வெள்ளி, 12 ஜூலை, 2019

இட ஒதுக்கீட்டின் கோட்பாடு என்ன?
-------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
இட ஒதுக்கீடு குறித்த மிகவும் மேலெழுந்தவாரியான
புரிதலும் அதன் மீதான பொதுப்படையான பரிவும்
மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளன.

இட ஒதுக்கீட்டின் கோட்பாடு என்ன? அதாவது கோட்பாட்டு
வழியில் இடஒதுக்கீடு என்னும் கருத்தாக்கத்தை (concept)
எப்படி வரையறுப்பது?

மார்க்சியம் இதற்குப் பதில் கூறுகிறது. கோட்பாட்டு
ரீதியாக இடஒதுக்கீடு என்பது "பாதுகாப்புக் கருதிய
பாரபட்சம்" (protective discrimination) ஆகும்.

தீண்டாமை உள்ளிட்ட சாதிக் கொடுமைகள்
"அழிவு கருதிய பாரபட்சம்" (destructive discrimination) ஆகும்.
இதற்கு மாற்று மருந்தாக "பாதுகாப்புக் கருதிய 
பாரபட்சம்" தேவைப்படுகிறது.

ஆக, பாம்பு கடித்து விஷம் ஏறிய ஒருவனுக்கு
விஷமுறிப்பு மருந்து கொடுப்பது போன்றது
இடஒதுக்கீடு. ஆம், இடஒதுக்கீடு என்பது ஒரு
விஷமுறிப்பு மருந்தே (antidote).

இந்திய அரசமைப்புச் சட்டம் சட்டத்தின் முன் அனைவரும்
சமம் என்ற கோட்பாட்டைக் கொண்டது. சட்டத்தின்
முன்பான சமத்துவம் (equality before law) என்பதே
நம் அரசமைப்புச் சட்டத்தின் ஆதாரம்.

 செண்பகம் துரைராஜன் என்ற மாணவி பிற்பட்டோருக்கு
இடஒதுக்கீடு வழங்குவதால் சட்டத்தின் முன்பான
சமத்துவம் என்ற கோட்பாடு (equality before law) தகர்க்கப்
படுவதாகவும் தனக்கு படிப்பில் இடம் கிடைக்காமல் 
போய்விட்டது என்றும் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இரண்டு கோட்பாடுகளுக்கு இடையிலான
மோதலாக ஆகியது. சட்ட நிபுணர்கள் இரண்டு
பிரிவுகளாகப் பிரிந்து வாதிட்டனர்.
Equality before law versus protective discrimination.

இதில் சட்டத்தின் முன்பான சமத்துவம் என்ற
கோட்பாட்டுக்கே அரசமைப்புச் சட்டத்தின்
ஒப்புதல் இருந்தது. எனவே அந்தக் கோட்பாடு
வெற்றி பெற்றது. பாதுகாப்புக் கருதிய பாரபட்சம்
தோல்வி அடைந்தது.

அதன் பின் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி
பாதுகாப்புக் கருதிய பாரபட்சத்திற்கு சட்ட
சம்மதம் வழங்கப் பட்டது. இதுதான் இந்திய
அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம்.
**********************************************





      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக