வியாழன், 22 நவம்பர், 2018

பொருள் பற்றிய பத்தாம்பசலித் தனமான
வரையறை இனிமேலும் செல்லுபடி ஆகாது!
அண்ணன் தியாகு அவர்களின் விளக்கத்தை
முன்வைத்துச் சில கருத்துக்கள்!
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம் என்ற
கருத்தை முன்வைத்து அதை நிரூபித்தும் உள்ளேன்.
எனினும் இந்த வரையறை மட்டுமே சாதியை
முழுமையாக வர்ணிக்கப் போதுமானதல்ல.

தேவையான மற்றும் போதுமான (necessary and sufficient)
நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று
அறிவியல் கோருகிறது. எனவே சாதி ஒரு சமூகக்
கட்டுமானம் என்ற வரையறையையும்
முன்வைத்துள்ளேன்.

சாதி ஒரு கருத்தியல் கட்டுமானம் என்பதற்கும்
சாதி ஒரு சமூகக் கட்டுமானம் என்பதற்கும் இடையில்
எவ்வித சுய முரண்பாடும் இல்லை. சாதி ஒரு சமூகக்
கட்டுமானம் என்பதை மறுப்பது சாதியின் இருப்பையே
மறுப்பதாகி விடும்.

இவ்விரண்டு வரையறைகளும் போதுமானவை அல்ல
என்று அறிவியல் கூறுவதால், சாதிக்கு எவ்விதமான
பௌதிக இருப்போ பௌதிக அடித்தளமோ கிடையாது
என்ற முக்கியமான வரையறையையும் முன்வைத்துள்ளேன்.

ஆக சாதி என்பது பொருளல்ல வெறும் கருத்தே என்பது
இவற்றில் இருந்து பெறப்படுகிறது. எனினும் அண்ணன்
தியாகு அவர்கள் இதில் உடன்பட மறுக்கிறார். சாதி
என்பது பொருளும் ஆகும் என்கிறார்.

சாதி குறித்த கருத்தொற்றுமை ஏற்படாமல் தடுக்கும்
இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்ன? பொருள் பற்றிய
வரையறையில், புரிதலில் நாங்கள் இருவரும்
முரண்படுவதுதான் ஒரே காரணம்.

ஐம்புலன்களால் அறியத் தக்கதும் மனித சிந்தனைக்கு
வெளியில் சுயேச்சையாக இருப்பதுமே பொருள் என்று
கூறும் அண்ணன் தியாகு அவர்கள், அந்த வரையறையில்
கறாராக நிற்காமல்,  சிந்தனையையும் பொருளின் கணக்கில்
எழுதி விடுகிறார்.

வடிவமுடைய பொருட்கள் மட்டுமல்ல, நிகழ்வுகளும்
புலப்பாடுகளும் (events and phenomena) கூட பொருட்கள்தாம்
என்று கூறுவதன் மூலம் பொருள் என்பதன் வரம்பை
வெகுவாக விஸ்தரித்து விடுகிறார். இதிலுள்ள ஆபத்து
என்னவென்றால், உருவமற்ற இறைவன் ஏக இறைவன்
போன்ற ஆசாமிகளும் கூட பொருளின் கணக்கில்
நுழைந்து விடுவார்கள்.

எனினும், அண்ணன் தியாகு அவர்கள் முன்வைக்கும்
பொருள் பற்றிய தளர்வானதும் நெகிழ்ச்சியானதுமான
வரையறைக்கு அவரைக் குற்றம் சொல்ல இயலாது.
19ஆம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதத்தைத்
தாண்டிச் செல்லாத ஆகப் பெருமான்மையினரான
மார்க்சியர்களின் புரிதலையே அண்ணன் தியாகு
அவர்களும் கொண்டிருக்கிறார். நதியின் பிழையன்று
நறும்புனல் இன்மை!

மார்க்சும் எங்கல்சும் 19ஆம் நூற்றாண்டில் பிறந்து
வாழ்ந்து மறைந்தவர்கள். மார்க்ஸ் 1818ல் பிறந்து
1883ல் மறைந்தார்; எங்கல்ஸ் 1820ல் பிறந்து 1895ல்
மறைந்தார். தங்களின் தத்துவத்துக்கு இயங்கியல்
பொருள்முதல்வாதம் என்று மார்க்சோ எங்கல்சோ
பெயரிடவில்லை. மார்க்ஸ் எங்கல்சின் மறைவுக்குப்
பின்னரே, இயங்கியல் பொருள்முதல்வாதம் என்ற
பெயர் ரஷ்ய மார்க்சிய அறிஞர் பிளாக்கானவ்
அவர்களால் சூட்டப் பட்டது.

மார்க்சும் எங்கல்சும் உலகிற்குக் கொடையளித்த
பொருள்முதல்வாதம் 19ஆம் நூற்ராண்டில்
ஐரோப்பாவில் நிலவிய பொருள்முதல்வாதம்.
நியூட்டனின் இயற்பியலை சாத்தியமான அளவுக்கு
உள்வாங்கிக் கொண்ட பொருள்முதல்வாதமாக
மார்க்ஸ் எங்கல்சின் பொருள்முதல்வாதம் இருந்தது.

எனினும் பொருள் என்றால் என்ன என்று தலைசிறந்த
பொருள்முதல்வாதிகளான மார்க்சோ எங்கல்சோ வரையறுக்கவில்லை. இது அவர்களின் குறையன்று.
அவ்வாறு வரையறுப்பதற்கான தேவை அவர்களின்
காலத்தில் எழவில்லை.

மார்க்ஸ் எங்கல்ஸ் காலத்தில் பொருள் பற்றிய
அரிஸ்டாட்டிலின் வரையறையை அக்கால அறிவியல்
உலகம் ஏற்றுக் கொண்டிருந்தது. நான்கு மூலக்
கொள்கையே (Four elements theory) அரிஸ்டாட்டிலின்
பொருள் பற்றிய கொள்கை. அதே காலத்தில்,
இந்தியாவிலும் பிற கீழ்த்திசை நாடுகளிலும்
பஞ்சபூதக் கொள்கை நிலவியது. பொருள் என்பது
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து
பூதங்களின் சேர்க்கையே என்பதுதான்
பஞ்சபூதக் கொள்கை. நாம் கூறிய பஞ்ச பூதங்களில்
ஆகாயத்தை மட்டும் நீக்கி விட்டு, மீதி நான்கு
பூதங்களின் சேர்க்கையே பொருள் என்றார்
அரிஸ்டாட்டில்.

அரிஸ்டாட்டிலின்  வரையறையைத்தான் நியூட்டனும்
கலிலியோவும் ஏற்றுக் கொண்டிருந்தனர். அதையே
மார்க்சும் எங்கல்சும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
எனவே பொருள் என்பது குறித்து வரையறுக்க
வேண்டிய தேவை எழவில்லை மார்க்சுக்கும்
எங்கல்சுக்கும்.

ஆனால், லெனின் காலத்தில் பொருள் என்றால் என்ன
என்று வரையறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் லெனினுக்கு
இருந்தது. பொருள் என்றால் என்ன என்ற கேள்வியை
கருத்துமுதல்வாதிகள் எழுப்பியபடியே இருந்தார்கள்.
இதற்கு பதிலளிக்கவே  "பொருள் என்பது  மனத்தைச்
சாராத சுயேச்சையான ஒரு புறநிலை யதார்த்தம்"
என்ற தமது புகழ் பெற்ற வரையறையை லெனின்
அளித்தார். இதன் மூலம் மார்க்ஸ் எங்கல்ஸ்
காலத்திய 19ஆம் நூற்றாண்டின்
பொருள்முதல்வாதத்தை லெனின் புதுப்பித்தார்.

மார்க்ஸ் எங்கல்சுக்கு முன்பே பொருள்முதல்வாதம்
இருந்தது. அவர்களின் மறைவுக்குப் பின்னரும்
பொருள்முதல்வாதம் நீடித்து நிற்கிறது. மார்க்சிய
மூல ஆசான்களுக்குப் பின்னர், பொருள்முதல்வாதத்தை
மறைந்த விஞ்ஞானி ஸ்டீபான் ஹாக்கிங்
வளர்த்தெடுத்தார்.

பொருள் பற்றிய மனிதகுலத்தின் அறிவு மார்க்ஸ்
எங்கல்சின் 19ஆம் நூற்ராண்டுக்குப் பின்னர்
அசுரத்தனமாக வளர்ந்துள்ளது. Atomic physics, Nuclear physics,
Particle physics ஆகிய துறைகள் மார்க்சின் காலத்தில்
இயற்பியலில் கிடையாது. 1897ல்தான் ஜே ஜே தாம்சன்
எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1917ல்தான்
ருதர்போர்டு புரோட்டானைக் கண்டுபிடித்தார்.
ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானைக் கண்டுபிடித்தது
1932ல்.

இந்த அறிவியல் வளர்ச்சிகள் யாவும் மார்க்ஸ்
எங்கல்ஸ் காலத்திற்குப் பிந்தியவை. அறிவியலின்
இந்த வளர்ச்சியை உள்வாங்கியதே நவீன
பொருள்முதல்வாதம். அது ஸ்டீபன் ஹாக்கிங்கின்
பொருள்முதல்வாதம். இதுவே நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் பொருள்முதல்வாதம். இதுவே,
இது மட்டுமே போர்க்குணமிக்க பொருள்முதல்வாதம்.

எனவே நவீன அறிவியல் கூறும் பருப்பொருளின்
வரையறைப்படி, சாதி என்பது பொருளே அல்ல.
பௌதிக இருப்போ பௌதிக அடித்தளமோ அற்ற
எதுவும் பொருளே அல்ல. சிந்தனையோ சிந்தனையின்
விளைபொருளோ ஒருபோதும் பொருள் ஆகாது.
எனவே சாதி என்பது பொருளல்ல.

19ஆம் நூற்றாண்டுப் பொருள்முதல்வாதப் பழமைச்
சிறையில் இருந்து மார்க்சியர்களை விடுவிப்போம்.
*******************************************************

 




   

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக