ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

‘எந்த ஒரு பாடத்திட்டத்திலும் அதிக திறமையுள்ள ஒரு மாணவனுக்கு கிடைக்க வேண்டிய இடத்தை வேறு ஒரு மாணவன் தனக்குள்ள பொருளாதார வலிமையை வைத்து பறிப்பதை தடுக்கும் வண்ணம் தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்’
பல்கலைக்கழக மானியக்குழு (UGC) என்ற மைய அமைப்பின் கடமைகளில் ஒன்றாக மேற்கண்ட பணியானது யுஜிசி சட்டம் பிரிவு 12Aல் குறிப்பிடப்படுகிறது.
சில மருத்துவக் கல்லூரிகள் யுஜிசி சட்டப்பிரிவு 3ன் கீழ் தங்களை நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (Deemed Universities) என்று பதிவு செய்துள்ளன. அது என்ன யுனிவர்சிட்டியோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
அவை மத்திய அரசு அமைப்பில் பதிவு செய்துள்ளதால் மாநில மருத்துவ கல்லூரி கவுன்ஸிலிங்கில் கலந்து கொள்ளாமல் தாங்களாகவே இடங்களை நிரப்பிக் கொள்ள நீதிமன்றங்களால் அனுமதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கோடிகளில் புரண்டு வருகின்றன. அங்கு உச்சநீதிமன்றம் கூறும் தகுதி திறமை எல்லாம் செல்லாக்காசு.
சரி, இப்போது நீட் கட்டாயமாக்கப்பட்ட பொழுது, அதற்கு ஆதரவாக கூறப்பட்ட வாதம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் ஆட்டம் இனி செல்லாது என்பதுதான்.
ஆனால், இரண்டு ரவுண்டு கவுன்ஸலிங்தான். அதற்குப் பின்னர் அந்த இடமானது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கே சென்று விடும் என்று உச்ச நீதிமன்றம் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் கூறியுள்ளது.
.
தமிழகத்தில் மொத்தம் ஒன்பது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மொத்தம் 1600 இடங்கள் உள்ளன. ஒரு இடம் கூட தமிழக மாணவர்களுக்கான பொது கலந்தாய்வுக்கு கிடையாது.
தமிழக பொது கலந்தாய்வில் உள்ள தனியார் மருத்துவகல்லூரிகளில் கட்டணம் அதிகபட்சம் வருடத்திற்கு சுமார் 12 லட்சம்தான். கட்டண விபரம் தெளிவாக தேர்வு கையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால் மாநில அளவில் என்றால் ஊழல் நிர்வாக சீர்கேடு என்று கூப்பாடு போடும் கும்பல்களின் முகத்தின் கரியைப் பூசும் வண்ணம் நிகர்நிலை கல்லூரிகள் கலந்து கொள்ளும் மைய அரசு பொது கலந்தாய்வில் தனியார் கல்லூரிகளின் கட்டணம் என்ன என்பது குறிப்பிடப்படுவதில்லை. எனவே அவரவர் மனம் போன போக்கில் 25 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை குறிப்பிடுகிறார்கள்.
கலந்தாய்வில் முதல் ரவுண்ட் முடிந்து விட்டது. யாரும் சேரவில்லை. இரண்டாம் ரவுண்டும் முடிந்து யாரும் சேரவில்லை என்றால், எஞ்சியிருக்கும் அனைத்து சீட்டுகளையும் அந்தந்த கல்லூரிகள் பணம் கொண்டு வரும் மாணவர்களுக்கு விற்றுக் கொள்ளலாம்.
பாண்டிச்சேரியில் இவ்வாறு முதுகலை மருத்துவ படிப்பிற்கு 50-60 லட்சம் என்று கட்டணம் வசூலிக்கப்பட, சென்னை உயர்நீதிமன்றம் தற்போது 10 லட்சம் வாங்கிக் கொள்ளுங்கள். பின்னர் யுஜிசி ஒரு கமிட்டி அமைத்து, அந்த கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டது.
தொடர்ந்து தமிழக மருத்துவ கல்லூரி இளநிலை படிப்பிற்கும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ‘சரி இங்கும் அதிக பட்சம் பத்து லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்படும்’ என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இதற்கிடையே பாண்டிச்சேரி வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம், ‘அதெல்லாம் முடியாது. தகுதி திறமைதான்’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்யும் என்று நினைத்தால் சென்னை தீர்ப்புக்கு 04/08/17 அன்று இடைக்கால தடை விதித்து விட்டது.
வெறுத்துப் போன சென்னை உயர்நீதிமன்றம் இளநிலை படிப்பிற்கான வழக்கினை தள்ளி வைத்து விட்டது.
இனி என்ன நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு கொண்டாட்டம்தான். இரண்டாவது கவுன்சிலிங் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
என்னைக் கேட்டால், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்பவை, நம் நாட்டின் அமைப்புகள் அனைத்தும் கூட்டணி அமைத்து மருத்துவ மாணவர்கள் மீது நடத்திய மிகப் பெரிய மோசடி என்பேன்…

Reply6 hrs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக