வெள்ளி, 6 ஏப்ரல், 2018

(2)அத்வைத நூல் பற்றிய  அ கா ஈஸ்வரன்
அவர்களின் விமர்சனம் ! அ கா ஈஸ்வரன்
அவர்களின் கூற்றுக்கு மறுப்பு!
-------------------------------------------------------------------------------------------
கருத்து முதல்வாதத்தின் (அத்வைதம்) வர்க்க சார்பை
அம்பலப் படுத்த வேண்டும்.ஆனால் இந்நூலில்
அம்பலப்படுத்தவில்லை என்கிறார் ஈஸ்வரன்.

இது உண்மையல்ல என்பதை நூலின் இப்பகுதி
தெளிவு படுத்தும்.

"இவை பின்னாளில் பெரும் நிலவுடைமைப் பேரரசுகளாக
வளர்ந்தன. இதன் விளைவாக வர்க்க மோதல்கள்
பெரிதும் கூர்மை அடைந்தன.

இந்த வர்க்கப் பிளவுகளையும் வர்க்கச் சுரண்டலையும்
நியாயப் படுத்த புதியதொரு தத்துவம் தேவைப்பட்டது.
ஏற்கனவே இருந்து வந்த கருத்து முதல்வாதம், புதிதாகத்
தீவிரம் அடைந்துள்ள வர்க்கச் சுரண்டலை நியாயப்
படுத்தும் வலிமை குன்றி இருந்தது.

பூர்வ மீமாம்ஸையும் உத்தர மீமாம்ஸையும்
வளர்ந்து வந்த நிலவுடைமைப் பேரரசுக்கான
தத்துவமாக இருக்கவில்லை. இது ஒரு புதிய
தத்துவத்துக்கான தேவையை உருவாக்கியது.
இந்தத் தேவையை நிறைவேற்றவே அத்வைதம்
பிறந்தது.
(மார்க்சியப் பார்வையில் அத்வைதம் பக்கம்-16)

 இவ்வாறு அத்வைதத்தின் வர்க்கச் சார்பை எனது
நூல் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
குறைந்தபட்சமாக மார்க்சியம் கற்றவர்கள்கூட
இதை புரிந்து கொள்ள இயலும். ஆனால் தோழர்
ஈஸ்வரனுக்கு இது புரியாமல் போனது ஏன்?

எனது நூலில் அத்வைதம் தோன்றியது ஏன் என்று
ஒரு தனிப்பகுதியே எழுதப் பட்டுள்ளது. கருத்து
முதல்வாதத்தின் தோற்றம், பொருள்முதல்வாதத்தின்
தோற்றம், இந்தியச் சூழலில்  கருத்து முதல்வாதம்
எப்படித் தோன்றியது, அதன் வர்க்க சார்பு ஆகிய எல்லா விவரங்களும் தெளிவாக எழுதப் பட்டுள்ளன.

எனது நூல் மேலும் கூறுகிறது:
"  உழைப்புச் சுரண்டலை சமூகத்திற்கு விளக்கவும்,
அதை நியாயப் படுத்தவும், சமூகத்தில் புதிதாக
ஏற்பட்டு விட்ட அசமத்துவத்தை (asymmetry)
விளக்கவும் புதியதொரு சிந்தனையும் சிந்தனை
முறையும் தேவைப் படுகின்றன. இந்தத் தேவையை
நிறைவேற்றவே கருத்துமுதல்வாதம் பிறக்கிறது.
(மார்க்சிய பார்வையில் அத்வைதம் பக்கம்-14)

எனது நூல் மேலும் கூறுகிறது:
"ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை ஆளப்படும்
வர்க்கங்கள் இயல்பானதாக ஏற்றுக் கொண்டு
ஒழுக வேண்டிய ஒரு சூழலைத் தோற்றுவிக்கவே
அத்வைதம் பிறந்தது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட
வர்க்கங்கள் கிளர்ந்து எழாமல் அத்வைதம்
பார்த்துக் கொண்டது."
(மார்க்சியப் பார்வையில் அத்வைதம் பக்கம்-16)

இவற்றையெல்லாம் படிக்கும் நண்பர்கள் ஒன்றை
உணரலாம். கருத்துமுதல்வாதத்தின் வர்க்கச் சார்பு
எனது நூலில் தெளிவாக எடுத்துரைக்கப்
பட்டுள்ளது என்பதை எவராலும் மறுக்க இயலாது.
காழ்ப்புணர்ச்சிக்கு இரையானவர்கள் மட்டுமே
இந்த உண்மையை ஏற்க மாட்டார்கள்.
****************************************************** 

ஈஸ்வரன் அவர்களே,
நேர்மையான வாதமுறைமைப்படி வாதம் செய்யுங்கள்.
உங்கள் விமர்சனத்தில் ஒவ்வொரு அம்சமாக
எடுத்துக் கொண்டு பதில் கூறி வருகிறேன்.
ஒன்றுக்கு பதில் கூறுகிறபோது, அதை விட்டு விட்டு
வேறொன்றுக்குத் தாவாதீர்கள். மேலே கூறிய பதில்
தங்களின் பின்வரும் கூற்றுக்கு உரிய பதில் ஆகும்.

அ கா ஈஸ்வரன் அவர்களே,
என்னுடைய பதில் மிகவும் தெளிவானது.
உங்கள் விமர்சனத்தில் ஒவ்வொரு அம்சமாக
(point by point) எடுத்துக் கொண்டு பதில் கூறி
வருகிறேன். முதல் அம்சத்துக்கு நான் கொடுத்த
பதில் தங்களின் பதிவில் பின்னூட்டமாக உள்ளது.
அதில் தங்களிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.
அதற்கு நேர்மையாக நீங்கள் பதிலளிக்கவில்லை.



  
   

ஈஸ்வரன் அவர்களே,
நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.
அதற்குப் பதில் சொல்லும் நேர்மையும் இல்லை.
காரணம் அக்கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை.
1) சாங்கியத்துடன் விவாதம் 2) பூர்வ மீமாம்ஸையுடன்
விவாதம் 3) பௌத்தத்துடன் விவாதம் ஆகிய இவை
பற்றி தமிழில் இல்லை. இதுவே உண்மை.
இந்த நூல்கள் சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய
மொழிகளில் உள்ளன.

இந்த நூல்களைப் பற்றி அறியாமல், இவற்றைப்
படிக்காமல் அத்வைதம் பற்றி தெளிவாகவும்
ஆழமாகவும் அறிந்து கொள்ள இயலாது. குண்டுச்
சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டு இருப்பவர்களுக்கு
இது புரியாது.   
அத்வைத நூல் பற்றிய அ கா ஈ அவர்களின் விமர்சனம்!
அ கா ஈஸ்வரன் அவர்களின் கூற்றில் உண்மை இல்லை!
---------------------------------------------------------------------------------------------------
அ கா ஈஸ்வரன்  அவர்கள் கூறுவது:

"தமிழில் வெளிவந்த தத்துவ நூல்களில்
அத்வைதம் பற்றிய நூல்களே அதிகம்.
இடைவிடாமல் தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக
அத்வைத நூல்கள் கிடைக்கின்றன." (அ  கா ஈஸ்வரன்)

எனது நூலில் கூறியிருப்பது:

"தத்துவ விவாதத்தில் சாங்கியத்தை எதிர்த்து
முறியடித்து விட்டதாக அத்வைதம் பெருமிதம்
கொண்டது. சாங்கியத்திற்கும் அத்வைதத்திற்கும்
நடந்த இந்த முக்கியமான தத்துவப்போர் குறித்து
எந்த நூலும் தமிழில் இல்லை; எழுதப்படவும் இல்லை.

சாங்கியம் மட்டுமல்ல, பூர்வ மீமாம்சை உள்ளிட்ட
பிற தத்துவப் பிரிவுகளுடன் அத்வைதம் நடத்திய
ஆழமான எந்த விவாதம் பற்றியும் தமிழில் ஒரு
நூலும் இல்லை; எழுதப்படவும் இல்லை."
(மார்க்சியப் பார்வையில் அத்வைதம்..பக்கம்-39....இளங்கோ)

ஈஸ்வரன் அவர்கள் கூறுபவை தத்துவ நூல்கள் அல்ல.
அவை அத்வைதப் புகழாரங்கள். ராமகிருஷ்ணா
மடத்தினரால், தபோவனப் பிரசுராலயத்தால்
அச்சிடப்பட்ட குப்பைகள். ஆதிசங்கரர் நிகழ்த்திய
அற்புதங்கள், அவரைப் பற்றிய கட்டுக்கதைகள்,
பிற்காலத்தில் யார் யாரோ எழுதி ஆதிசங்கரரின்
தலையில்  கட்டிய இடைச்செருகல்கள்! இவற்றைத்தான்
தத்துவ நூல்கள் என்று ஈஸ்வரன் குறிப்பிடுகிறார்.

இவர் குறிப்பிடும் நூலுக்கென்று மார்க்சிய நோக்கில்
எந்த விதமான  தத்துவார்த்தப் பெறுமதியும் கிடையாது.

தோழர் ஈஸ்வரனுக்கு எனது கேள்விகள்!
----------------------------------------------------------------------
1)ஆதிசங்கரர் சாங்கியத்துடன் நடத்திய விவாதம்
பற்றிய நூல் தமிழில் உள்ளதா?

2)ஆதிசங்கரர் பூர்வ மீமாம்சகரான மண்டன மிஸ்ரருடன்
நடத்திய விவாதம் பற்றிய நூல் தமிழில் உள்ளதா?

3) ஆதிசங்கரர் பௌத்தர்களுடன் நடத்திய விவாதம்
பற்றிய நூல் தமிழில் உள்ளதா?

இந்தக் கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலை
என்னுடைய நூலில் .கூறியுள்ளேன். இருக்கிறது
என்பது உங்களின் பதிலானால், நல்லது, மகிழ்ச்சி!
 ஆதாரம் தருக!
-------------------------------------------------------------------------------------
தொடரும்
***********************************************************




   

வியாழன், 5 ஏப்ரல், 2018

அத்வைதம் நூல் குறித்து எழுந்துள்ள பல்வேறு
விமர்சனங்களுக்கு நூலாசிரியரின் பதில்! (பகுதி-1)
-------------------------------------------------------------------------------------
தத்துவக் கல்வியைப் பொறுத்தமட்டில் இன்றைய
காலத்தின் தேவை எளிய அறிமுக நூல்கள்.

அத்வைதம் என்றால் என்ன?
பின்நவீனத்துவம் என்றால் என்ன?
பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
ஆகிய தலைப்புகளில் எளிய அறிமுக நூல்கள்
இன்று தேவைப் படுகின்றன.

"A brief introduction" என்ற வகையில் ஆங்கில மரபிலும்,
ஏன் உலக மொழிகள் அனைத்திலும் இவ்வாறு எளிய
அறிமுக நூல்கள் எழுதப்படுவது நடப்பில் இருக்கிறது.

எளிய அறிமுக நூல்களின் ஒரு சாதக அம்சம்
என்னவெனில், அவை அதிகம் பேரை எளிதில்
சென்றடைய வல்லவை. எழுதப்பட்ட பொருளின்
மீது ஆர்வத்தைத் தூண்டி மேலும் கற்க உதவுபவை.
எழுதப்பட்ட பொருளின் அடிப்படையை உணர்த்துபவை.

இவற்றை மனதில் கொண்டே
மார்க்சியப் பார்வையில் அத்வைதம்: ஓர் எளிய அறிமுகம்
என்ற நூல் எழுதப்பட்டு உள்ளது. இது வெறுமனே
அத்வைதத்தை அறிமுகம் செய்யும் நூல் மட்டுமல்ல.
மாறாக அத்வைதத்தை மார்க்சிய நோக்கில்
திறனாய்வு செய்யும் நூல். இத்திசை வழியில்
தமிழில் முதன் முதலில் எழுதப்பட்ட நூலாக இது உள்ளது.

இந்நூல் அத்வைதத்தின் அடிப்படை அம்சங்கள்
என்னென்ன, அத்வைதத்தின் சாரம் என்ன, அத்வைதம்
கூறுகிற பிரம்மம் என்பது என்ன உள்ளிட்ட பல்வேறு
அம்சங்களை மிகத் தெளிவாக விளக்கி உள்ளது.

ஆதிசங்கரரின் வாதங்கள் தவறானவை என்பதை 
இந்நூல் நிரூபிக்கிறது.
அவரின் பிரம்மம் என்ற கருத்தாக்கத்தின் மீது
கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளது.

சுருங்கக் கூறின், தத்துவார்த்த நோக்கில் அத்வைதத்தை
இந்நூல் அறிவியல் வழியிலும் மார்க்சிய நோக்கிலும்
கறாராக .விமர்சித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------
தொடரும்
------------------------------------------------------------------------------------------------------


  
 1) “கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம். (2). இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் திராவிட கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.(3.) 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் காவேரி நீர் உரிமை பிரச்சனை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார் கருணாநிதி வேறு ஒன்றும் இல்லை சர்க்காரியா கமிஷன் எனும் கத்தி /துப்பாக்கி தான் இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.. (4.)18.2.1892-ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி மற்றும் மைசூர் சமஸ்தானம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தான் காவேரி தொடர்பான முதல் ஒப்பந்தம் ஆகும். 1924-ஆம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டாவது ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுத்திக் கொள்வது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் திராவிட கருணாநிதி இது கருணாநிதியின் நான்காவது துரோகம் .இப்படி கர்நாடகா கடந்த 40 வருடங்களில் முக்கியமாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் - அணைகள் கட்டியதை - ஹேமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட அணை ,கபினி ஆற்றில் 19 டி.எம்.சி கொள்ளளவு அணை - ஹேரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை - தடுக்காத கண்டுகொள்ளாத கவனிக்காத கவலைப்படாத வருத்தமற்ற கூர் நோக்காத ஆராயாத கருணாநிதி தமிழர் நலன் திராவிடர் நலன் குறித்து கவலை கொண்டது இல்லை
---------------
 5). காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளி யிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும். ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது மத்திய காங்கிரஸ் அரசு .இதை கெஜட்டில் ஏன் வெளியிடவில்லை ? என்று மத்திய அரசை அந்த நேரம் உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி கட்சியாக பதவி சுகங்களை ஏகத்திற்கும் அனுபவித்து வந்த திமுக இது குறித்து துளி கூட கவலைப்படவேயில்லை . இது கருணாநிதியின் ஐந்தாவது துரோகம் .மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட நீதி மன்றம் மூலம் சாதித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் (6) காவேரி பிரச்சனையில் ஆரம்ப காலத்தில் இருந்து கர்நாடக மக்களின் வன்மத்தை தூண்டி வளர்த்தவர் தேவ கவுடா தான், கேட்டால் நான் விவசாய குடும்பம் என்பார் .காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (மத்திய அரசின் கெஜட்) வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவ கௌடா கோரிக்கை விடுத்தார் -அதில் தேவ கௌடா சாதித்தார் .அப்பேற்பட்ட தமிழின விரோதி இந்திய பிரதமராக பதவி வகிக்க ஆதரவுக்கரம் நீட்டியவர் இந்த கருணாநிதி தான்.இது கருணாநிதியின் ஆறாவது துரோகம் .(7) இது எல்லாவற்றையும் முழுங்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு கருணாநிதி செய்த மாபெரும் துரோகம் இதோ - 1998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி திமுக ஆட்சியின் போது , சென்னையில் முதல்வர் கருணாநிதி ,பிரதமர் தலைமையில் ஆன காவேரி ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசின் வரைவு அறிக்கையை விவாதிக்க கூட்டம் கூட்டினார் .அதில் காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தாத பட்சத்தில் ,பிரதமர் தலைமையிலான காவேரி ஆணையமே, கர்நாடக அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதிகாரம் சம்பந்தப்பட்ட ஷரத்து இருந்தது .அதனை கருணாநிதி நீக்கி விட்டார் .காரணம் அவரின் குடும்பத்தார் கர்நாடகாவில் வாங்கி குவித்துள்ள அளவற்ற கணக்கற்ற சொத்துக்கள் தான் . அந்த ஷரத்து இருந்தால் இப்போது உச்சமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்காததை சுட்டிக்காட்டி அதன் அணைகளை மத்திய அரசு கையகப்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள் வழி இருந்திருக்கும் .அதனை இரக்கமின்றி அடைத்தவர் மூடியவர் கருணாநிதி தான். அன்று அந்த ஷரத்து இல்லாததை குறிப்பிட்டு தான் ஜெயலலிதா அவர்கள் காவேரி ஆணையத்தை பல் இல்லாத ஆணையம் என்று விமர்சனம் செய்தார் . இது கருணாநிதியின் ஏழாவது துரோகம்
---------------
ஏற்கனவே ஒரு காங்கிரஸ் முதல்வர் (கண்ணனின் பெயர் கொண்டவர்) கர்நாடகாவில் ஆட்சி செய்தபோது ,ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி காவேரியில் சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தர சம்மதம் தெரிவித்தார் .அப்போது காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த கருணாநிதி டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் சொல்லி காவேரியில் தண்ணீர் திறந்து விட்டால் ,ஜெயலலிதா புகழ் கூடிவிடும் .நான் சிறுமைப்படவேண்டி நிற்கும் நிலை வரும் என சொல்லி அதனை தடுத்து விட்டார் .இதனை அந்த காங்கிரஸ் முதல்வர் தனது சுயசரிதையில் தேதி முதற்கொண்டு சொல்லி உண்மையை புட்டு புட்டு வைத்து விட்டார் . (9) அடுக்கடுக்காக காவேரி நதி நீர் விஷயத்தில் துரோகங்கள் செய்தவர் இந்த கருணாநிதி தான் .முன்பு ஒரு தமிழ் கவிஞர் - காவேரியை கடக்க இனி ஓடங்கள் தேவையில்லை ஒட்டகங்கள் போதும் - என்று சொன்னது போல தமிழகத்தில் காவேரி பாய்ந்த கழனிகள் எல்லாம் வறண்ட பாலைவனங்களாக மாற துரோகங்கள் செய்து தனது குடும்பத்தின் சொத்துக்களை பல மடங்காக பெருக்கியவர் ஆரிய எதிர்ப்பு புகழ் திராவிட கருணாநிதி தான் .காவேரி பாய்ந்த நிலத்தை கருக வைத்த அரசியல்வாதி கருணாநிதி தான் .ஆம் இவரின் துரோகங்களை தமிழர்கள் குறிப்பாக திருவாரூர் ,தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட இன்னும் அறியாதது தமிழகத்தின் சாபக்கேடு தான், ஆம் தமிழகத்தின் சாபக்கேடு,,,,

திங்கள், 2 ஏப்ரல், 2018

ஆதி சங்கரர் எழுதியதும் எழுதாததும்!
---------------------------------------------------------------------
முன்னூறுக்கும் மேற்பட்ட நூல்கள் ஆதிசங்கரால்
எழுதப்பட்டதாகச் சொல்லப் படுகின்றன. இதில்
உண்மையில்லை.

பிற்காலப் புலவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம்
ஆதிசங்கரரின் பெயரில் சேர்த்தனர்.

ஸௌந்தர்ய லஹரி அற்புதமான காவியம். காவியச்
சுவையில் ஈடுஇணையற்றது. இது சமஸ்கிருதத்தில்
எழுதப்பட்டது. என்றாலும் இந்து ஆதிசங்கரர்
எழுதியதல்ல.

ஆதிசங்கரர் தாம் வாழ்ந்த காலத்தில் எழுதிய
விவேக சூடாமணி என்னும் நூலின் மொழிநடைக்கும்
ஸௌந்தர்ய லஹரியின் மொழிநடைக்கும்
 பாரதூரமான வேறுபாடு இருப்பதை சம்ஸ்கிருத
மொழியியல் அறிஞர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
விவேக சூடாமணியின் மொழிநடை  காளிதாசரின்
நாடகங்களின் சம்ஸ்கிருத நடைக்கு ஒத்திசைவானது.
 ஸௌந்தர்ய லஹரியின் மொழிநடை வெகுவாகப்
பிற்பட்டது. எனவே ஸௌந்தர்ய லஹரியை ஆதிசங்கரர்
எழுதவில்லை என்பது புலப்படுகிறது.

அதே போன்றதுதான் பஜ கோவிந்தம். இது ஆதிசங்கர
எழுதியதே அல்ல இதன் உள்ளடக்கம் நிரூபிக்கிறது.
ஆதிசங்கரரின் அத்வைதத்தில் பக்தி, துதி, வழிபாடு
ஆகியவற்றுக்கு இடமே கிடையாது. பக்தி மார்க்கமான
பூர்வ மீமாம்ஸையை  எதிர்த்தே ஞான மார்க்கத்தைக்
கொண்ட அத்வைதத்தை ஆதிசங்கரர் உபதேசித்தார்.

பஜ கோவிந்தம் என்றால் கோவிந்தன் துதி என்று
பொருள். கோவிந்தனைத் துதிக்கும் முப்பது
சமஸ்கிருத பாசுரங்கள் இந்நூலில் உள்ளன.
உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம்!

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் மூடமதே
ஸம் ப்ராப்தே  ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரட்சதி டுக்ரிஞ் கரணே.

இப்பாடலின் மொழிபெயர்ப்பு!
( மொழிபெயர்ப்பு: இக்கட்டுரை ஆசிரியர்)

கோவிந்தனைத் துதி கோவிந்தனைத் துதி
கோவிந்தனைத் துதி மனமே
காலன் வரும் வேளையிலே
தத்துவப் படிப்பு உனைக் காக்காது!

(குறிப்பு:  டுக்ரிஞ் கரணே என்பது தத்துவ
இலக்கண நூல்.)

இப்பாடல் மட்டுமின்றி நூலின் அத்தனை பாடல்களும்
கோவிந்தன் துதி மட்டுமே. இதை அத்வைதியான
ஆதிசங்கரர் ஒருபோதும் இயற்றி இருக்க
முடியாது. ஆக பஜ கோவிந்தம் ஆதிசங்கரரால்
இயற்றப் பட்டதல்ல.

 அடுத்து மனிஷ பஞ்சகம் பற்றிப் பார்ப்போம்.
இது ஆதிசங்கரரால் இயற்றப் படவே இல்லை.
இந்நூல் குறித்து ஒரு கட்டுக்கதையும் உண்டு.
சங்கரர் காசியில் இருந்தபோது நடந்த ஒரு
நிகழ்வுடன் (இந்நிகழ்வும் ஒரு கட்டுக்கதையே)
முடிச்சுப் போடப்படுகிறது இந்நூல்.

ஆதிசங்கரரின் நூல்களை மூன்று வகையாகப்
பிரிக்கலாம்.
1) உண்மையிலேயே ஆதிசங்கரர் எழுதியவை
(உதாரணம்: பிரம்ம சூத்திர பாஷ்யம். விவேக
சூடாமணி போன்றவை)

2) ஆதிசங்கரரால் எழுதப் படாதவை
(உதாரணம்: பஜ கோவிந்தம், ஸௌந்தர்ய லஹரி,
மனிஷ பஞ்சகம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்றவை)

3) ஆதிசங்கரர் எழுதினார் என்றோ எழுதவில்லை
என்றோ உறுதிபட இதுவரை கூறப் படாதவை.
(உதாரணம்: லலிதா சஹஸ்கர நாமம்)

அத்வைதத் திறனாய்வு என்பது ஆதிசங்கரர் இயற்றிய
நூல்கள் என்று உறுதி செய்யப்பட்ட நூல்களின்
(authentic text) மீது அமைய வேண்டும்.
**********************************************************

..
ஏன் கற்க வேண்டும்?
ஏன் அறிவைப் பெற வேண்டும்?
மார்க்சியம் கூறும் விடை!
--------------------------------------------------------
கற்றல் இனிமையானது. சுகானுபவம் தருவது.
எனினும் கற்றலின் நோக்கம் இன்பத்தைப்
பெறுவது மட்டுமல்ல.

அறிதலின் நோக்கம் சமூக மாற்றத்தை நோக்கி
நடை போடுவதற்கே என்று மார்க்ஸ் கருதினார்.
கல்வியறிவானது ஒருவனின் சுயநலனுக்குப்
பயன்படுவது மட்டுமே என்று கருதுவது
தனியுடைமை வர்க்கச் சிந்தனை. மார்க்ஸ் இதை
ஏற்கவில்லை.

ஒருவன் பெற்ற கல்வியறிவானது சமூகத்திற்குப்
பயன்பட வேண்டும், சமூக மாற்றத்துக்காகப் பயன்பட 
வேண்டும் என்று மார்க்ஸ் கருதினார்.

மார்க்சிஸ்டுகள் மேலும் மேலும் கற்க வேண்டும்.
அவர்கள் பெறும் கல்வியறிவு சமூக மாற்றத்துக்காகப்
பயன்பட வேண்டும்.

இதுதான் அறிவைப் பெறுதல் குறித்த மார்க்சிய
நிலைப்பாடு!
**********************************************************