புதன், 4 மார்ச், 2020

5G ஏலம் படுதோல்வி அடையும்!
இந்தியாவின் பொருளுற்பத்தி பற்றிய கட்டுரை!
அம்பானி திவால் ஆனது ஏன்?
=========================================
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
1995ல் 2G அலைக்கற்றையுடன் இந்தியா மொபைல் உலகில்
நுழைந்தது. 2010ல் 3G அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது.
2016ல் 4G அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. தற்போது
2020ல் (ஏப்ரல்-மே) 5G அலைக்கற்றை ஏலம் விடப்படும்
என்று DoT (Dept of Telecom) அறிவித்துள்ளது.

5G ஏலம் என்பது மகத்தான விஷயம். இந்தியாவின்
பொருளுற்பத்தியில் இதனால் பாரதூரமான மாற்றம்
ஏற்படும்.

இந்த 5G ஏலம் படுதோல்வி அடையும் என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் கூறுகிறது. இது இந்தியாவின்
குட்டி முதலாளியத் தற்குறிகளின் புரையோடிப்போன
பெசிமிசம் (pessimism) அல்ல. மாறாக ஒளிவீசும்
உண்மைகளைக் கூற வேண்டிய கடப்பாட்டுடனே
இதை நியூட்டன் அறிவியல் மன்றம் கூறுகிறது.     

 மொத்த டெலிகாம் இண்டஸ்டரியுமே கடனில் மூச்சுத்
திணறிக் கொண்டிருக்கிறது. இண்டஸ்ட்ரியின் மொத்தக்
கடன் ரூ 4 லட்சம் கோடி ஆகும்.

ஆர்ப்பு எனப்படும் (ARPU = Average Revenue Per User) வருவாய்
2018-19ல் மாதத்துக்கு ரூ 113 என்பதாக குறைந்து விட்டது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மார்ச் 17 கெடு தேதிக்குள்
தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்குச்
செலுத்த வேண்டிய ரூ 1.4 லட்சம் கொடியைச் செலுத்த
வேண்டும்.

ஏர்டெல் ரூ 18,000 கோடியை இதுவரை செலுத்தி
இருக்கிறது. அரைக்கிணறு தாண்டி இருக்கிறது.
வோடாபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய பெருந்
தொகையைச் செலுத்துமா என்று தெரியவில்லை.

இந்தத் தொகைகளைச் செலுத்திய பின்னர், 5G ஏலத்தில்
பங்கெடுக்கத் தேவையான பணம் இந்நிறுவனங்களிடம்
இருக்குமா என்றால் இருக்காது என்பதே விடை.

அரசு நிறுவனமான BSNL இப்போதுதான் 4G
அலைக்கற்றையை அரசின் நிதி உதவியுடன்
பெறப் போகிறது. இதைக்கொண்டு சேவையைத்
தொடங்கவே இரண்டாண்டுகள் ஆகி விடும்.
அப்படியிருக்கும்போது, 5G அலைக்கற்றையை
BSNL இப்போது பெற இயலாது. இலவசமாக 5G
அலைக்கற்றையை அரசு கொடுத்தாலும்
(without any upfront payment), அதை வாங்கும் BSNL
ஊறுகாய்ப் பானையில்தான் போட வேண்டும்.

எந்த ஊறுகாய்ப் பானையில் போடுவது?
சஞ்சார் பவனில் உள்ள ஊறுகாய்ப் பானையில்
போடுவதா அல்லது எலக்ட்ரான் நிகேதனில்
உள்ள ஊறுகாய்ப் பானையில் போடுவதா என்பது
பற்றி ஒரு பட்டி மன்றம் நடந்து சாலமன் பாப்பையாவின்
தீர்ப்புக்குக் காத்திருக்க வேண்டியதுதான்!

2010ல் டெலிகாமில் என்ன நிலைமை? ஒரு LSAவுக்கு
(LSA = Licensed Service Area, அதாவது ஒரு மாநிலம்)
சராசரியாக 12 நிறுவனங்கள் சேவை வழங்கின.

இன்று 2020ல் என்ன நிலைமை? ஒரு LSAவுக்கு சராசரியாக
3 அல்லது 4 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன.
என்ன ஆனது?

சிறிய நடுத்தர நிறுவனங்கள் தாக்குப் பிடிக்க
முடியாமல் மூச்சுத் திணறி இறந்து விட்டன.
தமிழ்நாட்டில் ஏர்செல் (AIRCEL நிறுவனம் நன்கு
அறியப் பட்ட நிறுவனம். பிரசித்தி பெற்ற
சிவசங்கரன் இதன் அதிபர். தயாநிதி மாறன் கொடுத்த
அடியில் இவர் மூர்ச்சையாகி விட்டார். இவரின்
ஏர்செல் நிறுவனம் திவாலாகி விட்டது. இவர் கொடுத்த
திவால் நோட்டீசை NCLT (National Company Law Tribunal)
ஏற்றுக் கொண்டு ஏர்செல் திவால் ஆனதாக அறிவிக்கப்
பட்டு விட்டது.

அம்பானி திவால் ஆகி விட்டார். எந்த அம்பானி?
இளைய அம்பானி? அதாவது அனில் அம்பானி.
அவரின் தொலைதொடர்பு நிறுவனம் திவால் ஆகி,
அவரும் திவால் நோட்டீஸ் கொடுத்து, NCLT அதை
ஏற்றுக் கொண்டு திவால் என அறிவித்தும் விட்டது.

ஆக மொத்த இண்டஸ்ட்ரியுமே நெருக்கடியில் மூச்சுத்
திணறிக் கொண்டிருக்கிறது.
அ) கம்பெனிகள் திவால்
ஆ) இண்டஸ்ட்ரியின் கடன் ரூ 4 லட்சம் கோடி
இ) கெடு தேதிக்குள் பணம் செலுத்திய பின், கையில்
ஒன்றும் இல்லாமல் வெறுங்கையுடன் நிற்கும்
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள்
ஈ) குழியில் விழுந்த யானையை மீட்பது போல
அரசால் மீட்கப்பட்ட BSNL.

களத்தில் எஞ்சி நிற்பது முகேஷ் அம்பானியின்
ரிலையன்ஸ் ஜியோதான் (Jio). ஜியோவுக்கு
தற்போது பிரச்சினைகள் எதுவும் இல்லை.
ஏன்? இருப்பதிலேயே ஜூனியர் மோஸ்ட் ஜியோதான்.
எப்படி? ஜியோ டெலிகாமில் நுழைந்ததே செப்டம்பர்
2016ல்தான். மூணு வருஷ சர்வீஸ்தான் ஆகிறது ஜியோவுக்கு.
ஜியோவின் நிதி நிலைமை ஆரோக்கியமாக இருக்கிறது.

நுழையும்போதே வெண்கலக் கடையில் யானை
புகுந்தது போல் வந்தது ஜியோ. ஒரு GB data ரூ 800க்கு
விற்கப்பட்ட நிலையில், ஜியோவின் வருகையால்
1 GB data ரூ 8க்குக் (ரூபாய் எட்டு மட்டும்) கிடைக்கிறது.
ஜியோ இலவச சேவை (almost free service) வழங்குவதாகவே
எக்கனாமிக் டைம்ஸ் ஏட்டின் செய்தியாளர்கள்
எழுதுகிறார்கள்.

ஜியோவிடம் Basic spectrum அதாவது 2G spectrum
அல்லது 3G spectrum எதுவும் கிடையாது. அதனிடம்
இருப்பது 4G LTE spectrum மட்டுமே. ஜியோவிடம்
voice circuits எதுவும் கிடையாது. Voice over LTE எனப்படும்
data circuits மீது voiceஐ ஏற்றி வழங்கும் தொழில்நுட்பத்தையே
ஜியோ கையாள்கிறது. இப்படியெல்லாம் செய்யாமல்
market redistribution நடக்காது.

ஜியோவை எதிர்த்து எழுதினால் வாசகர்கள் என்னை
அடிக்க வருவார்கள். ஆனால் என்னால் ஒருபோதும்
ஜியோவை ஆதரிக்க முடியாது. I am terribly biased against Jio.

சரி, ஏலத்துக்கு வருவோம். 3G ஏலம் எனக்கு பச்சைப்
பசுமையாய் ஞாபகம் இருக்கிறது. அப்போது நான்
பணியில் இருந்தேன்; அதாவது ஒய்வு பெற்றிருக்கவில்லை.
3 நாட்கள் நடந்த ஏலம் அது.Globally monitored ஏலம் அது.
ஏலம் நடந்த ஒவ்வொரு நாளும் அதைப் பார்த்தேன்.
அதிர்ஷ்டவசமாக அந்த ஏலம் பற்றி விவாதிக்கும் ஒரு
elite club எங்கள் அலுவலகத்தில் இருந்தது. எனவே
அந்த ஏலம் எனக்கு அத்துப்படி ஆனது. ரூ 30,000 கோடி
Base price என்பதாக TRAI நிர்ணயித்து இருந்தது.
அனால் எதிர்பாராத விதமாக ரூ 67,000 கோடி
அரசுக்கு கிடைத்தது. எல்லோருக்கும் ஆச்சரியம்!

பிரசித்தி பெற்ற அந்த ஏலத்தை நடத்தியது யார் என்ற
கேள்விக்கு, அநேகமாக என்னைத் தவிர எல்லோருமே
தப்பான விடையைத்தான் சொல்வார்கள். ஆம்,
அந்த ஏலத்தை நடத்தியவர் நீங்கள் எதிர்பார்க்காத
அன்றைய அமைச்சர் ஆ ராசா!     

5G ஏலம் என்றால், தற்போது களத்தில் நிற்கும்
தகுதி வாய்ந்த ஒரே போட்டியாளர் ஜியோதான்.
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ஏலம் கேட்டு
அதிகத் தொகைக்கு ஏலத்தை ஏற்றி விட்டு,
வில்லனை மாட்டி விடுவது போல, ஏலத்தொகையை
ஏற்றக்கூட இங்கு நாதியில்லை.

எனவே 5G ஏலத்தின் மூலம் எதிர்பார்த்த வருவாய்
அரசுக்குக் கிடைக்காது. முன்பு 2012ல் கபில்  சிபல்
ஒரு ஏலம் நடத்தினார்! 2G ஏலம் அது. வரலாறு காணாத
படுதோல்வி அடைந்த ஏலம் அது. ஒரு கம்பெனி
கூட ஏலம் எடுக்காமல் கபில் சிபலுக்குப் பாடம்
கற்பித்தார்கள்.

கபில் சிபலின் முகத்தில் டன் டன்னாக அசடு
வழிந்தது. நாடு முழுவதும் கபில் சிபலை  எள்ளி
நகையாடியது.அவமானப் பட்டார் கபில். கூடவே
சேர்ந்து ப சிதம்பரமும் கேவலப் பட்டார். பெரும்
நிபுணராக அறியப்பட்ட, IQ 120.8 உடைய ப சிதம்பரம்
கேவலப் பட்டதை என் வாழ்நாளில் முதன் முதலாக
அப்போதுதான் பார்த்தேன். திஹார் சிறைக்குப்
போனது அவரின் இரண்டாவது கேவலம். நிற்க.

ஆக, 5G ஏலம் படுதோல்வி அடையும் என்று நான்
கருதுகிறேன். எனவே அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
5G ஏலத்தைத் தள்ளிப்போட வேண்டும் என்று
நான் கேட்டுக் கொள்கிறேன்.
------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) இக்கட்டுரையில் அதிகாரபூர்வமான புள்ளி
விவரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
2) 5G ஏலம் குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல்
கட்டுரை இது. என்னைத் தவிர வேறு யார் எவரும்
5G குறித்தோ டெலிகாம் குறித்தோ எழுதப்
போவதில்லை; ஏனெனில் எழுத இயலாது.
சூரியன் கிழக்கே உதிப்பதை போன்ற உண்மை இது.
3) இக்கட்டுரை போதிய வரவேற்பைப் பெறாவிட்டால்,
பைபிள் கூறுவது போல, Casting pearls before swine
என்னும் தவற்றைச் செய்கிறேன் நான் என்று
பொருள் கொள்ள வேண்டியது நேரும்.
**************************************************** 

    

    
    


        



      
   
     

 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக