜெட்லி! அதற்கும்
வரியைக் குறைத்து விட்டார்.

தாய்மார்களின் விருப்பப்படி,வரிக்குறைப்பு மூலம்
பின்வரும் வீட்டு உபயோகப் பொருட்களின்
விலையைக்  குறைத்துள்ளார் ஜெட்லி.

அ ) மேசைக்கணினி, மடிக்கணினி, டாப்லெட் கணினி
ஆ) மொபைல்   பேசிகள்
இ) பிரிட்ஜ் (குளிர் சாதனப் பெட்டி)
ஈ) வாஷிங்  மெஷின்
உ) தண்ணீர் சுத்திகரிப்பான் (ஆர்.ஓ)
ஊ) மைக்ரோவேவ் ஓவன்
எ) சோப்பு
ஏ) செருப்பு
ஐ) தீப்பெட்டி

இவ்வாறு கண்ணில் பட்டதை எல்லாம்
வரிக்குறைப்புச் செய்துகொண்டே வந்த ஜேட்லி
சிகரெட்டின் மீது மட்டும் இரக்கம் காட்ட   மறுத்து 
விடுகிறார். ஆனாலும் என்ன? பீடியை விட்டு விட்டார். 
சிகரெட்டுவிலை கட்டுப்படி ஆகாதவன் 
பீடிக்கு மாறி விடலாமே!

தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு ரூ 50548 கோடி!
பழங்குடியினர் நலனுக்கு ரூ 32387 கோடி!
மதரசாக்களை நவீனப் படுத்த ரூ 100 கோடி!
சூரிய மின்சக்திக்கு ரூ 1000 கோடி!
சொல்லிக்கொண்டே போகிறார் ஜெட்லி.
பொறுக்க முடியவில்லை சோனியாவுக்கு.
ஆற்றாமையுடன் புழுங்குகிறார்.

சிவகங்கையில் ஒரு ஆசிரமம் அமைத்து
அருள்வாக்குச் சொல்லலாமா என்று  எஞ்சிய
வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையில் இருக்கும்
ப.சிதம்பரம் இருக்கையை விட்டு எம்பிக்
குதிக்கிறார்.இது ஜேட்லியின் பட்ஜெட் அல்ல ;
என் பட்ஜெட்தான் என்கிறார்.பாருங்கள் அதில்
காங்கிரஸ் முத்திரை தெரியும் என்கிறார்.

உண்மையிலேயே, ஜேட்லியின் பட்ஜெட்
பாஜகவின் பட்ஜெட் அல்ல அது காங்கிரசின்
இடைக்கால பட்ஜெட்டின் தொடர்ச்சிதான்.
சிதம்பரம் முடித்த இடத்தில் இருந்து
ஜேட்லி தொடங்குகிறார். இதில் ஒரு அந்தாதித்
தொடையை நாம் காண முடியும்..   

செய்யுளில் ஓர் அடி எந்தச் சொல்லில் முடிகிறதோ
அதே சொல்லைக் கொண்டு அடுத்த அடியை
அமைப்பதுதான் அந்தாதி. ( உரைநடையில் வரி
எனப்படுவது செய்யுளில் அடி எனப்படும்;)
இதைப் புரிந்து கொள்ள, கண்ணதாசனின்
சினிமாப் பாட்டில் இருந்து ஒரு எளிய உதாரணம்
தருகிறேன்.  
   
 "தலையணையில் முகம் புதைத்து
      சரசமிடும் புதுக்கலைகள்:
 புதுக்கலைகள் தெரிவதற்கு
      பூமாலை மணவினைகள்;
 மணவினைகள் யாருடனோ "

இதுதான் அந்தாதி! சிதம்பரம்-ஜேட்லி பட்ஜெட்களில்
 பயின்று வருவதும் இதுதான்!

