வெள்ளி, 3 நவம்பர், 2017

சதுரங்கப் பலியாடுகள்!
Pawn Sacrifice அமெரிக்கத் திரைப்படம்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
1972இல் எங்கள் கல்லூரிக் காலத்தில், சதுரங்க
உலகில் பெரும் செல்வாக்குடன் இருந்தவர்கள்
இரண்டு பேர். ஒருவர் பாபி ஃபிஷர்; இன்னொருவர்
போரிஸ் ஸ்பாஸ்கி. பாபி ஃபிஷர் அமெரிக்கர்.
ஸ்பாஸ்கி சோவியத் நாட்டவர்.
(சோவியத்=USSR= இன்றைய ரஷ்யா).

1972இல் சதுரங்க உலக சாம்பியன் போட்டி
ஐஸ்லாந்து ரெய்க்ஜெவிக் நகரில் நடைபெற்றது.
சாம்பியன் ஸ்பாஸ்கி; சாலஞ்சர் பாபி பிஷர்.

மொத்தம் 24 ஆட்டங்கள்; யார் முதலில் 12.5 புள்ளிகள்
பெருகிறாரோ அவருக்கே வெற்றி. இதுதான் உலக
சதுரங்க சம்மேளனம் FIDE நிர்ணயித்த போட்டியின் விதி.

2013இல்  ஆனந்த், மாக்னஸ் கார்ல்சன்
இடையே உலக சாம்பியன் போட்டி சென்னையில்
நடைபெற்றது. அப்போது மொத்த ஆட்டங்கள் 12
என்றும் முதலில் 6.5 புள்ளிகள் பெறுபவர்க்கே வெற்றி
என்றும் FIDE போட்டி விதியை நிர்ணயித்து இருந்தது.
கால மாற்றத்தில் 24 ஆட்டங்கள் பாதியாகக்
குறைந்து விட்டன.சென்னையில் நடந்த இந்த
ஆட்டத்தை எத்தனை பேர் நேரில் போய் பார்த்தீர்கள்!

1948 முதல் உலக சதுரங்க சாம்பியனாக சோவியத்தே
இருந்து வந்தது. கால் நூற்றாண்டு காலத்து
வையத் தலைமை. (இக்கட்டுரையைப் படிக்கும்
இளைஞர்களுக்கு வையத்தலைமை என்ற
சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை எனில்
பாரதியின் ஆத்திசூடியைப் படித்த பிறகு
இக்கட்டுரையைப் படிக்கவும்).

ஆனாலும், இந்த கால் நூற்றாண்டு காலத் தலைமையை
பாபி ஃபிஷர் தகர்த்து விட்டார். ஆம், ஸ்பாஸ்கியைத்
தோற்கடித்து, ஃபிஷர் உலக சாம்பியன் ஆனார்.  
( ஃபிஷர்= 12.5; ஸ்பாஸ்கி= 8.5)

உலகமே எதிர்பார்த்தது போல, முதல் ஆட்டத்தில்
ஸ்பாஸ்கியே வென்றார். இரண்டாவது ஆட்டத்தை
ஃபிஷர் walkover செய்தார். எனவே 2-0 என்ற நிலையில்
ஸ்பாஸ்கி முன்னிலையில் இருந்தார். மூன்றாவது
ஆட்டத்தில் ஃபிஷர் வென்றார். மொத்த உலகமும்
ஃபிஷரை உற்று நோக்க ஆரம்பித்தது. பின் பிரசித்தி
பெற்ற அந்த ஆறாவது ஆட்டம். அதிலும் ஃபிஷருக்கே
வெற்றி. முன்னதாக 4ஆவது ஆட்டம் டிரா. 5ஆவதிலும்
ஃபிஷருக்கே வெற்றி. முதல் 6 ஆட்டங்கள் வரையிலான
இந்த முடிவுகளை என்னுடைய நினைவில் இருந்து
எடுத்து எழுதுகிறேன். காரணம் அந்த நினைவுகள்
அவ்வளவு ஆழமானவை; பசுமையானவை.

மாஸ்கோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய
ஸ்பாஸ்கியை வரவேற்க நாதியில்லை. சோவியத்
ஒன்றியத்தில் சதுரங்கம் என்பது வெறும்
விளையாட்டல்ல. அது சோவியத்தின் பெருமை.
அது சோவியத்தின் அரசியல். அதைப் பறிகொடுத்த
ஸ்பாஸ்கி சோவியத் அரசால் வெறுக்கப் பட்டதில்
வியப்பில்லை.

போன மாதமோ அல்லது அதற்கும் முந்தியோ
வீட்டு டி.வி.யில் HBO போன்ற ஒரு சானலில்
ஒரு அமெரிக்கப் படம் பார்த்தேன்.  Pawn Sacrifice என்ற
படம். ஃபிஷரின்  வாழ்க்கை வரலாற்றை விளக்கும்
நோக்கில் அமைந்த படம். அது ஒரு biography.

ஃபிஷர் ஸ்பாஸ்கி உலக சாம்பியன் ஆட்டங்கள்
படத்தில் சிறப்பாகக் காட்டப் படுகின்றன.
அது பனிப்போர் (cold war) நடந்த காலம். இந்நிலையில்
ஃபிஷரின் வெற்றி அமெரிக்காவின் வெற்றியாக
அமைந்தது.

விரும்புபவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்
என்று பொதுவாகச் சொல்ல விரும்பவில்லை.
இப்படம் ஒரு must watch movie என்று பரிந்து
உரைக்கிறோம். ஃபிஷர் ஸ்பாஸ்கி இருவருமே
pawns என்பதுதான் படத்தின் message.

பனிப்போர் பற்றி, சதுரங்கம் பற்றி, ஃபிஷர்
என்னும் மாயக்காரனைப் பற்றி, ஸ்பாஸ்கி
என்னும் அற்புதமான ஆட்டக்காரனைப் பற்றி,
உலக அரசியல் பற்றி .....  இவ்வாறு பற்பல
விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சுமார் 10 புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள
வேண்டிய இத்தனை விஷயங்களையும் இந்த
அமெரிக்கத் திரைப்படம் சுலபத்தில் சொல்லிக்
கொடுத்து விடுகிறது. 
********************************************************   
  
     
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக