புதன், 20 ஏப்ரல், 2016

விடுதலைச் சிறுத்தைகள் வசந்திதேவியை
நிறுத்தியதன் உள்மர்மம் என்ன?
அ மார்க்சின் உளறல்கள்!
------------------------------------------------------------------------
ஜெயலலிதாவை எதிர்த்து தேமுதிக வேட்பாளரை
நிறுத்தி இருக்க வேண்டும். அப்படி நிறுத்தினால்தான்
மாற்று அரசியல் என்று முழக்கம் ஓரளவேனும்
மதிப்புப் பெறும். ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்து
வெல்வது குதிரைகொம்பு என்பதை நன்கு உணர்ந்த
விஜயகாந்த் அந்த வாய்ப்பை உதறி விட்டார்.

வைகோவையும் கம்யூனிஸ்ட்களையும் குறை
சொல்வதற்கில்லை. ஆர்கே நகர் தொகுதியில்
அவர்களுக்கு ஒன்றுமே கிடையாது. அண்மையில்
நடந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் பெருந்தலை
மகேந்திரனே போட்டியிட்டும் டெப்பாசிட் பறிபோனதால்
சூடுகண்ட பூனை அடுப்பு அருகில் போகாது என்ற
கதையாக, மநகூவினர் எல்லோரும் சேர்ந்து
இத்தொகுதியை திருமாவளவனிடம் தள்ளி விட்டு
ஒதுங்கிக் கொண்டனர்.2015 ஜூனில் நடந்த இடைத்
தேர்தலில் ஜெயா 1லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள்
பெற்றதும் மகேந்திரன் வெறும் ஒன்பதாயிரம்
வாக்குகள் மட்டுமே பெற்றதும் குறிப்பிடத் தக்கது. 

திருமாவளவனைப் பொறுத்த மட்டில் இத்தொகுதி ஒரு
வேண்டாத சுமை. கட்சிக்காரர்களில் எவரும் நிற்க முன்வர
மாட்டார்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
முதல்வர் போட்டியிடும் தொகுதி என்பதால், மற்றத்
தொகுதிகளை விட,செலவு, அலைச்சல், உழைப்பு
எல்லாமே அதிகம் என்பதால், பணத்தைச் செலவழித்து
நஷ்டப்பட கட்சிக்காரர் எவரும் முன்வராத நிலையில்,
மிகவும் சாமர்த்தியமாக திருமாவளவன் இத்தொகுதியை
வசந்திதேவியிடம் தள்ளிவிட்டு விட்டார். துணைவேந்தராக
இருந்தமை காரணமாக போதிய பணவசதி உடையவராகவும்
இருப்பதால் தேர்தல் செலவையும் பார்த்துக் கொள்வார்
என்ற கருத்தில்,   வசந்திதேவியை திருமாவளவன்
தேடிப்பிடித்துள்ளார். அறிவாளியான ஒரு கட்சித்தலைவர்
என்ன முடிவை எடுப்பாரோ, அதைத்தான் திருமாவளவன்
எடுத்துள்ளார்.

வசந்திதேவி மிகச்சிறந்த கல்வியாளர் என்பதில் எவருக்கும்
ஐயமில்லை. ஆனால் நடப்பது சட்டமன்றத் தேர்தல்.
பல்கலை செனட்டுக்கு நடைபெறும் தேர்தல் அல்ல.
1938இல் பிறந்து இன்று 78 வயது ஆகும் தொழிற்சங்கத்
தலைவர் சர்க்கரைச் செட்டியாரின் பேத்தியான
வசந்திதேவி ஒரு அரசியல்வாதியே அல்ல.

இந்த வயதில் ஜெயாவுக்கும் திமுகவின் சிம்லாவுக்கும்
ஈடு கொடுத்து இவரால் களப்பணி ஆற்ற முடியாது.
படிக்காத பாமர மக்களும் அன்றாடங் காய்ச்சிகளும்
ஏழை எளிய மக்களும் நிறைந்த வடசென்னையின்
ஆர்கேநகர் தொகுதி எவ்விதத்திலும் வசந்திதேவி
போன்ற, Non-politicianக்கு, அரசியல்வாதி அல்லாத
ஒருவருக்கு ஏற்றது அல்ல. சுருங்கக்கூறின்,
இத்தொகுதியில் வசந்திதேவி ஒரு MISFIT.
  
தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிந்து
கொள்ள மே 19 வரை காத்திருக்கத் தேவையில்லை.
அது சுவரில் எழுத்து. குறைந்தது முப்பதாயிரம் வாக்குகள்
பெற்றால்தான் டெப்பாசிட் கிடைக்கும். அது வசந்திதேவிக்குக்
கிடைக்க வாய்ப்பில்லை. இதையெல்லாம் நன்கு உணர்ந்தும்
அ  மார்க்ஸ் போன்றவர்கள் உளறுவதை  நிறுத்தவில்லை.

ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து இயங்கிய
அனுபவமோ, தேர்தல் வேலை பார்த்த அனுபவமோ அறவே
இல்லாத, குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்கள்
வசந்திதேவி வேட்பாளர் என்றவுடன் பண்ணுகிற
ரகளைகள் தாங்க முடியவில்லை. இவர்கள் ஊதுகிற
பலூனில் மே 19 அன்று தேர்தல் ஆணையம் ஊசியைக்
குத்தும் வரை காத்திருப்போம்.
*****************************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக