வெள்ளி, 15 மார்ச், 2019

விபச்சாரம் குறித்து மார்க்சியம் என்ன சொல்கிறது?
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
மார்க்சிய மூல ஆசான்கள் மார்க்ஸ் எங்கல்ஸ் இருவரும்
விபச்சாரத்தைக் கடுமையாக வெறுத்தனர். எனினும்
முதலாளித்துவ சமூகத்தில் விபச்சாரம் தவிர்க்க
இயலாதது என்ற உண்மையையும் அவர்கள் சுட்டிக்
காட்டத் தவறவில்லை.

விபச்சாரம் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்குப்
பதிலளித்த மார்க்ஸ், முதலாளித்துவ சமூகம் முடிவுக்கு
வரும்போது விபச்சாரமும் கூடவே முடிவுக்கு வரும் என்றார். 
விபச்சாரிகளை முதலாளிய சமூகத்தின் பலியாடுகள்
(The victims of the capitalist society) என்கிறார் காரல் மார்க்ஸ்.
(பார்க்க: Economic and Philosophic manuscripts 1844)

1917ல் நவம்பர் புரட்சிக்குப் பின்னர், போல்ஷ்விக் அரசு
விபச்சாரத் தொழிலைத் தடை செய்தது. விபச்சாரிகளைக்
கைது செய்து சிறையில் அடைத்தது. பல விபச்சாரிகள்
கடின உழைப்பு முகாமுக்கு அனுப்பப் பட்டனர்.

எனினும் ஒரே நாளில் ஒரே உத்தரவில் முற்றிலுமாக
விபச்சாரத்தை ஒழித்து விட முடியாது என்ற
யதார்த்தத்தையும் லெனின் உணர்ந்து இருந்தார்.
எனவே விபச்சாரத்துக்கான காரணிகளை அகற்ற
லெனின் முனைந்தார்.

விபச்சாரத்தின் காரணிகள் யாவை?
What are the factors of the prostitution?
விபச்சாரத்தின் காரணிகளில் முதன்மையானது
வறுமையே ஆகும். வறுமையை ஒழிக்கும்போது
கூடவே விபச்சாரமும் பெருமளவு ஒழிந்து போகும்.
இதை நன்கு அறிந்திருந்த லெனின்
வறுமையை ஒழிப்பதை போல்ஷ்விக் அரசின்
முழுமுதல் கடமையாக ஏற்றுக் கொண்டிருந்தார்.

போல்ஷ்விக் அரசின் செயல்பாடுகளால்  பசியும் பட்டினியும்
இல்லாமல் ஒழிந்தது. வாட்டி எடுக்கும் வறுமையும்
படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. இதன் பல்வேறு
விளைவுகளில் ஒன்றாக விபச்சாரமும் கணிசமாகக்
குறைந்தது. சோற்றுக்கு வழியில்லாமல் விபச்சாரத்தில் 
தள்ளப்பட்ட பல்லாயிரக் கணக்கான பெண்கள்,
விபச்சாரத்தில் இருந்து மீட்கப் பட்டனர்.

முதலாளிய சமூக அமைப்பில் விபச்சாரத்தை ஒழிக்க
முடியாது; சோஷலிச சமூக அமைப்பில் மட்டுமே
விபச்சாரத்தை ஒழிக்க முடியும் என்ற காரல் மார்க்சின்
கருத்தே சரியானது என்பதை லெனின் நிரூபித்தார்.

இப்போது மீண்டும் விபச்சாரத்தின் காரணிகளுக்கு
வருவோம். வறுமை ஒரு காரணி என்பதால், வறுமையை
ஒழிக்காமல் விபச்சாரத்தை ஒழிக்க முடியாது என்பதால்,
லெனின் வறுமையை ஒழித்து  அதன் மூலம் விபச்சாரத்தை
கணிசமாக ஒழித்தார் என்பதை மேலே பார்த்தோம்.

விபச்சாரத்தின் இரண்டாவது காரணி என்ன? பெரும்
பணக்காரர்கள், பண்ணையார்கள், நிலப்பிரபுக்கள்
ஆகியோர் ஜார் காலத்திய ரஷ்யாவில் தங்களின்
அந்தப்புரத்தில் பல்வேறு பெண்களை ஆசைநாயகிகளாக
வைத்திருந்தனர். சோவியத்தில் இவர்கள் "குலாக்குகள்"
என்று அழைக்கப் பட்டனர்.

குலாக்குகளின் நிலங்களைப் பறித்து, அவர்களின்
அதிகாரத்தை ஒழிக்காமல் விபச்சாரத்தை ஒழிக்க
இயலாது. இதுவே அன்றைய ஜாரின் ரஷ்யாவில் இருந்த
நிலை. எனவே குலாக்குகளின் மீது போல்ஷ்விக்குகள்
நடவடிக்கை எடுத்தனர்.

குலாக்குகளின் நிலங்களும் அவர்களின் அதிகாரமும்
பறிக்கப்பட்டன. நிலத்தின் மீதான தனியுடைமை
ஒழிக்கப்பட்டது. எதிர்ப்புத் தெரிவித்த குலாக்குகள்
ஒடுக்கப்பட்டனர். அவர்களில் பலர் கொல்லப்
பட்டனர்: சிறையில் அடைக்கப் பட்டனர். இதன்
விளைவாக, குலாக்குகளின் பிடியில் இருந்த
பல்லாயிரக் கணக்கான பெண்கள் விபச்சாரத்தில்
இருந்து மீட்கப் பட்டனர். குலாக்குகளின் போகப் பொருட்கள்
என்ற அவமானம் நீங்கி, உழைத்து வாழத் தலைப்பட்டனர்
அந்தப் பெண்கள்.

இவற்றையெல்லாம் படிக்கும் வாசகர்களுக்கு ஒரு விஷயம்
புரிந்திருக்கும். சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது
போல, ஒரே நாளிலோ அல்லது ஒரே அரசாணையிலோ
விபச்சாரத்தை ஒழித்து விட முடியாது என்பது வாசகர்களுக்குப்
புரிந்திருக்கும்.

இன்னும் நிறைய எழுதிக் கொண்டே செல்லலாம்.
இடமில்லை; நேரமும் இல்லை. எனவே இத்துடன்
நிறுத்திக் கொள்ளலாம்.

இந்தக் கட்டுரை பின்வரும் இரண்டு விஷயங்களை
வலியுறுத்துகிறது.
1) முதலாளிய சமூக அமைப்பில் ஒருபோதும் விபச்சாரத்தை
ஒழித்து விட முடியாது. முதலாளித்துவம் இருக்கும் வரை
விபச்சாரமும் இருக்கும்.

2) விபச்சாரத்தை ஒழிப்பது என்பதன் பொருள் அதன்
காரணிகள் என்னவென்று கண்டறிந்து அந்தக் காரணிகளை
இல்லாமல் செய்வதே ஆகும். விபச்சாரத்தின் காரணிகளை
ஒழிக்காமல் விபச்சாரத்தை ஒழிக்க முடியாது.
----------------------------------------------------------------------
தொடரும்
**************************************************
பின்குறிப்பு:
விபச்சாரத்தின் காரணிகள் எவை எவை? What are all the
factors of prostitution? இக்கட்டுரையில் இரண்டே இரண்டு
காரணிகளை மட்டுமே  குறிப்பிட்டு அவற்றை விளக்கி
உள்ளேன். மற்றக் காரணிகள் எவை என்ற கேள்விக்கு
வாசகர்கள் விடை சொல்ல வேண்டும்.   
  
=================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக