சனி, 6 ஏப்ரல், 2019

(2) தோழர் கார்முகில் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்! பகுதி-2.
காங்கிரசும் பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்!
இரண்டையும் ஒருசேர எதிர்ப்பதே மார்க்சியம்!
இரண்டில் எதை ஆதரித்தாலும் அது எதிர்ப்புரட்சியே! 
---------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
1) இந்தியாவின் தேர்தல் முறை FPP (First Past the Post) எனப்படும்
முறையாகும். இது குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெறும்
குதிரை எது என்பதைத் தீர்மானிக்கும் முறையே ஆகும்.
எந்தக் குதிரை வெற்றிக் கம்பத்தை முதலில் தொடுகிறதோ
அதற்கே வெற்றி என்ற முறைதான் இது. இது ஒப்பீட்டளவில்
மிகவும் குறைபாடு உடைய ஜனநாயகம் ஆகும்.
(less democratic).

2) விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் (proportional representation)
என்பது இதை விட மேம்பட்ட முறையாகும் (more democratic).
சின்னஞ் சிறு நாடான இலங்கையில் கூட விகிதாச்சாரப்
பிரதிநிதிதித்துவம் உள்ளது. மிகுந்த பன்மைத்துவம்
கொண்ட இந்தியாவில் விகிதாச்சார முறை இல்லை
என்பது ஜனநாயக மறுப்பே.

3) விகிதாச்சார பிரதிநிதித்துவமே எட்டாக்கனியாக
இருக்கும் ஒரு நாட்டில், திருப்பி அழைக்கும் உரிமை
(right to recall) பற்றியெல்லாம் பேசுவதற்கே இடமில்லை.

4) காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று
தற்போது அறைகூவல் கொடுத்திருக்கும் தோழர் கார்முகில்
அவர்கள், இதற்கு முன்பு என்றாவது தேர்தல் சீர்திருத்தம்
பற்றி தமது அமைப்பு சார்பாக போராட்டம் நடத்தி
இருக்கிறாரா என்றால் இல்லை என்பதே உண்மையாகும்.

5) தேர்தலில் பங்கேற்க விரும்பும் எந்தவொரு மார்க்சிய
லெனினிய அமைப்பும் இதற்கு முதலில் குரல்
கொடுக்க வேண்டும் அல்லவா? தேர்தல் முறையில்
குறைந்தபட்சமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு
இருக்க வேண்டும் என்ற நிபந்தனையைப் பூர்த்தி
செய்யாமல் தேர்தலில் பங்கேற்பது சரியாகுமா?

6) தேசியக் கட்சிகளாக அறியப்படும் காங்கிரசும்
பாஜகவும் பெருமுதலாளித்துவக்  கட்சிகள்.
இவற்றுள் காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்துதான்
மாநிலக் கட்சிகள் தோன்றின; வளர்ந்தன.

6) மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காத,
ஏகபோக ஆணவக் காங்கிரசை எதிர்த்துத்தான்
தமிழ்நாட்டில் திமுக, மராட்டியத்தில் சிவசேனை,
ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள்
தோன்றின. 1967ல் பல்வேறு மாநிலங்களில்
காங்கிரசின் ஏகபோகம் தகர்க்கப்பட்டு மாநிலக்
கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. தமிழ்நாட்டில்
1967ல் அரியணையில் இருந்து விரட்டப்பட்ட காங்கிரஸ் 
இன்று வரை அரியணையின் நிழலைக்கூட மிதிக்க
முடியவில்லை.

7) மாநிலக் கட்சிகளின் அரசியல் அறுதியிடல் (political assertion)
இந்தியாவில் உறுதிப்பட்டு விட்டது. இப்படி ஒரு காலக்
கட்டத்தில், மாநிலக் கட்சிகளை ஆதரிப்பது என்ற
நிலையைக்கூட எடுக்காமல், பெருமுதலாளித்துவ
காங்கிரசை ஆதரிப்பது முற்றிலும் நியாயமற்றது. இது
மாநில மக்களின் உணர்வுக்கு எதிரானது.

8) தங்களின் கொள்கையைச் சொல்லி ஓட்டுக் கேட்கலாம்
என்ற நம்பிக்கையை அரசியல் கட்சிகளே முற்றிலுமாக
இழந்து விட்டு, பணம் கொடுத்து ஒட்டு வாங்குவது
என்ற நிலைக்கு இறங்கி விட்டன. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி
என்ற பேதமே இல்லாமல், எல்லாக் கட்சிகளுமே
பணம் கொடுத்துத்தான் ஓட்டை வாங்குகின்றன. இதை
தோழர் கார்முகில் அவர்களால் மறுக்க முடியுமா?

9) எங்கு பார்த்தாலும் காரில் பதுக்கி எடுத்துச் செல்லப்படும்
பணம் பிடிபட்ட செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன.
திருமங்கலம் பார்முலா தொடங்கி இன்று ஏகப்பட்ட
பார்முலாக்கள் வந்து விட்டன. நேரு காலத்தில் இவ்வாறு
பணம் கொடுத்து ஒட்டு வாங்கும் நடைமுறை இருந்ததா?
இன்று ஏற்பட்டு விட்ட இந்த சீரழிவைப் பற்றிக் கவலை
கொள்ளாமல், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டளிக்கும்
மனநிலைக்கு மாறிவிட்ட மக்களை அதிலிருந்து
விடுவிப்பது பற்றிய சிந்தனை இல்லாமல், வெறுமனே
காங்கிரசை ஆதரியுங்கள் என்று சொல்வது எந்த
அளவுக்குப் புரட்சிகரமானது?

10) 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில்
போட்டியிட்ட கல்வித்தந்தை பாரிவேந்தர் இந்தத் தேர்தலில்
காங்கிரஸ் கூட்டணியில் போட்டி இடுகிறார். நீதிமன்றத்தில்
ரூ 100 கோடி டெபாசிட் செய்து ஜாமீன் பெற்றவர் இவர்.
இவர் பாசிசத்தை எதிர்ப்பார் என்று மக்களுக்கு உபதேசம்
செய்கிறீர்களே கார்முகில் அவர்களே!

11) டி ஆர் பாலு போன்ற சாராய ஆலை அதிபர்கள்,
ஜகத்ரட்சகன் போன்ற கல்வித் தந்தைகள், கதிர் ஆனந்த்
கார்த்திக் சிதம்பரம் போன்ற வாரிசுகள், ஊழல் பேர்வழிகள்,
கிரிமினல்கள் என்று தேர்தலில் நிற்கும் இவர்களா வெற்றி
பெற்றால் பாசிசத்தை எதிர்ப்பார்கள்? கேழ்வரகில் நெய்
வடியும் கதை மார்க்சியம் ஆகுமா கார்முகில் அவர்களே!.   
       
12) தமிழகத்தில் உள்ள மாநிலக் கட்சிகளின் கடந்த
கால யோக்கியதை என்ன? திமுக, அதிமுக, மதிமுக
ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைத்து
அமைச்சர் பதவிகளைப் பெறவில்லையா?
பாமக, தேமுதிக. மதிமுக ஆகிய கட்சிகள் கடந்த
2014 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லையா?
இந்த 2019ல் மதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து
விட்டதால் அது பாசிச எதிர்ப்புக் கட்சி ஆகி விடுமா?

13) இதுவரை தொடர்ச்சியாகப் பல தேர்தல்களில்
பங்கேற்று வரும் லிபரேஷன் கட்சி மற்றும் SUCI
கட்சிகளின் தேர்தல் பங்கேற்பு அனுபவங்கள் காட்டுவது
என்ன? என்ன புரட்சியை அவர்களின் பங்கேற்பு
சாதித்து விட்டது?

14) இந்தத் தேர்தல் முறையின் சீரழிவுகளை அம்பலப்
படுத்துவதற்குப் பதில், இத்தேர்தல் முறையின் மீது
மக்களுக்கு பிரமையை ஏற்படுத்துவதுதான் கார்முகில்
அவர்களின் பணியாக இருக்கிறது. இது மார்க்சியம் அல்ல.
இது எதிர்ப்புரட்சி!

15) பாசிசத்தை எதிர்க்க என்ன செய்ய வேண்டும்?
      -------------------------------------------------------------------------
தேர்தல் முறையின் மூலமாக பாசிசத்தின் ரோமத்தைக்
கூட எவரும் அசைக்க முடியாது. தேர்தலில் பாஜக
வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தாலும்
சரி, அல்லது பாஜக தோற்று காங்கிரஸ் ஆட்சிக்கு
வந்தாலும் சரி, எந்த நேரத்திலும் ஆட்சியில் உள்ள
கட்சியானது தேவைப்படும் நேரத்தில் பாசிசத்தைக்
கடைப்பிடிக்கும். சூரியன் கிழக்கே உதிக்கிறது
என்பதை போன்ற உண்மை இது. காங்கிரஸ் கட்சியின்
கடந்த கால பாசிச ரெக்கார்டு மிகவும் மூர்க்கமானது.

பாஜகவை தேர்தலில் தோற்கடித்து விட்டால், பாசிசம்
வீழ்ந்து விடும் என்று கருதுவது பெரும் அறியாமை.பாசிசம்
என்பது பாஜகவின் தனியுடைமை அல்ல. இந்திய ஆளும்
வர்க்கக் கட்சிகளின் பொதுப்பண்பு பாசிசம் ஆகும்.
காங்கிரசும் பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்.
எனவே இரண்டையும் ஒருசேர எதிர்ப்பதே மார்க்சியம் ஆகும்.

இத்தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆளும் கட்சியாகி
பாஜக எதிர்க் கட்சியாகி விடுகிறது என்று வைத்துக்
கொள்வோம். அதனால் பாசிசம் குறைந்து விடுமா?
ஆளும் கட்சி எதிர்க் கட்சி இரண்டுமே ஒரு நிறுவனத்தின்
பங்காளிகள் (part and parcel of the establishment). இதில் ஒன்று
பாசிசம், மற்றொன்று ஜனநாயகம் என்பதெல்லாம்
பிதற்றல்கள். கடுமையான ஒடுக்குமுறைச் சட்டங்களை
ஆளும் கட்சியான காங்கிரஸ் கொண்டு வந்தால்,
எதிர்க்கட்சியான பாஜக அதை ஆதரிக்குமே தவிர
அதை எதிர்க்காது.

எனவே பாசிசத்தை தேர்தல் களத்தில் அல்ல, அரசியல்
களத்தில், தத்துவக் களத்தில், தெரு முனைகளில்
எதிர்கொள்ள வேண்டும். தேர்தல் என்பது ஐந்தாண்டுக்கு
ஒருமுறை மட்டுமே வருவது. அரசியல் களம் என்பது
என்றும் எப்போதும் இருப்பது.

நாடாளுமன்றத்துக்குப் புறம்பான போராட்டங்களைக்
கட்டி அமைப்பதும், அவற்றில் மக்களைத் திரட்டி
ஈடுபடுத்துவதும், அதன் மூலம் மக்களைப்
பயிற்றுவிப்பதுமே மார்க்சியம் ஆகும். ஜகத் ரட்சகனுக்கும்
பாரிவேந்தருக்கும் பல்லக்குத் தூக்குவது மார்க்சியம் ஆகாது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற மக்களின்
போராட்டங்கள் தரும் படிப்பினை என்ன என்பதை
மார்க்சிஸ்டுகள் உணர வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்புப்
போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்றவற்றில்
மக்கள் உற்சாகமாகத் திரண்டனர். இவற்றில் அரசியல்
கட்சிகள் உள்ளே நுழைய மக்கள் அனுமதிக்கவில்லை.

அந்த அளவுக்கு மக்கள் பூர்ஷ்வா அரசியல் கட்சிகள்
மீது நம்பிக்கை இழந்து போய் இருக்கின்றனர். தோழர்
கார்முகில் அவர்களின் நிலைபாடு, மோசடிக் கட்சிகள்
என்று அம்பலப்பட்டுப் போன அரசியல் கட்சிகளின்
மீது நம்பிக்கை ஏற்படுத்தும் பிற்போக்கான
முயற்சி தவிர வேறல்ல.

பாசிசத்தை எதிர்ப்பது நாடாளுமன்றத்துக்குப்
புறம்பான போராட்டங்களால் மட்டுமே சாத்தியம்.
இதற்கான திட்டம் எதுவும் இல்லாதவர்கள், திட்டம்
வகுக்க இயலாத கோழைகளே பூர்ஷ்வா அரசியல்
கட்சிகளின் தொண்டரடிப்பொடிகளாக வாழும்
வாழ்க்கைக்கு ஏங்குவர்.

இறுதியாக, மீண்டும் கூறுகிறோம்: காங்கிரசும்
பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்.
இரண்டும் சரிசமம் ஆனவை. இரண்டையும் ஒருசேர
எதிர்ப்பதே மார்க்சியம் ஆகும். இது கடினமான
பணிதான். எனினும் வேறு குறுக்கு வழி எதுவும் இல்லை.

காங்கிரசும் பாஜகவும் சேர்ந்தது பாசிச முகாம்.
மக்களும் மார்க்சிய லெனினிஸ்டுகளும் சேர்ந்தது
பாசிச எதிர்ப்பு முகாம்! 

எனவே நாடாளுமன்றத்துக்குப் புறமான
போராட்டங்களைக் கட்டி அமைத்து காங்கிரஸ் பாஜக
இரண்டையும் ஒருசேர எதிர்ப்போம்.
*******************************************************             
அண்ணன் வைகோவின் பாசிச எதிர்ப்புப் பணி !
--------------------------------------------------------------------------
இதில் பொடா சட்டம் மட்டுமே வாஜ்பாய் காலத்தில்
2002ல் கொண்டு வரப்பட்டது. மீதி அனைத்தும் காங்கிரசின்
கைங்கரியமே. பொடா சட்டத்தின் மீது நாடாளுமன்றத்தில்
விவாதம் நடந்தபோது, தன் முழுத் திறமையையும்
பயன்படுத்தி பொடா சட்டத்தை ஆதரித்துப் பேசியவர்
யார் தெரியுமா? அண்ணன் வைகோதான். இது வரலாறு.

மாநிலக் கட்சியான மதிமுக பெருமுதலாளித்துவக்
கட்சியான பாஜகவுக்கு ஒத்து ஊதியது வரலாறு.
---------------------------------------------------------------------

1) DIR சட்டம் = Defence of India Rules. நேரு காலத்தில்
இன்றைய மார்க்சிஸ்டுகளும் அன்று ஒன்றுபட்ட
CPI கட்சியிலும் இருந்த தலைவர்கள் மற்றும் கேடர்கள்
DIR சட்டத்தில் சிறையில் தள்ளப் பட்டனர். ஆண்டு 1962.

2) UAPA = Unlawful Activities Prevention Act. 2008, 2012 ஆண்டுகளில்
இச்சட்டம் திருத்தப்பட்டு மேலும் கடுமையாக ஆக்கப் பட்டது.
இதைத் திருத்தி மக்களின் கழுத்தை நெரிக்கக்கூடிய
சட்டமாக ஆக்கியவர் பச்சைத் தமிழர் அண்ணன் 
ப சிதம்பரம் (அன்றைய உள்துறை அமைச்சர்) அவர்கள்.
எனவே பாட்டாளி வர்க்கப் பாதுகாவலர் அண்ணன்
ப சிதம்பரம் அவர்களின் வீரப் புதல்வர் கார்த்திக்
சிதம்பரத்தை ஆதரித்து சிவகங்கையில் தேர்தல் பணி
ஆற்றுவோம்.



மருதுபாண்டியன் திருப்பூர் குணா சிலம்பரசன் சே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக