புதன், 23 நவம்பர், 2022

ஏக இந்தியப் புரட்சியும் பின்நவீனத்துவமும்!
தேசிய இன விடுதலைக்கான  முன்நிபந்தனை எது?
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------
1) இந்தியப் புரட்சி என்பது ஏக இந்தியப் புரட்சிதானே 
தவிர தேசியஇனவாரியான தனித்தனிப் புரட்சி அல்ல.

2) ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனியாகப் புரட்சி
நடத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவது 
மார்க்சிய லெனினியத்துக்கு விரோதமானது.   

3) ஜனநாயகப் புரட்சியாக இருந்தாலும் சரி,
சோஷலிஸப் புரட்சியாக இருந்தாலும் சரி,
அது அகில இந்தியா முழுமைக்குமான புரட்சியாக 
இருக்க வேண்டும். அதாவது இந்தியாவில் உள்ள 
அனைத்து தேசிய இனங்களுக்குமான ஒருங்கிணைந்த 
புரட்சியாக இருக்க வேண்டும்.

4) இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைக்கூடமாக 
இருப்பதாகக் கொண்டாலும், அதை முன்னிட்டு, 
ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனியாகப் புரட்சி 
செய்வதற்கான நியாயம் அமைந்து விடவில்லை.

5) புரட்சி வெற்றியடைந்து பாட்டாளி வர்க்க அரசு 
அமைந்தவுடன் தேசியஇனங்கள் அனைத்துக்கும் 
சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டு விடும்.
இந்த உரிமை பிரிந்து போகும் உரிமையையும் 
உள்ளடக்கியதாகும்.

6) தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை முதல் 
விடுதலை வரையிலான சிக்கல்கள் அனைத்தும்,
(தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பது 
உள்ளிட்டு) பாட்டாளி வர்க்கப் புரட்சியுடனும் 
சோஷலிசத்துடனும்  பிணைக்கப் பட்டவை.
புரட்சி வெற்றி அடைந்த ஒரு சோஷலிச சமூக 
அமைப்பில்தான் தேசிய இன்ச் சிக்கல்கள் 
அனைத்துக்கும் தீர்வு கிட்டும். சோஷலிசத்துக்கு 
முன்பு தேசியஇனச் சிக்கல்களுக்கு எவ்வித விடிவும் 
கிட்டாது. நிலவுகிற முதலாளிய சமூக அமைப்பிலேயே 
தேசிய இனச்சிக்கல்களைத் தீர்த்து விட முடியும் 
என்று எண்ணுவது பகல் கனவு காண்பதாகும்.
சுருங்கக் கூறின், சோசலிசம் இல்லாமல் தேசிய இன
விடுதலை சாத்தியமே இல்லை.

7) சமூக மாற்றம் இல்லாமல் தேசிய இன விடுதலை இல்லை.
சோஷலிசத்துக்கான பாடத்தையைக் கடக்காமல் 
தேசிய இன விடுதலைக்கான பாதையை அடைய 
முடியாது.

8) நிலவுகிற முதலாளிய சமூக அமைப்பிலேயே 
தேசிய இன விடுதலையை அடைந்து விடலாம் 
என்பது பின்நவீனத்துவக் கண்ணோட்டம் ஆகும்.
பின்நவீனத்துவத்தின் சாராம்சம் என்னவெனில், 
எதையும் துண்டு துண்டாக உடைப்பதாகும்.
இது ஆங்கிலத்தில் fragmentation எனப்படுகிறது.

9) பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முழுமையைத் 
தகர்த்து, சாதிய விடுதலை தனி, பெண்ணிய 
விடுதலை தனி, தேசியஇன விடுதலை தனி என்று 
ஒவ்வொன்றையும் பகுதி பகுதியாகப் பிரித்து 
இறுதியில் புரட்சியைச் சீர்குலைக்கும் நோக்குடனே 
பின்நவீனத்துவம் தேசிய இந விடுதலையின் மீது 
கவனத்தைக் குவிக்கிறது. இந்த வஞ்சக வலையில் 
பாட்டாளி வர்க்கமோ கம்யூனிஸ்டுகளோ விழுந்து 
விடக்கூடாது.

10) புரட்சி என்பது ஆளும் வர்க்கத்தை அதன் ஆட்சிப் 
பரப்பு முழுவதிலும் (entire jurisdiction) எதிர்ப்பதாகும்.
தமிழ் தேசிய இனம் மட்டும் தனித் தமிழ்நாட்டுக்கான
"புரட்சி"யை தமிழ்நாட்டின் எல்லைக்குள் மட்டும் 
நடத்துமென்றால் என்ன ஆகும்? ஆளும் வர்க்கத்தை 
அதன் ஆட்சிப் பரப்பு முழுமையிலும் எதிர்க்கும் 
கடமையில் இருந்து வழுவி, ஆளும் வர்க்கத்தின் 
மீதான அடையாள எதிர்ப்பாக மட்டுமே சுருங்கிப் 
போகும். வர்க்கப் போராட்டமாக மலராது.

11) டிராட்ஸ்கியவாதிகள் தனியொரு நாட்டில் புரட்சி 
என்பதை ஏற்காதவர்கள். ஒரு நாட்டில் மட்டும் 
தனியாகப் புரட்சி நடத்த முடியாது என்னும் 
அவர்களின் கொள்கை திருத்தல்வாதம் ஆகும்.
அதற்கு மாறாக, பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு 
இரையான குட்டி முதலாளித்துவர்கள் ஒரு நாட்டுக்கு 
உள்ளேயே ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் 
தனித்தனிப் புரட்சியைப் பரிந்துரைக்கிறார்கள்.
இந்தியாவில் இருபது தேசிய இனங்கள் இருக்குமென்றால்,
இந்தியாவுக்கு உள்ளேயே இருபது தனித்தனிப்
புரட்ச்சிகளை நடத்த வேண்டும் என்கிறார்கள் 
குட்டி முதலாளிய பின்நவீனத்துவர்கள். இது
கோமாளிக்கூத்து மட்டுமல்ல, திருத்தல்வாதமும் ஆகும்.

12) இந்தியாவில் புரட்சி  நடந்து பாட்டாளி வர்க்க 
அரசு காலை 10.00 மணிக்கு பதவி ஏற்குமெனில், 
காலை 10.01 மணிக்கு தேசிய இனங்களின் 
பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கும். 
பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய  
உரிமை வழங்கப்படும். இது உறுதி.சோஷலிசம் வரும்வரை 
காத்திருப்பதைத் தவிர தேசிய இனங்களின் சுயநிர்ணய 
உரிமை அல்லது விடுதலைக்கு வேறு குறுக்கு வழி 
எதுவும் இல்லை.

13) இதுதான் இன்றைய உலக ஒழுங்கு (world order).
ஏகாதிபத்தியம், பாட்டாளி வர்க்கப் புரட்சி என்னும் 
இரண்டின் சகாப்தமான நமது சமகால உலகில்,
இன்றைய உலக ஒழுங்கு இப்படித்தான் இருக்கிறது 
எனும்போது, சோஷலிசத்திற்குக் குறைவான எதுவும்  
தேசிய இனங்களின் விடுதலையைப் பெற்றுத்  தராது. 
தேசிய இனங்களின் விடுதலையைச் சாதிக்க 
சோஷலிசத்தை அடைய வேண்டும் என்பது 
முன்நிபந்தனை ஆகும். இதைத்தவிர ஏனைய 
தீர்வுகள் போலியானவை மட்டுமல்ல; அவை 
அப்பட்டமான கற்பனாவாதம் ஆகும். 

இது உண்மை! இது மட்டுமே உண்மை!
மார்க்சிய லெனினியம் வழங்கும் தீர்வு இது.
இது மட்டுமே தீர்வு. 
*********************************************

  


 
             

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக