புதன், 1 ஏப்ரல், 2015

(12) சாதியை ஏற்கும் வடகலையும் 
சாதியை மறுக்கும் தென்கலையும்!
கலைஞரின் ராமானுஜ காவியம் பற்றி....!
--------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------------------
1) வடகலை வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொள்கிறது.
எந்த சாதியில் பிறந்தோமோ, அந்த சாதிக்கு உரிய 
ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் 
என்பது வடகலையின் கொள்கை.
2) தென்கலை சாதிப் பாகுபாட்டை ஏற்பதில்லை.
பால் சுரந்தாலும் பசு மிருகம்தானே என்று எண்ணாமல்,
சாதி வேற்றுமை பாராட்டாமல், அனைத்து வைணவர்களும் 
தொழுகுலமே என்று உணர்வது தென்கலை.(தொழுகுலம் 
என்றால் வணங்கத் தக்கவர்கள் என்று பொருள்).
**
கணவனை இழந்த பெண்கள் (விதவைகள்) மொட்டை 
அடித்துக் கொள்ள வேண்டும்; காஷாயம் தரித்து 
முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும் என்கிறது வடகலை 
(கஷாயம் வேறு; காஷாயம் வேறு. கஷாயம் ஒரு குடிக்கும் 
பானம் ஆகும். காஷாயம் என்பது துறவுக்கு உரிய ஆடை).
**
எல்லாப் பெண்களுக்கும் எம்பெருமானே கணவர் என்பதால்,
விதவைகள் மொட்டை அடிப்பதும் முக்காடு போடுவதும் 
தேவையற்றது என்கிறது தென்கலை. இறைவனை 
வணங்குவதில் "நாயகன்-நாயகி பாவம்"என்று ஒரு முறை 
உண்டு. வட இந்தியாவில்  மீரா இந்த முறையைத் தான் 
பின்பற்றினார். இது போன்ற அடிப்படையில்தான், "வைதவ்ய 
கோலம்" தேவையில்லை என்கிறது தென்கலை.
**
மனம் வாக்கு காயம் என்ற மூன்றால் மனிதன் அறிந்தோ 
அறியாமலோ தவறு செய்தால், அத்தவறுக்கு வருந்தி,
இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதுடன் பரிகாரமும் 
செய்ய வேண்டும் என்பது வடகலை சம்பிரதாயம்.
இது வருத்தப் பரிகாரம் என்று அழைக்கப் படுகிறது.    
கத்தோலிக்க மதத்தில் உள்ள பாவ மன்னிப்பு போன்றது 
இது.( இந்த வாக்கியம் ஒரு உவமை மட்டுமே).
**
மனவருத்தப் பரிகாரம் என்பதை தென்கலை ஏற்பதில்லை.
வேதாந்த தேசிகரை வடகலையும், மணவாள மாமுனிகளை 
தென்கலையும் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ளன. 
**
தத்துவம், சம்பிரதாயம், நடைமுறை ஆகியவற்றில் 
வடகலை தென்கலை இரண்டுக்கும் இடையிலான 
வேறுபாடுகளை முழுமையாக எடுத்துரைப்பது 
இக்கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்டது.
வடகலை தென்கலை இருசாராருமே ராமானுஜரை 
இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்து வணங்குகின்றனர்     
என்பதை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.
**
இக்கட்டுரையைப் படிக்கும் அன்பர்கள் வடகலையை விட,
தென்கலை முற்போக்கானது என்று உணரக் கூடும்.
அடுத்த கட்டுரையில், இசுலாமியப் படையெடுப்பை 
ராமானுஜர் எதிர்கொண்ட விதம் குறித்துப் பார்ப்போம்.
----------------------------------------------------------------------------------
தொடரும் 
*******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக