செவ்வாய், 4 ஜனவரி, 2022

 லாக்ரேஞ்சு புள்ளிகளா?

வாகனங்களை பார்க் செய்யும் இடங்களா?

--------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------- 

தி நகரில் உள்ள சரவணா ஸ்டோர்சுக்கு

இன்று சென்றேன். ஸ்கூட்டரில்தான் போனேன்.

ரங்கநாதன் தெருவில் வாகனங்களை 

நிறுத்தும் இடம் இல்லை. எனவே வேறு 

இடத்தில் நிறுத்தினேன்.


விண்வெளியிலும் சில பார்க்கிங் ஸ்பாட்ஸ்

உண்டு. ஆழ்வெளியில் இந்த பார்க்கிங் ஸ்பாட்ஸ் 

உள்ளன. அங்கு விண்கலன்களை நிறுத்தலாம்.


விண்கலன்களை நிறுத்தக்கூடிய இந்த பார்க்கிங் 

ஸ்பாட்சை பிரெஞ்சு கணித நிபுணர் ஜோசப் லூயி 

லாக்ரேஞ்சு (Joseph Louis Lagrange 1736-1813) கண்டு 

பிடித்தார். இவை அவரின் பெயராலேயே 

லாக்ரேஞ்சு புள்ளிகள் (Lagrange points) என்று 

அழைக்கப் பட்டன.


புள்ளிகள் என்று பெயர் இருந்தாலும், அவை 

உண்மையில் புள்ளிகள் அல்ல. 8 லட்சம் 

கிலோமீட்டர் அகலமான ஒரு இடத்தை வசதிக்காக 

புள்ளி என்று சொல்கிறோம். புள்ளி 

என்பதற்கான கணித வரையறை யாது?


A point has a position but no dimension என்றார் 

யூக்ளிட்.கிரேக்கத்தில் பிறந்த உலகின் மாபெரும் 

கணித மேதையான யூக்ளிட் (Euclid) வழங்கிய 

ஆகச்சிறந்த வரையறை இது. ஒரு புள்ளியை 

இதை விடத் தெளிவாக, இதை விடத் துல்லியமாக 

வரையறுத்து விட முடியாது.

     

இங்கு லாக்ரேஞ்சு புள்ளிகள் என்றால் அவை 

யூக்ளிட் வரையறுத்த dimensionless புள்ளிகள் 

அல்ல. லாக்ரேஞ்சு புள்ளிகளுக்குப் பரிமாணம் 

உண்டு. எத்தனை பரிமாணம் கொண்டவை 

அப்புள்ளிகள்? வெளி-காலத்துக்கு (spacetime)

எத்தனை பரிமாணம் உண்டோ அத்தனை 

பரிமாணமும் கொண்டவையே லாக்ரேஞ்சு

புள்ளிகள். அவை வெளி-காலத்தில் உள்ளவை.

வெளி-காலத்தின் பிரிக்க முடியாத பகுதிகளே 

லாக்ரேஞ்சு புள்ளிகள்.


அண்டவெளிக்கு மூன்று பரிமாணம்தான் 

என்றார் நியூட்டன்.இது காலாவதியாகிப் 

போனது. நான்கு பரிமாணம் என்ற ஐன்ஸ்டைன்.

நான்காவது பரிமாணமாக காலத்தைச் சொன்னார்.         

String theory 10 பரிமாணம் என்கிறது,

M Theory 11 பரிமாணம் என்கிறது. காலப்போக்கில் 

எத்தனை பரிமாணங்கள் என்று இறுதி செய்யப்படும்.

அதுவரை அண்ட வெளிக்கு எத்தனை பரிமாணங்கள் 

உண்டோ, அத்தனை பரிமாணங்களும் லாக்ரேஞ்சு

புள்ளிகளுக்கு உண்டு.


லாக்ரேஞ்சு புள்ளிகள் விண்வெளியில், அதாவது 

ஆழ்வெளியில் (deep space) எத்தனை உள்ளன?

பதில்:: ஒன்றிரண்டு அல்ல, ஒட்டு மொத்த 

விண்வெளியில் நிறையவே இருக்கக் கூடும். 

அவற்றை ஆய்வு செய்த பின்னரே கண்டுபிடிக்க 

இயலும். இங்கு நமது சூரியக் குடும்பத்தைப் 

பொறுத்த மட்டில் உள்ள 5 லாக்ரேஞ்சு புள்ளிகளைப் 

பற்றி மட்டுமே நாம் பேசுகிறோம்.  .


லாக்ரேஞ்சு புள்ளிகளை பற்றி அறிந்திட, 

முப்பொருள் சிக்கல் என்றால் என்ன என்று 

முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்? முப்பொருள் 

சிக்கல் என்பதை ஆங்கிலத்தில் Three body problem

என்பர்.


மேலே சொன்ன THREE BODIES என்பவை யாவை?

அவை வானியல் பொருட்களே. அதாவது சூரியன்,

பூமி, செயற்கைக்கோள் என்னும் இம்மூன்றும் 

Three bodies எனப்படும் முப்பொருட்கள் ஆகும்.


இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

சூரியன்- செவ்வாய்-செயற்கைக்கோள் என்னும் 

மூன்றும் முப்பொருட்கள் ஆகும்.      

   

சரி, முப்பொருள் சிக்கல் என்றால் என்ன?

அ) இது ஒரு வானியல் சிக்கல் (astronomical problem).

ஆ) இதில் 3 வான்பொருட்கள் (celestial bodies)

சம்பந்தப் பட்டுள்ளன.

3) இந்த 3 பொருட்களின் மீது, அவ்வவற்றின் 

பரஸ்பர ஈர்ப்பு விசை தவிர (mutual gravitation)  

வேறு எந்த விசையும் செயல்படாத நிலையில், 

அவற்றின் இயக்கத்தை எப்படித் தீர்மானிப்பது 

(determining their motion) என்பதுதான் முப்பொருள் 

சிக்கல்.


சூரியன்-பூமி- செயற்கைக்கோள் 

சூரியன்-வியாழன்- செயற்கைக்கோள் 

பூமி- சந்திரன்-செயற்கைக்கோள்     

என்பனவும் முப்பொருள் சிக்கல்களின் 

உதாரணங்களே.


இச்சிக்கலுக்குத் தீர்வு கண்டார் கணித மேதை 

லாக்ரேஞ்சு. அத்தீர்வுதான் லாக்ரேஞ்சு புள்ளிகள்.

நமது சூரிய மண்டலத்தில்  5 லாக்ரேஞ்சு 

புள்ளிகள் உள்ளன. இவை L1,L2, L3, L4, L 5 என்று 

பெயர் பெற்றுள்ளன. 



இந்தப் புள்ளிகளில் என்ன நடக்கின்றன?

இவை எவ்வாறு பார்க்கிங் ஸ்பாட்ஸ் ஆகின்றன?


சூரியன், பூமி, செயற்கைக்கோள் என்னும் மூன்றை 

எடுத்துக் கொள்ளுவோம். இவற்றில் சூரியன்

என்ன செய்யும்? பூமியின் மீதும் செயற்கைக் 

கோளைத் தாங்கியிருக்கும் விண்கலனின் மீதும்

தனது ஈர்ப்பைச் செலுத்தும். 


பூமி என்ன செய்யும்? தனது ஈர்ப்பை விண்கலத்தின் 

மீது செலுத்தும்.


விண்கலன் என்ன செய்யும்? சூரியன் பூமி என்னும் 

இரண்டின் ஈர்ப்புக்கும் இலக்காகி அவற்றால் 

அலைக்கழிக்கப்பட்டு அவை விரும்பிய பாதையில் 

தன்னைச் செலுத்திக் கொண்டு அவற்றைச் சுற்றி 

வரும்.


ஆனால் லாக்ரேஞ்சு புள்ளிகளில் இது நடக்காது.

அங்கு என்ன நடக்கும்? அது விண்கலனின் 

சொர்க்கம். அற்ப நிறை கொண்ட ஒரு பொருள் 

ராட்சசத்தனமான நிறை கொண்ட சூரியனைத்  

தோற்கடிக்கும் இடம் அந்த லாஃரேஞ்சு புள்ளி.


சூரியனின் ஈர்ப்பும் பூமியின் ஈர்ப்பும் 

இரண்டும் சேர்ந்து விண்கலனின் மீது 

பாயும்போது,விண்கலன் தனது மைய விலக்கு 

விசையால்  அதைச் சமப்படுத்தி 

விடுகிறது. இதனால் அங்கு விண்கலனைப் 

பொறுத்து ஒரு equilibrium நிலை ஏற்பட்டு 

விடுகிறது.


இதனால் அந்த லாக்ரேஞ்சு புள்ளியில் 

அதை ஒரு பார்க்கிங் ஸ்பாட்டாக எடுத்துக் 

கொண்டு, விண்கலன் அங்கு தன்னை 

பார்க் செய்து கொள்கிறது. சூரியனாலும் 

பூமியாலும் அலைக்கழிக்கப்படுவதற்கு 

லாக்ரேஞ்சு புள்ளியில் முற்றுப்புள்ளி 

வைக்கப் படுகிறது.


இதனால் என்ன லாபம்? பிரபஞ்சத்தில் 

இருந்து, அங்குள்ள காலக்சிகளில் இருந்து 

வரும் ஒளியை uninterruptedஆக ஜேம்ஸ்வெப்

தொலைநோக்கி பெறும். அதற்கு இந்த 

லாக்ரேஞ்சு புள்ளியில்  ஜேம்ஸ்வெப் 

படுத்துக்கிடப்பது துணைபுரியும்.


ஆக லாக்ரேஞ்சு புள்ளிகளைக் கண்டறிந்த

விஞ்ஞானி லாக்ரேஞ்சைப் பாராட்டுவோம்.

இவர் ஆய்லரின் மாணவர்!

சரி, இவரின் மாணவர் யார்?

பிரசித்தி பெற்ற ஃபூரியர்!

*******************************************

  

 இந்த ஓசையைக் கேளுங்கள்!

நாசா வெளியிட்ட சூரியனின் ஓசை!

-------------------------------------------------------------

இந்த வீடியோ 3 நிமிட நேரம் மட்டுமே 

ஓடும் வீடியோ. இதில் சூரியனின் ஓசையைக் 

கேட்கலாம். STANFORD Physics Lab வெளியீடு!


இந்த வீடியோவைக் கேளுங்கள்.

ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப் படுகிறது.

ஆங்கில விளக்கம் எழுத்து வடிவிலும் 

தரப்பு பட்டுள்ளது. எனவே அமெரிக்க 

ஆங்கிலம் புரியாது என்பவர்களும் 

ஆங்கில எழுத்து வடிவத்தைக் கொண்டு 

விஷயத்தைப் புரிந்து கொள்ளலாம்.


முதல் இந்த 3 நிமிட வீடியோவைப் பாருங்கள்.

சூரியனின் ஓசையைக் கேளுங்கள்.


அடுத்து இன்னொரு முக்கிய காரியத்தையும் 

நீங்கள் அவசியம் செய்ய வேண்டும்.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு,

சூரியனின் ஓசை என்ற என் கட்டுரையைப் 

படிக்க வேண்டும். அது அறிவியல் ஒளி 

ஏட்டில் வெளிவந்த கட்டுரை.


நிறையப்பேர் விரும்பினால் அந்தக் கட்டுரையை 

இங்கேயே இன்னொரு பதிவில் வெளியிடுகிறேன்.

அறிவியல் ஒளியில் 2 பக்கம் வந்த சிறிய 

கட்டுரைதான் அது.    


சூரியனின் ஓசையைக் கேட்காத செவிகள் 

செவித்திறன் இழந்த செவிகளே!

-------------------------------------------------------  


ஞாயிறு, 2 ஜனவரி, 2022

 புத்தாண்டுப் பிறப்பின் முக்கியத்துவம்!

------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------- 

புத்தாண்டுப் பிறப்பு என்பது ஒரு வானியல் நிகழ்வு!

இது ஒரு periodical நிகழ்வு! இது மொத்த பூமிக்கும் 

சொந்தம். இதை எந்த ஒரு இனமோ மதமோ 

மக்கள் கூட்டமோ தங்களுக்குரியதாக வரித்துக் 

கொள்ள இயலாது.


சூரியனில் இருந்து 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் 

உள்ளது பூமி. இது நொடிக்கு 30 கிமீ வேகத்தில், 

அதாவது மணிக்கு 1 லட்சம் கிமீ வேகத்தில் 

சூரியனைச் சுற்றி வருகிறது. இப்படிச் சுற்றுகையில் 

ஒரு முழுச்சுற்றைச் சுற்றி முடிப்பதற்கு எவ்வளவு 

காலம் ஆகிறதோ அதுவே ஓராண்டு எனப்படும்.  

இதற்குத் தோராயமாக 365.25 நாட்கள் ஆகின்றன.


அறிவார்ந்த மக்கள் சமூகம் இத்தகைய வானியல் 

நிகழ்வுகளைப் புரிந்து கொண்டது; பதிவு செய்து 

கொண்டது.  அதன் விளைவாகவே காலண்டர் எனப்படும் 

காலக் கணிதம் உருவானது.


இது குறித்து ஒரு நீண்ட கட்டுரையை அறிவியல் ஒளி 

ஆண்டு மலரில் சில ஆண்டுகளுக்கு முன்பே 

எழுதி உள்ளேன். அதைப் படியுங்கள். அறிவியல் ஒளி 

ஏட்டுக்குச் சந்தா செலுத்துங்கள்!


அடுத்து பொங்கல் திருநாள் வருகிறது. பொங்கல் 

பண்டிகையின் தோற்றம் குறித்து மிக நீண்ட 

ஒரு கட்டுரையை சென்ற ஆண்டு அறிவியல் ஒளி 

ஆண்டு மலரில் (பெப்ரவரி 2021) எழுதினேன்.

வெள்ளாட்டு நகர்வுதான் தைப்பொங்கல்  என்பது 

கட்டுரையின் தலைப்பு. அதையும் படியுங்கள்.


மேற்கூறிய இரண்டு கட்டுரைகளிலும், இந்த உலகில் 

இதுவரையிலும் யார் எவரும் சொல்லியே இராத, 

அறிந்தே இராத விஷயங்களைச் சொல்லி

உள்ளேன். அதைப் படியுங்கள்! 

*************************************************    


வியாழன், 30 டிசம்பர், 2021

கலிலியோ முதல் ஜேம்ஸ்வெப் வரை! 
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
 மனிதனுக்குப் பெரிதும் பயன்படும் முதல் 10 கருவிகளைப் 

பட்டியலிட்டால், அந்தப் பத்தில் ஒன்றாக தொலைநோக்கி

உறுதியாக இடம்பெறும். என்றாலும் தொலைநோக்கி என்பது 

17ஆம் நூற்றாண்டின் படைப்புதான். அதற்கு முன்பு தொலைநோக்கி 

பற்றிய ஏக்கங்கள் இருந்திருக்கக் கூடும்; ஆனால் தொலைநோக்கி 

என்ற ஒன்று இல்லை!  


தொலைநோக்கி இல்லாமல், வெறுங்கண்ணால் பார்த்தே 

பெரும் பெரும் வானியல் கண்டுபிடிப்புகளைச் செய்தார்கள் 

ஆரியபட்டர் முதல் கோப்பர் நிக்கஸ் வரையிலான அன்றைய 

வானியல் அறிஞர்கள். தாலமியின் புவிமையக் கொள்கையைத்  

தகர்த்தெறிந்து சூரிய மையக் கொள்கையை (Helio centric theory) 

உருவாக்கி உலகிற்கு அளித்த கோப்பர் நிக்கஸ் காலத்தில் 

தொலைநோக்கி என்பதே இல்லை.வெறுங்கண்ணால் பார்த்தே 

உலகைப் புரட்டிப் போட்டார் கோப்பர் நிக்கஸ்.


அறிவியல் வரலாற்றில் முதன் முதலாக தொலைநோக்கியுடன் 

இணைத்துப் பேசப்பட்ட விஞ்ஞானி கலிலியோதான் 

(Galileo Galilei 1564-1642). அவர் காலத்தில் இருந்துதான் 

தொலைநோக்கி யுகம் (telescope era) தொடங்குகிறது.


தொலைநோக்கியின் பிறப்பு!
--------------------------------------------
கலிலியோவுக்குச் சற்று முன்னரே, 1608ல் 
டச்சுக்காரரான ஹான்ஸ் லிப்பர்ஷே (Hans Lippershey 1570-1619) 
என்னும் மூக்குக் கண்ணாடித் தயாரிப்பாளர் தாம் உருவாக்கிய ஒரு தொலைநோக்கிக்கு காப்புரிமை 
கோரினார். தொலைநோக்கியின் உருவாக்கத்திற்குப் 
பலரும்  உரிமை கோரினாலும், பதிவு பெற்றுள்ள ஆவணங்களின்படி 
லிப்பர்ஷேயின் தயாரிப்பையே உலகின் முதல் தொலைநோக்கியாகக் 
கருதலாம். 

இது பற்றிக் கேள்வியுற்ற கலிலியோ தமக்குத் தேவையான 
ஒரு தொலைநோக்கியைத் தாமே தயாரித்துக் கொண்டார். ஒரு தொலைநோக்கியின் எந்தவொரு முன்மாதிரியையும் (prototype) 
அதற்கு முன் பார்த்தே இராத கலிலியோ தமது சொந்த அறிவின்   
துணையுடன் ஒரு தொலைநோக்கியை உருவாக்கிக் கொண்டார்.
விண்ணில் வெகு தொலைவிலுள்ள  வான்பொருட்களை 
அறிந்திட கலிலியோ தமது தொலைநோக்கியை 
விண்ணை நோக்கித் திருப்பினார். இதன் விளைவாக அவரால் 
வியாழன் கிரகத்தின் அதுவரை கண்டறியப்படாத நான்கு நிலவுகளைக் கண்டறிய முடிந்தது.      

தமிழ்நாட்டின் பெருமை!
--------------------------------------
நம்மிடமும் பெருமைக்குரிய ஒரு தொலைநோக்கி இருக்கிறது 
என்பதால் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவலூர் வைனு பாப்பு வானியல் 
கூர்நோக்கு ஆய்வகத்தில் (Kavalur Vainu Bappu Observatory) 
ஒரு பெரிய தொலைநோக்கி வைக்கப் பட்டுள்ளது. கூர்நோக்கு 
ஆய்வகம் அமையப் பாடுபட்ட எம் கே வைனு பாப்பு என்னும் 
வானியல் விஞ்ஞானியின் நினைவாக ஆய்வகம் அவர் பெயரைத் 
தாங்கி நிற்கிறது..

இங்கு 1986ல் ஒரு ராட்சதத் தொலைநோக்கி நிறுவப்பட்டது. 
இதன் ஒளிசெல் அகலம் (aperture) 2.3 மீட்டர் (91 அங்குலம்) ஆகும்.
நிறுவப்பட்டபோது இதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய 
தொலைநோக்கையாக இருந்தது. பின்னர் மார்ச் 2016ல் 
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் அருகிலுள்ள தேவஸ்தல் 
கூர்நோக்கு ஆய்வகத்தில் (Devasthal observatory) 3.6 மீட்டர் (142 அங்குலம்)
ஒளிசெல் அகலம் உடைய (3.6 meter aperture) பெரும் ராட்சதத் 
தொலைநோக்கி நிறுவப்பட்டபோது காவலூரின் சாதனை 
முறியடிக்கப்பட்டு, ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி 
என்ற புகழை தேவஸ்தல் தொலைநோக்கி பெற்றது.  

ரேடியோ தொலைநோக்கிகள்!
----------------------------------------------
மேலே நாம் பார்த்தவை அனைத்தும் ஒளியியல் 
தொலைநோக்கிகள் (optical telescopes). இவை காணுறு 
ஒளியை (visible light) அடிப்படையாகக் கொண்டவை. 
அதை ஆராய்பவை. மின்காந்த நிறமாலையில்
காணுறுஒளி மிகச் சிறிய ஒரு பாகமே. அதைத் தவிர்த்து  
மீதியுள்ள பெரும் பாகத்தையும் ஆராய வேண்டிய தேவை 
அறிவியலுக்கு இருக்கிறது. அதில் குறிப்பாக ரேடியோ 
அதிர்வெண் கொண்ட பகுதியை (portion of radio frequency)
ஆராய அதற்கென்று தனித்தன்மை வாய்ந்த தொலைநோக்கிகள் 
தேவை. அத்தகையவை ரேடியோ தொலைநோக்கிகள்
(Radio Telescopes ) என்று அழைக்கப் படுகின்றன.

உலகின் பிரும்மாண்டமான ரேடியோ தொலைநோக்கிகள் 
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில  
நாடுகளிடம் உள்ளன. அமெரிக்காவின் VLA (Very Large Array) என்னும் 
ரேடியோ தொலைநோக்கியானது ஒவ்வொன்றும் 25 மீ விட்டம் 
கொண்ட 27 ஆன்டெனாக்களின் தொகுப்பு ஆகும்.  
     
இந்தியாவின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு அருகில், அக்டோபர் 2001ல் 
நிறுவப்பட்டு உள்ளது. GMRT (Grand Meter wave Radio Telescope) என்று 
பெயர் பெற்ற இத்தொலைநோக்கியானது ஒவ்வொன்றும் 
45 மீ விட்டம் கொண்ட 30 ஆன்டெனாக்களின் தொகுப்பாகும்.

தமிழ்நாட்டிலும் ஊட்டியில் முத்தோரை என்ற இடத்தில் 
2240மீ (7349 அடி) உயரத்தில் ஒரு ரேடியோ தொலைநோக்கி 
நிறுவப்பட்டு 1970 முதல் செயல்பட்டு வருகிறது. 

மலை உச்சியில் தொலைநோக்கிகள்!
----------------------------------------------------------
கடல் மட்டத்தில் இருந்து ஓரளவு உயரத்தில் நிறுவப்பட்ட 
ஒளியியல் தொலைநோக்கிகள் அடிக்கடி பழுதடைவது 
நிகழ்ந்து கொண்டே இருந்தது. நகர்மயமாக்கலின் விளைவாக, தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகையானது 
தொலைநோக்கிகளின் லென்சுகளின் மீது படிந்து 
அவற்றைப் பாழடித்து விடும். இக்குறையைப் போக்கும் பொருட்டு 
மலைகளின் உச்சியில் புகை அண்டாத அதிக உயரத்தில் 
தொலைநோக்கிகள் நிறுவப்பட்டன. உலகெங்கும் பல்வேறு இடங்களில் 
5000 மீட்டருக்கும் மேற்பட்ட உயரத்தில் அநேக தொலைநோக்கிகள் 
நிறுவப்பட்டன. 

தொலைநோக்கிகளுக்கு என்றே இந்த பூமியில் ஒரு நாடு 
உண்டென்றால், அது தென்னமெரிக்க நாடான சிலி (Chile)
நாடுதான். சிலி நாடும் தொலைநோக்கிகளும் made for each other 
ஜோடிப்பொருத்தம் உடையவை. ஆண்டிஸ் மலையும் 
அடக்காமா பாலைவனமும் சேர்ந்து வழங்குகின்ற, உலகின் 
மிகவும் உலர்ந்த காற்று வானியல் கூர்நோக்கு ஆய்வுக்குப்  
பெரிதும் உகந்தது.
 
சிலியில் அடக்காமா பாலைவனத்தில் உள்ள செர்ரோ சஜ்நன்டார்
(Cerro Sajnantor) மலையின் உச்சியில் 5640 மீ உயரத்தில் 
(18504 அடி) TAO எனப்படும் (Tokyo University Atacama Observatory) 
ஒரு வானியல் கூர்நோக்கு ஆய்வகம் உள்ளது.
அதில் ஓர் அகச்சிவப்புத் தொலைநோக்கி உள்ளது. உலகின் 
அதிக உயரத்தில் அமைந்துள்ள கூர்நோக்கு ஆய்வகமாக  
இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் (2011ஆம் ஆண்டிற்கானது) 
பதிவு பெற்றுள்ளது.    
 
இந்தியாவில் லடாக்கில் லே நகரில் ஹென்லே என்னும் இடத்தில் 
IAO என்னும் (Indian Astronomical Observatory) வானியல் கூர்நோக்கு 
ஆய்வகம் உள்ளது. அது 4500 மீ உயரத்தில் (14,764 அடி) சரஸ்வதி 
சிகரத்தில் நிறுவப்பட்டு உள்ளது. உலக அளவில் அதிக உயரத்தில் 
அமைந்துள்ள  ஆய்வகங்களில் இது பத்தாவது இடத்தில் அமைந்து  
இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கிறது. ஒளியியல்
தொலைநோக்கி, அகச்சிவப்புத் தொலைநோக்கி, காமா கதிர்த் 
தொலைநோக்கி ஆகிய மூவகைத் தொலைநோக்கிகளும்  
இங்குள்ளன. 

விண்வெளித் தொலைநோக்கிகள்!
-----------------------------------------------------
தொலைநோக்கியை மெய்யாகவே முதன் முதலில் கண்டு 
பிடித்தவர் யார் என்பதில் போட்டாபோட்டி இருந்தபோதிலும், 
தொலைநோக்கி என்பது வானியல் ஆய்வுக்கு மட்டுமே ஆனது 
என்ற ஒரு போக்கை உண்டாக்கியவர் (trend setter) கலிலியோ. 
அவரிடம் இருந்து தொடங்கிய  தொலைநோக்கி யுகம் 
காலப்போக்கில் பெருந்திருப்பங்களுடன் வளர்ச்சி கண்டது. 
கடல் மட்டத்தில் இருந்து (Mean Sea Level) சிறிதளவு உயரத்தில் 
மட்டுமே நிறுவப்பட்ட தொலைநோக்கிகள், பின்னர் 
நல்ல உயரத்தில் மலைஉச்சிகளின் மீது வைக்கப் பட்டன. 

உயரமான சிகரங்களில் இருந்து கொண்டு ஒன்றைப் பார்ப்பது 
"குன்றேறி யானைப்போர் கண்டற்றால்" என்று வள்ளுவர் 
 கூறுவது போன்றது. காண வேண்டிய ஒரு காட்சியைத் 
தெளிவாகவும் முழுமையாகவும் பார்ப்பதற்கு மலைச் சிகரங்கள்  
உகந்த இடங்களாகும். 

இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக பூமியின் ஓரிடத்தில் 
தொலைநோக்கியை  நிலையாக வைப்பதற்குப் பதிலாக, அதை விண்வெளிக்குக் கொண்டு சென்று பூமியைச் சுற்றி வந்துகொண்டே 
தேவையானவற்றைப் படம் பிடித்து ஆய்வு செய்வது என்ற 
நடைமுறைக்கு மனிதகுலம் வந்து சேர்ந்தது. 
இவ்வாறு விண்வெளித் தொலைநோக்கிகள் (Space Telescopes) உருவாகின.

ஹப்பிள் தொலைநோக்கி!
---------------------------------------
1968ல் OAO-2 எனப்படும் (Orbiting Astronomical Observatory-2)   
கூர்நோக்கு ஆய்வகத்தை அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பியது. 
இது தாழ்நிலை புவிச்சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) பூமியைச் 
சுற்றி வந்தது. இதில் உள்ளதே உலகின் முதல் விண்வெளித் 
தொலைநோக்கி ஆகும். 

தொடர்ந்து 1971ல் சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யா)
சல்யூட்-1 என்ற விண்வெளி நிலையத்தை தாழ்நிலை புவிச்  
சுற்றுப்பாதையில் செலுத்தியது. பின்னர் இவை தவிர பல்வேறு 
விண்வெளித் தொலைநோக்கிகள் விண்ணில் வலம் வந்தன.       
அவற்றுள் பிரசித்தி பெற்றது ஹப்பிள் விண்வெளித் 
தொலைநோக்கி ஆகும். இது ஏப்ரல் 1990ல், தாழ்நிலை புவிச் 
சுற்றுப்பாதையில் (LEO) விண்ணில் செலுத்தப் பட்டது.

1929ல் அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹப்பிள் 
(Edwin Hubble 1889-1953) தொலைவிலுள்ள காலக்சிகள் 
சிவப்பு விலகல் (Red shift) அடைகின்றன என்று கண்டறிந்தார். 
இதன் பொருள் அவை நம்மை விட்டு விலகிச் செல்கின்றன 
என்பதாகும். அதாவது இப்பிரபஞ்சம் விரிவடைகிறது
என்று ஹப்பிள் கண்டறிந்தார். அவரின் இக்கண்டுபிடிப்பே
ஐன்ஸ்டைன் தமது "நிலைத்த பிரபஞ்சம்" (static universe) என்னும் 
தவறான கோட்பாட்டைத் திருத்திக் கொள்ள வழிவகுத்தது. 


ஹப்பிளின் காலத்தில் பிரபஞ்சம் விரிவடைகிறது என்று 
அறிந்திருந்தாலும், அது எவ்வளவு வேகத்தில் 
விரிவடைகிறது என்று துல்லியமாகக் கண்டறிய 
இயலவில்லை.  பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகத்தைக்  
(The rate of expansion)  கண்டறியும் நோக்கத்துடன் ஹப்பிள் 
விண்வெளித் தொலைநோக்கி (Hubble Space Telescope)
உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.

1990ல் விண்ணில் செலுத்தப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் 
மிகவும் பயனுறு விதத்தில் செயல்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி  அண்மையில் ஜூன் 2021ல் பழுதுபட்டது. இதனால் அதன் 
அறிவியல் செயல்பாடுகள் நிறுத்தப் பட்டன. அதன் பழுதுகள் 
நீக்கப்பட்டு வருகின்றன. என்றபோதிலும், அதன் வாழ்நாள் 
இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் உறுதி இல்லை.

ஜேம்ஸ்வெப் செலுத்தப்பட்டது!
------------------------------------------------- 
இந்நிலையில், பழையன கழிதலும் புதியன புகுதலும் 
என்பது போல, ஜேம்ஸ்வெப் விண்வெளித் தொலைநோக்கி 
(James Webb Space Telescope) கடந்த 2021 டிசம்பர் 25ல், கிறிஸ்துமஸ் 
தினத்தன்று, இந்திய நேரம் 17.50 மணிக்கு (UTC 12:20 hours) 
நாசாவால் விண்ணில் செலுத்தப்பட்டது. இத்தொலைநோக்கி 
சென்றடைய வேண்டிய இடம் L2 என்னும் இரண்டாம் லாக்ரேஞ்சு 
புள்ளி ஆகும் (Sun-Earth Lagrange point). இது பூமியிலிருந்து 
15 லட்சம் கிமீ  தூரத்தில் உள்ளது. இங்கு சென்றடைய 30 நாள் 
ஆகும்.      

பூமியில் இருந்து 2000 கிமீக்குக் குறைவான உயரம் 
கொண்டதே LEO (Low Earth Orbit) எனப்படும் தாழ்நிலை புவிச் 
சுற்றுப்பாதை ஆகும். ஹப்பிள் தொலைநோக்கி LEOல் 
570 கிமீ உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. ஜேம்ஸ்வெப் 
தொலைநோக்கி ஹப்பிளைப் போன்று பூமியைச் சுற்றி 
வராது. மாறாக L2  எனப்படும் இரண்டாம் லாக்ரேஞ்சு புள்ளியில் 
இருந்து ஒரு ஹாலோ சுற்றுப்பாதையில் (Halo orbit) அது 
சூரியனைச் சுற்றி வரும்.


ஒரு லாக்ரேஞ்சு புள்ளியைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுற்றி  
வரும் சுற்றுப்பாதையே ஹாலோ சுற்றுப்பாதை ஆகும். 
இதில் ஒரு முறை சுற்றி வருவதற்கு ஆகும் காலம் ஆறு மாதம் ஆகும்.
எந்த ஒரு முப்பொருள் விவகாரத்திலும் (three body problem),
(உதாரணமாக சூரியன், பூமி, செயற்கைக்கோள் ஆகிய 
மூன்றில்) ஹாலோ சுற்றுப்பாதை ஏற்படும். 

லாக்ரேஞ்சு புள்ளிகள் என்பவை உண்மையில் புள்ளிகள் அல்ல.
அவை அண்ட வெளியில் உள்ள சுட்டிடங்கள் (locations).  
இத்தாலிய-பிரெஞ்சு கணித மேதையான 
லாக்ரேஞ்சு  (Josephy Louis Lagrange 1736-1813) ஒரு முப்பொருள் 
சிக்கலுக்கு கண்ட தீர்வுகளே லாக்ரேஞ்சு புள்ளிகள் என்று 
அழைக்கப் பட்டன. இவை மொத்தம் 5 புள்ளிகள்.
அவை L1, L2, L3, L4, L5 ஆகும். 


லாக்ரேஞ்சு புள்ளிகளில் பெரும் நிறை கொண்ட சூரியன் 
பூமி ஆகியவற்றின் ஈர்ப்பு விசையும், அற்ப நிறை கொண்ட ஒரு செயற்கைக்கோளின் சுற்றுப்பாதைச் சுழற்சியும் (orbital motion) ஒன்றையொன்று சமன் செய்து கொள்கின்றன. இதனால் செயற்கைக்கோளின் மீது செயல்படும் நிகர விசை பூஜ்யம் 
ஆகி விடுகிறது. எனவே  செயற்கைக்கோளானது ஓர் இடத்தில் 
அதாவது லாக்ரேஞ்சு புள்ளியில் (L2) நிலையாக நின்றுவிட 
முடிகிறது. லாக்ரேஞ்சு புள்ளிகள் வாகனங்களை நிறுத்தும் 
இடங்கள் (parking spots)போல் பயன்படுபவை. ஸ்கூட்டரை 
பார்க் செய்வது போல ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியை 
L2 புள்ளியில் பார்க் செய்வதுதான் இந்த மிஷனின் நோக்கம்.

ஏற்கனவே ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் 
(ESA) பிளாங்க் என்னும் செயற்கைக்கோள் L2 புள்ளியில்
நிறுத்தப் பட்டுள்ளது. அநேகமாக ஜனவரி 24, 2022ல் ஜேம்ஸ்வெப்பும் 
அங்கு சென்று விடும். L2 புள்ளியில் இருந்து கொண்டு 
மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் ஆழ்வெளி பற்றிய 
தெளிவானதும் துல்லியமானதுமான பார்வை 
தொலைநோக்கிகளுக்குக் கிட்டும். இது வானியல் ரீதியாக 
பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. LEOவில் சுற்றும் ஹப்பிள் 
போன்ற தொலைநோக்கிகள் தெளிவும் துல்லியமும் கொண்ட 
பார்வையை வழங்க இயலாமல் பல்வேறு நேரங்களில் 
மங்கலான பார்வையையே வழங்கின  

விண்கலன் இயங்குவதற்குத் தேவையான சூரிய ஆற்றலை 
ஜேம்ஸ்வெப் எப்படிப் பெறும்? விண்கலத்தின் பின்புறமாகவே 
எப்போதும் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் இருக்கும் 
விதத்தில் L2 புள்ளியில் ஜேம்ஸ்வெப் நிலைகொண்டிருக்கும்.
தேவையான சூரிய ஆற்றலை, ஹாலோ சுற்றுப்பாதையில் 
சுற்றுவதன் மூலம் விண்கலன் பெற்று விடும். 

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியானது பெருவெடிப்பின் பின்னர் .
பிரபஞ்சம் தோன்றியபோது முதன் முதலில் உருவான 
நட்சத்திரங்கள், காலக்சிகளில் இருந்து வரும் ஒளியைச் 
சேகரித்து அவை எப்படித் தோன்றின என்று கண்டறியும் 
நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. தொலைநோக்கியில் 
உள்ள கருவிகள் பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும் அகச்சிவப்பு
ஒளியைச் சேகரிக்கும். பொதுவாக ஒரு தொலைநோக்கியின் 
வாழ்நாள் ஐந்தாண்டுகள் ஆகும். ஐந்தாண்டுகளில் இறுதியில் 
ஜேம்ஸ்வெப் அளிக்கும் தரவுகளில் இருந்து இதுவரை 
அறியப்படாத உண்மைகளை மானுடம் அறிந்து கொள்ளும்.
*******************************************************   
      

         
     
   


 


    
  

        


  

வியாழன், 23 டிசம்பர், 2021

 புதிய எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்!

பாட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்!

ஆனால் பாட்டரியை சார்ஜ் பண்ண 

வேண்டிய தேவை இல்லை!

-----------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------  

முன்குறிப்பு:

பொருள் உற்பத்தி பற்றிய கட்டுரை!

--------------------------------------------------------

பெங்களூருவில் ஒரு எலக்ட்ரிக் நிறுவனம்.

இது ஒரு ஸ்டார்ட் அப் கம்பனி. இதன் பெயர் 

Bounce . இந்தக் கம்பெனி ஒரு எலக்ட்ரிக் 

ஸ்கூட்டரை (e scooter) தயாரித்து உள்ளது.


அந்த ஸ்கூட்டரின் பெயர் Bounce Infinity E1.

விலை ரூ 68,999/-


இந்த ஸ்கூட்டருக்கு சார்ஜ் பண்ண வேண்டிய 

தேவையில்லை. நிறுவனமே உங்களுக்கு 

ஒரு FULLY CHARGED BATTERYஐ 

தந்து விடும். ஸ்கூட்டர் வாங்கும்போதே 

பாட்டரியும் தந்து விடுவார்கள்.


அந்த பாட்டரி தீர்ந்தவுடன், வழி நெடுகிலும் 

இருக்கும் SWAP STATIONSல் பழைய 

பாட்டரியைக் கொடுத்து விட்டு புதிய 

பாட்டரியை வாங்கிக் கொள்ளலாம்.


மேலும் விவரங்களுக்கு இணைக்கப்பட்ட 

ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவும்.


மார்க்சிஸ்ட்களுக்கு ஒரு அறிவிப்பு!

-------------------------------------------------------

இக்கட்டுரை இந்தியச் சமூகத்தின் பொருள் 

உற்பத்தி பற்றிய கட்டுரை. மார்க்சியம் 

பொருள் உற்பத்தியை முதன்மையானதாகப் 

பார்க்கிறது.


பொருள் உற்பத்தி சார்ந்த இந்தக் கட்டுரையை 

வேறு எவரும் எழுதப் போவதில்லை.

போலி மார்க்சிஸ்ட்கள்,

போலி நக்சல்பாரிகள்,

போலி மாவோயிஸ்டுகள் எவரும் சமூகத்தின் 

பொருள் உற்பத்தியில் அக்கறை கொள்ள 

மாட்டார்கள்.


எனவே இந்தக் கட்டுரைக்கு போலிகள் 

ஆதரவு தர மாட்டார்கள். ஆனால் சகல 

போலிகளும் இந்தக் கட்டுரையைப் படிப்பார்கள்.

ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்வார்கள்.

----------------------------------------------------------------

 


தனிக்கட்டுரை எழுதி வெளியிட்டு உள்ளேன்.

அதைப் படிக்கவும்.


முக்கிய அறிவிப்பு!

---------------------------

மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் 

முதல் மற்றும் இரண்டாவது கமெண்டில் 

நான் கொடுத்துள்ள ஆங்கிலப் 

பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைகளைக் 

கண்டிப்பாகப் படியுங்கள்.


புதன், 22 டிசம்பர், 2021

போற்றுதலுக்குரிய சுஜாதா!
-------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------
1970களில் சுஜாதா எழுதத் தொடங்கினார்.
எழுதியது அனைத்துமே அறிவியல்தான்.
அக்காலத்தில் பெ நா அப்புசாமி மட்டுமே தமிழில்
அறிவியலை எழுதிக் கொண்டிருந்தார்.கலைக்கதிர்
என்ற அறிவியல் பத்திரிகை கோவையில் இருந்து
வந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் அறிவியல் 
எழுத்து என்பது இவ்வளவுதான். அதாவது கடலில் 
காயம் கரைத்த கதைதான்.

இந்த நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் 
போட்டவர் சுஜாதா. வெகுஜன ஏடுகள் அனைத்தையும் 
தம் எழுத்தாற்றலால் ஆக்கிரமித்துக் கொண்டு, 
அங்கெல்லாம் அறிவியலை எழுதினார். அவரின் 
துப்பறியும் கதைகள் அனைத்தும் அறிவியலே.

அறிவியல் எழுத்து என்பது மரபார்ந்த இலக்கிய 
எழுத்தில் இருந்து வடிவம் உள்ளடக்கம் இரண்டிலும் 
மாறுபட்டது. ஜெயகாந்தன், தி ஜானகிராமன் 
போன்றோரின் எழுத்து போன்று அறிவியல் எழுத்து 
அமையாது. அறிவியல் எழுத்தானது 
ஒரு துடிப்பு மிகுந்த நடையைக் கோருவது.

ஆதெள கீர்த்தனாரம்பத்திலே என்று பாகவதர்கள் 
ஒவ்வொரு  கதாகாலட்சேபத்தையும் தொடங்குவது 
போல எழுதப்படும் நத்தை வேக எழுத்து 
அறிவியலுக்குப் பொருந்தாது. எனவே 
வேகமும் துடிப்பும் நிறைந்த ஒருவகையான பாய்ச்சல் 
நடையை (leap style) சுஜாதா அறிமுகப் படுத்தினார்.

"சற்று முன் ஐம்பது காசுக்கு வாங்கிய மக்கள் 
குரலில்  அந்தப் பார்வையற்ற பிச்சைக்காரன் 
மூழ்கி இருந்தான்"  என்று வர்ணிப்பார் சுஜாதா. 
ஒரு பத்தி முழுவதும் சொல்ல  வேண்டிய செய்தியை 
ஒரே வரியில் சொல்லி இருப்பார்.
(மக்கள் குரல் என்பது 1970, 80களில்வெளிவந்த 
ஒரு மாலைச்  செய்தித்தாள்).

ஒரு கதையில் நெரிசலும் ஜன சந்தடியும் நிறைந்த 
ஒரு நகரத்தை இப்படி வர்ணிப்பார்: "நகரின் இயக்கம்
ஒருவித பிரௌனியன் இயக்கம் போன்று இருந்தது".

பிரௌனியன் இயக்கம் ( Brownian Motion) என்றால் 
என்ன? அடுப்பில் உலை வையுங்கள். உலைநீர் 
நன்கு கொதித்ததும் அதில் ஒரு பிடி அரிசியைப்
போடுங்கள். உலை கொதிக்கக் கொதிக்க,
அரிசியானது உலைப்பானையின் உள்ளே
தாறுமாறாக மேலும் கீழும் சென்று கொண்டிருக்கும்.
 அரிசியின் இந்த இயக்கம் ஒருவித பிரௌனியன் 
இயக்கம்தான். (Brownian motion).

போகிற போக்கில் எழுதிச் சென்று விடுவார் சுஜாதா.
ஆனால் அதைப் புரிந்து கொள்ளவும், புரிந்து 
கொண்டு ரசிக்கவும் குறைந்த அளவேனும் 
அறிவியல் அறிவு வேண்டும்.

போட்டித்தேர்வு எழுதப்போகும் ஒருவன் 
ஒரு நோட்ஸ் (guide) வாங்கக் கடைக்குப் போகிறான். 
ஹோலோகிராம் (hologram) முத்திரை உள்ள 
நோட்சைப் பார்த்து வாங்குகிறான். இன்று 
ஹோலோகிராம் பலரும் அறிந்த ஒன்று. 
ஆனால் 80களிலேயே ஹோலோகிராம் பற்றி 
எழுதியவர் சுஜாதா. அவரின் கொலையுதிர்காலம் 
நாவலில் தமிழ்ச் சமூகம் அதுவரை அறிந்திராத 
ஹோலோகிராம் பற்றி விளக்கி இருப்பார்.

வெட்ட வெளியில் சலனத்துடன் கூடிய 
முப்பரிமாண உருவத்தை (3D figure in motion) 
உருவாக்கிக் காட்ட முடியும் என்று விளக்கினார் 
சுஜாதா. நள்ளிரவில் வெட்ட வெளியில்
பேய் நடமாடுவது போன்று ஒரு தோற்றத்தை 
ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியது 
பேய் பிசாசு பற்றிய மூட நம்பிக்கைகளுக்கு
கொள்ளி வைத்தது.

அறிவியலுக்கென்றே உள்ள சிற்றிதழான 
கலைக்கதிரில் அல்லது 'அறிவியல் ஒளி'யில் 
கட்டுரை எழுதுவது போன்று
பெரும் எண்ணிக்கையில் வாசகர்களைக் கொண்ட
வணிக இதழ்களான ஆனந்த விகடன் குமுதம் 
போன்றவற்றில் எழுதுவது இயலாது. 

அறிவியல் வாசகர்களுக்கு மட்டும்
என்று நடத்தப்படும் சிற்றிதழ்கள் தெரிவு செய்யப்பட்ட
வாசகர்களைக் கொண்டவை (selected audience). இவற்றில்
எழுதுவோர் அறிவியலை ஆழமாகச் சொல்ல முடியும்.
வணிக இதழ்களோ தற்போக்கான வாசகர்களை 
(random audience) கொண்டவை. இவற்றில் ஒரு அளவுக்கு 
மேல் அறிவியலைச் சொல்ல இயலாது.

வணிக இதழ்களின் இந்த வரம்புக்குள் நின்று 
கொண்டும் அவ்வப்போது சற்றே இந்த வரம்பை 
மீறியும் அறிவியலைப் பாமரனுக்கும் எடுத்துச் 
சென்றவர் சுஜாதா. கணிதம், தர்க்கம்
பயின்றோர் மட்டுமே அறிந்த பல்வேறு தர்க்கப் 
புதிர்களை வணிக இதழ்களில் அவர் எழுதி வந்தது 
அறிவியல் படித்திராத பெருந்திரளான வாசகர்களை 
அறிவியலின்பால் ஈர்த்தது..

உதாரணமாக, சிறைக்கைதியின் குழப்பம் 
(prisoner's dilemma) என்ற புகழ் பெற்ற புதிரை அவர் 
விளக்கி எழுதியதைக் குறிப்பிடலாம். இது 
விளையாட்டுக் கோட்பாட்டில்  (game theory)
வரும் புதிர் ஆகும்.

இரண்டு குற்றவாளிகளை காவல்துறை சிறையில்
அடைத்துள்ளது. அவர்களின் குற்றத்தை நிரூபிக்கும்
சாட்சியங்கள் இல்லை. அவர்களாகவே ஒத்துக் கொண்டால்தான்
அவர்களைத் தண்டிக்க இயலும். இந்நிலையில் அவர்களாகவே
குற்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்யும் நோக்கில் காவல்துறை
அவர்களுக்கு பின்வரும் வாய்ப்பை வழங்குகிறது. ஒருவருக்கு
வழங்கப்பட்ட வாய்ப்பு பற்றி மற்றவருக்குத் தெரியாது.

1. ஒருவர் மற்றவரைக் காட்டிக் கொடுத்தால், காட்டிக் கொடுத்தவருக்கு
விடுதலை; மற்றவருக்கு ஏழாண்டு சிறை.
2. இருவருமே மற்றவரைக் காட்டிக் கொடுத்தால், இருவருக்கும்
ஏழாண்டு சிறை.
3. இருவருமே ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க மறுத்து
விட்டால், இருவருக்கும் ஆளுக்கு ஓராண்டு சிறை.

இந்தச் சூழ்நிலையில் கைதிகள் முடிவெடுக்க வேண்டும்.
கைதிகள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதே கைதியின்
குழப்பம் (prisoner's dilemma) என்னும் புதிர் ஆகும்.
இருவருமே குறைந்த அளவு தண்டனை பெற வேண்டுமெனில்,
ஒருவர் மற்றவருடன் ஒத்துழைத்து ஒருவரை ஒருவர்
காட்டிக் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

இன்றும்  பலரும் அறிந்திராத இந்தப் புதிரை கால் நூற்றாண்டு
காலத்துக்கு முன்பே தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்துச்
சொன்னவர் சுஜாதா. இது ஏதோ கல்வியியல் சார்ந்த
வெறும் ஆர்வமூட்டும் புதிர் (academic puzzle) என்று கருதுவது தவறு.
அணுஆயுத நாடுகள் தங்களிடம் உள்ள அணுகுண்டுகளைப்
பயன்படுத்தாமல் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம்
கைதியின் குழப்பம் என்னும் புதிர் தரும் இந்தப் படிப்பினைதான்.

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்
கிறிஸ்டோபர் நோலனின் (Christopher Nolan) 2008ல் வெளிவந்த
டார்க் நைட் (Dark Knight) திரைப்படத்தின் உச்சக் காட்சியாக
கைதியின் குழப்பம் புதிர் அமைந்திருப்பதை அதைப் பார்த்த
ஆங்கிலம் கற்ற  வாசகர்கள்  அறிந்திருக்கலாம். எனினும்
ஆங்கிலம் அறிந்திராத வாசகர்களுக்கும் இப்புதிரை
25 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப் படுத்தியவர் சுஜாதா.

இவ்வாறு சாமானியனிடமும் அறிவியலைக் கொண்டு சென்றவர்
சுஜாதா. தமிழ்ச் சமூகத்தின் மூலை முடுக்குகள்
இண்டு இடுக்குகளிலும் அவர் அறிவியலைக் கொண்டு
சென்றார். தமக்கென ஒரு ராஜபாட்டையை அவர்
உருவாக்கிக் கொண்டார்.

சுஜாதா ஆகச்சிறந்த அறிவியல் பரப்புநர் (science communicator)
ஆவார். அவரின் அறிவியல் பரப்புப் பங்களிப்பை
அகல உழுதலுக்கு (extensive cultivation) ஒப்பிடலாம்.
ஆயின் ஆழ உழுதலை (intensive cultivation) அவர்
மேற்கொள்ளவில்லையா என்றால் பெருமளவுக்கு இல்லை
என்பதே உண்மை.

இது எவ்வாறு நிகழ்ந்தது? ஆழ உழுதல், அகல உழுதல் என்னும்
இரண்டில் சுஜாதா அகல உழுதலையே தேர்வு செய்தார்.
இத்தேர்வு அவரின் சொந்த விருப்பப்படி அமைந்தது என்று
கூறுவதை விட, அவர் எழுதத் தொடங்கிய காலத்திய
சமூக நிர்ப்பந்தம் என்பதுதான் உண்மை. பரந்து பட்ட
தமிழ்ச் சமூகம் 1970களில் ஓர் அறிவியல் அறிவு குறைந்த
(scientifically illiterate) சமூகமாகத்தான் இருந்து வந்தது.

எனவே பொதுச்சமூகத்தின் புரிதல் மட்டத்தில் இருந்துதான்
எவர் ஒருவரும் தொடங்க இயலும். அப்போதுதான்
அறிவியல் எழுத்து மொத்த சமூகத்தையும் சென்றடையும்.
1970களில் பெரும் அக்கறைக்குரிய (serious writing) அறிவியல்
எழுத்தை சுஜாதா தேர்ந்தெடுத்து இருப்பார் எனில், அவரால்
எட்டுக்கோடித் தமிழர்களையும் ஒருபோதும் சென்றடைந்து இருக்க
இயலாது (The reach would have been poor). பள்ளி கல்லூரிகளின்
நூலகங்கள் ஆய்வகங்களைத் தாண்டி, முச்சந்தியில்
நின்று கொண்டிருக்கும் குப்பன் சுப்பனிடமும் அறிவியலை
அவரால் கொண்டு சேர்த்திருக்க இயலாது.

சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை (scientific temper) ஏற்படுத்துவது
ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச்
சட்டம் 51A (h) கூறுகிறது. (to develop the scientific temper, humanism and the
spirit of inquiry and reform). அச்சு அசலாக இதைப் பின்பற்றி தமிழ்ச்
சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை ஏற்படுத்தியவர் சுஜாதா.

உலக அளவில் அறிவியல் புனைவு (science fiction) என்னும்
இலக்கிய வகை ஐரோப்பாவில்தான் முதலில் எழுந்தது.
ஹெச் ஜி வெல்ஸ் (H G Wells 1866-1946) என்னும் ஆங்கிலேயரும்
ஜூல்ஸ் வெர்ன் (Joules Verne 1828-1905) என்னும் பிரெஞ்சு
நாவலாசிரியரும் அறிவியல் புனைவுகளை முதன் முதலில்
எழுதினர். அப்போது அறிவியல் புனைவு என்னும் சொல்லே
உருவாகவில்லை. அறிவியல் வசீகரம் (science romance) என்றுதான்
ஹெச் ஜி வெல்ஸ் எழுதிய கண்ணுக்குத் தெரியாதவன்
(The invisible man) என்ற அறிவியல் புனைவு வர்ணிக்கப் பட்டது.
காலப்போக்கில், இருபதாம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில்
அறிவியல் புனைவு என்னும் இலக்கிய வகைமை தோன்றியது.

தமிழ்ச் சூழலில் சுஜாதாவே அறிவியல் புனைவு வகைமையிலான
சிறுகதைகளைத் தொடங்கி வைத்தார். எனினும் அறிவியல்
புனைவுகளை விட அறிவியல் விளக்க எழுத்துக்களாலேயே
சுஜாதா புகழ் பெற்றார். தமிழில் அறிவியல் எழுத்தை சுமு, சுபி
என்று (சுஜாதாவுக்கு முன், சுஜாதாவுக்குப் பின்) என்று
பிரிக்கலாம்.

அவரின் தலைமைச் செயலகம், ஜீனோம்
போன்ற நூல்கள் மனித மூளையின் செயல்பாடுகளை,
உயிரின் ரகசியத்தை அனைவருக்கும் எளிமையாகப்
புரிய வைத்தன. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து
முதன் முதலில் அவரே எழுதினார். சிலிக்கன் சில்லுப் புரட்சி என்ற நூல் மூலம் கணினித் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் புரிய வைத்தார்.

மேற்கூறிய நூல்கள் யாவும் ஆழ உழுதல் வகையைச் சார்ந்த
எழுத்துக்கள். ஆம், சுஜாதா முற்றிலும் அகல உழுதலை
மட்டுமே மேற்கொண்டிருக்கவில்லை.

அவரின் கனவுத் தொழிற்சாலை என்ற நூல் திரைப்பட
உலகை அக்கு வேறு ஆணி வேறு என்பதாக அலசியது.
கற்றதும் பெற்றதும் என்ற தலைப்பில் ஆனந்த விகடனில்
அவர் தொடர்ச்சியாக எழுதியவை சராசரி மனிதனை
அறிவுஜீவியாக ஆக்கும் உந்துவிசையைக் கொண்டிருந்தன.
  
கவிஞர் மனுஷ்ய புத்திரன் நடத்தி வரும் உயிர்மை பதிப்பகம்
சுஜாதாவின் நூல்கள் அனைத்தையும் சிறந்த முறையில்
வெளியிட்டு வருகிறது.

தமிழ் இலக்கிய உலகிலும் சரி, தமிழ்ச் சமூகத்திலும் சரி,
சுஜாதா தமக்குரிய அங்கீகாரத்தைப் பெற்றாரா என்று
பார்த்தால் இல்லை என்றே கூற வேண்டும். சிறுகதைகளும்
நாவல்களும் எழுதுவோர் மட்டுமே எழுத்தளார்கள் என்ற
பத்தாம்பசலித் தனமான மதிப்பீடே தமிழ் இலக்கிய
உலகில் இன்னமும் ஆட்சி செலுத்துகிறது. எனவே புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் முதலாக ஜெயமோகன் எஸ் ராமகிருஷ்ணன்
ஈறாக உள்ள எழுத்தாளர்களின் பட்டியலில் தமிழ் இலக்கிய
உலகம் சுஜாதாவை வைக்கவில்லை. புகழ்பெற்ற திரைப்பட
இயக்குநர்களை அடுத்து கடைசியில் நிற்கும் ஓர் ஆவணப்பட
இயக்குனர் போன்றே சுஜாதா கருதப் படுகிறார்.

1980களில் சுஜாதாவுக்கு இந்திய அரசு "அறிவியல் பரப்புநர்"
என்ற தேசிய விருதை வழங்கி கெளரவித்தது. இந்த விருதை
முதன் முதலில் பெற்றவர் சுஜாதாவே. தமிழக அரசு
பத்தோடு பதினொன்றாக ஒரு கலைமாமணியை அவரிடம்
தள்ளி விட்டு ஒதுங்கிக் கொண்டது.

தமிழ் எழுத்துலகைத் தம் அறிவியலால் நிறைத்த சுஜாதாவுக்கு
தமிழக அரசு வழங்கிய அங்கீகாரம் என்ன? ஒன்றும் இல்லை.
இது சுஜாதாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த அறிவியலுக்குமே
தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிதான்!

எனினும் தடைகளைத் தாண்டி அறிவியல் தேர் ஓடிக்கொண்டுதான்
இருக்கிறது. யார் அங்கீகரிக்க மறுத்தாலும், அறிவியலை
நேசிக்கும் ஒரு பெருங்கூட்டம் சுஜாதாவை இன்னும்
நேசித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவரின் மறைவுக்குப்
பின்னரும் அவர் விண்ணதிரும் முழக்கங்களுடன்
அறிவியல் ஆர்வலர்களால் போற்றப்பட்டே வருகிறார்!
****************************************************
 






செவ்வாய், 21 டிசம்பர், 2021

 பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம்!

உணவில் நஞ்சு காரணமாக 

பெண் தொழிலாளர்கள் அவதியும் 

நிர்வாகத்தின் மெத்தனமும்!

--------------------------------------------------------------

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில்

Foxconn என்னும் பன்னாட்டு நிறுவனம் உள்ளது.

கணினி சார்ந்த தொழிற்சாலை இங்குள்ளது.

பெண்தொழிலாளர் உட்பட  இதில் பல ஆயிரம் பேர் 

வேலை செய்கின்றனர். 


டிசம்பர் 18 முதல் இங்கு போராட்டம் நடைபெற்று 

வருகிறது. பெண் தொழிலாளர்கள் உண்ட உணவு  

நச்சுத்தன்மை அடைந்து நூற்றுக் கணக்கில் 

தொழிலாளர்கள் மருத்துவ மனைகளில்

அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் 

தொழிலாளர்களை கிள்ளுக்கீரையாக மதிக்கும் 

Foxconn நிர்வாகத்தின் ஆணவப் போக்கைக் 

கண்டித்தும் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாகத் 

திரண்டு சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை 

நடத்தினர்.


இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை 

பெற்று வந்த 8 பெண் தொழிலாளர்கள் இறந்து 

விட்டதாக ஒரு செய்தி வந்தது. இது போராட்டத்தை 

மேலும் தீவிரப் படுத்தியது.சாலை மறியலில் 

ஈடுபட்டனர் பெண் தொழிலாளர்கள்.


பின்னர் எவரும் இறக்கவில்லை என்ற உண்மை 

தெரிந்தது. தற்போது போராட்டம் முடிவுக்கு 

வந்துள்ளது.


இந்த ஒட்டு மொத்த விவகாரத்திற்கும் முழுப் பொறுப்பு 

Foxconn நிர்வாகமே. உணவில் நஞ்சு என்ற விஷயத்தை 

மூடி மறைத்தும் சிகிச்சை பெற்று வருவோர் பற்றிய 

விவரத்தை வெளியே கூறாமல் மறைத்தும் 

பிரச்சினையைப் பெரிதாகியது Foxconn நிர்வாகம்.


உண்மைகள் மறைக்கப்படும்போது வதந்திகள் 

கிளம்புவது இயற்கையே. நிர்வாகம் 

தொழிலாளர்களை நம்பிக்கைக்கு உரியவர்களாகக் 

கருதி நடத்தி இருக்க வேண்டும் 

(should have taken the workers into confidence).


உணவு நஞ்சானது ஒரு விபத்து என்று எடுத்துக் 

கொண்டாலும் அதன் பின்னரான விஷயங்களை 

நிர்வாகம் அணுகிய விதமானது criminal negligence 

of duty ஆகும்.


Foxconn நிறுவனத்தின் FM அதிகாரியோ அல்லது 

HR அதிகாரியோ ஏதேனும் ஒரு தொலைக்காட்சியில்

தோன்றி தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று

வரும் விவரங்களை மக்கள் அறிந்திடுமாறு 

தெரிவித்தால் வதந்திகள் தோன்ற முடியுமா?


இதைச் செய்ய Foxconn நிறுவனத்தை யார் 

தடுத்தது? முட்டாள்களே, இது எலக்ட்ரானிக் 

உலகமடா. 


Foxconn நிறுவனத்தின் மேலாளரையும் அதன் 

HR அதிகாரியையும் CRIMINAL NEGLIGENCE 

OF DUTY என்ற குற்றச்சாட்டில் தமிழக அரசு 

கைது செய்திருக்க வேண்டும். ஆனால் 

அவர்கள் கைது செய்யப் படவில்லை.

இது தமிழக அரசின் நியாயத் தராசு

சாய்ந்து கிடப்பதை உணர்த்துகிறது.

************************************************