சிதம்பரத்தின் பட்ஜெட் ஒரு CENTRIST பட்ஜெட்!
அதன் தொடர்ச்சியான ஜேட்லியின்   பட்ஜெட்டும்
ஒரு CENTRIST  பட்ஜெட்தான்!

அரசியல் ரீதியாக, பட்ஜெட்டுகளை
மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1) வலதுசாரி பட்ஜெட் (RIGHTIST BUDJET )
2) இடதுசாரி பட்ஜெட் (LEFTIST BUDJET )
3)  நடுச்சாரி பட்ஜெட் (CENTRIST BUDJET )

இவற்றுள், இடதுசாரி பட்ஜெட் உலகில்
யாங்கணும் இல்லை. அது மனிதனின் சுகமான
கற்பனையில் மட்டுமே தோன்றுகிற
கற்பனாவாத பட்ஜெட் (UTOPIAN). காங்கிரசின்
பட்ஜெட்கள் எப்போதுமே CENTRIST ஆனவை.
ஜவஹர்லால் நேரு காலம் தொட்டு
சிதம்பரம் காலம் வரை அப்படித்தான்.

பாஜக வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளைச்
சொல்லிக் கொண்டிருந்த கட்சி.ஆனால் பட்ஜெட்டில்
அக்கொள்கை பிரதிபலிக்கவில்லை.பாஜகவின் முதல்
பட்ஜெட் எவ்விதத்திலும் ஒரு வலதுசாரி பட்ஜெட் அல்ல.
பாதுகாப்பு இன்சூரன்ஸ் துறைகளில் FDI ஐ
74 சதம் உயர்த்தி இருந்தால், பாஜகவின் பட்ஜெட்
வலதுசாரி பட்ஜெட் என்று துணிந்து கூறலாம்.
 குறைந்த பட்சம் 51 சதம் என்று கூட உயர்த்தி விடாமல்
கயிற்றின் மீது நடந்து காட்டினார் ஜெட்லி.

ஒருவேளை தீவிர வலதுசாரிப் பொருளாதார
அறிஞரான அருண் ஷோரியை  பாஜக
நிதியமைச்சராக்கி இருக்குமேயானால்
அவர் துணிந்து செயல்பட்டு இருக்கக் கூடும்.

ஆக ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.
மோடி அரசின் பொருளாதாரத் திசைவழியை
(ORIENTATION) அறிவிக்கும் பட்ஜெட் இதுவல்ல.
அடுத்த பட்ஜெட்டில், பாஜக வலதுசாரியா
நடுச்சாரியா என்பது புலப்பட்டுவிடும்.

பட்ஜெட் மீதான விமர்சனம் என்ற பெயரில் 
புளிப்பேறிப்போன கருத்துக்களைக் 
கடைவிரிக்கிறார்கள் நாடாளுமன்ற 
"இடதுசாரி" நண்பர்கள்.புறச் சூழ்நிலை 
குறித்த எந்தவிதமான பருண்மையான ஆய்வையும் 
மேற்கொள்ளாமல், தங்களின் அகநிலையில் இருந்து 
தேங்கிப்போய் பாசிபிடித்துக் கிடக்கும் கசடுகளை 
கருத்துக்கள் என்ற பெயரில் கடைவிரித்து 
சூழலை மாசு படுத்துகிறார்கள் இவர்கள்.

யார் பட்ஜெட் போட்டாலும்,
லெனினே வந்து பட்ஜெட் போட்டாலும் 
பின்வரும் நான்கு வாக்கியங்களைக் 
கிளிப்பிள்ளைப் பாடமாகச் சொல்லுபவர்கள் இவர்கள்.

1) இது தனியார்மயத்தை ஊக்குவிக்கிறது.
2) இது பெரு  முதலாளிகளுக்குச் சாதகமானது.
3) இது அந்நிய முதலீட்டை நம்பி உள்ளது.
4) இது மக்கள் விரோத பட்ஜெட்.
கி.பி 3014ல் ஒரு பட்ஜெட் போட்டாலும் இவர்கள் 
கிளிப்பிள்ளை போல் இதைத்தான் சொல்லிக் 
கொண்டு இருப்பார்கள். 

மகத்தான நவம்பர்  சோஷலிசப் புரட்சிக்குப் 
பின்னால், புரட்சி நடந்த மறுநாளே,
அதாவது, நவம்பர் 8, 1917 அன்று 
ரஷ்யாவில் நிலம் முழுவதும் அரசுடைமை 
ஆக்கப் பட்டது. 1920இல் விவசாய உற்பத்தி 
குறைந்தது.உபரி தானியம் முழுவதையும் அரசு 
கட்டாயக் கொள்முதல் செய்ததால், விவசாயிகள் 
ஊக்கம் இழந்தார்கள். தொழில்துறையும் 
இதுபோல் பாதிக்கப் பட்டது.  

இதற்குத் தீர்வாக லெனின் "புதிய பொருளாதாரக் 
கொள்கை"யை வகுத்தார்.தானியங்களின் கட்டாயக் 
கொள்முதல் கைவிடப்பட்டது.தொழில்துறையில் 
தனியுடைமை அனுமதிக்கப் பட்டது. நடுத்தர  
மற்றும் பெரிய தொழில்களில் வெளிநாட்டு 
மூலதனம் அனுமதிக்கப் பட்டது. 

லெனின் வகுத்துச் செயல்படுத்திய புதிய 
பொருளாதாரக் கொள்கை அன்று ரஷ்யாவின்  
(சோவியத் ஒன்றியத்தில்) சிக்கல்களுக்குத் 
தீர்வாக அமைந்தது.   

FDI  என்றவுடனே, தீயை மிதித்தவன் போல் 
அலறுவதை விட்டு விட்டு , லெனின் 
எந்தச் சூழ்நிலையில் அனுமதித்தார் 
என்று ஆராய்ந்து தெளிவதே இன்றைய தேவை.

பின்குறிப்பு:
---------------- 
1) ஜெட்லியின்  பட்ஜெட், ஒரு முதலாளித்துவ 
அரசாங்கம் போடுகிற, ஒரு முதலாளித்துவ 
பட்ஜெட். அதை சோஷலிச அளவுகோல்களைக் 
கொண்டு அளக்க முற்படுவது சரியன்று.
2) லெனின் வகுத்த புதிய பொருளாதாரக் கொள்கை 
குறித்த தெளிவு இடதுசாரிகளுக்கு அவசியம்.

***************************************************** 
   
    

செவ்வாய், 8 ஜூலை, 2014

மூலதன வகுப்புகளும்
பித்துக்குளி முருகதாசுகளும்!
------------------------------------------------------------------------------------------
பி. இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------------------------------------------
முன்குறிப்பு: 1) சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு,
                           காரல் மார்க்ஸ் ஆக்கிய
                           தாஸ் காப்பிடல் என்ற நூலே
                           மூலதனம் என்று இங்கு
                           குறிப்பிடப் படுகிறது  

முன்குறிப்பு: 2) பித்துக்குளி முருகதாஸ் என்பவர்
                           1960களில் தமிழ்நாட்டில் பிரபலமாக
                            இருந்த முருக பக்திப் பாடகர்.

சென்னை நகரில் கடந்த சில ஆண்டுகளாக
மூலதன வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இருபதாம் நூற்றாண்டையே தலைகீழாகப்
புரட்டிப் போட்ட மூலதனம் நூலை, தமிழ் வாசகர்கள்
கற்பதற்கு உதவியாக இத்தகைய வகுப்புகள்
நடைபெற்று வருகின்றன.

கார் ஓட்டத் தெரிந்தவர்கள்,
ஓட்டத் தெரியாதவர்களுக்குக்  
கற்றுக் கொடுப்பது போல,
மூலதனத்தைக் கற்றவர்கள்
மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்
முயற்சியாகவே இவ்வகுப்புகள் அமைகின்றன.
கார் ஓட்டக் கற்றுக் கொடுப்பது என்ற உவமை
ஆகச் சிறந்த உவமையாகும். ஏனெனில்,
கற்றுக் கொடுப்பவர் என்னதான் சிறப்பாகக்
கற்றுக் கொடுத்தாலும், கற்றுக் கொண்டவர்தான்
காரை ஓட்ட வேண்டும்; சுயமாக ஓட்ட வேண்டும்.
அதுபோல, மூலதனத்தை வாசிப்பது எப்படி என்று
கற்றுக் கொடுக்கிறார்கள் இவ்வகுப்புகளில்.
கற்றுக்  கொள்பவர்கள்தாம் மூலதனத்தை
வாசிக்க வேண்டும்.ஒருவர் தாமே சுயமாக
மூலதனத்தை வாசிக்க, புரிந்துகொள்ள
வழி வகுப்பவை இவ்வகுப்புகள்.

கற்றலும் கற்பித்தலும்   உயர்ந்த செயல்பாடுகள்.
எனவே அந்த அடிப்படையில் (கற்றல்-கற்பித்தல் என்ற 
அடிப்படையில் ) இவ்வகுப்புகள்
வரவேற்கத் தகுந்தவை.

மூலதன வகுப்புகள் தொடக்கப் பள்ளி வகுப்புகள் அல்ல.
அவை முனைவர் பட்ட வகுப்புகள். அடிப்படை
மார்க்சியம், பொருளாதாரம் ஆகியவற்றில்
நன்கு தேர்ச்சி பெற்ற பிறகுதான் மூலதனத்தைக்
கற்க இயலும். மேலும் மூலதனம் ஒரு
இலக்கியமும் ஆகும்.மூலதனக் கல்வி
ஆங்கில ஐரோப்பிய இலக்கியங்களில்
ஒரு குறிப்பிட்ட அளவு தேர்ச்சியைக் கோருவது ஆகும்.

மார்க்ஸ் மிகச் சிறந்த இலக்கியச் சுவைஞர்
மட்டுமல்லர்; அவர் மிகச் சிறந்த
படைப்பிலக்கியவாதியும் ஆவார்.
மார்க்சின் மூலதனத்தில் சேக்ஸ்பியர்
வெகுவாக இடம் பெறுவார். ஜெர்மானியக் கவிஞர்
கதே, இத்தாலியக் கவிஞர் தாந்தே ஆகியோரின்
மேற்கோள்களும் மூலதனத்தில் வெகுவாக
இடம் பெற்றுள்ளன. தாந்தேயின்
"DIVINE COMEDY "யின் கவிதை வரிகள்
மூலதனத்தில் இடம் பெற்றுள்ளன.
மூலதனத்தைச் சிறப்பாகப் புரிந்து கொள்ளவும்
அதன் வாசிப்பு இன்பத்தை ( TEXTUAL PLEASURE )
நுகரவும் இலக்கியப் பயிற்சி அவசியம், குறிப்பாக
மறுமலர்ச்சிக் கால இலக்கியங்களில்.

மூலதனமும் தொல்காப்பியமும் 
---------------------------------------------- 
மூலதனத்தைத்  தொல்காப்பியத்துடன் 
ஒப்பிட முடியும்.இந்த வரியைப் படித்தவுடன் 
நுனிப்புல் வாசகர்கள்  துள்ளிக் குதிக்கலாம்.
தமிழ் இலக்கணம் கூறும் வடிவ உவமை, 
வண்ண உவமை, தொழில் உவமை, பண்பு உவமை 
ஆகியவற்றை அவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

கற்றல், கற்பித்தல் மட்டுமின்றி,
தற்கால நடப்புடன் பொருந்துதல் 
என்பதிலும் மூலதனத்தையும் 
தொல்காப்பியத்தையும் ஒப்பிட முடியும்.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் 
கூறும் நல்லுலகில் தொல்காப்பியம் கற்றவர்கள் 
வெகு சிலரே.தமிழ் அறிஞர்கள், ஆய்வு மாணவர்கள்,
தமிழ் இலக்கியத்தில் முதுகலை பயின்றவர்கள் 
என்று தொல்காப்பியம் பயின்ற  வட்டம் 
மிகவும் சுருங்கிய ஒன்று . தமிழ் நாட்டுப் பல்கலைக் 
கழகங்களில் முதுகலை வகுப்புகளின் 
பாடத்திட்டத்தில்தான் தொல்காப்பியம்   
இடம் பெற்றுள்ளது.இளங்கலை வகுப்பு வரை 
நன்னூல்தான்.( நன்னூல் என்பது பவணந்தி முனிவர் 
இயற்றிய இலக்கண நூல்).

சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கலைஞரின் 
தொல்காப்பியப் பூங்கா நூல் வெளியீட்டுக்கு 
நான் சென்றிருந்தேன்."ரோமாபுரிப் பாண்டியன்"
போன்றோ திருக்குறளுக்கான கலைஞர் உரை 
போன்றோ இருக்கும் என்று நம்பிப் பலரும் 
தொல்காப்பியப் பூங்கா நூலை வாங்கினர்.
அஃது ஓர் இலக்கண நூல் என்று அறிந்து 
அதை வாசிக்க இயலாமல் 
ஏமாற்றம் அடைந்தனர்.எனது தி.மு.க நண்பர்கள் 
சிலர் தாங்கள் வாங்கிய நூலை என்னிடம் 
ஒப்படைத்து விட்டனர்.ஒரு கட்டத்தில் என்னிடம்  
இப்படிப் பத்து நூல்கள் சேர்ந்து விட்டன.
    
நான் இளம்பூரணம், சேனாவரையம் 
வாயிலாகத் தொல்காப்பியம் கற்றவன்.
எனவே "கலைஞம்" எனக்குப் பெரிதாகப் 
பயன்படவில்லை. ( சேனாவரையரின் உரை   
சேனாவரையம் என்பதுபோல், கலைஞரின் 
உரை  கலைஞம் எனப்படும்.).முந்திய 
வாக்கியத்தின் மூலம் நான் எவ்விதத்திலும் 
கலைஞரின் மாண்பைக் குறைத்து விடவில்லை 
என்பதைப் பதிவு செய்கிறேன்.

"மியா இக மோ மதி இகும் சின்" என்னும் 
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்"    
   (தொல், இடையியல், நூற்பா:759)
என்கிறது தொல்காப்பியம்.

"மியா இக மோ மதி அத்தை இத்தை 
வாழிய மாள   ஈயாள  முன்னிலை அசை"
என்கிறது நன்னூல். மொழி தொடர்ந்து 
இயங்கிக் கொண்டிருப்பது.எனவேதான் 
காப்பியமும் நன்னூலும் வேறுபடுகின்றன.
எனினும் இவை இரண்டும் கூறும் முன்னிலை 
அசைகள் எவையும் இன்று வழக்கில் இல்லை.
("காமம் செப்பாது கண்டது மொழிமோ" 
என்பதில் வரும் மோ என்பது முன்னிலை அசை) 

தமிழ் கற்ற அனைவரும் ஓரளவு 
நன்னூல் கற்றிருப்பது இயற்கை.ஆனால் 
தொல்காப்பியத்தின் நிலை அவ்வாறு அன்று.

"படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி 
புடை கெடப் போகிய செலவே புடைகெட 
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம் 
முற்றின் ஆகிய புரத்திறை முற்றிய" 
...........................................................................
............................................................................
     (தொல் புறம் நூற்பா: 1007) 
என்றவாறு பதினான்கு துறைகளைக் கொண்ட 
வெட்சித்திணைக்குத் தொல்காப்பியம் கூறும் 
இலக்கணம் இன்று பொருந்துவது இல்லை.
(பகைவரின் பசுக்கூட்டங்களைக் கைப்பற்றும் 
செயல் குறித்துக் கூறுவது வெட்சித் திணை)

பெயரெச்சம் என்றால் என்ன?,
வினையெச்சம் என்றால் என்ன?,
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்துக்குச்  
சான்று தருக என்றெல்லாம் தமிழ்நாட்டுப் 
படிப்பாளிகளைக் கேட்டால்  99 விழுக்காட்டினர் 
கால் வழியே கழிந்து விடுவர் என்பதை 
அனைவரும் அறிவோம்.இத்தகைய சூழலில் 
தொல்காப்பியத்தைக்  கற்பிப்பது என்பது 
பகீரதப் பிரயத்தனம் ( HERCULIAN  TASK )
அன்றி வேறென்ன?

இது போன்றதுதான் மூலதனத்தைக் 
கற்பிப்பதும். மூலதனத்தைக் கற்பிப்பதற்கும் 
கற்பதற்கும் பெரு முயற்சியும்  
கடும் உழைப்பும் தேவை.

அதேபோழ்து, மூலதனம் கற்றல்-கற்பித்தல் 
என்ற நிகழ்வின் ஊடாக ஒரு கேள்வி எழுகிறது;
அது பேருருவம் (விசுவரூபம்) கொள்கிறது 
150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட 
மூலதனம் இன்றைய சூழலுக்கு எவ்வாறு 
பொருந்தும்? என்பதே அக்கேள்வி.
HOW FAR IT IS RELEVANT TODAY? என்கிற கேள்வி 
எங்கும் வியாபித்து நிற்கிறது.

மூலதனம் என்பது முதலாளித்துவ சமூக 
அமைப்பின் தோற்றம், வளர்ச்சி,இயக்கம் 
ஆகியவற்றின் விதிகளைக் கூறும் நூல். 
அவ்வளவே! (JUST THAT'S ALL!) 
மூலதனத்தில் கூறியவண்ணம் இன்று 
உலகில் எந்த நாட்டிலும் முதலாளித்துவம் 
தோன்றி வளரப் போவதில்லை. ஏனெனில் 
முதலாளித்துவம் என்பது ஏகாதிபத்தியமாக 
மாறி விட்டது, வளர்ந்து விட்டது. இதைத் தொடர்ந்து 
இந்த யுகம் ஏகாதிபத்திய யுகம் என்று 
அழைக்கப் படுகிறது. இந்த யுகத்துக்குப் 
பொருத்தமான மார்க்சியமாக லெனினியம் 
பரிந்துரைக்கப் படுகிறது (PRESCRIBED).  

இச்சூழலில்  மூலதனத்தைக் கற்பது என்பது 
வெறுமனே ஒரு கல்வியியல் ஆர்வமாகச் 
(ACADEMIC INTEREST)  சுருங்கி விடுகிறது. 
ஆகவே மூலதனத்தைக் கற்பிப்பதும் கற்பதும் 
செயலூக்கமிக்க ஒரு பெருத்த மார்க்சியச் 
செயல்பாட்டுக்கு வித்திடும் என்று கருதுவது 
பேதைமையாகவே முடியும்.

மார்க்சியக் கல்வியைப் பொறுத்த மட்டில் 
முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் 
ஆயிரம் இருக்கின்றன.முருக பக்தர்களைப் 
போல் மார்க்சியர்கள் நடந்துகொள்ள முடியாது. 
மார்க்சின் புகழ் பாடுவது மட்டுமே மார்க்சியம் அல்ல.

"கிடக்கிற வேலை கிடக்கட்டும்,
கிழவியைத் தூக்கி மணையில் வை"
என்ற கதையாக மூலதன போதனை 
முக்கியத்துவம் பெறுவது ஏன்?   
இதற்கான சமூக அவசியம் என்ன?
அழுத்தமாக முன்வைக்கப்படும் இக்கேவிகள் 
நியாயமான பதிலைக் கோருகின்றன.

இந்நிலையில் மார்க்சியக் கல்வி குறித்து 
மூத்த மார்க்சிய அறிஞர் திரு. கோவை ஞானி 
கூறுவதைப் பார்ப்பது இங்கு .மிகவும் பொருத்தமானது.

"மார்க்சியம் கற்போம்: தேடலோடும் 
திறனாய்வோடும்"  என்ற கட்டுரையில் 
அவர் கூறுவதாவது:-
(மார்க்சியத்துக்கு  அழிவில்லை என்ற நூல்,
புதுப்புனல் வெளியீடு; டிசம்பர் 2001)

"மார்க்சியம் கற்பதற்கு எளிய வழி என 
ஒன்று இல்லை. தேடலோடும் திறனாய்வோடும்தான் 
மார்க்சியத்தைக் கற்க முடியும்; செரித்துக் 
கொள்ள முடியும்.மார்க்சியம் கற்பதற்கு 
எளிய முறையில் எழுதப்பட்ட பாடநூல்கள் 
பயன்பட முடியாது.பன்முகப் பரிமாணங்களை 
உடைய மார்க்சியத்தை ஒற்றைப் பரிமாணமாகக் 
குறைத்துச் சுருக்கித் தருகிற பாடநூல் கல்வி 
ஆபத்தாகவும் முடியும்.சுருக்கமாக வகுப்பறைகளில் 
மார்க்சியத்தைக் கற்கவும் முடியாது."

திரு ஞானி தொடர்ந்து கூறுகிறார்: 
" நமக்கான மார்க்சியத்தை நாம் தேடித் 
திறனாய்வோடு கற்பதற்கு நாம் 
சீரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்."

திரு ஞானி கூறுவதில் இரண்டு விஷயங்கள் 
முக்கியமானவை.

ஒன்று: தேடல்.நமக்குப் பொருத்தமான  
மார்க்சியத்தை நாம் தேடிப்  பிடித்துப் படிப்பது.
(இந்தியச் சூழலில் மாவோவை ஆழ்ந்து கற்பது 
என்பது இதன் பொருள்).

இரண்டு; திறனாய்வோடு கற்பது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் 
பற்றிப் படிக்கும்போது, பல்வேறு 
நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் 
இக்கோட்பாட்டை நிராகரிப்பது ஏன் என்ற 
கேள்விக்கான  விடையுடன் படிப்பது.
சோஷலிசம் பற்றிப் படிக்கும்போது,
ரஷ்யாவில் லெனினும் ஸ்டாலினும் 
கட்டியது சோஷலிசம் அல்ல, 
முதலாளித்துவமே என்ற கணிப்பின் 
மெய்மையை ஆராயும் நோக்குடன் படிப்பது.

"ஆராய்ந்து அமைவுடைய கற்கவே"
என்கிறது தமிழ் நீதிநூல். இதைத்தான்
திரு ஞானியும் கூறுகிறார். நானும் அதை 
வழிமொழிகிறேன்.

பின்குறிப்பு:
---------------------- 
இக்கட்டுரை பெருமுயற்சி எடுத்து     
மூலதனத்தைக் கற்பிக்கும் 
தோழர்களுக்கு எவ்விதத்திலும் 
பங்கமாக அமைந்து விடக்கூடாது 
என்ற கவனத்துடன் எழுதப் பட்டது.
போதகர்கள், ஆசிரியர்கள், கற்பிப்பவர்கள் 
ஆகியோர் மீது பெருமதிப்புக் கொண்டிருப்பது 
என்பது என்னுடைய மரபணுக்களிலேயே 
அமைந்த ஒன்று. எனவே, மூலதனம் 
கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் 
இக்கட்டுரை அவர்களுக்குப் பங்கம் 
சேர்க்கவில்லை என்று தெளிவார்கள் 
என்று நம்புகிறேன்.

******************************************************