ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ஏர்டெல் 4G பித்தலாட்ட விளம்பரத்துக்குத் தடை!
அக்டோபர் 7ஆம் தேதியுடன் விளம்பரத்தை நிறுத்த வேண்டும்!
இந்திய விளம்பரத் தரப்பரிசீலனை கவுன்சில் (ASCI) உத்தரவு!
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு மட்டுமே!
-------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் ( ilangophysics@gmail.com)   
---------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் ஏர்டெல் 4Gயை விட அதிக வேகம் உள்ள ஏதாவது 
ஒரு நெட்வொர்க் உண்டா என்று சவால் விட்டது ஏர்டெல்லின் 
4G விளம்பரம். இந்தப் பித்தலாட்ட விளம்பரம் தற்போது தடை 
செய்யப் பட்டுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதியுடன் (07.10.2015)
இந்த விளம்பரத்தை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவின் 
விளம்பரத் தரப்பரிசீலனை கவுன்சில் உத்தரவு இட்டுள்ளது.


இந்தியாவில், நிறுவனங்கள் அளிக்கும் விளம்பரங்களின் 
தரத்தை, உண்மைத் தன்மையைப் பரிசீலித்து அவற்றின் மீது 
நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ள அமைப்பு  ASCI என்ற 
அமைப்பு ஆகும். (Advertisement Standard Council of India). எனினும் இது 
அரசு ஏற்படுத்திய அமைப்பு அல்ல. விளம்பரத் துறையில் 
உள்ள நிறுவனங்கள் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட 
சுயமான ஒழுங்காற்று அமைப்பு (self regulating body) ஆகும்.

1985இல் அமைக்கப்பட்ட இந்த அமைப்பின் சக்தி வாய்ந்த 
உறுப்பு CCC எனப்படும் Consumer Complaint Council ஆகும்.
எந்த ஒரு தவறான போலியான விளம்பரம் குறித்தும் 
நுகர்வோர் இந்த கவுன்சிலில் புகார் கொடுக்கலாம்.
ஏர்டெல் 4Gயின் பித்தலாட்ட விளம்பரம் குறித்து, பலரும் 
CCCயில் புகார் செய்து இருந்தனர். அந்தப் புகார்களைப் 
பரிசீலித்து, அவை உண்மை என்று உறுதி செய்த பின்னால்,
ASCI தற்போது ஏர்டெல்லின் விளம்பரத்துக்குத் தடை 
விதித்து உள்ளது.

ஐ.நாவின் ஏஜன்சியான சர்வதேச தொலைதொடர்புச் சங்கத்தின் 
(ITU- International Telecommunication Union) வரையறைப்படி, 4G என்பது 
100 Mbps வேகம் உடையதாக இருக்க வேண்டும். உண்மையில்,
ஏர்டெல் வழங்கும் சேவை 4Gயே அல்ல. அது வெறும் LTE தான்.
LTE என்றால், அது 3Gயை விடக் குறைந்தது மூன்று மடங்கு 
வேகம் தர வேண்டும். ஆனால் ஏர்டெல் 4Gயின் வேகம் LTEயின் 
வேகமும் அல்ல. அதை விடக் குறைந்தது. வெறும் 8.76 Mbps 
வேகத்தை வைத்துக் கொண்டு 4G என்றும் LTE என்றும், ஏர்டெல் 
பித்தலாட்டம் செய்கிறது. இதை நமது முந்தைய கட்டுரையில்,
AIRTEL 4G is NEITHER 4G nor LTE என்று தெளிவாகக் குறிப்பிட்டு 
இருந்தோம்.

நியூட்டன் அறிவியல் மன்றம் கூறியது நூறு சதம் உண்மை 
என்று இந்த நாடே உணர்ந்து இருக்கிறது என்பதன் 
அடையாளம்தான் ஏர்டெல் விளம்பரத்திற்கான தடை.
துல்லியமான முழுமையான  சரியான (accurate , perfect and correct)
தரவுகளையும் முடிவுகளையும்  நியூட்டன் அறிவியல் மன்றம் 
சமூகத்துக்கு வழங்கி வருகிறது. யாருக்கும் முன்னதாக 
முதன் முதலில் வழங்கி வருகிறது என்பதும் அறிவியலைத் 
தாய்மொழியில் தமிழில் வழங்கி வருகிறது என்பதும் 
எமது சிறப்புகள். இதில் நியூட்டன் அறிவியல் மன்றம் 
நியாயமாகவே பெருமிதம் அடைகிறது.

ஆக, ஏர்டெல்லின் பித்தலாட்டம், கெட்டிக்காரன் புளுகு 
எட்டு நாளுக்கு என்ற பழமொழிபோல் ஆகி விட்டது. 
*****************************************************************                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக