திங்கள், 19 ஜூன், 2023

சபாநாயகரின் அனுமதி பெறாமல் 
செந்தில் பாலாஜியைக் கைது செய்யலாமா?
சட்டம் சொல்வது என்ன?
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------
ஒரு போலி நக்சல்பாரி அமைப்புடன் தொடர்புடைய 
ஒரு பழைய நண்பர் என்னிடம் இன்று காலை இந்தக் 
கேள்வியைக் கேட்டார்: சபாநாயகர் அப்பாவுவின் 
அனுமதி பெறாமல் எப்படி செந்தில் பாலாஜியைக் 
கைது செய்யலாம்? இது பாசிசம் அல்லவா என்றார்! 
அவருக்குப் பதிலளித்தேன்; எனது பதில்கள் பின்வருமாறு 
அமைந்தன..

1) செந்தில் பாலாஜியைக் கைது செய்தது சாதாரண 
போலீஸ் அல்ல; அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate).
சாதாரண போலீசுக்கு இல்லாத கூடுதல் அதிகாரமும் 
தனிச்சிறப்பு வாய்ந்த அதிகாரமும் (special powers) 
அமலாக்கப் பிரிவுக்கு உண்டு. 

2) அடுத்து செ.பாலாஜி எந்தச் சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டார் என்று பார்க்க வேண்டும். அவர் மீது 
ஊழல் தடுப்புச் சட்டம் மட்டும் (Prevention of corruption act) 
பிரயோகிக்கப் படவில்லை. கூடவே PMLA சட்டமும் 
பிரயோகிக்கப் பட்டுள்ளது. 
(PMLA = Prevention of Money Laundering Act 2002). தமிழில் 
சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம். 

3) கைது செய்தது அமலாக்கப் பிரிவு என்பதாலும்,
கைது செய்யப்பட்டது PMLA சட்டத்தின் கீழ் என்பதாலும்    
வழக்கமான CrPC நடைமுறைகள் இங்கு பொருந்தாது.
இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

4) வழக்கமான CrPC நடைமுறைகளின்படி, ஒரு 
சட்டமன்ற  உறுப்பினரைக் கைது செய்ய 
வேண்டுமென்றால் சபாநாயகரின் அனுமதியைப் 
பெற வேண்டும். ஆனால் செந்தில் பாலாஜி 
விஷயத்தில் அவ்வாறு சபாநாயகரின் அனுமதியைப் 
பெற்ற பிறகுதான் கைது செய்ய வேண்டும் என்ற 
நடைமுறை பொருந்தாது (Not applicable). 

5) PMLA சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவு 
செந்தில் பாலாஜியைக் கைது செய்யும்போது 
சபாநாயகரையும் கேட்க வேண்டியதில்லை. 
செந்தில் பாலாஜியின் சலூன்காரரையும் கேட்க 
வேண்டியதில்லை என்றேன்.

6) PMLA போன்ற பாசிசச் சட்டமெல்லாம் 
பிரிட்டிஷ்காரன் காலத்துச் சட்டம் தோழ்ர் என்றார் 
நமது போலி நக்சல்பாரி; இதன் மூலம் தமது 
அறியாமையை வெளிப்படுத்தினார்.

7) நான் அவரிடம் சொன்னேன்: PMLA சட்டம் 
பிரிட்டிஷ்காரன் காலத்துப் பழைய சட்டம் அல்ல.
அது முற்றிலும் புதிய சட்டம்; நவீன சட்டம்.
இந்த மில்லேனியத்திற்குப் பின்னர் கொண்டுவரப்
பட்ட சட்டம். 2002ல்தான் இச்சட்டம் கொண்டுவரப் 
பட்டது.

8) 1995ல் நரசிம்மராவ் காலத்தில் LPG கொள்கைகள் 
இந்தியாவில் செயலாக்கப் பட்டன. உலகமயம் 
காரணமாகவும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் 
காரணமாகவும் பொருளாதாரக் குற்றங்கள் பெருகின.
இவற்றைத் தடுக்கும் பொருட்டு 2002ல் PMLA சட்டம் 
கொண்டுவரப் பட்டது. இந்திய நாடாளுமன்றத்தில் 
முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப் 
பட்டதே PMLA சட்டம் என்றேன்.

9) இந்திய சுதந்திரத்திற்குப் பின், 1950களில் அமலாக்கப் 
பிரிவு உருவாக்கப் பட்டது. எனினும் இன்று அதற்குள்ள 
அதிகாரம் 1950களில் இல்லை. தனிச்சிறப்பு வாய்ந்த 
அதிகாரங்கள் EDக்கு 2005ல்தான் வழங்கப் பட்டன.
காங்கிரஸ் ஆட்சியின்போது (UPA-1) மன்மோகன்சிங்,
ப சிதம்பரம் ஆகியோரின் கூட்டு முயற்சியால் 
இவ்வாறு தனிச்சிறப்பு மிக்க அதிகாரங்கள் EDக்கு 
வழங்கப் பட்டன. இந்தச் சட்டங்களும் சிறப்பு 
அதிகாரங்களும் அப்போது அமைச்சரவையில் 
பங்கேற்று இருந்த திமுகவின் முழு ஆதரவோடுதான் 
வழங்கப் பட்டன.   

10) தொடர்ந்து மேலும் கூடுதலான அதிகாரங்களும் 
வழக்கமான CrPC நடைமுறையில் இருந்து விதிவிலக்கும் 
அடுத்தடுத்த சட்டத் திருத்தங்கள் (amendments)
மூலம் EDக்கு வழங்கப் பட்டன. தேவையான எல்லா 
அதிகாரங்களும் விதிவிலக்குகளும் EDக்கு 
2012ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ்-திமுக கூட்டணி 
ஆட்சி நடைபெற்றபோதே வழங்கப் பட்டு 
விட்டன என்றேன். அப்படியானால் இது பிரிட்டிஷ் 
பாசிசம் இல்லை அல்லவா என்கிறார் நமது போலி.
இல்லை, இது இந்தியப் பாயாசம் என்றேன்.
************************************************** 

   


         

  

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக