வெள்ளி, 30 நவம்பர், 2018

நியூட்டன் அறிவியல் மன்றம் அழைக்கிறது!
----------------------------------------------------------------------------
நக்சல்பாரிப் புரட்சியாளர் 
மார்க்சிய லெனினிய சிந்தனையாளர் 
மறைந்த தோழர் ஏ எம் கோதண்டராமன் அவர்களின்
நினைவேந்தல் கூட்டம்
---------------------------------------------------------------------------------
இடம்: சென்னை நிருபர்கள் சங்கம் (Reporters Guild)
சேப்பாக்கம், சென்னை.  
(அரசினர் தோட்டம் பின்புறம், 
கிரிக்கெட் மைதானத்தின்  எதிரில்)  

நாள்: 02.12.2018 ஞாயிறு மாலை 4.30 மணி. 

தலைமை: பி இளங்கோ சுப்பிரமணியன் 
நிறுவனர், தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்.

தோழர் ஏ எம் கே படத்திறப்பு, உரை: 
தோழர் தியாகு 

நினைவேந்தல் உரை:
-------------------------------------
தோழர் வே மீனாட்சி சுந்தரம்  (CITU)
தோழர் டி எஸ் எஸ் மணி (ஊடகவியலாளர்)
தோழர் எஸ் நடராஜன் (PUCL)
தோழர் சங்கரசுப்பு (வழக்கறிஞர்)
தோழர் மஞ்சுளா 
(இந்திய மாதர் தேசிய சம்மேளனம்) 

நன்றியுரை: டாக்டர் பி மனோகர் 
(நியூட்டன் அறிவியல் மன்றம்)

அனைவரும் வருக!
தோழமையுள்ள,
நியூட்டன் அறிவியல் மன்றம், சென்னை.
தொடர்புக்கு: 94442 30176.
*******************************************************

செவ்வாய், 27 நவம்பர், 2018

திங்கள், 26 நவம்பர், 2018

இந்தியப் புரட்சியின் நாயகன்
தோழர் ஏ எம் கே அவர்களுக்கு
இறுதிச் செவ்வஞ்சலி செலுத்த
காட்பாடி செல்கிறேன்.    
முல்லையும் பூத்தியோ!
------------------------------------------
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க்  கடந்த
கோதண்ட ராமன் மறைந்த பின்னால்
முல்லையும் பூத்தியோ தண்டமிழ் நாட்டே. 

மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்
தோழர் ஏ எம் கே மறைந்தார்! எனினும்
புரட்சியாளர் நெஞ்சங்களில் வாழ்கிறார்!
விண்ணதிரும் வீரவணக்க முழக்கங்களுடன்
இந்தியப் புரட்சியின் நாயகனுக்கு
விடை கொடுப்போம்!
***************************************   

ஞாயிறு, 25 நவம்பர், 2018

சுவடுகள் அழிவதில்லை!
---------------------------------------------
ஏ எம் கே!
இந்தியப் புரட்சியின் வரலாறு இப்படி ஒரு
மகத்தான மானுடரைப் படைத்தளித்து உள்ளது.

தமிழ்நாட்டில் புரட்சியின் மூல ஊற்றாய்
மாபெரும் நக்சல்பாரி இயக்கத்தைக் 
கட்டி எழுப்பிய தலைமைச் சிற்பியாய்
மண் பயனுற வாழ்ந்து மறைந்த
மகத்தான மாமனிதர்
தோழர் ஏ எம் கே! 

அரை நூற்றாண்டு காலத் தலைமறைவு
வாழ்க்கையின் ஊடே இந்தியப் புரட்சிக்குப்
பாதை சமைத்து  யுகத்தின் மீது சுவடு பதித்த
மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்
தோழர் ஏ எம் கே!

மகத்தான
மார்க்சிய லெனினிய சிந்தனையாளராய் 
மார்க்சிய மூல ஆசான்களின் வரிசையில்
அடுத்து அமரும் அருகதை வாய்ந்தவர் 
தோழர் ஏ எம் கே!

வலது இடது திரிபுகளையும்
கலைப்புவாதத்தையும்
காலமெல்லாம் எதிர்த்துச் சமர் புரிந்து
மார்க்சிய லெனினியத்தின் தூய்மையைக் காத்த
மாபெரும் சமரன் எங்கள்
தோழர் ஏ எம் கே!

வசந்தத்தின் இடிமுழக்கம் வெடித்த காலத்தில்
புரட்சியை நேசிக்கும்
பல்லாயிரக் கணக்கான இளைஞர்களால்
வேறு எவருடைய  திருநாமமும்
இவ்வளவு ஆவேசத்துடன்
சுவீகரிக்கப் பட்டதில்லை
ஏ எம் கேயின் திருநாமம் தவிர!

போய்வா வீர நாயகனே!
இந்தியப்  புரட்சியின் நீண்ட பயணத்தில்
உன் பாதம் பதிந்த
சுவடுகள் அழிவதில்லை!
அவை என்றென்றும் எமக்கு ஆதர்சமாய்
புரட்சியை வென்றெடுங்கள் என்று
எங்கள் செவிகளில் ஓதிக்கொண்டே இருக்கும்!
********************************************************  
   






      
BHEL நிறுவனத்தில் தொழிற்சங்கங்கள் மிகவும்
வலுவாக இருக்கின்றன.குறைந்த  அளவு
தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற HMKP
சங்கத்திற்கும் கூட நிர்வாகம் அங்கீகாரம்
அளித்துள்ளது. அதன் தமிழகத் தலைவராகவும்
மற்றும் அகில இந்தியப் பொறுப்பிலும் நக்சல்பாரித்
தோழர் ஒருவர் நீண்ட காலம் இருந்து வந்தார்.

மத்திய அரசு மற்றும் மத்தியப் பொதுத்துறை
நிறுவனங்களில் தொழிற்சங்கம் (UNION) மற்றும்
SC/ST/OBC நலச் சங்கம் (Welfare Association) இரண்டுக்கும்
அங்கீகாரம் உண்டு. இவை ஒன்றையொன்று இட்டு
நிரப்பிக் கொள்பவை (complementary). ஊதிய உயர்வு
உள்ளிட்ட சகல விஷயங்களிலும் நிர்வாகத்துடன்
ஒப்பந்தம் போடும் அதிகாரம் தொழிற்சங்கத்துக்கு
மட்டுமே உண்டு. நலச்சங்கத்திற்கு இல்லை.

நீண்ட போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு
மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில்
சாதி அடிப்படையிலான நலச்சங்கங்கள்
அமைப்பதற்கான உரிமையைப் பெற்றோம்.
நலச்சங்கங்கள் தொழிற்சங்கத்துக்கு
எதிரானவை அல்ல.          
----------------------------------------------------------------------------
முற்றிலும் தன்னார்வக் குழுக்களால் (NGOs)
ஆட்கொள்ளப்பட்ட லிபரேஷன் குழுவானது
தன்னார்வக் குழுக்களின் செயல்பாட்டுக்கு
ஒத்திசைவான ஒரு கருத்தியலை முன்வைக்க
வேண்டிய அவசியத்தில் இருந்தது. அதற்கு
உகந்ததாக இருந்தது சாதி வெல்லற்கரியது
என்ற பின்நவீனத்துவம் கட்டியமைத்த
பிம்பமே. எனவே சாதியை அடித்தளத்தில்
வைத்து ஒரு முன்மொழிதலைச் செய்தார்
தோழர் வி எம்.

மார்க்சிஸ்ட் காட்சியைப் பொறுத்த மட்டில்
அதன் வாக்கு வங்கி அரசியலுக்குப்  பயன்படுவது
சாதியம் பற்றிய பின்நவீனத்துவம் உருவாக்கிய
மிகைமதிப்பீட்டு பிம்பமே. எனவே அதை
எடுத்துக் கொண்டார் யெச்சூரி.

தோழர் வி எம், தோழர் யெச்சூரி ஆகியோரின்    
செயல்பாடுகள் அரசியல் பிழைப்புவாதம் அல்லது
சந்தர்ப்பவாதம் என்ற வகைமையில் வரக்கூடும்.
அவர்களை பின்நவீனத்துவர்கள் என்று நான்
கூறவில்லை; கூற முற்படவும் இல்லை.

சாதி அடிப்படையிலான நலச்சங்கங்கள்
வேண்டும் என்று போராடிப் பெற்றது
சாதி வெறியர்கள் அல்ல.மாறாக தொழிற்சங்கமே.
ஒரே கம்யூனிஸ்ட் சங்கம் போதும்தான்.
ஒரு வேலைப்பிரிவினையை
முன்னிட்டே நலச்சங்கங்களைக்
கோரிப்பெற்றோம். மார்க்ஸ்  கூறுகிற
எந்திரப்பாட்டாளி (industrial proletariat) வர்க்கத்தைப்
பெருமளவில் கொண்டுள்ள பெருந்தொழில்
நிறுவனங்களில் தொழிலாளர்கள் வர்க்கமாகத்
திரளவோ வேலைநிறுத்தங்கள்  செய்யவோ
சாதி ஒரு தடையாக இல்லை; இல்லவே இல்லை.
தொழிலாளர்களின் கூட்டுபேர சக்தியை விட
சாதி உணர்வுக்கு வெகுவாக ஆற்றல் குறைவு.

சாதி அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
நீக்கமற நிறைந்து ஆதிக்கம் செலுத்துகிறது
என்ற கருத்துத்தான் நான் கூறிய சாதி பற்றிய
மிகை மதிப்பீடு. முதலாளித்துவ உற்பத்தி
உறவுகள் முற்றிலுமாகச்  செயல்படும் பெருந்
தொழில் நிறுவனங்களில் சாதியை உடைத்து
நொறுக்கிக் காட்டியுள்ளது இந்தியப் பாட்டாளி
வர்க்கமும் மார்க்சியமும்.    
-------------------------------------------
பின்நவீனத்துவம் அமைப்பாதலை (அமைப்பாக
ஒன்று சேர்வதை) எதிர்க்கும் ஒரு தத்துவம்.
எனவே சாதி பற்றிய ஒரு கருத்தை எந்தப்
பின்நவீனத்துவவாதி  சொன்னார் என்ற கேள்வி
பொருளற்றதாகி விடுகிறது. மார்க்சிஸ்ட் தலைவர்கள்
அல்லது பூர்ஷ்வா கட்சிகளின் தலைவர்கள் தத்தம்
அமைப்புகள் (கட்சிகள்)  வாயிலாக தங்களின்
கருத்தைத் தெரிவிப்பதால், இடஞ்சுட்டிப்
பொருள் விளக்குவது .சுலபம்.

ஆனால் பின்நவீனத்துக்கு என்று இந்தியாவில்
ஒரு கட்சியோ அமைப்போ கிடையாது.
Communist Party of India என்பது போல,
Post Modernist Party of India என்று எதுவும் கிடையாது.
எனவே இதுதான் பின்நவீனத்துவத்தின்
அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் கருத்து
என்று உறுதிப்படச் சொல்ல இயலாது.

ஹெச் ஜி வெல்ஸ் எழுதிய
அறிவியல் புனைவான The Invisible Man நாவலில்
வருகிற invisible man போலச் செயல்படுவதுதான்
பின்நவீனத்துவம். எனவே என் மீது குறை
காண முயல வேண்டாம். அது
பின்நவீனத்துவத்தின் குறை.            


வெள்ளி, 23 நவம்பர், 2018

இன்றைய உற்பத்தி முறையில்
சாதி உற்பத்தியின் அடித்தளமாக இருக்கிறதா?
--------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
சாதி பற்றிய தமது கருத்தில் எஃகு போன்று
உறுதியாக இருக்கிறார் அண்ணன் தியாகு அவர்கள்.
1) சாதி என்பது கருத்து மட்டுமன்று; பொருளும் ஆகும்.
2) சாதிக்கு பொருளியல் அடிப்படை உண்டு.
3) சாதியே பொருண்மிய அடிப்படையாக உள்ளது.
என்ற அண்ணன் தியாகு அவர்களின் கருத்துடன்
முற்றிலுமாக முரண்படுகிறேன்.

1980களில் பின்நவீனத்துவம் இந்திய சிந்தனைப்
பரப்பை பெரும் ஆரவாரத்துடன் ஆக்கிரமித்தது.
சகல தத்துவங்களும் கோட்பாடுகளும்
மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்
என்றது. மார்க்சியம் ,பெரியாரியம், சாதியம்
ஆகியவற்றை பின்நவீனத்துவம் மறுவாசிப்புச்
செய்தது. அவர்களின் மொழியில், கட்டுடைத்தது.

இதன் நிகர விளைவாக சாதி என்பது வெல்லற்கரியது
என்ற பிம்பத்தை பின்நவீனத்துவம் கட்டி அமைத்தது.
சாதியை அதன் உள்ளார்ந்த வலிமையை விட, ஆயிரம்
மடங்கு வலிமை மிகுந்த ஒன்றாக உருப்பெருக்கிக்
காட்டியது பின்நவீனத்துவம்.

குட்டி முதலாளித்துவச் சிந்தனையாளர்கள்
மட்டுமின்றி, மார்க்சிய லெனினியச்
சிந்தனையாளர்களும் இதன் தாக்கத்தில் இருந்து
தப்பவில்லை.பின்நவீனத்துவம் கட்டுடைத்துக்
காட்டிய, சாதி பற்றிய மிகை மதிப்பீட்டையே
தங்களின் புதிய புரிதலாகக் காட்டினர்  லிபரேஷன்
குழுவின் தலைவரான வினோத் மிஸ்ரா,
மார்க்சிஸ்ட் தலைவர் யெச்சூரி ஆகியோர்..

இதைத் தொடர்ந்து சாதி என்பது மேற்கட்டுமானம்
என்ற மரபான மார்க்சியப் புரிதல் செல்வாக்கிழந்தது.
அ) சாதி வலுவான பொருண்மிய அடிப்படை உடையது
ஆ) சாதி என்பது மேற்கட்டுமானம் அல்ல, அடித்தளம்
இ) காரல் மார்க்ஸ் கூறிய வர்க்கம் என்பது
இந்தியாவில் சாதிதான்
ஈ) மார்க்சியத்தால் இதுவரை  சாதியை வெல்ல
முடியவில்லை; இனிமேலும் முடியாது
ஆகிய கருத்துக்கள் மார்க்சியம் மற்றும் பிற
சிந்தனைத் தளங்களிலும் செல்வாக்குப் பெற்றன.
சமூகத்தின் இன்றைய பொதுப்புத்தியையும் 
சாதி குறித்த மிகையான பிம்பமே ஆட்கொண்டுள்ளது.

இத்தகைய சூழலில்தான் முதிர்ந்த மார்க்சிய
சிந்தனையாளர் அண்ணன் தியாகு அவர்களுடன்
இந்த விவாதம் நடைபெறுகிறது.

தற்போது இந்த 2018ஆம் ஆண்டில் இந்திய சமூகத்தில்
நிலவும் உற்பத்தி முறை ஏகாதிபத்தியச் சார்பு
முதலாளித்துவ உற்பத்திமுறை. இந்த முறையிலான
பொருள் உற்பத்தியில், சாதி என்ன பாத்திரம்
வகிக்கிறது? ஒன்றும் இல்லை என்பது கண்கூடு.
இன்றைய உற்பத்தி முறையின் அடித்தளமாக
சாதி இருக்கிறது என்போர், அது எங்ஙனம் உற்பத்தியின்
அடித்தளமாக இருக்கிறது என்பதைக் கூற வேண்டும்.

இன்று சகல தொழில்களுக்கும் மின்சாரமே அடிப்படை.
ஆனால் மார்க்ஸ் (1818-1883) எங்கல்ஸ் (1820-1895) காலத்தில்
மின்சார விளக்குகள் கண்டுபிடிக்கப்படவில்லை. மார்க்சும்
எங்கல்சும் வாழ்ந்த லண்டன் மாநகரில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் மின்சார விளக்குகள் நடைமுறைக்கு
வரவில்லை.

எடுத்துக்காட்டாக மின்சார உற்பத்தித்  துறையை
எடுத்துக் கொள்வோம். பாரத மிகுமின் நிறுவனம்
எனப்படும் BHEL நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுவோம்.
இந்நிறுவனம் மேற்கொள்ளும் மின்சார உற்பத்தியில்
சாதியானது எவ்வாறு உற்பத்தியின் அடித்தளமாக
உள்ளது என்பதை அண்ணன் தியாகு அவர்கள்
விளக்க வேண்டும். (வேறு எடுத்துக்காட்டு மூலமும்
விளக்கலாம்).

சாதி என்பது ஒரு சமூகக் கட்டுமானம் என்பதன்
பொருள் சமூகத்தில் உயிர்ப்புடன் இருக்கும்
கட்டுமானம் என்று பொருள். சமூகக் கட்டுமானம்
என்றாலே வலுவான பொருளியல் அடிப்படை
கொண்டது என்று பொருள் கொள்ளக் கூடாது.
பொருளியல் அடித்தளம் இல்லாமலும் வெறும்
மேற்கட்டுமானத் தளத்தில் பண்பாட்டுத் தளத்தில்
ஒரு சமூகம் தேவைக்கேற்ற ஒரு கட்டுமானத்தை
எழுப்பிக் கொள்ளும். அப்படித்தான் நிலவுடைமைச்
சமூகக் காலத்தில், அன்றைய ஆளும் வர்க்கம்
சாதியத்தைக் கட்டமைத்தது.

பல்வேறு பழங்குடி இன அரசுகளை வெற்றி கொண்டே
நிலவுடைமைச் சமூகம் கட்டப்பட்டது. அப்போது
நிலவுடைமைப் பேரரசில் இணைக்கப்பட்ட
பழங்குடிகளின் பண்பாட்டை  இயன்ற அளவு
தக்க வைக்க வேண்டிய அவசியம் அன்றைய
ஆளும் வர்க்கத்திற்கு இருந்தது. அத்தோடு பேரரசில்
இணைக்கப்பட்ட பழங்குடிச் சமூகங்களின்
ஒப்பீட்டு அந்தஸ்தை (relative superiority) உறுதி செய்யவுமே
தொடக்க காலத்தில் சாதியம் தோற்றுவிக்கப்பட்டது.
இதற்கு பொருளியல் அடித்தளம் தேவைப்படவில்லை.
காலப்போக்கில் சாதியம் சமூகத்தில் தீமைகளின்
திரட்சியாய் மாறியது.நிற்க.

மார்க்சும் எங்கல்சும் கூறிய பொருளியல் அடித்தளமே
மேற்கட்டுமானத்தைத் தீர்மானிக்கும் என்பது
ஒரு சமூகவியல் விதி (sociological law). சமூகவியல்
விதிகள்  இயற்பியல் விதிகள் போன்று மிகவும்
கறாராகப் பொருந்துபவை அல்ல. பைனாமியல்
தேற்றம் போன்றோ, பாயில் விதி, சார்லஸ் விதி
போன்றோ சமூகவியல் விதிகளைப் பொருத்திப்
பார்ப்பது யாந்திரிகமான புரிதல் ஆகும். எனவே
சாதிக்கு ஒரு பொருளியல் அடிப்படை இருக்க
வேண்டிய அவசியமில்லை. அது வெறும் பண்பாடு
சார்ந்த மேற்கட்டுமானம்தான்.

எனவே சாதியை மிகைமதிப்பீடு (over estimate)
செய்வதைத் தவிர்ப்போம். இதன் பொருள் சாதியை
ஒரு மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல
நசுக்கி விடலாம் என்பதல்ல.
*****************************************************       
தோழர் பாஸ்கர் விசுவநாதன் முத்து அவர்களுக்கு,
---------------------------------------------------------------------------------------
தங்களின் பின்னூட்டத்தில் சொல்லப்பட்ட கருத்து
தங்களின் பிறழ்புரிதலைச் சுட்டிக்காட்டுகிறது
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனைய
தத்துவங்களைப் போன்றதன்று மார்க்சியம்.
இந்தியத் தத்துவஞான வரையறைப்படி மார்க்சியம்
என்பது ஒரு தரிசனம் ஆகும். இங்கு தரிசனம்
என்பதற்கு சுவாமி தரிசனம் என்பது போலப்
பொருள் கொள்ளக் கூடாது. தரிசனம் என்றால் 
மக்களுக்கு விடுதலை தரும் தத்துவம் என்று பொருள்.

நியூட்டனின் இயற்பியலை உலகம் என்றோ கடந்து
விட்டது. மார்க்ஸ் எங்கல்சின் படைப்புகளில்
குறிப்பாக பொருள்முதல்வாதத்தில் நியூட்டனின்
இயற்பியல் வரை மட்டுமே  உள்வாங்கப் பட்டுள்ளது.
அதையும் தாண்டி 20,21ஆம் நூற்றாண்டின் இயற்பியலை
மார்க்சியத்தில் இணைத்து மார்க்சியத்தைச் செழுமைப்
படுத்தவும், காலத்திற்கு ஏற்றவாறு அதைப் புதுப்பிக்கும்
பணியிலுமே நியூட்டன் அறிவியல் மன்றம் தன்னை
அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. எனவே எமது
முன்வைப்புகள் அறிவியல்வாதம் ஆகாது. மேலும்
அவை நியூட்டனின் இயற்பியலும் ஆகாது. அருள்கூர்ந்து
பிறழ்புரிதலைத் தவிர்க்கவும்.     

சாதி என்பது மேற்கட்டுமானம்தான் தோழரே.
இதில் தங்களுக்கு ஒத்த கருத்து இருக்கிறது
என்பதில் மகிழ்ச்சி.

விவசாயம் பெரிதும் முதலாளித்துவமயம்  ஆக்கப்பட்டு
விட்டது. விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள், மரபணு
மாற்றப்பட்ட பயிர்கள், வீரிய வித்து ரகங்கள் என
அனைத்து வேளாண்மை இடுபொருட்களும் பன்னாட்டு
நிறுவனங்களின் தயவில் வேளாண்மையை வைத்துள்ளன.
வேளாண்மையே முதலாளித்துவமயம் ஆக்கப்பட்ட
பின்னால், அரைநிலப் பிரபுத்துவ உற்பத்திமுறை
தேய்ந்து கொண்டே வந்து விட்டது. எனினும்
மலைப்பாங்கான இடங்கள், பழங்குடிகள் ஆதிவாசிகள்
வசிக்கும் வனப்பகுதிகள் ஆகியவற்றில் மட்டும் இன்னும்
 பின்தங்கிய உற்பத்திமுறையான அரைநிலப்பிரபுத்துவ
முறை குற்றுயிரும் குலையுயிருமாக உள்ளது.
பொதுநீரோட்ட உற்பத்தி முறை என்பது ஏகாதிபத்தியச்
சார்பு முதலாளிய உற்பத்திமுறையே.

சூழலுக்கு ஏற்ப ஏகாதிபத்தியம் தனது
செயல்தந்திரத்தை மாற்றிக் கொள்ளும். இன்று உலக
அளவில் ஒரு நாட்டின் மீது படையெடுத்து அந்த
நாட்டம் ஆக்கிரமித்து, அதன் பிறகு அந்நாட்டின்
வளங்களைச்  சுரண்ட வேண்டிய நிலை இன்று
காலனியாதிக்க சக்திகளுக்கு இல்லை. வேறு
வழிகளைக் கடைப்பிடிக்கின்றன. இங்கு எஜமான்
மாறியதாலேயே மக்களின் அடிமைத்தனம் நீங்கி
விட்டதாக அர்த்தம் இல்லை. எனவே சுதந்திரம்
என்பது இன்றைய ஏகாதிபத்தியத்தை முறியடித்தால்
மட்டுமே பெற முடியும்.


    
 

வியாழன், 22 நவம்பர், 2018

பொருள் பற்றிய பத்தாம்பசலித் தனமான
வரையறை இனிமேலும் செல்லுபடி ஆகாது!
அண்ணன் தியாகு அவர்களின் விளக்கத்தை
முன்வைத்துச் சில கருத்துக்கள்!
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம் என்ற
கருத்தை முன்வைத்து அதை நிரூபித்தும் உள்ளேன்.
எனினும் இந்த வரையறை மட்டுமே சாதியை
முழுமையாக வர்ணிக்கப் போதுமானதல்ல.

தேவையான மற்றும் போதுமான (necessary and sufficient)
நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று
அறிவியல் கோருகிறது. எனவே சாதி ஒரு சமூகக்
கட்டுமானம் என்ற வரையறையையும்
முன்வைத்துள்ளேன்.

சாதி ஒரு கருத்தியல் கட்டுமானம் என்பதற்கும்
சாதி ஒரு சமூகக் கட்டுமானம் என்பதற்கும் இடையில்
எவ்வித சுய முரண்பாடும் இல்லை. சாதி ஒரு சமூகக்
கட்டுமானம் என்பதை மறுப்பது சாதியின் இருப்பையே
மறுப்பதாகி விடும்.

இவ்விரண்டு வரையறைகளும் போதுமானவை அல்ல
என்று அறிவியல் கூறுவதால், சாதிக்கு எவ்விதமான
பௌதிக இருப்போ பௌதிக அடித்தளமோ கிடையாது
என்ற முக்கியமான வரையறையையும் முன்வைத்துள்ளேன்.

ஆக சாதி என்பது பொருளல்ல வெறும் கருத்தே என்பது
இவற்றில் இருந்து பெறப்படுகிறது. எனினும் அண்ணன்
தியாகு அவர்கள் இதில் உடன்பட மறுக்கிறார். சாதி
என்பது பொருளும் ஆகும் என்கிறார்.

சாதி குறித்த கருத்தொற்றுமை ஏற்படாமல் தடுக்கும்
இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்ன? பொருள் பற்றிய
வரையறையில், புரிதலில் நாங்கள் இருவரும்
முரண்படுவதுதான் ஒரே காரணம்.

ஐம்புலன்களால் அறியத் தக்கதும் மனித சிந்தனைக்கு
வெளியில் சுயேச்சையாக இருப்பதுமே பொருள் என்று
கூறும் அண்ணன் தியாகு அவர்கள், அந்த வரையறையில்
கறாராக நிற்காமல்,  சிந்தனையையும் பொருளின் கணக்கில்
எழுதி விடுகிறார்.

வடிவமுடைய பொருட்கள் மட்டுமல்ல, நிகழ்வுகளும்
புலப்பாடுகளும் (events and phenomena) கூட பொருட்கள்தாம்
என்று கூறுவதன் மூலம் பொருள் என்பதன் வரம்பை
வெகுவாக விஸ்தரித்து விடுகிறார். இதிலுள்ள ஆபத்து
என்னவென்றால், உருவமற்ற இறைவன் ஏக இறைவன்
போன்ற ஆசாமிகளும் கூட பொருளின் கணக்கில்
நுழைந்து விடுவார்கள்.

எனினும், அண்ணன் தியாகு அவர்கள் முன்வைக்கும்
பொருள் பற்றிய தளர்வானதும் நெகிழ்ச்சியானதுமான
வரையறைக்கு அவரைக் குற்றம் சொல்ல இயலாது.
19ஆம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதத்தைத்
தாண்டிச் செல்லாத ஆகப் பெருமான்மையினரான
மார்க்சியர்களின் புரிதலையே அண்ணன் தியாகு
அவர்களும் கொண்டிருக்கிறார். நதியின் பிழையன்று
நறும்புனல் இன்மை!

மார்க்சும் எங்கல்சும் 19ஆம் நூற்றாண்டில் பிறந்து
வாழ்ந்து மறைந்தவர்கள். மார்க்ஸ் 1818ல் பிறந்து
1883ல் மறைந்தார்; எங்கல்ஸ் 1820ல் பிறந்து 1895ல்
மறைந்தார். தங்களின் தத்துவத்துக்கு இயங்கியல்
பொருள்முதல்வாதம் என்று மார்க்சோ எங்கல்சோ
பெயரிடவில்லை. மார்க்ஸ் எங்கல்சின் மறைவுக்குப்
பின்னரே, இயங்கியல் பொருள்முதல்வாதம் என்ற
பெயர் ரஷ்ய மார்க்சிய அறிஞர் பிளாக்கானவ்
அவர்களால் சூட்டப் பட்டது.

மார்க்சும் எங்கல்சும் உலகிற்குக் கொடையளித்த
பொருள்முதல்வாதம் 19ஆம் நூற்ராண்டில்
ஐரோப்பாவில் நிலவிய பொருள்முதல்வாதம்.
நியூட்டனின் இயற்பியலை சாத்தியமான அளவுக்கு
உள்வாங்கிக் கொண்ட பொருள்முதல்வாதமாக
மார்க்ஸ் எங்கல்சின் பொருள்முதல்வாதம் இருந்தது.

எனினும் பொருள் என்றால் என்ன என்று தலைசிறந்த
பொருள்முதல்வாதிகளான மார்க்சோ எங்கல்சோ வரையறுக்கவில்லை. இது அவர்களின் குறையன்று.
அவ்வாறு வரையறுப்பதற்கான தேவை அவர்களின்
காலத்தில் எழவில்லை.

மார்க்ஸ் எங்கல்ஸ் காலத்தில் பொருள் பற்றிய
அரிஸ்டாட்டிலின் வரையறையை அக்கால அறிவியல்
உலகம் ஏற்றுக் கொண்டிருந்தது. நான்கு மூலக்
கொள்கையே (Four elements theory) அரிஸ்டாட்டிலின்
பொருள் பற்றிய கொள்கை. அதே காலத்தில்,
இந்தியாவிலும் பிற கீழ்த்திசை நாடுகளிலும்
பஞ்சபூதக் கொள்கை நிலவியது. பொருள் என்பது
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து
பூதங்களின் சேர்க்கையே என்பதுதான்
பஞ்சபூதக் கொள்கை. நாம் கூறிய பஞ்ச பூதங்களில்
ஆகாயத்தை மட்டும் நீக்கி விட்டு, மீதி நான்கு
பூதங்களின் சேர்க்கையே பொருள் என்றார்
அரிஸ்டாட்டில்.

அரிஸ்டாட்டிலின்  வரையறையைத்தான் நியூட்டனும்
கலிலியோவும் ஏற்றுக் கொண்டிருந்தனர். அதையே
மார்க்சும் எங்கல்சும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
எனவே பொருள் என்பது குறித்து வரையறுக்க
வேண்டிய தேவை எழவில்லை மார்க்சுக்கும்
எங்கல்சுக்கும்.

ஆனால், லெனின் காலத்தில் பொருள் என்றால் என்ன
என்று வரையறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் லெனினுக்கு
இருந்தது. பொருள் என்றால் என்ன என்ற கேள்வியை
கருத்துமுதல்வாதிகள் எழுப்பியபடியே இருந்தார்கள்.
இதற்கு பதிலளிக்கவே  "பொருள் என்பது  மனத்தைச்
சாராத சுயேச்சையான ஒரு புறநிலை யதார்த்தம்"
என்ற தமது புகழ் பெற்ற வரையறையை லெனின்
அளித்தார். இதன் மூலம் மார்க்ஸ் எங்கல்ஸ்
காலத்திய 19ஆம் நூற்றாண்டின்
பொருள்முதல்வாதத்தை லெனின் புதுப்பித்தார்.

மார்க்ஸ் எங்கல்சுக்கு முன்பே பொருள்முதல்வாதம்
இருந்தது. அவர்களின் மறைவுக்குப் பின்னரும்
பொருள்முதல்வாதம் நீடித்து நிற்கிறது. மார்க்சிய
மூல ஆசான்களுக்குப் பின்னர், பொருள்முதல்வாதத்தை
மறைந்த விஞ்ஞானி ஸ்டீபான் ஹாக்கிங்
வளர்த்தெடுத்தார்.

பொருள் பற்றிய மனிதகுலத்தின் அறிவு மார்க்ஸ்
எங்கல்சின் 19ஆம் நூற்ராண்டுக்குப் பின்னர்
அசுரத்தனமாக வளர்ந்துள்ளது. Atomic physics, Nuclear physics,
Particle physics ஆகிய துறைகள் மார்க்சின் காலத்தில்
இயற்பியலில் கிடையாது. 1897ல்தான் ஜே ஜே தாம்சன்
எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1917ல்தான்
ருதர்போர்டு புரோட்டானைக் கண்டுபிடித்தார்.
ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானைக் கண்டுபிடித்தது
1932ல்.

இந்த அறிவியல் வளர்ச்சிகள் யாவும் மார்க்ஸ்
எங்கல்ஸ் காலத்திற்குப் பிந்தியவை. அறிவியலின்
இந்த வளர்ச்சியை உள்வாங்கியதே நவீன
பொருள்முதல்வாதம். அது ஸ்டீபன் ஹாக்கிங்கின்
பொருள்முதல்வாதம். இதுவே நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் பொருள்முதல்வாதம். இதுவே,
இது மட்டுமே போர்க்குணமிக்க பொருள்முதல்வாதம்.

எனவே நவீன அறிவியல் கூறும் பருப்பொருளின்
வரையறைப்படி, சாதி என்பது பொருளே அல்ல.
பௌதிக இருப்போ பௌதிக அடித்தளமோ அற்ற
எதுவும் பொருளே அல்ல. சிந்தனையோ சிந்தனையின்
விளைபொருளோ ஒருபோதும் பொருள் ஆகாது.
எனவே சாதி என்பது பொருளல்ல.

19ஆம் நூற்றாண்டுப் பொருள்முதல்வாதப் பழமைச்
சிறையில் இருந்து மார்க்சியர்களை விடுவிப்போம்.
*******************************************************

 




   

         
அ) பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு
ஆ) ஏறுவரிசை உயர்வும் இறங்குவரிசைத் தாழ்வும்
கொண்ட படிநிலை அமைப்பு
இ) சாதியப் படிநிலையில் கீழே கடைசியில் இருக்கும்
அசுத்தமான மக்களின் மீதான தீண்டாமை
ஆகிய மூன்று உள்ளடக்கக் கூறுகளைக் கொண்டதே
சாதியம் என்னும் அமைப்புமுறை.

      
வெல்ல முடியாததா சாதி?
-------------------------------------------
1980களில் இந்தியாவின் தத்துவ அரங்கில் நுழைந்து
தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின்நவீனத்துவம்
சாதி வெல்லற்கரியது என்ற கருத்தை முன்வைத்தது.
பின்நவீனத்துவத்தின் இந்தக் கருத்து குட்டி முதலாளியச்
சிந்தனையாளர்களை மட்டுமின்றி மார்க்சிய லெனினிய
நக்சல்பாரி சிந்தனையாளர்களும் பாதித்தது.

இவ்வாறு தன் மெய்யான வலிமையை விட ஆயிரம்
மடங்கு வலிமை மிக்க ராட்சசத் தன்மை வாய்ந்த
ஒன்றாக, வெல்லற்கரிய ஒன்றாக சாதியைக் கற்பித்தது
பின்நவீனத்துவம். இந்திய மக்களின் மீது பின்நவீனத்துவம்
தொடுத்த உளவியல் தாக்குதல் இது.  அனேகமாக இதற்கு இரையாகதவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். 



 

புதன், 21 நவம்பர், 2018

அண்ணன் தியாகு அவர்களுக்குச் சில கேள்விகள்!
சாதி பொருளாகவும் இருக்கிறது என்ற தங்களின்
கருத்து தவறு என்பதற்கான நிரூபணம்!
-------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
1) மனிதர்களிடையே பிறப்பின்போதே உயர்வு தாழ்வு
இருக்கிறது என்று சொல்கிறதே சாதியம், இது
உண்மையா அல்லது வெறும் கற்பிதமா?

2) சாதி என்பது ஒரு படிநிலை அமைப்பாக (graded system)
உள்ளது. கீழ் சாதியில் இருந்து மேலே செல்லச் செல்ல
ஓர் ஏறுவரிசை உயர்வு உள்ளது. அதே போல, மேல்
சாதியில் இருந்து கீழே வர வர, ஓர் இறங்குவரிசைத்
தாழ்வு இருக்கிறது என்று சொல்கிறதே சாதியம்.
இது உண்மையா அல்லது வெறும் கற்பிதமா?

3) சாதியப் படிநிலையில் மிகவும் தாழ்ந்த நிலையில்
இருக்கும் சாதியினர் அசுத்தமானவர்கள். அவர்களைத்
தீண்டக் கூடாது. மொத்த சமூகமும் அவர்கள் மீது
தீண்டாமை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்கிறதே
சாதியம். இது உண்மையா அல்லது வெறும் கற்பிதமா?

4) சாதியம் என்பது மேற்கூறிய மூன்று உள்ளடக்கக்
கூறுகளைக் கொண்டது. இதுதான் சாதியம். சாதியம்
கூறும் மேற்கூறிய மூன்று கூறுகளும் வக்கிரமான
குரூரமான பொய்மையின் அடிப்படையில்
உருவாக்கப் பட்டவை.

5) மனிதர்களிடையே பிறப்பிலேயே உயர்வு தாழ்வு
இல்லை என்று நிரூபித்துள்ளது அறிவியல். சாதியம்
கூறுகிற படிநிலை அமைப்பான இறங்குவரிசைத்
தாழ்வு என்பது அப்பட்டமான பொய் என்று
அறிவியல் நிரூபித்து உள்ளது. தீண்டாமைக்கு
உள்ளாக்கப்பட்ட மக்கள் அசுத்தமானவர்கள் என்பதில்
அணுவளவும் உண்மை இல்லை என்றும் நிரூபித்து
உள்ளது அறிவியல்.

6) ஆக சாதியம் என்பது தவறான, பொய்யான
கோட்பாடுகள் மீது கட்டப்பட்ட ஒரு கருத்தியல்
கட்டுமானம் என்பதை அறிவியல் நிரூபித்து உள்ளது.
உண்மை இப்படியிருக்க, சாதிக்கு ஒரு பொருளாயத
அடிப்படை இருக்கிறது என்று தாங்கள் கூறுவது
எப்படிச் சரியாகும்?

7) சாதியத்துக்கு எப்போது ஒரு பொருளாயத அடிப்படை
இருக்க முடியும்? சாதி கூறுகிற பிறப்பிலேயே வருகிற
உயர்வு தாழ்வு உண்மையாக இருந்தால் மட்டுமே
சாதிக்கு ஒரு பொருளாயத அடிப்படை இருப்பதாகக்
கூற முடியும். ஆனால் உண்மையில் சாதிக்கு
அப்படி எதுவும் இல்லை. சாதியம் என்பது வெறும்
கற்பிதங்களின் அடிப்படையில் கட்டப்பட்டது.

8) முற்றிலும் கற்பிதங்களின் அடிப்படையில்
கட்டப்பட்ட சாதிக்கு பொருளாயத அடித்தளம்
எப்படி இருக்க முடியும்? சாதி எவ்வாறு ஒரு பொருளாக
இருக்க முடியும்?

9) சாதிக்கு பொருளாயத அடிப்படை இருக்கிறது என்று
சொல்வது, சாதி கூறுகிற பிறவியிலேயே உயர்வு
தாழ்வு உண்டு என்ற பொய்மையை ஏற்றுக் கொள்வதாக
அமையும்.

10) சாதியம் என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம்.
இயற்கைக்கு விரோதமான  முற்றிலும் செயற்கையான
கற்பிதங்கள் மீது கட்டப்பட்ட சாதியத்துக்கு எவ்வித
பௌதிக அடிப்படையோ, பொருளாயத அடிப்படையே
கிடையாது. இதைத் தங்களால் மறுக்க முடியுமா?
பதில் கூறுங்கள் மதிப்புக்குரிய அண்ணன் தியாகு
அவர்களே.
*********************************************************************.


  
     
மன்னிக்கவும் தோழர் பகத்சிங் பாரதி.
சாதி உற்பத்தி உறவாகவும் இருக்கிறது என்று
சொல்ல வரவில்லை. உற்பத்தி உறவாக சாதி
இருக்க வேண்டுமென்றால், அது உற்பத்தியில்
தாக்கம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை
உள்ளது என்று மட்டுமே கூறியுள்ளேன்.

நவீன கால உற்பத்தியில், சாதியானது எவ்விதத்திலும்
உற்பத்தியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை
என்பது அனைவரும் அறிந்த வெளிப்படை உண்மையே.

ஆனால் சாதி தோன்றிய ஆரம்ப  காலக்கட்டத்தில்,
தொடக்கநிலை நிலவுடைமை உற்பத்தி நிலவிய காலத்தில்
சாதி உற்பத்தியில் என்ன பங்கு வகித்தது என்று கூற
எந்த ஆய்வு முடிவும் இல்லை. 

இரும்பின் பயன்பாட்டை இந்திய சமூகம் அறிந்து
கொண்டதைத் தொடர்ந்து, இரும்பு சார்ந்த வேலைகளில்
திறன் பெற்றோர் பெரும் சமூக அந்தஸ்த்தைப்
பெற்றிருந்தனர். இரும்பு சார்ந்த வேலைப்பிரிவினைகளே
பின்னாளில் சாதியாகப் பரிணமித்தது என்ற
கோட்பாடு மட்டுமே சாதியின் தோற்றத்தைச்
சரியாக விளக்கும் ஒரு கோட்பாடு. எனவே அக்காலக்
கட்டத்தில், சாதி உற்பத்தியின் மீது தாக்கம்
விளைவித்ததா, சாதி உற்பத்தி உறவாகவும்
இருந்ததா என்பனவெல்லாம் மார்க்சிய
ஆய்வுக்குக் காத்திருக்கும் விஷயங்கள்.

இக்கட்டுரை சாதியின் தோற்றம் பற்றிப் பேசும்
கட்டுரை அல்ல. எனவே அது குறித்துப் பின்னர்
பார்ப்போம். நவீன கால உற்பத்தியில்,சாதியானது
உற்பத்தி உறவாக இல்லை என்பது கண்கூடு. 
-------------------------------------------------------------------------------
தனித்தமிழ் தலிபானியம் என்றால் என்ன?
-------------------------------------------------------------------------
தமிழில் நவீன அறிவியலை எழுதும்போது,
புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போது,
தனித்தமிழ் தலிபானியம் என்ற போக்கு (trend)
உருவாகி உள்ளது. தியாகு அவர்கள் மட்டுமல்ல
வேறு சிலரும் தலிபானியக் கொள்கைகளைக்
கடைப்பிடிக்கின்றனர்.

இயற்பியலில் singularity என்ற சொல்லுக்கு முற்று ஒருமை
என்று எழுதலாம் என்று சொன்னால் தியாகு அவர்கள்
இயன்வழுப்புள்ளி என்பார். Positron என்ற சொல்லுக்கு
நேர்மம் என்று எழுதலாம் என்று சொன்னால்,
Proton என்ற சொல்லுக்கு நேர்மம் என்று எழுதலாம்
என்பார் தியாகு.

எனவே அறிவியல் கற்ற, அறிவியல் கலைச்
சொல்லாக்கத்தில் பயிற்சி பெற்ற, இருமொழிப்
புலமையுடன் மொழிபெயர்ப்புத் திறன் பெற்ற
அறிஞர் பெருமக்கள் இந்த விஷயத்தில் கருத்துக்
கூறுவது ஏற்புடைத்தாக அமையும்.

பேதை கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்று என்பது
போன்ற செயல்கள் தவிர்க்கப் பட வேண்டும்.       
 
   
சாதியம் கூறுகிற ஏற்றத்தாழ்வு உண்மையா
அல்லது கற்பிதமா? இதுதான் கேள்வி.
உண்மைதான் என்றால், அதாவது சூத்திரனை
விட பார்ப்பான் அறிவாளி என்றால், சாதி என்பது
பொருளே.அதாவது பொருள்முதவாதமே.

இல்லை, சாதியம் கூறுகிற உயர்வும் தாழ்வும் பொய்;
வெறும் கற்பிதமே என்றால் சாதி என்பது கருத்தே.
இதுதான் விடை.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு உண்டா?
--------------------------------------------------------------------------------------
சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள்
இடையே ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கிறது.
உண்மையில் பிறப்பின் அடிப்படையில்
மனிதர்களிடம் உயர்வு தாழ்வு இல்லை என்பது
அறிவியல் நிரூபித்த உண்மை ஆகும்.

சாதி என்பது பொருள் என்று சொல்கிறவர்கள்,
பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடம்
உயர்வு தாழ்வு இருக்கிறது என்கிற சாதியப்
பொய்மையை ஏற்றுக் கொள்கிறவர்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான்
பொருள்முதல்வாதம். இல்லை இல்லை பிறப்பிலேயே
மனிதர்களிடம் உயர்வு தாழ்வு உண்டு என்று
சொல்வது சாதியம். எனவே சாதி என்பது எப்படி
பொருள் ஆகும்? அல்லது பொருள்முதல்வாதம் ஆகும்?

தீண்டாமைக்கு ஏதேனும்
பொருளாயத அடிப்படை உள்ளதா?
--------------------------------------------------------------
பஞ்சமர்களைத் தொட்டால் தீட்டு என்ற தீண்டாமைக்கு
ஏதேனும் அறிவியல் அடிப்படை உள்ளதா?
ஏதேனும் நியாயம் உள்ளதா?
ஏதேனும் பொருண்மிய அடிப்படை (material foundation)
உள்ளதா? ஒரு மயிரும் இல்லை. இதுதானே உண்மை.

அப்படியிருக்க, சாதி எவ்வாறு ஒரு பொருளாயத
அடிப்படையைக் கொண்டிருக்கிறது என்று
சொல்ல இயலும்? சாதிக்கு ஒரு பொருளாயத
அடிப்படை உண்டு என்று சொல்கிறவன்
தீண்டாமை சரியானதே என்று சொல்கிறான்
என்று பொருள்.

எனவேதான் நாம் கூறுகிறோம்: சாதி என்பது ஒரு
கருத்தியல் கட்டுமானம் என்று. சாதி என்பது
பொருளாயதக் கட்டுமானம் அல்ல.  


உற்பத்தியில் பங்கு பெறும் மனிதர்கள், அதாவது
வர்க்கங்கள் தங்களுக்கு இடையில் உற்பத்தி
சார்ந்து கொண்டிருக்கும் உறவே உற்பத்தி உறவே
ஆகும். இது ஒரு விதத்தில் சற்று நுட்பமானது.
மறுபுறத்தில் மிகவும் பரந்துபட்ட தன்மை (broad)
கொண்டது.

மனிதர்களுக்கு இடையிலான சாதிய உறவுகள்
எந்த அளவுக்கு உற்பத்தியோடு தொடர்பு
கொண்டிருக்கிறதோ அந்த அளவுக்கு அவை
உற்பத்தி உறவுகளாகவும் இருக்கும்.உற்பத்தியோடு
தொடர்பற்ற, உற்பத்தியைச் சாராமல் இருக்கிற
சாதிய உறவுகள் உற்பத்தி உறவுகள் ஆகாது.

ரத்த உறவுகளை எளிதில் அடையாளம் காண
முடிவது போல, எளிதில் புரிந்து கொள்ள முடிவது
போல, உற்பத்தி உறவுகளை எளிதில் புரிந்து
கொள்வது கடினம்.

ஆக, சாதிய உறவுகள் உற்பத்தி உறவுகளாக
இருப்பதற்கு அளவுகோல், அவை உற்பத்தியின்
மீது எத்தகைய தாக்கத்தை (impact) ஏற்படுத்துகின்றன
என்பதே.

நவீன எந்திரங்களைக் கொண்ட பெரிய
ஆலைகளில் சாதிய உறவுகள் உற்பத்தியில்
தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஒரு பெரிய
ஆலையில், தாழ்ந்த ஜாதி சூப்பர்வைசருக்கு கீழ்ப்படிய
மாட்டேன் என்று உயர்ந்த சாதித் தொழிலாளர்கள்
கூறுவது இல்லை.        


செவ்வாய், 20 நவம்பர், 2018

சாதி பொருளாகவும் கருத்தாகவும் இருக்கிறது
என்ற அண்ணன் தியாகுவின் கருத்துக்கு மறுப்பு!
-----------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
சாதி என்பது பொருள்முதல்வாதமே என்ற
சிறுபிள்ளைத்தனமான  அபத்தத்தை முன்மொழிந்து
அண்மையில் மார்க்சியத்துக்கு பங்கம் ஏற்படுத்தினார்
தீக்கதிர் முருகேசன்.

தீக்கதிர் முருகேசனின் கருத்துக்களில் ஒரு சிலவற்றைத்
தவறு என்று கண்டித்த அண்ணன் தியாகு அவர்கள்
சாரப்பொருளைப் பொறுத்து (essence) குமரேசனின்
அபத்தத்தையே வழிமொழிகிறார்.

முகநூல் பதிவொன்றில் அண்ணன் தியாகு அவர்கள்,
"Now the question of whether caste is matter or idea. Both is the simple answer"
என்று கூறுகிறார். 
"சாதி என்பது பொருளா கருத்தா என்றால். இரண்டுமே என்பதே 
எளிய விடை"  என்கிறார் தியாகு அண்ணன்.

சுமார் பத்து வாக்கியங்கள் கொண்ட அண்ணன் தியாகுவின் 
பதிவு ஆங்கிலத்தில் உள்ளது. அதை ஒரு நிமிடத்தில் 
தமிழில் மொழிபெயர்க்கலாம். அனால் அதைச் செய்ய 
நான் விரும்பவில்லை. காரணம் என்னுடைய தமிழ் 
தொடர்புறுத்தும் தமிழ் (communicative language). அதிகம் 
படிப்பறிவு இல்லாத பாட்டாளி வர்க்கத் தோழர்களுக்கும்  
மார்க்சியக் கருத்துக்களுக்கும் உயிரோட்டமான 
தொடர்பை ஏற்படுத்தும் தமிழ்.

ஆனால் அண்ணன் தியாகுவின் தமிழோ தந்தக் கோபுரத்து
ஆசாமிகளால் மட்டுமே விரும்பப்படும் தமிழ். அண்ணன் 
தியாகு அவர்கள் ஒரு தனித்தமிழ்த் தலிபான் ஆவார்.
நாங்கள் இருவரும் சேர்ந்து செயல்படுவதற்குப் பெரிதும் 
தடையாக இருந்தது, இருப்பது அண்ணனின் தனித்தமிழ் 
தலிபானியமே. நிற்க. அண்ணன் தியாகுவின் சாதி பற்றிய 
கருத்துக்கு வருவோம்.

சாதி என்பது பொருளாகவும் கருத்தாகவும் இருக்கிறது 
என்கிறார் அண்ணன்.இக்கருத்து அடிப்படையிலேயே 
தவறு. (fundamentally flawed). ஆதிசங்கரருக்குக்கூட 
வாய்க்காத ஒரு வித அத்வைதப் பார்வை இது.
பொருளே கருத்து; கருத்தே பொருள் என்ற மயக்கம் இது.

கண்ணாடிக்கு முன் நிற்கும் நமது உருவமும் அதன் பிம்பமும் 
இரண்டும் ஒன்றுதான் என்கிறார் அண்ணன்  தியாகு. இது 
உண்மையல்ல. 

சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம் ஆகும். இந்திய 
சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட உற்பத்திமுறை நிலவிய 
காலக் கட்டத்தில், கட்டி எழுப்பப்பட்ட ஒரு கருத்தியல் 
கட்டுமானம்தான் சாதி. அதாவது சாதியம் என்னும் 
முறையமைப்பு (caste system). கடவுள் என்பது ஒரு கருத்தியல் 
கட்டுமானம். அதைப்போன்றே சாதியும் ஒரு 
கருத்தியல் கட்டுமானம் ஆகும்.

சாதி என்பதுதான் என்ன? சாதியின் வரையறை என்ன?
உற்பத்தியில் ஈடுபடும் பெரும் மக்கள் பிரிவினரை 
ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட குழுக்களாகப் பிரிக்கிறது 
சாதி. இதன் மூலம் மக்களின் ஒற்றுமைக்கும் 
சமத்துவத்துக்கும் முற்றிலும் எதிரான ஒரு தத்துவ 
உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது சாதி. சாதி குறித்த 
ஒரு எளிய வரையறை இது. இவ்வாறு ஒரு சுரண்டல் 
சமுதாய அமைப்பில், சுரண்டப்படும் ஆகப் 
பெரும்பான்மையான மக்களை ஒன்று சேர விடாமல் 
நிரந்தரமாகப் பிரித்து வைத்து, அதன் மூலம் சுரண்டலை 
சுமுகமாக நிகழ்த்திக் கொள்ள சாதி வழிவகுக்கிறது.
இதுவே சாதியின் பயன் ஆகும்.

இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு விடை 
காண வேண்டும். இந்தக் கேள்விக்கான விடைதான் 
சாதி என்பது பொருளா கருத்தா என்ற கேள்விக்கும் 
விடை ஆகும்.  .  

 அ) சாதி கூறுகிற உயர்வு தாழ்வுகள் உண்மையிலேயே 
மனிதர்களுக்கு இடையில் நிலவுகின்றனவா? அல்லது 
அவை வெறும் கற்பிதம் மட்டும்தானா?

ஆ) அதாவது உயர்ந்த சாதியினரான பார்ப்பனர்கள் 
அறிவுத்திறன் மிகுந்தவர்களாகவும், தாழ்ந்த சாதியினரான 
சூத்திர பஞ்சமர்கள் அறிவற்ற முட்டாள்களாகவும்
இருக்கிறார்கள் என்று சொல்கிறதே சாதியம், இது
உண்மையா?

இ) சாதி கூறுகிற படிமுறை அமைப்பு (graded system)
அதாவது பறையனை விட சூத்திரன் மேல், சூத்திரனை 
விட பார்ப்பான் மேல் என்கிற சாதியத்தின் வரையறுப்பு 
மெய்யானதா அல்லது வெறும் கற்பிதமா?


மேற்கூறிய கேள்விகள் அனைத்துக்கும் அறிவியல் மிகத் 
தெளிவான, கறாரான விடைகளை அளித்துள்ளது.
மனிதர்களுக்கு இடையில் ரத்தம், மரபணு, ஜீன்கள்,
குரோமோசோம்கள் ஆகியவற்றில் சாதியைப் பொறுத்து 
எவ்விதமான வேறுபாடும் இல்லை என்கிறது அறிவியல்.
இது லட்சக் கணக்கான பரிசோதனைகள் வாயிலாக
நிரூபிக்கப் பட்ட உண்மையாகும்.

மனித ரத்தமானது A வகை, B வகை, AB வகை, O வகை 
என்னு பிரிக்கப்பட்டு உள்ளதே தவிர, பார்ப்பன வகை,
செட்டியார் வகை, ஆசாரி வகை, கோனார் வகை 
என்றெல்லாம் பிரிக்கப் படவில்லை. அவ்வாறு 
பிரிக்கவும் இயலாது.

ஆக சாதியத்தின் அம்சங்களான மனிதர்களுக்கு 
இடையிலான உயர்வு தாழ்வு மற்றும் படிமுறையிலான  
ஏறுவரிசை உயர்வு (அல்லது இறங்குவரிசைத் தாழ்வு)
என்னும் அனைத்தும் கற்பனையே என்று 
அறிவியல் நிரூபித்துள்ளது.  

ஆக சாதியம் என்பது வெறும் கற்பிதங்களையே 
தனது அடிப்படைகளாகக் கொண்டுள்ளது. சாதியத்திற்கு 
எவ்விதமான பௌதிக அடிப்படையும் இல்லை. (Caste system
does not have any sort of physical foundations).

The vital features of the caste system like superiority versus inferiority etc
are mere figments of imagination and nothing else. அதாவது சாதியத்தின் 
உயிர்நாடியான உயர்வு தாழ்வுக் கோட்பாடு உண்மையில் 
மனிதர்களிடையே நிலவுகிற விஷயமல்ல.மாறாக 
அது வெற்றுக் கற்பனையே.

இதுவரை பார்த்த அனைத்தும் சாதியம் என்பது எவ்விதமான 
பௌதிக அடிப்படையும் அற்றது என்பதை தெளிவுபடுத்துகிறது.
எனவே சாதி என்பது பொருள் அல்ல. பொருள் அல்ல, பொருள் அல்ல.

பொருளுக்கு ஒரு பௌதிக அடிப்படை உண்டு. வெளிகாலத்தில்
(spacetime) ஒரு இடத்தை அடைக்கும் தன்மை கொண்டது பொருள்,
பொருளுக்கு ஒரு பௌதிக இருப்பு உண்டு. ஆனால் சாதியம் 
என்பது எவ்வித பௌதிக இருப்போ அல்லது பௌதிக 
அடிப்படையோ இல்லாதது. எனவே சாதி என்பது 
பொருள் அல்ல. 

எனவே அண்ணன் தியாகு அவர்களின் கருத்தான 
"சாதி என்பது பொருளாகவும் கருத்தாகவும் இருக்கிறது"
என்பது அறிவியல்ரீதியில் முற்றிலும் தவறு என்று 
இக்கட்டுரை நிரூபிக்கிறது. சாதி என்பது ஒருபோதும் 
பொருள் அல்ல; அது வெறும் கருத்து மட்டுமே. QED.
*************************************************************************************8  
பின்குறிப்பு:
ஆரம்ப கால நக்சல்பாரிப் போராளியாக அண்ணன்  
தியாகு அவர்கள் புரிந்த தியாகத்துக்குரிய முழு 
மரியாதையுடன் அவருடன் முரண்படுகின்றேன்.
அவருக்கு வழிகாட்டிய அவரின் போற்றுதலுக்குரிய
அதே தலைவர்தான் எனக்கும் தலைவர் என்பதை 
அண்ணன் தியாகு அறிவார்.
-------------------------------------------------------------------------------------      

இன்றைக்கும் இனி நாளைக்கும் அது 
மேற்கட்டுமானம்தான் தோழர்.  செந்தழல் 

இக்கட்டுரையின் இறுதிச் சொல்லான QED என்பதன் 
பொருள்: Quad Erat Demonstrandum ஆகும். ஜியோமெட்ரி 
கணிதத்தில் தேற்றங்களின் நிரூபணத்தின்போது,
QED என்ற சொல் பயன்படுத்தப்படும்.

எது நிரூபிக்கப்பட வேண்டுமோ அது நிரூபிக்கப்பட்டு 
விட்டது என்ற பொருளைத் தருவது QED.   


தியாகு அவர்களின் ஆங்கிலப் பதிவு!

தோழர் மருதுபாண்டியன் அவர்களுக்கு,
அண்ணன் தியாகு அவர்களின் கருத்துக்கு 
(பார்க்க: அவரின் ஆங்கிலப் பதிவு) மறுப்பாக 
ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதை ஒரு தனிப்பதிவாக 
எனது டைம்லைனில் வெளியிட்டு உள்ளேன்.

   
      


   
    


    . 
    

திங்கள், 19 நவம்பர், 2018

சதுரங்கத்தைப் போற்றாதோர்
மார்க்சிய விரோதிகளே!
மார்க்சிய விரோதிகள் இந்தக் கட்டுரையைப்
படிக்க மாட்டார்கள்!
-------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
இன்று ஞாயிற்றுக் கிழமை. இந்திய நேரப்படி
இரவு 8.30 மணிக்கு லண்டனில் உள்ள  ஹால்போர்ன்
கல்லூரியில் உலக சதுரங்க சாம்பியன் போட்டியின்
ஏழாவது ஆட்டம் நடக்கிறது.

தற்போதைய சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன்,
சாலஞ்சர் பிலயானோ கரௌனோ ஆகிய
இருவரும் மோதுகிறனர். இதுவரை நடந்த
ஆறு ஆட்டங்களும் டிராவில் முடிந்தன.

உலக சதுரங்கப் போட்டி குறித்து, உலக மொழிகளில்
கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஆங்கிலத்தில் மட்டும்
இதுவரை ஏறத்தாழ ஆயிரம் கட்டுரைகள்
வெளியாகி உள்ளன.

இந்தியாவில் வெளிவரும் தேசிய ஆங்கிலத் தினசரிகளான
இந்து, எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான்
க்ரோனிக்கில் ஆகிய ஏடுகளில் உலகின் தலைசிறந்த
சதுரங்க விமர்சகர்கள் கட்டுரை எழுதுகிறார்கள்.

ஆங்கிலம் அறிந்தவர்கள் இணையத்திலும்
யூடியூப்பிலும் போட்டியின் நேரடி ஒளிபரப்பைப்
பார்த்து வருகிறார்கள். சூசன் போல்கர் போன்ற
உலகின் தலைசிறந்த கிராண்ட் மாஸ்டர்கள்
போட்டியை வர்ணனை செய்து வருகிறார்கள்.

எல்லாம் ஆங்கிலத்தில்! அல்லது வளர்ச்சி அடைந்த
ஐரோப்பிய மொழிகளில்! தமிழில் ஏதேனும்
உள்ளதா? ஆங்கிலம் தெரியாத, தமிழ் மட்டுமே
அறிந்த தமிழ் வாசகன் ஒருவனால் உலக சதுரங்கப்
போட்டி பற்றி அறிந்து கொள்ள இயலுமா?

இயலாது. ஏனெனில் தமிழ் இந்து, தினமணி ஆகிய
தமிழ் நாளிதழ்கள் உலக சதுரங்கப் போட்டி பற்றிய
செய்திகளைப் பிரசுரிக்கவே இல்லை. இந்த
அவலத்தை நான் மட்டுமே அம்பலப் படுத்துகிறேன்.

சரி போகட்டும். தமிழில் சதுரங்கம் பற்றி தற்போதைய சூழலில் ஏதேனும் கட்டுரை வெளிவந்துள்ளதா?
ஒரு கட்டுரை, ஒரே ஒரு கட்டுரை தமிழில் உண்டா?

உண்டு, உண்டு என்று ராமாநுஜரைப் போல
உயரமான கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு
சொல்கிறது நியூட்டன் அறிவியல் மன்றம்.

அறிவியல் ஒளி நடப்பு இதழில் "சதுரங்கம் கணிதமே"
என்ற கட்டுரை வெளியாகி உள்ளது. உலக சதுரங்கப்
போட்டியை முன்னிட்டு, முன்பே திட்டமிட்டு,
நவம்பர் இதழில் பிரசுரமாகும் விதத்தில் கட்டுரை
எழுதி அனுப்பியது நியூட்டன் அறிவியல் மன்றம்.

அதைப் படியுங்கள்!
மானமுள்ள தமிழர்களே,
ஒரு அப்பனுக்குப் பிறந்த தமிழர்களே,
அந்தக் கட்டுரையைப் படியுங்கள்!

எட்டுக்கோடித் தமிழர்களில் ஒருவன், ஒரே ஒருவன்
தமிழை உச்சத்துக்கு உயர்த்தியுள்ளான் என்பதை
நிரூபிக்கும் அந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

ஆங்கிலம் உற்பத்தியில் உள்ள மொழி. எனவே
ஆங்கிலத்தில் சதுரங்கப் போட்டி பற்றி ஆயிரம்
கட்டுரைகள் வெளிவருவது இயற்கை. ஆனால்
தமிழோ உற்பத்தியில் இல்லாத மொழி. சதுரங்கம்
பற்றிய எமது கட்டுரை உற்பத்தியில் இல்லாத
தமிழை உற்பத்தியில் உள்ள ஆங்கிலத்துக்கு நிகராக
உயர்த்தி உள்ளது.

பதின்ம வயதில் சதுரங்கம் கற்றேன். அன்று முதல்
இன்று வரை ஒரு லட்சம் சதுரங்க ஆட்டங்கள்
(one lakh games) ஆடியுள்ளேன். இதைச் சாத்தியம் ஆக்கியது
கணினியே. இன்று ஒரு செல் போனில், உரிய
ChessAppஐ பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால்,
உங்கள் செல்போனிலேய சதுரங்கம் விளையாடலாம்.

Chess is the gymnasium of mind. V I Lenin.
***********************************************************
பின்குறிப்பு:
சதுரங்கத்தின் தாயகம் இந்தியா என்ற
ஒளிவீசும் உண்மையை உலகம் ஏற்று
அங்கீகரித்துள்ளது.

சதுரங்கம் பற்றி இதுவரை நிறையவே எழுதி உள்ளேன்.
இவை போதிய அளவு வாசகரின் ஆதரவைப்
பெறவில்லை.Am I casting pearls before swine?
****************************************


*

சனி, 17 நவம்பர், 2018

மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
சாதி என்பது பொருள்முதல்வாதமல்ல என்ற
என் கட்டுரையை தங்களின் மின்னம்பலம்
இதழில் பிரசுரிக்குமாறு வேண்டுகிறேன்.
இது தோழர் குமரேசனின் கட்டுரைக்கு மறுப்பு!

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
நிறுவனர் மற்றும் தலைவர்
நியூட்டன் அறிவியல் மன்றம்
சுபிக்சா அடுக்ககம்
5/5, ஆறாவது தெரு, சௌராஷ்டிரா நகர்,
சூளைமேடு, சென்னை 600 094.
அலைபேசி: 94442 30176.
----------------------------------------------------------------------
எனது சுயவிவரக் குறிப்பு;
பி இளங்கோ சுப்பிரமணியன் என்னும்
இக்கட்டுரையாளர் மத்திய அரசின்
தொலை தொடர்புத் துறை மற்றும்
BSNL  நிறுவனத்தில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான
NFTE (National Federation of Telecom Employees) சங்கத்தில்
கடந்த 35 ஆண்டுகளாகப் பல்வேறு பொறுப்புகளில்
செயல்பட்டு  தற்போது பணி ஒய்வு பெற்றுள்ளார்.

இக்கட்டுரையாளர் அறிவியல் எழுத்தாளரும் ஆவார்.
நியூட்டன் அறிவியல் மன்றம் என்னும் அமைப்பின்
வாயிலாக கடந்த 20 ஆண்டுகளாக பரந்துபட்ட
மக்களிடம் அறிவியலைப் பரப்பி வருபவர்.

மார்க்சியப் பார்வையில் அத்வைதம் என்னும் நூலின்
ஆசிரியர்.
*************************************************************
முதற்கோணல் முற்றும் கோணல்!
சாதி என்பது பொருள்முதல்வாதம் அல்ல!
(தீக்கதிர் குமரேசனுக்கு மறுப்பு)!
------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
சாதி என்பது கருத்துமுதல்வாதமா அல்லது
பொருள்முதல்வாதமா என்ற கேள்வியே
அடிப்படையில் தவறானது. இந்தக் கேள்விக்கு
சாதி என்பது பொருள்முதல்வாதமே என்று
பதில் கூறி, மார்க்சியத்தை இழிவுபடுத்துகிறார்
தோழர் குமரேசன். (பார்க்க: மின்னம்பலம் என்னும்
இணைய இதழில் அவர் எழுதிய கட்டுரை)

ஏற்கனவே தாம் பங்கேற்றுள்ள ஒரு வாட்சப் குழுவில்
சாதி என்பது பொருள்முதல்வாதம் என்ற அரிய
கண்டுபிடிப்பைச் செய்தார். இது அவருடைய
முதற்கோணல். தற்போது அந்தக் கோணலின் மீது
புதிய கட்டுமானத்தை எழுப்புகிறார். இதன் விளைவு
அவரின் சாதியம் பற்றிய ஒட்டு மொத்தக்
கருத்துக்களும் முற்றும் கோணலாகி உள்ளன.

தத்துவம் வேறு; நிறுவனம் வேறு!
----------------------------------------------------------
பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் ஆகிய
இரண்டும் மனித குலத்தின் இருபெரும் தத்துவங்கள்.
பிரபஞ்சம், இயற்கை, உலகம், மனித சமூகம் ஆகிய
அனைத்தையும் பற்றிய ஓர் ஒருங்கிணைந்த உலகக்
கண்ணோட்டத்தை வழங்குபவை தத்துவங்கள் ஆகும்.
தத்துவம் என்பதன் வரையறை இதுதான்.

பொருளை முதன்மையாகவும் மையமாகவும் கொண்ட
உலகக் கண்ணோட்டம் பொருள்முதல்வாதம் ஆகும்.
இதற்கு மாறாக, கருத்தை முதன்மையாகவும்
மையமாகவும் கொண்ட உலகக் கண்ணோட்டம்
கருத்துமுதல்வாதம் ஆகும். இவ்விரு தத்துவங்களும்
நேற்றோ இன்றோ முளைத்த தத்துவங்கள் அல்ல;
குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மை
கொண்ட தத்துவங்கள்.

சாதி என்பது பொருள்முதல்வாதம் என்ற குமரேசனின்
கருத்தை இப்போது பரிசீலிப்போம். சாதி என்பது
பொருள்முதல்வாதம் ஆதலால், அது ஒரு தத்துவம்
ஆகி விடுகிறது. எனவே ஒரு தத்துவம் என்ற நிலையில்,
சாதியானது இந்த பிரபஞ்சத்தை விளக்க வேண்டும்.
இது சாத்தியமா? இயற்கை, உலகம், மனித சமூகம்
ஆகியவை பற்றி சாதியம் என்னும் தத்துவம் என்ன
விளக்கத்தை அளிக்கப் போகிறது? ஒரு மண்ணும் இல்லை
அல்லவா?

ஆயின் சாதி என்பதுதான் என்ன? சாதி என்பது, அதாவது
சாதியம் என்பது ஒரு சமூகக் கட்டுமானம். அது ஒரு
கருத்தியல் கட்டுமானம். ஒரு கருத்தாக, ஒரு
கோட்பாடாகத் தோன்றிய சாதியம், அதன் வளர்ச்சியின்
போக்கில் ஒரு நிறுவனமாக உருவாகி நிலைபெற்றுள்ளது.
ஆக, சாதியம் என்பது ஒரு நிறுவனமே தவிர, ஒரு
தத்துவம் அல்ல.

மார்க்சிஸ்ட் கட்சி என்பது ஒரு நிறுவனம்; அது தத்துவம்
அல்ல. ஆனால் மார்க்சியம் என்பது ஒரு தத்துவம்.
தத்துவத்துக்கும்  நிறுவனத்துக்கும் உள்ள வேறுபாட்டைப்
புரிந்து கொள்ள இயலாமையால், தோழர் குமரேசன்
இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புகிறார்.


எல்லாக் கருத்துக்கும் பொருளே அடிப்படை!
-------------------------------------------------------------------------------
சாதியம் என்னும் கருத்தியல் கட்டுமானத்துக்கு
பொருளாயத அடிப்படை (materialist foundation) உண்டா?
சர்வ நிச்சயமாக உண்டு. பொருளாயத அடிப்படை
இல்லாமல், சாதியம் போன்ற ஆயிரம் ஆண்டுகளாய்
நீடித்து நிற்கும் கருத்தியல் கட்டுமானத்தை எழுப்பி
இருக்க முடியாது. கருத்து என்பதே பொருளின்
பிரதிபலிப்புதான் என்பதே பொருள்முதல்வாத
பால பாடம்.

கருத்துக்கள் அந்தரத்தில் பிறப்பதில்லை. பொருள்
இல்லாமல் கருத்து இல்லை.நாம் வாழும் இந்தப்
பிரபஞ்சம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
தோன்றியது என்கிறது நவீன அறிவியல்.
(1 பில்லியன்= 100 கோடி). ஆக பொருளின் வயது
14 பில்லியன் ஆண்டுகள். ஆனால் கருத்தின் வயது
என்ன?

கருத்து என்பதே வளர்ச்சியடைந்த உயிரினங்கள்
தோன்றிய பிறகுதான் பிறந்தது. இந்த பூமியில்
மனிதன் தோன்றி எட்டு லட்சம் ஆண்டுகள் ஆகின்றன
என்கிறது ஒரு அறிவியல் மதிப்பீடு. மனிதன் தோன்றிய
பிறகுதான் சிந்தனை தோன்றுகிறது. அதிலும்
நாகரிகம் அடைந்த மனிதர்கள் தோன்றி, சிந்தித்து,
கருத்துக்களை உருவாக்கியது எப்போது? அதிகம்
போனால் 15,000 ஆண்டுகள் இருக்கும்.

ஆக பொருளின் வயது 14 பில்லியன் ஆண்டுகள்.
சிந்தனையின் வயது  வெறும் 15,000 ஆண்டுகள்.
சிந்தனையே இல்லாமல் பொருளை மட்டிலும்
கொண்டு இந்த பிரபஞ்சம் கோடிக்கணக்கான
ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது.
இந்த அறிவியல் உண்மையை நன்கு மனதில்
இருத்திக் கொண்டால், ஒரு விஷயம்
மிகத்  தெளிவாக விளங்கும். அதாவது, பொருள்
இல்லாமல் கருத்து இல்லை. ஆனால் கருத்து இல்லாமலும்
பொருள் இருக்கும். இருந்திருக்கிறது என்பதற்கு
நிரூபணத்தைப் பார்த்தோம்.

இதன் மூலம் யாப்புறுத்த விரும்புவது என்னவென்றால்,
அதாவது எந்த ஒரு கருத்தியல் கட்டுமானத்திற்கும்
பொருளாயத அடிப்படை உண்டு.
இவ்வாறு கருத்தியல் கட்டுமானமான சாதியம் என்பது
ஒரு பொருளாயத அடிப்படையைக் கொண்டிருப்பதாலேயே,
சாதியம் என்பது பொருள்முதல்வாதம் ஆகி விடாது.
சாதி என்பது ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானமே. 


சாதியை உருவாக்கிய குற்றவாளி இரும்பே!
------------------------------------------------------------------------------
ஆயின் சாதியத்தின் பொருளாயத அடிப்படைதான் என்ன?
இந்திய சமூகத்தின் உற்பத்தி முறையில் இரும்பு
கண்டுபிடிக்கப் பட்டதும் பயன்பாட்டுக்கு வந்ததுமான
ஒரு காலக்கட்டத்தில், உழைப்பு சார்ந்த பல்வேறு
புதிய வேலைப்பிரிவினைகள் ஏற்பட்டன. இந்தப் புதிய
வேலைப்பிரிவினைகளே வளர்ச்சியின் இயக்கப்
போக்கில் சாதிகளாகப் பரிணமித்தது. தொடர்ந்து
சுரண்டும் நிலவுடைமை வர்க்கமானது தமக்குள்
இணக்கம் கொண்டிருந்த சாதிகளை பகைமைச்
சாதிகளாக மாற்றியது. சாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகளும்  உயர்வுதாழ்வு பேதமும் கற்பிக்கப் பட்டன.
இவ்வாறு சாதியம் ஒரு கொடிய சுரண்டல் முறையாகத்
தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.

பார்ப்பனர்கள்தான் சாதியைத் தோற்றுவித்தார்கள்
என்பதும்  உண்மையல்ல.இவ்வாறு பார்ப்பது
கருத்துமுதல்வாதப் பார்வை. சாதி தோன்றியது என்றால்
அது தோன்றுவதற்கு உண்டான சூழல் இல்லாமல்
சாதி தோன்றவில்லை. அத்தகைய சூழலை பார்ப்பனர்களோ
அல்லது வேறு எந்தச் சாதியினரோ செயற்கையாக
உருவாக்க இயலாது. இனக்குழுச் சமூக வாழ்க்கையில்
ரிக் வேத காலத்தில் வாழ்ந்த மக்களிடம் எவ்வித பேத உணர்வும்
இருந்ததில்லை என்கிறார் மார்க்சிய வரலாற்று ஆசிரியர்
கோசாம்பி. பின்னர் இனக்குழுக்களிடையே வருணங்கள்
தோன்றின. வருணங்களே பின்னாளில் வேலைப்பிரிவினை சார்ந்து சாதிகளாக மாற்றம் பெற்றன. சாதியைத் தோற்றுவித்தத்தில் இரும்புக்கு உள்ள பாத்திரத்தை
அங்கீகரிக்காமல், சாதியம் பற்றிய தெளிவான புரிதலுக்கு
எவரும் வர இயலாது.

இந்தியாவில் நிலவுடைமைச் சமூக உற்பத்தி உறவுகளை
ஒரள வு மாற்றி அமைத்து, முதலாளித்துவ உற்பத்தி
உறவுகள் கொண்டுவரப்  பட்டன. யார் வேண்டுமானாலும்
பயணம் செய்யும் ரயில்கள், பேருந்துகள் ஆகியவை
வந்த பிறகு அதுவரை இருந்து வந்த சாதியம் எவ்வளவு
மாற்றம் அடைந்தது என்று பார்க்க வேண்டும். காசு
கொடுத்தால் யாருக்கும் உணவு வழங்கும் ஓட்டல்கள்,
காசு கொடுக்கும் யாருக்கும் சினிமா காட்டும்
திரையரங்குகள் ஆகியவை சமூகத்தில் பெருமளவு
வந்ததுமே சாதியக் கெடுபிடிகள் பெரிய அளவுக்கு
நொறுங்கின. ஆக சாதியை ஒழிக்க வேண்டுமெனில்,
நிலவுடைமை உற்பத்தி உறவுகளை வேரோடும் வேரடி
மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும். சோஷலிச
உற்பத்தி உறவுகளை இந்திய சமூகத்தில் நிறுவும்போது
சாதியம் என்பது முற்றிலுமாக அழிந்து விடும். இதைத்தவிர
சாதியை ஒழிக்க வேறு எந்தக் குறுக்கு வழியும் இல்லை.

தோழர் குமரேசன் தமது கட்டுரையில், சாதியைக் காரணம்
காட்டிக் கொண்டு வரப்பட்டதுதான் கடவுள் என்கிறார்.
இது எவ்வளவு பெரிய அபத்தம்! அதிகம் போனால்,
சாதியின் வயது இரண்டாயிரம் ஆண்டு. ஆனால் கடவுளின்
வயது குறைந்தது பத்தாயிரம் இருக்கும். சாதி தோன்றும்
முன்னரே கடவுள் என்னும் கற்பிதம் தோன்றி விட்டது.
இந்தியாவிலும் ஜப்பானிலும் (இலங்கை, பாகிஸ்தான்,
வங்கதேசம் உள்ளடக்கம்) மட்டுமே சாதிகள் இருந்தன;
இருக்கின்றன. ஆனால் கடவுள் மீதான நமிக்கையோ
உலகம் முழுதும் இருக்கிறது. எனவே சாதியால்தான்
கடவுள் கொண்டு வரப்பட்டார் என்பதெல்லாம்
வர்ணனைக்கு அப்பாற்பட்ட அபத்தங்கள்.
  .

கற்பிதங்களும் உண்மையும்!
----------------------------------------------------
சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானமாக இல்லாமல்
குமரேசன் கூறுவது போல,  பொருள்முதல்வாதமாக
இருக்குமேயானால் என்ன நடக்கும்? நடக்க வேண்டும்?

சாதியம் கூறுகிற உயர்வு தாழ்வுகள்
உண்மையாக இருக்க வேண்டும். உயர்ந்த சாதியினரின்
மூளை வலிமை மிக்கதாகவும், தாழ்ந்த
சாதியினரின் மூளை மட்டரகமானதாகவும்
இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லை என்பது
அனைவரும் அறிந்ததே..

குமரேசன் கூறுகிறபடி,சாதி பொருள்முதல்வாதம் என்றால், பார்ப்பனர்களின் ரத்தமும்  மரபணுவும் பிற தாழ்ந்த
சாதியினரின் ரத்தம் மரபணுவை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும்.  ஆனால் மனிதர்களின் மரபணுவில், ரத்தத்தில்
சாதியின் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை
அறிவியல் நிரூபித்துள்ளது

எனவே சாதிக்கு எவ்வித பௌதிக அடிப்படையும்
கிடையாது என்பது இங்கு நிரூபிக்கப் பட்டுள்ளது.
சாதியம் என்பது வெறும் கருத்தியல் கட்டுமானமே
தவிர, அது பொருள்முதல்வாதமோ அல்லது சமூகத்தின்
பொருளியல் அடித்தளமோ இல்லை என்பதை
இக்கட்டுரை நிரூபிக்கிறது.
**************************************************************






  


திங்கள், 12 நவம்பர், 2018

பித்துக்குளி மார்க்சிஸ்ட் தீக்கதிர் குமரேசனின்
பிதற்றல் மார்க்சியம் ஆகாது!
---------------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் அல்லாதவர்களையம் கட்சியில் சேர்த்து,
பொறுப்பு வழங்கி அழகு பார்ப்பது என்ற கொள்கை
முடிவை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருக்கிறது என்பது
அனைவரும் அறிந்ததே. அந்த வகையில்
Non Marxist quotaவில் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்க்கப்
பட்டவர் தீக்கதிர் குமரேசன்.

தன்னை எவரும் மார்க்சிஸ்ட் என்று நினைத்து
விடுவார்களோ என்று அஞ்சுபவர் தீக்கதிர் குமரேசன்.
எனவே தான் மார்க்சிஸ்ட் அல்ல என்று சந்தர்ப்பம்
கிடைக்கும் போதெல்லாம் நிருபிப்பவர் குமரேசன்.

தற்போது அப்படி நிரூபித்துள்ளார் அவர். தான்
பங்கேற்றுள்ள ஒரு வாட்சப் குழுவில் குட்டி
முதலாளித்துவத் தன்மை வாய்ந்த ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளார் குமரேசன்.

சாதி என்பது பொருள்முதல்வாதமா அல்லது
கருத்துமுதல்வாதமா என்று ஒரு விவாதத்தை
எழுப்பி, சாதி என்பது பொருள்முதல்வாதமே
என்று தீர்ப்பு வழங்கியுள்ளார் குமரேசன். அவருக்கு
மிகுந்த மனநிறைவைக் கொடுத்த விவாதம் இது.
இனி ஒரு பயலும் தன்னை மார்க்சிஸ்ட் என்று
கருத முடியாது என்று பரம திருப்தியில் இருக்கிறார்
மனுஷன்.

சாதி என்பது பொருள்முதல்வாதமா அல்லது
கருத்துமுதல்வாதமா என்ற கேள்வியே அடிப்படையில்
தவறானது. மிகுந்த அபத்தமானது.

தண்ணீர் என்பது முக்கோண வடிவமா அல்லது
சதுர வடிவமா என்பது போன்ற அபத்தம் இது.
சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம். அதாவது
சமூகக் கட்டுமானம் (social structure). சாதிக்கு எவ்விதமான
பௌதிக இருப்பும் கிடையாது (No physical existence).

சென்னை அண்ணாசாலையில் 14 மாடி எல் ஐ சி
கட்டிடம் உள்ளது. இது ஒரு பௌதிகக் கட்டுமானம்.
இதற்கு ஒரு பௌதிக இருப்பு (physical existence)  உண்டு,
இதை போன்றதல்ல சாதி என்னும் கட்டுமானம்.
அது மனித சிந்தனையில் மட்டுமே இருக்கும் ஒன்று.

சாதி என்பது ஒரு பொருள் என்றால், அதாவது
பொருளாயுதத் தன்மை உடைய பொருள் என்றால்,
சாதியை ஒருபோதும் அழிக்க முடியாது. ஏனெனில்
பொருளின் அழியாமை விதி (Law of conservation of mass)
பற்றிக் கூறும் அறிவியல் பொருளை ஒருபோதும்
அழிக்க முடியாது என்று கூறுகிறது.

அப்படியானால், சாதியை ஒருபோதும் ஒழிக்க
முடியாது என்று சொல்ல வருகிறாரா குமரேசன்?
அதை நேரடியாகச் சொல்லிவிட்டுப் போகலாமே!
பொருள்முதல்வாதம் என்று சொல்லி சுற்றி
வளைத்து மூக்கைத் தொடுவானேன்?

ஒரு சிந்தனாரீதியான கட்டுமானத்தை, பௌதிக ரீதியான
கட்டுமானம் என்று பிறழ உணர்வது எப்பேர்ப்பட்ட
அபத்தம்? தீக்கதிர்  பத்திரிக்கை ஆசிரியரின்
மார்க்சியப் புரிதல் இப்படித்தான் இருக்குமெனில்
மார்க்சிஸ்ட் கட்சியை யார்தான் காப்பாற்ற முடியும்?

கடவுள் இல்லை என்று ஏன் கூறுகிறோம்? கடவுளுக்கு
ஒரு பௌதிக இருப்பு இல்லை (God does not exist physically)
என்பதால்தானே! அதைப் போன்றதுதானே சாதியும்.
சாதிக்கு ஏது பௌதிக இருப்பு? ஏதேனும் ஒன்றை
பொருள் என்று வரையறுத்தால், அதற்கு ஒரு
நிலையிடம் (position) இருக்க வேண்டும். நிறை (mass)
உள்ளிட்ட பொருளின் பண்புகளில் பலவற்றை அது  
கொண்டிருக்க வேண்டும். மிக நுண்ணிய
எலக்ட்ரானுக்குக் கூட பிரபஞ்ச வெளியில் (space)     
ஒரு நிலையிடம் உண்டு.

கடவுளுக்கு பௌதிக இருப்பு இல்லை என்பதால்
கடவுள் என்பது கருத்தியல் கட்டுமானம் என்று சரியான
முடிவுக்கு வரும் குமரேசன், அதே தர்க்கம் சாதிக்கும் 
பொருந்தும் என்று உணர மறுக்கிறார். கடவுளைப்  போலவே சாதிக்கும் பௌதிக இருப்பு இல்லை என்பதால்,
சாதியும் கருத்தியல் வகைமையில்தானே வரும்!
ஆனால் குமரேசனோ "தலைக்கு ஒரு சீயக்காய்,
தாடிக்கு ஒரு சீயக்காய்" என்பதுபோல் தர்க்கப்
பொருத்தமற்று வாதம் செய்கிறார்.

சாதி இந்தப் பிரபஞ்சத்தில் எந்த இடத்தில்  இருக்கிறது?
அதன் நிலையிடம் (position) என்ன? குமரேசன் சொல்வாரா?
ஒரு கருத்தியல் கட்டுமானத்தை பொருள் என்று
நாக்கூசாமல் சொல்வது எப்பேர்ப்பட்ட தற்குறித்தனம்? 
படுகோமாளித்தனமாக ஒரு கருத்தைச்
சொல்லுகிறோமே, ஊரார் கைகொட்டிச் சிரிக்க
மாட்டார்களா என்ற ஓர்மை கூட இல்லாமல்,
சாதி என்பது பொருள்முதல்வாதம்
என்கிறாரே குமரேசன்!             

தீக்கதிரையும் குமரேசனையும் அவர் வணங்கும்
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!
*****************************************************


புதன், 7 நவம்பர், 2018

சிரிக்க வைப்பது எப்படி?
நடிகர் ஜோசப் விஜய் நடித்த ஒரு படம்!
-------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
நேற்று யதேச்சையாக டிவியைப் பார்த்தபோது
நடிகர் ஜோசப் விஜய் நடித்த ஏதோ ஒரு படம்
ஓடிக் கொண்டிருந்தது. நான் பார்த்த நேரத்தில்
அதில் ஒரு காட்சி. சிரிக்க மறுக்கும் ஒருவரை
ஒரு பெண் சிரிக்க வைக்க முயற்சி செய்வாள்.
ஆனால் அவரோ சிரிக்க மாட்டார்.

அந்தப்பெண் ஒரு குறிப்பிட்ட வாயுவை அவரின்
நாசிக்கு அருகில் பிடித்து அந்த வாயுவை அவர்
முகருமாறு செய்வாள். அந்த வாயுவை முகந்ததும்
அவர் சிரிக்க ஆரம்பிப்பார். தொடர்ந்து சிரித்துக்
கொண்டிருப்பார்.

அந்த வாயு "சிரிக்க வைக்கும் வாயு" (laughing gas)
என்று அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு என்று
அந்தப்பெண் கூறுவாள். இதுதான் அந்தக் காட்சி.

படத்தில் இந்தக் காட்சியை வைத்த இயக்குனரை
நியூட்டன் அறிவியல் மன்றம் பாராட்டுகிறது.
நைட்ரஸ் ஆக்ஸைடு என்பது சிரிக்க வைக்கும் வாயு
என்று ப்ளஸ் டூவில் அறிவியல் படிக்கும் மாணவன்
அறிவான்.

இதை அறிவியல் படிக்காத அனைவரையும்
அறியச் செய்த இயக்குனருக்கு நன்றி.

திரைப்படங்களில் முதன் முதலில் ஒரு அறிவியல்
செய்தியை இடம்பெறச் செய்தவர் மறைந்த
இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்களே. பாலச்சந்தர்
கணிதம் பயின்று பட்டம் பெற்றவர்.

1970ல் வெளிவந்த அவருடைய "நூற்றுக்கு நூறு"
என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சியில்
1+1 = not 2 என்று நிரூபித்து இருப்பார். நடிகர் ஜெய்சங்கர்
அப்படத்தில் கணிதப்  பேராசிரியராக நடித்திருப்பார்.
குறிப்பிட்ட காட்சியில் 1+1 = not 2 என்று வகுப்பறையில்
கரும்பலகையில் எழுதி நிரூபிப்பார் ஜெய்சங்கர்.
உண்மையில் இது ஒரு fallacy ஆகும்.

Fallacy என்றால் என்ன என்று வாசகர்கள் முயன்று
பொருள் அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
உண்மை போலத் தோற்றம் அளிக்கிற, ஆனால்
உண்மையல்லாத ஒன்றே fallacy ஆகும்.

இரண்டும் இரண்டும் நான்கு அல்லவா?
2+2 = 4 அல்லவா? ஆனால் 2+2 =5 என்று நிரூபிக்கப்
போகிறேன். இதுவும் ஒரு fallacyதான். அதை
அடுத்த பதிவில் பார்க்கலாம்.

எனினும் அதைப்புரிந்து கொள்ள, குறைந்தபட்ச
கணித அறிவு அவசியம். அதாவது ப்ளஸ் டூ
வரையிலான கணித அறிவு பெற்றிருந்தால்
போதுமானது.

இது போன்ற அறிவியல் பதிவுகளுக்கு வாசகர்களின்
ஆதரவு இருந்தால் மட்டுமே சமூகம் அறிவு பெறும்.
-----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
நடிகர் கமல ஹாசன் தமது படங்களில்
பெருமளவுக்கு  அறிவியல் செய்திகளை இடம்பெறச்
செய்தவர் ஆவார். இது குறித்து மேலும் அறிய,
அறிவியல் ஒளி ஏட்டில் முன்னர் நான் எழுதிய
திரைப்படங்களில் அறிவியல் என்ற கட்டுரையைப்
படிக்கலாம்.
*********************************************************
          .   

செவ்வாய், 6 நவம்பர், 2018

தமிழில் வினாத்தாள் தயாரிக்க இயலாமை!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(TNPSC) பல்வேறு தேர்வுகளை நடத்த உள்ளது. இவற்றில்
சில குறிப்பிட்ட தேர்வுகளுக்குரிய சில பிரிவுகளுக்கான வினாத்தாட்களைத் தமிழில்
தயாரிக்க இயலவில்லை என்று தேர்வாணையம்
அறிவித்துள்ளது.

இதன் காரணம் என்ன? தமிழில் வினாத்தாள் தயாரிக்குமாறு பல்வேறு பேராசிரியர்களிடம்
தேர்வாணையம் கேட்டுக் கொண்டது. ஆனால்
எவரும் முன்வரவில்லை.

தமிழில் தயாரிக்க இயலாது என்று பேராசிரியர்கள்
பலரும் மறுத்து விட்டனர் என்ற செய்தி
கிடைத்துள்ளது. இது உண்மையே.

இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வுக்கான
தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பில் பிழைகள்
இருந்தமை குறித்து நீதிமன்றத்தில் வழக்குத்
தொடரப்பட்டது. 49 வினாக்களில் மொழிபெயர்ப்புப்
பிழைகள் இருந்ததாகக் கூறி மார்க்சிஸ்ட் தலைவர்
டி கே ரங்கராஜன் எம் பி வழக்குத் தொடர்ந்தார்.

மதுரை உயர்நீதிமன்றத் கிளையானது
49 வினாக்களுக்கும் 196 மதிப்பெண்கள் (49 x 4 = 196) 
வழங்குமாறும் அதன் அடிப்படையில் புதிய
தகுதிப் பட்டியலைத் தயாரிக்குமாறும் CBSEக்கு
உத்தரவிட்டது. இது மருத்துவ மாணவர் நடுவே
பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. உச்சநீதி மன்றம்
மதுரைக் கிளையின் தீர்ப்பை ரத்து செய்தது.

இதைப்போன்ற ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடும்
என்று கருதியே பல பேராசிரியர்கள் மறுத்து
விட்டனர் என்று தெரிய வருகிறது.

நவீன அறிவியலைத் தமிழில் சொல்வதில் பெரும்
இடர்ப்பாடுகளும் சிக்கல்களும் உள்ளன. உரிய
கலைச்சொற்களோ சொல்வங்கியோ தமிழில்
இல்லை. நிலவுடைமைச் சமூகம் நிலவிய காலத்தில்
தமிழ் உற்பத்தியில் இருந்தது. எனவே அக்காலத்தின்
தேவைகளுக்கு தமிழால் ஈடு கொடுக்க முடிந்தது.

முதலாளியச் சமூகம் உருவான பின்னர் தமிழ்
உற்பத்தியில் இல்லை. உற்பத்தியில் இல்லாத
எந்த மொழியும் காலத்தின் தேவைகளுக்கு ஈடு
கொடுக்க இயலாமல் பின்தங்குவது இயல்பே.

எனவே பேராசிரியர்களைக் குறைகூறிப் பயனில்லை.
இது  பேராசிரியர்களின் குறை அல்ல. உற்பத்தியில்
தமிழ் இல்லை என்னும்போது பேராசிரியர்கள்
என்ன செய்ய முடியும்?

கடந்த பல ஆண்டுகளாக காத்திரமான அறிவியல்
கட்டுரைகளைத் தமிழில் எழுதி வருபவன் என்ற
முறையில், தமிழ் மொழியின் நெருக்கடிகளை
நான் ஆழமாக உணர்ந்தவன்.

இதுதான் தமிழின் நிலை! இந்நிலை இப்படியேதான்
இருக்கும்.

அறிவியலோ இருமொழிப் மொழிப்புலமையோ
இல்லாத பாமரர்கள் இதை உணராமல்
கூச்சலிடுவதால் எப்பயனும் இல்லை.
****************************************************