புதன், 1 ஜனவரி, 2020

ஆங்கிலப் புத்தாண்டு அல்ல! அறிவியல் புத்தாண்டு!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள புத்தாண்டை
(அதாவது காலண்டரை) ஆங்கிலப் புத்தாண்டு என்று
அழைப்பதைப் போல் பெருந்தவறு எதுவும் இல்லை.
இன்று நடைமுறையில் உள்ள இந்தக் காலண்டரை
ஆங்கிலப் பேரரசு உருவாக்கவில்லை.

ரோமாபுரிப் பேரரசில் நடைமுறையில் இருந்த ஜூலியன்
காலண்டரானது, போப்பாண்டவர் 13ஆம் கிரெகோரி என்பவர்
மேற்கொண்ட சில திருத்தங்களுடன் 1582ல் நடைமுறைக்கு
வந்தது (came into effect).

1582ல் நடைமுறைக்கு வந்த இந்த கிரெகோரி காலண்டரை
உடனடியாக இங்கிலாந்து ஏற்கவில்லை. நூற்றைம்பது
ஆண்டுகளுக்கும் மேல் கழிந்த பிறகே 1752ல் இங்கிலாந்து
இந்தக் காலண்டரை ஏற்றது.

எனவே இந்தக் காலண்டரை ஆங்கிலக் காலண்டர் என்று
அழைப்பது அபத்தம் ஆகும். இந்தப் புத்தாண்டை ஆங்கிலப்
புத்தாண்டு என்று அழைப்பது அபத்தம் ஆகும். இந்தியாவை
எகிப்து என்று அழைத்தால் அது எவ்வளவு பெரிய மடமையோ
அதைப்போன்ற மடமை இது.

 போப்பாண்டவர் கிரெகோரி காலத்தில் காலண்டர்,
வான சாஸ்திரம் ஆகியவை மத பீடங்களின் அதிகாரத்தின்
பிடியில் இருந்தன. அதன் பிறகும் சில நூற்றாண்டுகள்
வரை, காலண்டரானது மத பீடங்களின் பிடியிலேயே
இருந்தது.

இந்த நிலைமை இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
மாற்றம் அடைந்தது. கிரெகோரி காலண்டர் கிறிஸ்து
சகாப்தத்தை அடிப்படையாகக் கொண்டது. தற்போதைய
காலண்டரில் கிறிஸ்து சகாப்தம் என்ற மதம் சார்ந்த
அடிப்படை அகற்றப் பட்டு விட்டது. அதற்குப் பதிலாக
பொது சகாப்தம் (Common Era) கொண்டுவரப்பட்டு விட்டது.
இந்தப் பொது சகாப்தத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு
விட்டன. பாடப் புத்தகங்கள், அரசு ஆவணங்கள்
ஆகியவை அனைத்தும் பொது சகாப்தத்தைக் கொண்டு
மாற்றப் பட்டு விட்டன.

தற்போதைய காலண்டரை அறிவியல் எடுத்துக்
கொண்டு விட்டது. நிமிடம், வினாடி என அனைத்தும்
சீசியம் என்னும் தனிமத்தைக் கொண்ட அணுக்
கடிகாரங்களால் நிர்ணயிக்கப் படுகின்றன.
பூமி சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும்
காலத்தை அப்படியே பிரதிபலிக்கும் விதத்தில்
கடிகாரத்தில் திருத்தங்கள் செய்யப் படுகின்றன.
இது குறித்தெல்லாம் ஆயிரம் கட்டுரைகள் எழுதி
இருக்கிறேன். அவற்றைப் படிக்கலாம்.

1) ஆக, ஜனவரி 1, 2020 என்பது ஆங்கிலப் புத்தாண்டு அல்ல.
அறிவியல் புத்தாண்டு        
2) இது கிரெகோரி காலண்டர் அல்ல; அறிவியல் காலண்டர்.
3) இது கிறிஸ்து சகாப்தம் அல்ல; பொது சகாப்தம்.
இந்த உண்மைகளை ஒவ்வொருவரும் மனதில்
இருத்த வேண்டும்.
 
உலகளாவிய இந்த அறிவியல் காலண்டரின்
அடிப்படையில்தான் இந்த உலகம் இயங்குகிறது.
உலகம் முழுவதும் ஒரு சீராக இந்த அறிவியல்
காலண்டர்தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எனவே இதை யார் எவராலும் புறக்கணிக்க முடியாது.
புறக்கணிப்பது பற்றி கற்பனையில் கூட நினைக்க
முடியாது.

அதே நேரத்தில் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாகரிகமும்
தங்களுக்கென்று தங்கள் பண்பாட்டின் அடிப்படையில்
ஒரு புத்தாண்டை வைத்திருக்கின்றன. தமிழர்களின்
சித்திரைப் புத்தாண்டு அத்தகையதே.

சித்திரைப் புத்தாண்டு வெறும் பண்பாட்டுப் புத்தாண்டு
ஆகும். அது உற்பத்தியில் இல்லை. அறிவியல் புத்தாண்டு
உலகளாவிய மானுட சமூகத்தின் பொருள் உற்பத்தியில்
உள்ள புத்தாண்டு ஆகும். உற்பத்திக்கும் பண்பாட்டுக்கும்
உள்ள உறவு பற்றி அறிந்திட குறைந்தபட்ச மார்க்சியக்
கல்வி அவசியம்.
************************************************

தைப்புத்தாண்டும் திருவள்ளுவர் ஆண்டும் அண்மையில்
உண்டாக்கப் பட்டவை. அவை நிலைபேறு எய்தவில்லை.
அவை நிலைபேறு எய்த 500 ஆண்டுகள் தேவைப்படும்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக