செவ்வாய், 14 நவம்பர், 2017

மார்க்சியர்கள் குற்றவாளிகளே!
---------------------------------------------------------
1) மார்க்சும் எங்கல்சும் இணைந்து 1848இல் எழுதிய
கம்யூனிஸ்ட் அறிக்கையை (Communist Manifesto)
மார்க்சியத்தின் தொடக்கமாகக் கொண்டால்,
மார்க்சியம் உலகில் தோன்றி 170 ஆண்டுகள்
ஆகின்றன.

2) இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி ஒரு
நூற்றாண்டு காலம் ஆகிறது.

3) இருப்பினும், மார்க்சியம் எந்த அளவுக்கு பரந்துபட்ட
மக்களிடம் கொண்டு செல்லப் பட்டிருக்கிறது என்று
பரிசீலித்தால் கிடைக்கும் விடை பெரும் ஏமாற்றத்தைத்
தருகிறது.    

4) உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள், இயங்கியல்,
பொருள்முதல்வாதம் ஆகிய மார்க்சியக்
கருத்தாக்கங்களை வெகுமக்கள் எந்த அளவுக்குப்
புரிந்து கொண்டுள்ளார்கள்?

5) மார்க்சியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு
ஒரு வரியில் பதில் சொல்வதானால், உற்பத்தி
உறவுகளை மாற்றி அமைப்பதுதான் மார்க்சியம்
என்று சொல்லலாம். அந்த அளவுக்கு "உற்பத்தி
உறவுகள்" என்ற கருத்தாக்கம் முக்கியமானது.

6) ஆனால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக்
கருத்தை வெகுமக்கள் எப்படிப் புரிந்து வைத்துள்ளனர்?
உற்பத்தி உறவு என்றால் புருஷன் பொண்டாட்டி உறவு
என்றோ மாமன் மச்சான் உறவு என்றோதானே 
மக்களின் புரிதல் இருக்கிறது!

7) இது மக்களின் குறையா அல்லது மார்க்சியர்களின்
குறையா?      

8)  மார்க்சியத்தை மக்களிடம் கொண்டு செல்லாத
குற்றவாளிகள்தானே தமிழக மார்க்சியர்கள்!
இதற்கு நாணாத சொரணை கெட்ட குஷ்ட
ரோகிகள்தானே தமிழகமார்க்சியர்கள்!

9) தஞ்சையில் சவுக்கடி சாணிப்பாலை  ஒழித்து
விவசாயக் கூலிகளின் கூன் முதுகை நிமிர்த்திய
சீனிவாச ராவ் பற்றி தமிழக மக்கள் அறியாமல்
இருப்பதற்குப் பொறுப்பு யார்? தமிழக
மார்க்சியர்கள்தானே!

10) மார்க்சியத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல
மாட்டேன், மார்க்சிய அரசியலின் சாதனைகளையும்
சிதம்பர ரகசியமாக மறைத்து வைப்பேன் என்று
கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும்  கல்லுளி
மங்கர்கள்தானே தமிழக மார்க்சியர்கள்!

11) ஒரு தோழரின் வீட்டில் நாலு பேர் தேவையே இல்லாமல் ரகசியமாகக் கூடி, மூன்று உலகத்
தத்துவம் (Three worlds theory) எவ்வளவு உன்னதமான
தத்துவம் தெரியுமா என்று கூட்டுச்  சுயஇன்பம்
அனுபவிப்பதால் மார்க்சியத்தை மக்களிடம்
கொண்டு செல்ல இயலுமா?

12) சமூக அக்கறை உள்ள, படித்த அறிவாளிப்
பகுதியினரிடம்கூட மார்க்சியம் கொண்டுசெல்லப்
படவில்லை. இதற்குக் காரணம் மார்க்சியக் கல்வியை
வழங்கும் ஏகபோக உரிமை தங்களுக்கு மட்டுமே
இருப்பதாகக் கருதும், மார்க்சியர்களின் அறியாமைதான்.

13) கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஊழியர்களை மார்க்சியப்
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக
காரல் மார்க்ஸ் நியமிக்கவில்லை என்பதை
அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உணர வேண்டும்.

14) எட்டுக் கோடித் தமிழர்களிடம் மார்க்சியத்தைக்
 கொண்டு சேர்க்கும் அளவுக்கு அனைத்து கம்யூனிஸ்ட்
கட்சிகளிடம் ஆள்பலம் உள்ளதா? INFRASTRUCTURE
உள்ளதா?

15) தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் 10 லட்சம் பேர்
ப்ளஸ் டூ தேர்வு எழுதி பள்ளிப் படிப்பை முடிக்கின்றனர்.
ஒவ்வோராண்டும் வெளிவரும் இந்த 10 லட்சம் பேரிடம் மார்க்சியத்தைக் கொண்டு செல்ல கட்சிகள்
வசதி படைத்தனவா? Are they equipped? No.

16) தி.க.வினரைப் பாருங்கள். பெரியாரியத்தைக்
கொண்டு செல்வதில் அவர்களின் இடைவிடாத
முயற்சியைப் பாருங்கள். வாசகர் வட்டக் கூட்டங்கள்
2000க்கு மேல் நடத்தி விட்டார்கள். மூதறிஞர் குழுவின்
கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்கள்.

17) பெரியாரியத்தைக் கொண்டு செல்வது எளிது.
மார்க்சியம் அகல் விரிவானதும் ஆழமானதுமான
(comprehensive and deep) தத்துவம்.இதைக் கொண்டு
செல்வது கடினம். அப்படியிருக்கையில் அமைகிற
ஒவ்வொரு வாய்ப்பையும் மார்க்சியர்கள்
பயன்படுத்த வேண்டாமா? 

18) வங்கியின் ரகசிய லாக்கரில் நகைகளைப்
பாதுகாத்து வைப்பது போல, யாரும் படித்து
விடா,தபடி, கட்சி அமைப்புகளில் சிறை வைக்கப் 
பட்டிருக்கும் மார்க்சியத்தை விடுதலை செய்யுங்கள்.

19) மார்க்சியக் கல்வியைப் பரவலாக்குவது
மார்க்சியர்களின் கடமை. மக்கள் மார்க்சியத்தைப் 
படிக்கட்டும்; அறியட்டும். மார்க்சியம் வேண்டுமா
வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.  

20) மார்க்சியத்துக்கும் மக்களுக்கும் இடையில்
மார்க்சியர்கள் பூசாரி வேலை பார்க்க வேண்டாம்.

21) வகுப்பு எடுப்பது மட்டுமே ஒரே வழியா? நவீன
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மார்க்சியத்தைக்
கொண்டு செல்லக் கூடாதா? காணொளிகள்,
குறும்படங்கள் இவற்றில் எல்லாம் கவனம் செலுத்த 
வேண்டாமா?

22) மக்கள் தொகை பெருகி வரும் நம் நாட்டில்,
பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கு மார்க்சியக்
கல்வி அளிப்பது கம்யூனிஸ்ட் கட்சிகளால்
மட்டும் ஆகிற காரியம் அல்ல. கல்வியாளர்கள்,
அறிவியலாளர்கள், மார்க்ஸாலஜிஸ்டுகள்
ஆகியோருடன் மார்க்சியர்கள் இணைந்து
கூட்டாக வேலை செய்வதன்  மூலமே
மார்க்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க
முடியும். இது ஒரு கூட்டு முயற்சி. கட்சி
ஊழியர்களால் இம்மாபெரும் பணியின்
ஒரு சிறு பகுதியைக் கூட செவ்வனே
நிறைவேற்ற இயலாது.

23) இன்னும் எத்தனை காலம்தான் பொருள்முதல்வாத
வகுப்பையே மார்க்சிய ஊழியர்கள் எடுத்துக்
கொண்டு இருப்பார்கள்? பொருள்முதல்வாதம்,
இயங்கியல், உபரி மதிப்பு, மார்க்சின் மூலதனம்
ஆகிய பாடங்களை மார்க்ஸாலஜிஸ்டுகளிடம்
மார்க்சியர்கள் ஒப்படைத்து விடலாம். இந்தப்
பாடங்களை மார்க்சியர்களை விட,
மார்க்ஸாலஜிஸ்டுகள் சிறப்பாகவே கற்பிப்பார்கள்.

24) கட்சித் திட்டம், கம்யூனிச வரலாறு, நக்சல்பாரி
வரலாறு  கட்சி நிலைப்பாடுகள் ஆகிய பாடங்களை
கட்சி ஊழியர்கள் நடத்தலாம். இதில் ஒரு வேலைப்
பிரிவினையை (division of labour) மேற்கொள்ளலாம்.

25) இந்தியாவில் செயல்படும் அனைத்து கம்யூனிஸ்ட்
காட்சிகளையும் சார்ந்த மார்க்சியர்களிடமும் 
இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
பரிசீலித்து முடிவு சொல்லுங்கள்.
-----------------------------------------------------------------------------------------
:பின்குறிப்பு-1: இது தொடர்பாக ஏற்கனவே எழுதிய
இரண்டு கட்டுரைகளையும் சேர்த்துப் படித்து
ஒரு முடிவுக்கு வருமாறு வேண்டுகிறேன்.
பி.கு-2: அவனவன் இணையத்தில் மார்க்சியம்
படிக்கிறான். இணையமானது ஒரு சிறந்த
மார்க்ஸாலஜிஸ்ட்டாக மார்க்சியம் கற்பிக்கிறது.
மார்க்சியம் கற்க விரும்புவோர் கட்சிகளை நம்பி
இல்லை என்பதையும் கணக்கில் கொள்ளவும்.    
*******************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக