வியாழன், 11 ஏப்ரல், 2019

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாநில அமைப்புக் கமிட்டிகுள் (SOC) தோன்றியுள்ள அரசியல் அமைப்பு முரண்பாடுகள் இன்று சமூக வலைதளங்களின் மூலமாக வெளிப்பட்டு வருகின்றன. இது அவ்வமைப்பில் ஒரு தீவிர பிளவை ஏற்படுத்துமோ என்ற வினாவை, இச்சூழல் எழுப்பி உள்ளது. மேலும் அவ்வமைப்பின், குறிப்பாக தலைமையின் புரட்சிகர நேர்மையின் மீது எழுப்பப்பட்டுள்ள ஐயப்பாடானது, அவ்வமைப்பிற்கு மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே நினைக்கிறேன். அவ்வமைப்பின் உறுப்பினர்கள், அதன் மக்கள்திரள் அமைப்பு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் போன்றோர் இடையே இது கடும் குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடும். இது உண்மையில் கெடுபேறானதுதான்.
மக்கள் யுத்தக் கட்சி மற்றும் அதன் தொடர்ச்சியான மாவோயிஸ்ட் கட்சியால் புரட்சிகர முகாமில் உள்ள ஒரு அமைப்பாக கருதப்பட்டு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மாநில அமைப்புக் கமிட்டிக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் நிச்சயமாக தமிழக புரட்சிகர முகாமுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதே. 
நான் புரிந்து கொண்டவரை கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் அரசியல் களத்துக்குள் நுழைவதுடன் கூட, ஒப்பீட்டளவிலான அரசியல் தெளிவையும் கூட பெற்று வருகின்றனர். 
அவர்ளிடையே இந்த அரசு மற்றும் அமைப்பு மீதான நம்பிக்கையின்மை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. 
இத்தகைய சூழலில், ஒருபுறம் ஈழத்தின் இன அழிப்புப் போரை எதிர்த்து எழுந்த மக்கள் எழுச்சியின் களமிறங்கிய சில ஆயிரம் இளைஞர்களை பல்வேறு போலி இனவாத அமைப்புகள் நாடாளுமன்ற வாத பாதைக்குள் மடைமாற்றி விடுவதில் வெற்றி பெற்றுள்ளனர். 
தமிழக மக்களின் விடுதலைக்கு மாறாக குறுகிய இனவாத, சாதியவாத அரசியலில் இளைஞர்களை மூழ்கடிக்கிறார்கள். 
இதே காலத்தில் தன்னை மாபெரும் புரட்சியாளர்களாக காட்டிக் கொண்ட சில போலி புரட்சியாளர்களும், தமது பங்கிற்கு இப்போராட்டத்தில் அணிதிரண்ட சில நூறு இளைஞர்களை நீர்த்துப்போகச் செய்து சீரழித்து, 'புரட்சிக்கு' தமது தீவிர பங்கை ஆற்றி உள்ளனர். 
இவற்றிலெல்லாம் உளவுத்துறையினரின் பங்கு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் சமூக மாற்றத்திற்காக, தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்காக களமாட வந்த சில ஆயிரம் இளைஞர்கள் அரசியல் ரீதியாக திசைதிருப்பப்பட்டு நீர்த்துப் போகச் செய்யப்பட்டு உள்ளனர் என்பதே உண்மை.
அதேபோல தமிழக மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் போது, அதில் பல்வேறு புரட்சிகர ஜனநாயக அமைப்புகள் ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் இந்த அமைப்புகள் எந்த ஒன்றும் தமிழக மக்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த, அதாவது அவற்றை போர்க்குணமிக்க போராட்டங்களை வளர்த்தெடுத்து, சமூக மாற்றத்துக்கான போராட்டத்துடன் இணைக்க தயாரில்லாதவையாகவே இருந்து வருகின்றன. இத்தகைய போராட்டங்களில் மா-லெ முகாமிலிருந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அமைப்பாக மாநில அமைப்புக் கமிட்டியின் மக்கள் திரள் அமைப்பான மக்கள் அதிகாரம் அமைப்பு முன்னுக்கு வந்தது. இன்று பல்வேறு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை சார்ந்த பல நூறு புதிய இளைஞர்கள் இவ்வமைப்பின் அணிதிரண்டு உள்ளது ஒரு நம்பிக்கைக்குரிய விஷயமே.
ஆனால், ஸ்டெர்லைட் போராட்டத்தின் மீதான கொடூர துப்பாக்கிச் சூடும், அதையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பு தடை செய்யப்படும் என அரசு கிளப்பிய வதந்தியும், அவ்வமைப்பின் செயல்பாடுகளை வரம்புக்குட்பட்டவையாக மாற்றி விட்டதோடு, அரசு அடக்குமுறையை எதிர்கொள்வதில் ஒரு தெளிவற்ற நிலையையும் காட்டிக்கொண்டிருந்தன. 
உண்மையில் இந்தச் சூழலில் அனைத்து ஜனநாயக-புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்து ஒரு பரந்து பட்ட முன்னணியை கட்டி தமிழகத்தில் மக்கள் போராட்டங்களை தலைமை தாங்குவதற்கான ஒரு மாற்றை உருவாக்குவதற்கான வாய்ப்பு இருந்த போதும், அவ்வமைப்பு அவ் வழியில் செல்லாமல், திமுக போன்ற ஆளும் கட்சிகளின் ஆதரவுடன் அடக்குமுறையை எதிர்கொள்ளும் முயன்றது.
இன்று வெளிவரும் பல்வேறு தகவல்கள் அவ்வமைப்பு ஒரு முழுமையான சந்தர்ப்பவாத வழியை மேற்கொள்ளக்கூடிய அபாயத்தைக் காட்டுகின்றன.
இது உண்மையில் தமிழக ஆளும் வர்க்கங்களுக்கும் காவல்துறையின் உளவுப் பிரிவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயமாகும். 
தமிழ்நாட்டில் மக்கள் யுத்தக் கட்சியும், பின்னர் மாவோயிஸ்ட் கட்சியும் மாநில அமைப்புக் கமிட்டி அடிப்படையில் 70 பேராயத் திட்டங்களை ஏற்றுக்கொண்டாலும் கூட, அது ஒரு சந்தர்ப்பவாத வழியே முன்வைக்கிறது என தொடர்ந்து விமர்சித்து வருகிறது. எனது தனிப்பட்ட கருத்து கூட அது தான் 
இங்கே அதைப்பற்றி விரிவாக எழுதுவதற்கு இந்தப் பதிவை நான் வெளியிடவில்லை. 
மக்கள் அரசை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வரும் வேளையில், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு தோன்றி வரும் வேளையில், தமிழகம் போன்ற மக்களின் அரசியல் எழுச்சி நடைபெற வாய்ப்பு உள்ள ஒரு மாநிலத்தில், ஒரு புரட்சிகர அமைப்பு சந்தர்ப்ப வாதத்துக்குள் வீழ்வதோ அல்லது அவ்வமைப்பு சிதைந்து போவதோ மக்கள் போராட்டங்களுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு ஆகும். அதை விடவும், புரட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நூற்றுக்கணக்கான தோழர்கள் குழப்பம் அடைவது என்பது நீண்டகால நோக்கில் புரட்சியின் வளர்ச்சிக்கு தீங்கிழைக்கும் ஒன்றாகும். புரட்சிகர அமைப்புகளில் தோன்றும் இத்தகைய இக்கட்டான சூழலில் புரட்சியை நேசிக்கும் பல தோழர்களை நம்பிக்கை இழக்கச் செய்து, அவர்களை புரட்சிகரப் பணியில் இருந்தே வெளியேற்றிவிடும் அபாயத்தையும், உண்மையிலேயே ஒரு சரியான அரசியல் போராட்டத்தை நடத்துவதன் மூலம் தான் எத்தனை இக்கட்டுகளில் இருந்துமா வெளிவர முடியும் என்பதை எங்களது அனுபவத்திலிருந்து சொல்வதற்காகத்தான் இந்த பதிவு. 
எண்பதுகளின் இரண்டாவது ஐந்தாண்டுகளில், சரியாகச் சொல்வதெனில் 85- 87 காலகட்டத்தில் ஆந்திர புரட்சிகர இயக்கத்தின் மாபெரும் பாய்ச்சல்கள், தர்மபுரி போராட்டத்தின் வீச்சு மற்றும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் போர்க்குணமிக்க தொழிலாளர் போராட்டங்களின் வீச்சு என மக்கள் யுத்தக் கட்சி மற்றும் அதன் தலைமையிலான மக்கள் திரள் அமைப்புகள் ஒரு மாற்று புரட்சிகர மக்கள் இயக்கமாக வளர்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்த சூழலில், அரசின் அடக்குமுறையை எதிர்த்து இயக்கத்தை சரியான பாதையில் உறுதியாக முன்கொண்டு செல்ல தயாரில்லாத ஏ.எம்.கே.-தமிழ்வாணன் தலைமை சதி மூலமாக தமிழக இயக்கத்தை சீர்குலைத்தது. அரசு அடக்குமுறையை எதிர்கொள்ளவோ, தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவோ திராணியற்ற, வலது சந்தர்ப்பவாத தலைமை, மக்கள் யுத்தக் கட்சியின் அரசியல் வழியே பொருளாதார வாதம், தன்னியல்பு வாதம் போன்ற மோசடி அரசியலையும், அணிகளிடம் அமைப்பு பற்றிய மோசமான அவதூறுகளையும் பரப்பும் செயல்பாடுகளிலும் ஈடுபட்டனர். 
அமைப்பின் நடைமுறையை மொத்தமாக நிறுத்தி வைப்பது மற்றும் முழுநேர ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது போன்ற கடைந்தெடுத்த கலைப்புவாத நடைமுறைகள் மூலம், தமிழகத்தில் புரட்சிகர இயக்கத்தின் முன்னேற்றத்தை முடக்கினர். 
அந்தச் சூழலில் மக்கள் யுத்தக் கட்சியின் முன்னேற்றங்களைக் கண்டு புரட்சியை நோக்கி அணி திரண்டு இருந்த பலநூறு இளைஞரஇளைஞர்களும் மார்க்சிய-லெனினிய கட்சியில் பலகாலம் பணிபுரிந்து, அடக்குமுறைகளை எதிர்கொண்டு, தியாகங்களைப் புரிந்து செயல்பட்டு வந்த பல மட்ட தலைமை ஊழியர்களும் பெரும் குழப்பத்துக்கு ஆளாகினர். உண்மையில் அன்று நூற்றுக்கணக்கான முழுநேர ஊழியர்களும் முழுநேரமாக வர தயாராக இருந்த இன்னும் பல நூறு தோழர்களும் அவநம்பிக்கைக்கு ஆளாகி மன அழுத்தத்துக்குள் விழுந்தனர். இதில் பெரும்பான்மையானோர் புரட்சிகர பணிகளை விட்டு ஒதுங்கி விட்டனர் 
இந்த இழப்பு தமிழக புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஏ. எம்.கே மற்றும் தமிழ்வாணன் கும்பல் செய்த மிகப்பெரிய துரோகமாகும். 
இதை எதிர்த்த ஒரு சரியான உறுதியான அரசியல் போராட்டம் நடத்தப்படாமல் இருந்திருக்குமானால், தமிழகத்தில் மாவோயிஸ்ட் கட்சி என்ற புரட்சிகரக் கட்சியின் அடிச்சுவடு கூட இல்லாமல் போயிருக்கும். 
போல்ஷ்விக் கட்சி, ம.ஜ.இ.க. போன்ற ஒன்றுக்கும் உதவாத, புரட்சிகர தன்மையற்ற அமைப்புகள்தான் மக்கள் யுத்தக்கட்சியின் தொடர்ச்சி என்ற அகலமான நிலைமை தோன்றியிருக்கும். 
ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய கீழ்மட்டத்தில் இருந்த புரட்சிகர சக்திகள் இந்த சந்தர்ப்பவாத, கலைப்புவாத தலைமையை எதிர்த்து நடத்திய அரசியல் போராட்டம் தான் இன்று தமிழகத்தில் மாவோயிஸ்ட் கட்சி என்ற ஒரு புரட்சிகரக் கட்சி நிலவுவதற்கான அடிப்படையை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. 
அது மட்டுமல்ல அப்போது நடந்த அரசியல் போராட்டத்தின் விளைவாகத்தான், இன்று மாவோயிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களாக உள்ள பல தோழர்கள் ஆழமான அரசியல் புரிதலை பெற்றனர். 
மார்க்சிய லெனினிய மாவோவியத்தை ஆழமாக பயில்வது, நக்சல்பாரி அரசியலை ஆழமாக புரிந்து கொள்வது, இயக்கத்தில் தோன்றியுள்ள பல்வேறு சிக்கல்களை தீர்ப்பது பற்றிய புரிதல்களை வந்தடைவது போன்றவை அந்தப் போராட்டத்தின் மூலமாக தான் பெறப்பட்டது.உண்மையில் அந்தப் போராட்டம் புதியவர்களாக புரட்சியை நோக்கி வந்த பல இளைஞர்களை ஒப்பீட்டளவில் ஆழமான மார்க்சிய லெனினிய மாவோவிய புரிதல் கொண்டவர்களாகவும், புரட்சிகர நக்சல்பாரி அரசியலை இறுகப் பற்றிக் கொண்டவர்களாகவும், அரசின் அடக்கு முறைகளையும் சித்திரவதைகளையும் எதிர் கொள்ளக் கூடியவர்களாகவும் மாற்றியது என்றால் அது மிகையாகாது.
இன்று மாநில அமைப்பு கமிட்டியை சார்ந்த மற்றும் அதன் மக்கள்திரள் அமைப்புகளை சேர்ந்த புரட்சிகர சக்திகளுக்குஅதே ஆலோசனையைத்தான் முன்வைக்க முடியும். 
மார்க்சிய-லெனினிய மாவோவியத்தை ஆழமாக பயிலுங்கள். நக்சல்பாரி அரசியலை ஆழமாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அது காட்டிய இந்திய புரட்சிக்கான பாதையை தெளிவாக பற்றிக் கொள்ளுங்கள். இந்த சித்தாந்த வெளிச்சத்திலிருந்து சமூகத்தையும், உங்களது அமைப்பின் கடந்த கால அரசியல் நிலைகளையும், நடைமுறையையும் பரிசீலனை செய்யுங்கள். ஒரு சரியான அரசியல் வழியில் நின்று புரட்சிகர பாதையில் ஊன்றி நின்று, உறுதியுடன் போராடுங்கள. 
மக்களிடமிருந்து தனிமைப்பட்டு விடாமல் மக்கள் போராட்டங்களுக்கு போர்க்குணம் மிக்க தலைமை தாருங்கள். 
தமிழகத்தில் ஒரு பரந்து பட்ட புரட்சிகர ஜனநாயக சக்திகளின் முன்னணியை உருவாக்க உங்கள் பங்களிப்பை நேர்மையுடன் செய்யுங்கள். 
எந்தச் சூழ்நிலையிலும்மா-லெ-மா, மக்கள், புரட்சி ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை இழக்காதீர்கள்
இன்று ஏகாதிபத்தியங்கள் தீர முடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. இந்திய ஆளும் வர்க்கங்களும், மக்கள் தம் மீதும் இந்த அமைப்பு மீதும் மேலும் மேலும் நம்பிக்கை இழந்து வருவது கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். 
இவர்கள் மக்களின் எதிர்ப்புகளை கொடூரமாக ஒடுக்க பாசிச அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். 
உழைக்கும் மக்களும் மேலும் மேலும் போராட்டத்தில் இறங்கி மேலும் மேலும் புரட்சிகரமாகி வருகிறார்கள். 
தோழர் லெனின் கூறியது போல "இது புரட்சிகளின் யுகம்". 
தோழர் மாவோ சுட்டிக்காட்டியது போல "தேசங்கள் விடுதலையை விரும்புகின்றன, நாடுகள் சுதந்திரத்தை விரும்புகின்றன, மக்கள் புரட்சியை விரும்புகின்றனர்" 
இத்தகையதொரு சூழலில் மக்களுக்குத் தலைமை தரவேண்டிய புரட்சியாளர்கள் அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தம்மை திடப்படுத்திக் கொள்வது அத்தியாவசியமானது மட்டுமல்ல. ஒரு முக்கிய முன்நிபந்தனையாகவும் உள்ளது. 
இத்தகைய சூழல்களில் தான் புரட்சிக்கும் சந்தர்ப்பவாதத்திற்கும், மார்க்சியத்திற்கும் திரிபுவாதத்திற்கும், இடையிலான எல்லைக் கோடு தெளிவாக வரையப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக