சனி, 2 நவம்பர், 2019

ஆழ்துளை சுஜித்
சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது வரை, சுத்தமாக லாஜிக் இல்லாத, வரைமுறை இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக,
1. சுர்ஜித்தின் உடல் துர்நாற்றம் வீசும் அளவுக்கு, அவன் இறந்து நாட்கள் ஆகி இருக்கிறது ஆனாலும் அதை அறிவிக்கவில்லை. அரசு மூடிமறைக்கிறது என்றும்...
2. மீட்கப்பட்ட உடலை ஏன் கண்ணில் காட்டவில்லை, உண்மையாகவே உடலை மீட்காமல் ஏமாற்றுகிறார்கள் என்றும்...
இவ்விறு கேள்விகளுக்கும் சில அடிப்படை மருத்துவப் புரிதலே போதுமானது. ஒரு மனிதர் இறந்த பிறகு, அந்த உடலில் பல்வேறு கட்டங்களாக மாற்றம் நிகழும். அவை,
1. Pallor Mortis, 2. Algor Mortis, 3. Rigor Mortis, 4. Livor Mortis, 5. Putrefaction, 6. Decomposition, 7. Skeletoning, 8. Fossiling
இறந்த சில நிமிடங்களில் உடல் வெளிறத் துவங்கும். இதை Pallor Mortis எனக் குறிப்பிடுவர்.
மரணம் நிகழ்ந்த பிறகு உடலில் இரத்த ஓட்டம் நின்று போவதால் உடலின் வெட்பம் குறைந்து உடல் சில்லிடும். இது Algor Mortis எனப்படும்.
மரணம் நிகழ்ந்து 3 - 4 மணிநேரங்களில் உடலில் கைகள், கால்கள் போன்றவை அசைக்கமுடியாத அளவிற்கு இறுக்கமாக மாறிவிடும். இது Rigor Mortis எனப்படும்.
மரணம் அடைந்த உடலைக் கிடத்தி வைத்திருக்கும் போது, கீழ் நோட்டி (தரையை நோக்கி) உடலில் இரத்தம் தேங்கத் துவங்கும். இதனால் தரையை ஒட்டி இருக்கும் உடல் பகுதி அடர்பழுப்பு நிறத்தில் மாறிவிடும். இது 20 நிமிடங்களில் தொடங்கி 4 - 5 மணிநேரங்களில் நன்கு தெளிவாகத் தெரியும். இதை Livor Mortis என்று கூறுவர்.
அடுத்த கட்டமே நாம் இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான கட்டம். Putrefaction.
உடலில் இருக்கும் புரதங்களை குடலில் இருக்கும் பேக்டீரியாக்கள் மற்றும் உடலுக்குள் இருக்கும் மற்ற பேக்டீரியாக்கள் உடைக்கத் துவங்கும். இந்தச் சூழலில், குறிப்பாக மரணமடைந்த நபரின் வயிற்றில் உணவுகள் ஏதேனும் இருக்கும் போது அது பெருமளவில் வாயுவினை உற்பத்தி செய்யும். இந்த வாயுவானது வயிற்றில் தங்கி, வயிறு உப்பத் துவங்கும். இவ்வாறு வயிறு தாங்கும் அளவினை அழுத்தம் தாண்டும் போது, வயிற்று பகுதித் தசைகள் வெடித்து விடும். இதனால் உடலே உருக்குலைந்து விடும். சாதாரணமாக Putrefaction நிகழ மரணத்தின் பின் 2 - 3 நாட்கள் வரை ஆகும் என்றாலும், சிறுவன் சுர்ஜித்தின் உடலில் இது வேகமாக நிகழும். அதற்கான காரணங்கள்,
1. சிறுவன் சிக்கிக் கொண்ட 70 - 75 அடி ஆழத்தில், வெப்பமும், அழுத்தமும் அதிகமாக இருக்கும். சுற்றுபுற வெப்பம் Putrefaction வேகத்தை அதிகப்படுத்தும்.
2. சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சமயத்தில், 26 அடியிலிருந்து 70 அடிக்கு நழுவிச் சென்று விழுந்த சமயத்தில், உடலில் பல சிராய்ப்பு அல்லது பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். அதுவும் துளை முழுக்க மண்ணும், பாறை குடையப்பட்டதும் என்பதால். அந்தக் காயங்களில் வழியாக infection மற்றும் பேக்டீரியாக்கள் அதிக அளவில் உடலுக்கும் ஊடுறுவும். அதுவும் தரைமட்டத்திற்குக் கீழே சூரிய ஒளி புகாத இடம் என்பதால், பேக்டீரியாக்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
3. சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படக் கூடாதென்பதற்காக தொடர்ச்சியாக ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டதனால், அவன் மரணமடைந்த பின்னர் அவனது உடல் Putrefaction நடக்க அந்த ஆக்சிஜன் முக்கிய காரணியாக அமையும். பொதுவாக உடல்களைப் பதப்படுத்த காற்று புகாவண்ணம் பாதுகாக்க வேண்டும். இங்கே செலுத்தப்பட்ட பிராணவாயு, திசுக்கள் வேகமாக உடைய, பேக்டீரியாக்களுக்கு கிரியாஊக்கியாக (catalyst) அமைந்திருக்கும்.
ஆக சிறுவன் உயிர்நீத்த 10 - 15 மணிநேரத்திற்குள்ளாகவே அவனது உடல் அழுகியிருப்பதில் எவ்வித முரண்பாடும் இல்லை.
மேலும் அத்தனைத் தொலைக்காட்சி கேமிராக்களும் சூழ்ந்து கழுகினைப் போல உன்னிப்பாகப் படம் பிடித்துக் கொண்டிருக்கையில் மரணமடைந்த ஒரு உடலை எப்படி மூடாமல் பட்டவர்த்தனமாகக் காட்ட இயலும்? ஒரு சாதாரண மரணமடைந்த பிரேதத்தையே பார்க்கும் சமயத்தில் பார்ப்பவர்களுக்கு மனநிலை பாதிக்கும் ஆபத்து உள்ளதால், போர்த்தி விடுவார்கள். செய்திகள், படங்கள் போன்றவற்றில் mask செய்யப்பட்டே காட்டப்படும். பேஸ்புக் போன்ற தளங்களில் Content Warning - Disturbing Graphic - Viewers Discretion Advised என்று பிளாக் செய்து விடுவார்கள்.
அப்படி இருக்கையில், ஒரு சிதைந்த உடலை, குழந்தையின் உடலை, கேமிராக்கள் சூழ்ந்திருக்கும் சமயத்தில் எப்படி பொதுவில் காண்பிக்க இயலும்? அக்குழந்தையைப் பெற்றவர்களோ, உறவினர்களோ, சிதைந்து போன அவ்வுடலைப் பார்த்தால், அவர்களது மனநிலை என்னவாகும் என்று சிந்தித்துப் பார்த்து விட்டுப் பேசுதல் நலம்.
மரணம், மரணத்திற்கும் பின் பிரேதத்தில் நிகழும் மாற்றங்கள், பிரேதங்களைப் பார்ப்பவர் மனதில் மற்றும் உடலில் நிகழும் இரசாயண மாற்றங்கள் குறித்தெல்லாம் ஏகப்பட்ட கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. முடிந்தவரை உண்மைகளைப் புரிந்து கொள்ள முயல்வோம்.
கற்றல் மட்டுமே நாம் ஏமாறுவதைத் தடுக்க இருக்கும் ஒரே ஆயுதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக