வியாழன், 1 அக்டோபர், 2015

ராமசாமி சாராயம் குடித்தால்
அந்தோணிச்சாமிக்குப் போதை ஏறுமா?
டிஜிட்டல் இந்தியாவை ஆதரிப்பதால்
இணைய நடுநிலை எப்படி சேதாரம் ஆகும்?
----------------------------------------------------------------------
டிஜிட்டல் இந்தியாவை ஆதரிக்கும் விதத்தில்,
முகநூலில் உங்களின் முகப்புப் படத்தை
(profile picture அல்லது display picture) மாற்றாதீர்கள்;
மாற்றினால் எல்லாமே போச்சு என்று அலறுகிறார்கள்
சில அரைவேக்காடுகள். இது இந்திய பிராண்ட் மூடத்தனம்.
இது உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒன்று.

முகப்புப் படத்தை மாற்றுவதால் இணையதள நடுநிலை
பாதிக்கப்படும் என்று உளறுகிறார்கள் இந்த அரைவேக்காடுகள்.
இந்தக் கூச்சலில் எந்த அர்த்தமும் இல்லை. மொட்டைத்
தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் செயல் இது.

ராமசாமி சாராயம் குடித்தால் ராமசாமிக்குத்தான் போதை
ஏறுமே தவிர, எதையும் குடிக்காமல் அமர்ந்திருக்கும்
அந்தோணிச்சாமிக்குப் போதை ஏறாது.

இணைய நடுநிலை என்பது ஒரு முகப்புப் படத்தை மாற்றாமல்
விட்டு வைப்பதால் கிட்டி விடுவதல்ல. அது அவ்வளவு
எளிதானது அல்ல. ஒரு பெரும் போராட்டத்தைக் கோருவது.

இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும்
முற்போக்குக் கருத்து என்ற பெயரில் கூறி விடலாம்.
கேள்வி கேட்கும் மனப்பான்மையோ ஆய்வு மனப்பான்மையோ
இந்தியாவில் கிடையாது. a plus b whole squared என்பதை விரித்தால்,
a cube plus b cube வரும் என்று எவர் வேண்டுமானாலும்
முச்சந்தியில் நின்று கொண்டு கூவலாம். கூட்டம்
மெய்மறந்து கேட்டுக் கொண்டு நிற்கும். a plus b யை
square பண்ணினால், எங்கிருந்தடா  cube வரும், square தானடா
வரும் என்று  உளறுபவனின் சட்டையைப் பிடித்துக்
கேட்க இந்தியாவில் நாதி கிடையாது.

Facebook, Microsoft போன்ற அந்நிய நிறுவனங்களும் சரி, ஏர்டெல்
போன்ற இந்திய நிறுவனங்களும் சரி, தமது வர்த்தக நலனில்
மட்டும் குறியாக இருப்பவை. அவர்களால் இணைய
நடுநிலைக்குப் பங்கம் வராமல் காக்க வேண்டும். அது
காத்திரமான செயல்பாடுகளால் மட்டுமே  சாத்தியம் ஆகும்.
நுனிப்புல் மேய்வதால் பயனில்லை.
***********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக