புதன், 10 மார்ச், 2021

நூறு முறை சேர்ந்த பின்னும் ஆசை கூடுது!

-------------------------------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி 

-----------------------------------------------------------------

செப்டம்பர் 16ல் எங்களுக்குக் கல்யாணம். அன்று புதன் 

கிழமை. பகல் 12 மணியைக் கடந்த பின்னர், 12.30-1.00க்குள் 

எங்களின் திருக்கல்யாணம் நடந்து முடிந்தது. பின்னர் 

முகூர்த்த நேரம் 12.30-1.00  என்று எங்களிடம் கேட்டு 

அறிந்தவர்கள், "ஐயோ அது கொழுத்த ராகு காலம் 

ஆயிற்றே" என்று அலறினார்கள். ராகுகாலம் என்பது 

எங்களுக்கு எள்ளளவும் பொருட்டல்ல.


மாங்கல்யம் தந்துனானேந 

மனஜீவன ஹேதுநா

என்றெல்லாம் மந்திரங்கள் முழங்கவில்லை.

மணமக்கள் வாழ்க என்று மூன்று முறை கூறி  நிறைவு செய்தார் 

எங்களின் திருமணத்தை நடத்தி வைத்த தமிழறிஞர் 

தோழர் அரண முறுவல்.


திருமணத்துக்குச் சாட்சியாகவும் எங்களுக்குப் 

பாதுகாப்பாகவும் EPRLFஐச் சேர்ந்த மூன்று   ஈழத்தமிழ்ப் 

போராளிகள் வந்திருந்தனர். ஈழப் போராளிக்

குழுக்களில், இந்தியத் தமிழர்களை அமைப்பில் சேர 

அனுமதிக்கும் ஒரே அமைப்பு EPRLFதான். அதன் 

புரட்சிகர நிறைவேற்றுக்குழுவில் தோழர் அரணமுறுவல் 

உறுப்பினராக இருந்தார். 


செப்டம்பர் 16ல் கல்யாணம். மூன்று நாள் கழித்து, 

செப்டம்பர் 19ல் ஒரு தொழிற்சங்கப் போராட்டத்தில் 

பங்கெடுத்து கைதாகி விட்டேன். ஆர் வெங்கட்ராமன் 

அப்போது நிதியமைச்சராக இருந்தார். ஆண்டு 1981. 


அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி கொடுப்பதால்தான் 

விலைவாசி ஏறுகிறது என்று கருத்துக் கூறி இருந்தார் 

வெங்கட்ராமன். விலைவாசி ஏறுவதால்தான், அதை 

ஈடுகட்ட பஞ்சப்படி கொடுக்கப் படுகிறது. பஞ்சப்படி 

என்பது ஒரு compensatory allowance. ஆனால் தலைகீழாகப் 

பேசியிருந்தார் வெங்கட்ராமன்.


எனவே வெங்கட்ராமனுக்கு  கறுப்புக்கொடி காட்டுவது 

என்று எங்கள் தொழிற்சங்கம் முடிவு செய்தது. 1981 செப்டம்பர் 

19 பகல் பன்னிரண்டு மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்று கறுப்புக்கொடி காட்ட முயன்ற எங்களை போலீசார்  

கைது செய்தனர். நாங்கள் வண்ணாரப்பேட்டையில் 

காவல்துறையின் ஒரு இடத்தில் தங்க வைக்கப் பட்டோம். 

எங்களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தும் பொருட்டு எங்களின் 

அங்க மச்ச அடையாளங்கள் எடுக்கப் பட்டன.   


நான் கைதான செய்தியைக் கூற என் வீட்டுக்குச் சென்ற 

தோழர் அரணமுறுவல்,  "எச்சரிக்கையாக இருந்து கொள் 

அம்மா, யார் வந்தாலும் கதவைத் திறக்க வேண்டாம்" என்று 

அறிவுறுத்தி விட்டு வந்தார் 


இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருக்க வேண்டுமே 

என்பது என் மனைவியின் கவலை. வீட்டை எதிர்த்து,

பெற்றோரை எதிர்த்து நாங்கள் திருமணம் புரிந்து 

கொண்டதால், பக்கத்தில் சில கிமீ தொலைவில் உள்ள 

அவளின் அம்மா வீட்டுக்கு என் மனைவியால் செல்ல 

இயலாது.


இதற்கிடையில் எதிர்பாராமல் எங்களுக்கு ஆதாயம் தரும் 

முடிவை காவல்துறை எடுத்தது. வெங்கட்ராமன் விமான 

நிலையம் சென்று, டெல்லி  செல்லும் விமானத்தில் 

ஏறியவுடனேயே, இரவு 8 மணியளவில் நாங்கள் விடுதலை 

செய்யப்பட்டோம். நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி 15 நாள் 

ரிமாண்டு என்ற நிலை தவிர்க்கப் பட்டது. எனவே நாங்கள் 

அனைவரும் வீடு திரும்ப ஆயத்தம் ஆனோம். 


எல்லோருக்கும் பேய்ப்பசி. இந்தப் போலீஸ்கார நாய்கள் 

மத்தியானம் ஒரு சிங்கிள் டீ வாங்கித் தந்ததைத் தவிர 

எங்களுக்கு வேறு உணவு எதுவும் தரவில்லை. ஆனால் 

எங்களுக்கு சாப்பாடு வாங்கித் தந்ததாக கணக்கு 

எழுதி அதற்குரிய பணத்தை இவர்கள் அபகரித்துக் 

கொண்டிருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும்.


ஓட்டலில் ஒரு டீ குடித்து விட்டு, நான் வீட்டுக்கு வந்து 

சேரும்போது இரவு மணி 10. வெகுநேரம் கதவைத் தட்டிய 

பிறகே கதவைத் திறந்த என் மனைவி என் முகம் கண்டு 

ஆச்சரியம் அடைந்தாள். நான் அவளிடம் விஷயத்தைச்

சொன்னேன்.

        

 என்னை ஆரத்தழுவி நெஞ்சோடு சேர்த்துக் கட்டிக் 

கொண்டாள். அப்படியே நாங்கள் சேர்ந்தோம். உணவு 

அருந்தாமலேயே சேர்ந்தோம். பின்னர் எழுந்து 

உணவருந்திய பின்னர் மீண்டும் சேர்ந்தோம். இரவில் 

தூக்கம் மெலிதாகக் கலைந்தபோதும் சேர்ந்தோம்.


நூறு முறை சேர்ந்தபோதும் 

ஆசை கூடுது 

(வௌக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்).


நாங்கள் காதலித்தபோதும் சரி, பின்னர் குடித்தனம் 

நடத்தியபோதும் சரி, அவள்தான் proactive ஆக இருந்தாள்.

நான் passiveஆகவே இருந்தேன். நான் நக்சல்பாரி 

இயக்கத்தில் விழலுக்கு நீர் இறைத்துக் கொண்டிருந்தபோது 

குடும்பத்தை, குழந்தைகளை, அவர்களின் படிப்பை 

அனைத்தையும் பார்த்துக் கொண்டவள் அவள்தான்.

நன்றாகச் சென்று கொண்டிருந்த எங்கள் குடும்ப வாழ்க்கை 

எனது அரசியல் வாழ்க்கையால்  பெரும் பாதிப்புக்கு 

உள்ளாகியது. அது குறித்து என்றாவது எழுதுவேன்.

**********************************************************.

  

       

 





  

  

     



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக