வியாழன், 1 அக்டோபர், 2015

மோடியைக் காதலிக்கும் சத்யா நாதெள்ளா!
காதலுக்குக் குறுக்கே வரும் சுனில் மிட்டல்!
அலைக்கற்றைத் தொழில்நுட்பமும் அரசியலும்!
-----------------------------------------------------------------------------------
அலைக்கற்றை குறித்த அறிவியல் கட்டுரை (பகுதி-6) 
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------------------
டிஜிட்டல் இந்தியா வரவேற்கப்பட வேண்டிய ஒரு திட்டம்.
இது ஒரு நீண்டகாலத் திட்டம். இத்திட்டத்தின் முந்தைய
கூறுகள் டாக்டர் மன்மோகன் சிங் காலத்திலேயே
மேற்கொள்ளப் பட்டன. இந்தியாவின் கிராமப் புறங்களுக்கு
இணையதள சேவை வழங்குவது, மின் ஆளுகையைப்
பரவலாக்குவது ஆகிய நோக்கங்களை உள்ளடக்கியது இந்த
டிஜிட்டல் இந்தியா திட்டம்.

சாலை வசதிகள், மின்சாரம், தகவல் தொடர்பு ஆகிய துறைகள்
அடிப்படையான அகக் கட்டுமானம் சார்ந்தவை (basic infrastructure).
ஒரு நாட்டின் உற்பத்தி வளர்ச்சிக்கும் GDP (Gross Domestic Product)
வளர்ச்சிக்கும் தகவல் தொடர்பு வசதிகள் மிகவும் தேவையானவை.
எனவே டிஜிட்டல் இந்தியா நாட்டுக்குத் தேவை. அதைப்
போராடிப் பெற வேண்டியது மக்களின் பொறுப்பு.


மன்மோகன் உருவாக்கிய புதிய நிறுவனம் 
------------------------------------------------------------------------
முந்தைய மன்மோகன் அரசுக்கும் இப்போதைய அரசுக்கும்
ஒரு தொடர்ச்சி உண்டு. ஆட்சி மாறி விட்டதாலேயே, இந்தத்
தொடர்ச்சி அறுந்து விடுவதில்லை. மன்மோகன் அரசுக்கும்
மோடி அரசுக்கும் இடையில் பாரதூரமான வேறுபாடுகள்
இருப்பதாக எண்ணுவதும்  கற்பனையே.

இந்தியாவில் பிராட்பேண்ட் வளர்ச்சிக்காக, மன்மோகன்
ஆட்சியின்போது, 25.02.2012 அன்று, BBNL என்ற நிறுவனம்
தொடங்கப் பட்டது. (Bharat Broadband Network Limited). உண்மையில்
இந்த நிறுவனம் ஒரு SPV வகையிலான நிறுவனம் ஆகும்.
(SPV = Special Purpose Vehicle). அதாவது ஒரு குறிப்பிட்ட
நோக்கத்தைச் செயல்படுத்துதல் என்ற தேவைக்காக
இந்நிறுவனம் தொடங்கப் பட்டது. SPV வகை நிறுவனங்களின்
அதிகாரம் வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும். இந்த வகை
நிறுவனங்கள் நிரந்தரமானவை அல்ல. தங்களின் நோக்கம்
நிறைவேறியதும் இந்த வகை நிறுவனங்கள் முடிவுக்கு
வந்துவிடும்.

காப்பர் கேபிள்கள் காலாவதி ஆயின!
கண்ணாடி இழைக் கேபிள்களே இன்று உச்சியில்!
--------------------------------------------------------------------------------- 
BBNL நிறுவனம் எந்தக் குறிப்பிட்ட நோக்கத்தைச் செயல்
படுத்தப் போகிறது? இந்தியா முழுமைக்குமான கண்ணாடி
இழை கேபிள்கள் பதிக்கும் திட்டமான NOFN திட்டத்தைச்
செயல்படுத்துவதே  BBNL நிறுவனத்தின் நோக்கம்.
(NOFN = National Optical Fibre Network).

டாக்டர் மன்மோகன் சிங் காலத்தில், அனுபவம் மிக்க
பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்தின் பொறுப்பில்
BBNL நிறுவனம் ஒப்படைக்கப் பட்டு இருந்தது. இதற்கான
பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) BSNL நிறுவனத்துடன்
செய்து கொள்ளப் பட்டன. தற்போது, மோடி ஆட்சியில்,
BBNL ஐ நிர்வகிப்பதில் BSNLக்கு ஏகபோகம் இருக்கக் கூடாது
என்றும் தனியார் நிறுவனங்களையும் மாநில அரசுகளையும்
இதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறும்
ஒரு முன்மொழிவு பரிசீலிக்கப் பட்டு வருகிறது.

அடுத்து, NOFN திட்டத்தை பாரத்நெட் (BharatNet) திட்டம் என்று
பெயர் மாற்றும் எண்ணமும் மோடி அரசுக்கு இருக்கிறது.
இவை அனைத்தும் டிஜிட்டல் இந்தியாவுடன் தொடர்பு
உடையவை.

காணாக்குறைக்கு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் தன்னுடைய
 பெரும்பங்கு இருக்க வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட்
நிறுவனம் காய் நகர்த்துகிறது. இந்நிறுவனத்தின் White-Fi
தொழில்நுட்பத்தை டிஜிட்டல் இந்தியா திட்டத்தில்
செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசை
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உலகத் தலைவர் சத்யா நாதெள்ளா 
கோரியுள்ளார். மைக்ரோசாப்ட்டின் இந்தியத் தலைவர் 
பாஸ்கர் பிரமனிக் இதை வலியுறுத்திக் காய் நகர்த்தி வருகிறார்.


வெண்ணிற அலைக்கற்றை (White space spectrum)!
----------------------------------------------------------------------
இந்தியாவில் தொலைக்காட்சி சானல்கள் பயன்படுத்துகிற
அலைக்கற்றை 470-890 MHz (மெகா ஹெர்ட்ஸ்) என்கிற
frequencyயில் அமைந்தவை. இந்த அலைக்கற்றையின் பிரதானப் 
பயனாளி தூர்தர்ஷன் நிறுவனமே.  இந்த அலைக்கற்றையில்
(குறிப்பாக, UHF (Ultra High Frequency Band -IVஇல் உள்ள 470-590 MHz)
ஒரு சிறு பகுதி மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. பயன்படுத்தப்படாத
70 சதத்திற்கும் மேற்பட்ட பகுதி White Space என்று அழைக்கப்
படுகிறது. இந்தப் பகுதியைப் பயன்படுத்தும் தொழில்நுட்பமே
White-Fi தொழில்நுட்பம் ஆகும். இதில் மைக்ரோசாஃப்ட் நிபுணத்துவம்
பெற்றுள்ளது.


மைக்ரோசாப்ட்டின் இந்த முயற்சி ஏர்டெல்லின் வயிற்றில் 
புளியைக் கரைத்து விட்டது. வெண்ணிற அலைக்கற்றையை 
ஏலம் விடுவதன் மூலமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 
ஏர்டெல்லின் ஆதிக்கத்தில் இருக்கும் COAI அமைப்பு 
(Cellular Operators Association of India) வலியுறுத்தி வருகிறது.
இதன் மூலம் வெண்ணிற அலைக்கற்றையை மைக்ரோசாஃப்ட்
பயன்படுத்த முடியாமல் தடுத்து விடலாம் என்ற நோக்குடன் 
ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் காய் நகர்த்தி 
வருகின்றனர்.


ஆக, மோடியிடம் வெண்ணிற அலைக்கற்றை இருக்கிறது.
இது மிகவும் கவர்ச்சிகரமானது. கொழுத்த லாபம் தருவது.
இதைக் குறி வைத்து மோடியைக் காதலிக்கிறார் சத்ய 
நாதெள்ளா. மோடி-நாதெள்ளா காதல் நிறைவேறி விட்டால்,
தங்கள் கொள்ளையில் மண் விழுந்து விடும் என்று கருதி 
இந்தக் காதலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் ஏர்டெல் 
அதிபர் சுனில் மிட்டல்.  


ஆபத்தான அலைக்கற்றை அரசியல்!
--------------------------------------------------------------
ஆக, அலைக்கற்றைத் தொழில்நுட்பமும் சரி, அலைக்கற்றை
அரசியலும் சரி, மிகவும் ஆழமானவை.   அவை உள்ளூர்த்
தன்மை கொண்டவை அல்ல; சர்வதேசத் தன்மை கொண்டவை.
டிஜிட்டல் இந்தியா நாட்டுக்கு மிகவும் தேவை. அதைச்
செயலாக்குவதில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு
முன்னுரிமையும் அதிக வாய்ப்பும் தரப்பட வேண்டும்.
பகாசுரக் கொள்ளை அடிக்கும் ஏர்டெல் போன்ற தனியார்
நிறுவனங்களின் கைக்கு வெண்ணிற அலைக்கற்றை 
போய்விடக் கூடாது. இதுவே நமது எதிர்பார்ப்பு. இது 
நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
****************************************************************


      

  
.     





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக