சனி, 10 ஜூன், 2023

 "வாக்கு பதிவு இயந்திரம் "

தேர்தல் அரசியல் ."
சூ. சக்கரவர்த்தி மாரியப்பன். சுவாசம் பதிப்பகம் விலை ரூபாய் 160 .
முதல் பதிப்பு 2022 மொத்த பக்கங்கள் 138.
# இது ஒரு கட்டுரை புத்தகம்.
கற்பனைக்கு வேலையில்லாத நிஜங்களை சாட்சியாக வைத்து எழுதப்பட வேண்டிய ,எழுதப்பட்ட கட்டுரை புத்தகம்.
நமது வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுவில் அதிகமான பதிவுகளை எழுதியமைக்காக சுவாசம் பதிப்பகத்தாரும் குழுவின் நிர்வாகி அவர்களும் எனக்கு இந்த புத்தகத்தை அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..
நான் அரசு வேலையில் இருந்த நிமித்தம் காரணமாக தேர்தல் பணி செய்து இருக்கிறேன் .1974 முதல் 2018 வரை பணியில் இருந்த போது நடைபெற்ற தேர்தல்களில் தேர்தல் பணி செய்து இருக்கிறேன் .
எனக்கு வாக்குச்சாவடி குறித்தும் வாக்கு பெட்டி குறித்தும் வாக்கு பதிவு குறித்தும் , வாக்கு பதிவு எண்ணும் பணி குறித்தும்,மின்னணு பெட்டி குறித்தும் சகலமும் தெரியும் என்று உறுதியாக சொல்ல முடியும். எனவே இந்த புத்தகத்தை என்னால் சுலபமாக படிக்கவும் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.
அமெரிக்காவில் நடந்த தேர்தலில் நான் பங்கு பெறாவிட்டாலும் தேர்தல் நடந்த சமயத்தில் பார்வையாளர் போல நான் அருகில் சென்று பார்த்து வந்திருக்கிறேன் .அங்கு நடக்கின்ற தேர்தல் வினோதமானது விசித்திரமானது அபூர்வமானது. நமது இந்தியாவில் நடக்கின்ற தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது எனக்கு அதிசயமாகவே இருந்தது .அந்த தேர்தல்கள் ஒரு நாளில் முடியாது ஒரு மாதத்தில் முடியாது அப்படி நீண்ட காலங்களாக பதிவு செய்யப்பட்டு எண்ணப்பட்டு அறிவிப்பு செய்யப்படுகின்ற தேர்தல் அது.
மின்னணு வாக்கு பதிவு எந்திரம் குறித்து ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் ;இந்த புத்தகத்தில் இல்லாதது.
நமது மதிப்புக்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தொழில்நுட்ப வல்லுனராக இருந்து இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை நிர்மாணிக்க உதவியதையும் அதன் பிறகு அந்த எந்திரம் வேலை செய்கின்ற விதம் குறித்து அன்றைய பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களிடம் செய்முறை விளக்கம் செய்து காட்டியதையும் அவர் எழுதியிருப்பார் .
அவ்வாறு விளக்கிச் சொல்லுகின்ற போது ராஜீவ் காந்தி அவர்கள் ஒரு அருமையான கேள்வியை கேட்டார் .ஒருவனே தொடர்ந்து வாக்குப்பதிவு செய்துவிட முடியுமா முடியாதா என்று கேட்டார் .
அந்த கேள்விக்கு விடையாக தான் ஒவ்வொரு வாக்காளனும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஒலி ஒன்று வரும் .அதன் பிறகு வாக்குச்சாவடி அலுவலர் அனுமதித்த பிறகு தான் அடுத்த வாக்காளர் வாக்கு பதிவு செய்ய முடியும் என்கிற ஒரு தொழில்நுட்பத்தை புகுத்தப்பட்டது என்பதாக சுஜாதா அவர்கள் சொல்லியிருந்தார் .அதனை இங்கு நினைவு கூறுகிறேன் .
எனவே வாக்கு பதிவு எந்திரம் வடிவமைத்ததில் மேலும் செம்மைபடுத்தியதில் ராஜீவ் காந்தி அவர்களுக்கும் ஒரு பங்கு இருந்தது என்பதை நான் சொல்லவில்லை ,சுஜாதா அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.
இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம்:
கீழ்க்கண்ட 15 தலைப்புகளில் இந்த புத்தகம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
1.வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகள்
2.வாக்கு இயந்திரங்கள் மேலாண்மை
3.ஜனநாயகக் குழந்தை
4.தேர்தல் சீர்திருத்தங்கள் -1
5.மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வரலாறு
6.வெளிநாடுகளில் வாக்குப்பதிவு இயந்திரம்
7.இந்தியக் கட்சிகளின் கருத்து
8.தொடரும் குற்றச்சாட்டுகள்
9.வழக்குகளும் தீர்ப்புகளும்
11.வைரஸ் குதிரை
12.தேர்தல் சீர்திருத்தங்கள் -2
13.முறைகேடுகளைக் களைய வாய்ப்புகள்
14.எதிர்காலம்
15.மின்னணு இயந்திரங்கள்
கேள்வி - பதில்கள்.
வாக்குப் பதிவு இயந்திரம் இல்லாமல் இன்று நம்மால் ஒரு தேர்தலை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. உண்மையில் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் தேர்தலை நடத்தி முடிப்பது என்பதே மாபெரும் சாதனைதான்.
அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் என்பது வரப்பிரசாதம்.
ஆனால் இன்றும் கூட இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை நம்பாமல், மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே மாறவேண்டும் என்கிற குரல்கள் ஒலிக்கத்தான் செய்கின்றன.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரமா சாபமா? இந்தக் கேள்வியை அலசும் இந்த நூல், இதை ஒட்டி வேறு முக்கியப் பகுதிகளையும் ஆய்வு செய்கிறது.
இந்தியாவில் நடந்த முதல் தேர்தல், வெளிநாடுகளில் இன்று தேர்தல் நடக்கும் முறை, வாக்குப் பதிவு இயந்திரத்தால் அரசியலில் ஏற்பட்ட பாதிப்பு, கட்சிகளின் குற்றச்சாட்டு, நீதிமன்றங்களின் பதில்கள், தேர்தல் ஆணையத்தின் சவால்கள் என்று பல நுணுக்கமான விவரங்களைப் பேசுகிறார் சூ. சக்கரவர்த்தி மாரியப்பன்
அவர்கள்.
ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதை போல ஆசிரியர் சூ .சக்கரவர்த்தி மாரியப்பன் அவர்கள் இந்த புத்தகத்தை எழுதி நமக்கு தெளிவாகவும் அழகாகவும் அழகு தமிழில் பழகு மொழியில் விளக்கிச் செல்கிறார்.
சில கருத்துக்களை சுருக்கமாக பார்ப்போம்.
ஒரு காலத்தில் இந்தியாவில் தேர்தல் வாக்கு பெட்டி கொண்டு வாக்குச்சீட்டு முறையில் நடத்தப் பட்டது.அதில் இருந்து மாறி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நடைமுறையின் மூலம் கிடைக்கும் நன்மைகளை சமூக நன்மைகளுடன் ஒப்பிட வேண்டும்.
இந்தியா முழுமைக்குமான தேர்தல் என்றால், எத்தனை பெரிய பிரமாண்டமான செயல் . வாக்குச் சீட்டைக் கைகளில் எண்ணிக் கொண்டிருந்தால் என்னாகும்? அப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தோம் என்பதற்காக, இன்றும் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. வாக்குபதிவு இயந்திரமே ஒரே வாய்ப்பு.
ஒரு அறிவியல் முன்னேற்றத்தின் பலன் தேவையா இல்லையா என்பதை பயனாளிகள்தான் முடிவு செய்ய வேண்டும் .
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்கிற தொடர் குற்றச்சாட்டுகளையும், வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பான அனைத்துவித உண்மைகளையும் விளக்குவதே இப்புத்தகத்தின் நோக்கம்.
தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ரீதியில் ஒரு பார்வை:
தேர்தலைச் சுற்றி நடைபெறும் பிற அரசியல், சமூக நிகழ்வுகள் இன்னொரு பார்வை :
என்று வகைப் பிரித்து தடம் பிரித்து விடை தருவது போல எழுதி இருக்கிறார் ஆசிரியர்.
சமூகத்தில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரத்தில் அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக முக்கியமானது.
தற்போது சமூக ஊடகங்கள் மூலம் கிடைக்கும் செய்திகள், விரைவான தகவல் பரிமாற்றம், பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள், விழிப்புணர்வு ஆகியவற்றுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.
பல ஆண்டுகளாக அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்க்கைத் தரம், சமூக வளர்ச்சி ஆகியவை முன்னணியில் உள்ள சர்வதேச நாடுகள் மற்றும் இதே புள்ளிகளில் வளர்ந்து வரும் பிற நாடுகள் எடுத்து வைக்கும் புதிய முயற்சிகள் என அனைத்துச் சமகால நிகழ்வுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக பழைய வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வருவது மட்டுமே
சரியான அணுகுமுறை என்பது ஒரு சாரார்
வாதம்.
இது நமது ஜனநாயகம் செயல்படும் விதம் மற்றும் அரசியல் சாசனம் குறித்த முறையான புரிதல் இல்லாத அணுகுமுறை என்று சொல்லலாம். இதைப் பல்வேறு தரவுகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
1950 ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு ஜனவரி 25ஆம் அன்று * இந்திய தேர்தல் ஆணையம் *ஒரே ஒரு ஆணையரை கொண்ட அமைப்பாக தோற்றுவிக்கப்பட்டது .அந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி முதலாவது தேர்தல் ஆணையராக மேற்கு வங்கத்தை சேர்ந்த சுகுமார் சென் நியமிக்கப்பட்டார்.
முதல் பொதுத் தேர்தல் 1951 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பகுதி நீங்களாக பிற இடங்களுக்கு நடைபெற்றது. 68 கட்டங்களாக 5 மாதங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்குகளை பூர்த்தி செய்ய 62 கோடி வாக்கு சீட்டுகள் நாசிக் நாணய மையத்தில் அச்சிடப்பட்டன.
14 தேசிய கட்சிகள் உள்பட 53 கட்சிகளின் 1341 வேட்பாளர்கள் மற்றும் 533 சுயேட்சை வேட்பாளர்கள் முதல் பொதுத் தேர்தலில் களம் கண்டனர் .இன்று 650 கட்சிகள் தொகுதிக்கு 15 வேட்பாளர்கள் வீதம் சுமார் 8000 பேர் போட்டியிடுகின்றனர்.
இன்றைய சூழ்நிலையில் 57 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துகின்றன .அவற்றில் 17 லட்சத்து 40 ஆயிரம் இயந்திரங்கள் ஒப்புகை சீட்டை அச்சிட்டு தரும் வசதி கொண்டவை.
வாக்கு இயந்திரங்கள் மேலாண்மை குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
அப்போதுதான் நமக்கு தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இல்லை என்பது புரியும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒதுக்கீட்டை மேலாண்மை செய்வதற்குத் தனிச் செயலி ஒன்று உள்ளது. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ஒரு குறியீட்டு எண் (Barcode) கொடுக்கப்பட்டிருக்கும். இதனை வைத்து, ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் இயந்திரம் எங்குச் சேமிப்பில் உள்ளது, எங்குச் செல்லப் போகிறது, எப்போது திரும்ப வந்தது என்று கண்காணிக்க முடியும். இதனை மேலாண்மை செய்ய EVM Management System (EMS) வழக்கத்தில் உள்ளது.
Bஒவ்வொரு இயந்திரப் பயணமும் EMSல் பதிவேற்றப்படும். கண்டெய்னர் போன்ற மூடிய வசதியும், பூட்டும் கொண்ட சரக்கு வாகனங்களில் 24X7 காவல்துறை கண்காணிப்பில் GPS கருவி பொருத்தப்பட்டு, CCTV மூலம் கண்காணிக்கப்படும். புறப்படும் மற்றும் சேரும் இடங்களில் வீடியோவும் எடுக்கப்பட வேண்டும்.
வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தேர்தல்களில் பயன்படுத்தும் முன்னர், முதல் தவணைச் சோதனையாக மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் பொறியாளர்களும், பொறுப்பாளர்களும் கையொப்பம் இடுவர். பின் அவை பாதுகாப்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
தேர்தலுக்கு முன்பு இவற்றை ஒரே இடத்திற்கு அனுப்பாமல் சீரற்ற முறையில் (Randomisation) இருமுறை ஒதுக்கீடு செய்கிறார்கள்.
அப்படி ஒதுக்கப்படும் வரை, எந்த இயந்திரம் எந்த மாவட்டத்துக்குச் செல்லும் என்பது யாருக்கும் தெரியாது.
ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் கீழ்கண்ட வகையான சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்கும். 1வேட்பாளர் பட்டியல் ஒட்டிய வாக்குப்பதிவு
சாதனம் (Ballot Unit).
2 வாக்களிக்க அனுமதி அளிக்கும் கட்டுப்பாட்டு இயந்திரம் (Control Unit).
3. காகித ஒப்புகைச் சீட்டை அச்சடிக்கும் சாதனம்(VVPAT),
வாக்குப்பதிவு செய்ய உதவும் பேலட் யூனிட்டில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் செருகப்பட்டு 'சீல்' வைக்கப்படும். அச்சிடும் இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றப்பட்டு அவையும் 'சீல்' வைக்கப்படும். வேட்பாளர்கள் பட்டியல் கண்ட்ரோல் யூனிட்டில் பதிவு செய்யப்பட்டு அவையும் 'சீல்' வைக்கப்படும். இப்படியான ஒவ்வொரு நடைமுறையிலும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இருக்கவேண்டியது கட்டாயம். இவை அனைத்தும் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு திரையிலும் ஒளிபரப்பப்படும்.
தேர்தல் அன்று வாக்காளர் வாக்களிக்க வரும்போது, வாக்காளரின் அடையாளச் சான்றிதழ்களைச் சரிபார்த்த பின்னர், வாக்குச்சாவடி அலுவலர் கண்ட்ரோல் யூனிட்டில் பேலட் பட்டனை அழுத்தி வாக்காளர் தனது வாக்கைச் செலுத்த அனுமதிப்பார்.
பதிவான வாக்காளர் வாக்களித்த வரிசை எண், கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய அச்சிட்ட காகித ஒப்புகைச் சீட்டு VVPAT சாதனத்தில், பார்வையிடலாம் ,வெளியே எடுத்துச் செல்ல முடியாது.
வெற்றி பெற்றவர்கள் குதூகளிக்கவும் தோல்வி அடைந்தவர்கள் புகார் சொல்லவும் மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடிபோல மின்னணு எந்திரம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
B மின்னணு வாக்கு இயந்திரம் என்கிற புள்ளியைச் சுற்றி, தேர்தலை வைத்து நடைபெறும் வேறு சில முறைகேடுகள், செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், அதற்கு முட்டுக்கட்டையாகக் கிடக்கும் தடைக்கற்கள், வருங்கால வாய்ப்புகள் எனப் பிற பரிமாணங்களையும் இங்குச் சுட்டிக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக