வெள்ளி, 1 டிசம்பர், 2023

சுரங்கத்தினுள் 17 நாள் சிக்கித் தவித்த 
தொழிலாளர்கள் மீட்கப்பட்டது எப்படி?
--------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------

வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்-அடி 
மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்.
.........மகாகவி பாரதி.

உத்தரகாண்ட் மாநிலம் மலையும் மலைசார்ந்த இடமும்
ஆகும். கடந்த நவம்பர் 12 அதிகாலை ஐந்தரை மணிக்கு 
இம்மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த   
சில்கியாரா சுரங்கம் (silkyara tunnel) இடிந்து விழுந்தது. 
வெளியேறும் வழி அடைத்துக் கொண்டதால் அங்கு 
பணியாற்றிய 41 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள்ளேயே 
சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் கழித்து  நவம்பர் 28, 2023ல் 
அவர்கள் அனைவரும் துளி சேதாரமும் இன்றி பத்திரமாக 
மீட்கப் பட்டனர். 

நவம்பர் 28 இரவு 8 மணியளவில் மீட்கப்பட்ட 41 பேரில் 
முதலில் வந்த சிலரை ஏற்றிக்கொண்டு சில்கியாரா 
சுரங்கப்பாதையின் வாசலில் இருந்து  ஒரு ஆம்புலன்ஸ்  
விண்ணதிரும் முழக்கங்களுடன் புறப்பட்டுச் சென்றது. 
இத்தொழிலாளர்களின் மீட்பு சர்வதேச ஏடுகளின் 
தலைப்புச் செய்தியானது.


ரூ ஒரு லட்சம் உதவித்தொகை!
------------------------------------------------
உத்தரகாண்ட் மாநில அரசும் மத்திய அரசும் உச்ச அளவு 
ஒருங்கிணைப்புடன் செயலாற்றின. தொடர்புடைய பேரிடர் 
மீட்பு அமைப்புகள் (NDRF and SDRF) அதிகபட்ச அர்ப்பணிப்புடன்  
தம் கடமையைச் செய்தன. மீட்புக்குழுவானது பல்வேறு 
ஏஜன்சிகளின் ஒருங்கிணைப்பாகும் (multi agency rescue team) 
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தினமும் 
மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு தேவையான அனைத்து 
உதவிகளையும் செய்து வந்தார். மீட்புப் பணிகளின் நிலவரம் 
குறித்து பாரதப் பிரதமர் தொடர்ச்சியாக அறிந்து கொண்டும் 
அக்கறை காட்டியம் வந்தார். மீட்கப்பட்ட 41 பேருக்கும் 
தலைக்கு ரூ ஒரு லட்சம் உதவித்தொகையை உத்தரகாண்ட் 
முதல்வர் வழங்கினார்.

சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்டோர் 41 தொழிலாளர்கள்.
அதிர்ஷ்டவசமாக இவர்களில் பெண்கள் குழந்தைகள் 
முதியோர் என்று எவருமே இல்லை. அனைவருமே 
இளவயதினர்தாம்!.  


உணவு அனுப்புவதில் வெற்றி!
----------------------------------------------
தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட தேதி நவம்பர் 12. எட்டு நாட்களாக 
மீட்புக் குழுவினரால் இவர்களை அணுக இயலவில்லை.
ஒன்பதாம் நாளன்று, நவம்பர் 20ல், சுரங்கத்தினுள் தொழிலாளர்கள்  
சிக்கிக் கொண்ட இடத்திற்கு ஒரு நீண்ட குழாயை
அனுப்புவதில் மீட்புக் குழுவினர் வெற்றி அடைந்தனர்.
மீட்புப் பணியின் உருப்படியான முதல் வெற்றியாகும் இது.
அரையடி விட்டமுள்ள அந்தக் குழாயின் வழியாக 
சிக்கித் தவிப்போருக்கான உணவை மீட்புக் குழுவினர் 
வெற்றிகரமாக அனுப்பினர். சூடான ரவை கிச்சடி அனுப்பப் பட்டது.

அகன்ற வாய் உடைய உருளை வடிவ பாட்டில்களில் 
கிச்சடி அடைக்கப்பட்டு சிக்குண்ட தொழிலாளர்களை 
குழாய் வழியே சென்றடைந்தது. கூடவே ஆப்பிள், வாழை,
தண்ணீர், மருந்து ஆகியனவும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு 
இணங்க அனுப்பப் பட்டன. முன்னதாக ஒரு குழாய் மூலம் 
ஆக்சிஜன் அனுப்பப் பட்டது.   

தொலைதொடர்பு முயற்சியில் BSNL!
------------------------------------------------------- 
சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் 
பேசுவதற்காக சில்கியாரா சுரங்கப்பாதையினுள் நிலவழித் 
தொலைதொடர்பை (wired Landline connectivity) ஏற்படுத்தும் 
பெரும் பொறுப்பு BSNL நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
பொறுப்பை ஏற்றுக்கொண்ட BSNL,  நவம்பர் 25ல் வயர்களைப் 
பொருத்தும் பணியில் ஈடுபட்டது. எனினும் இப்பணி தொடர்ச்சியாக தடங்கலுக்கு உள்ளானது. 

தொழிலாளர்கள் 41 பேரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
உபி, பீகார், மேற்கு வங்கம், அசாம், ஜார்க்கண்டு, உத்தரகாண்ட்,
ஒடிஷா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.  

மீட்கப்பட்ட 41 பேரில் ஒருவரான விஷால் குமார் என்பவர் 
மீட்கப்பட்ட உடன் செய்தியாளர்களுக்கு அளித்த 
பேட்டியில் ஐந்து அல்லது பத்து நாட்களுக்குள் தாங்கள் மீட்கப்பட்டு 
விடுவோம் என்று நம்பியதாகத் தெரிவித்தார். 17 நாட்களாகி 
விடும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் 
நாளின் பெரும்பகுதி நேரத்தை தூங்கிக் கொண்டும் 
ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும் கழித்ததாகத் தெரிவித்தார்.
தமது பேச்சில் ஒரு குழாய் மூலம் ஆக்சிஜன் தங்களுக்குக் 
கிடைத்துக் கொண்டிருந்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார் 
விஷால் குமார்.

சுரங்கப்பாதையில் மண்சரிவு!
------------------------------------------------ 
சில்கியாரா சுரங்கப்பாதை மண்சரிவு (Silkyara tunnel collapse)  
என்று அழைக்கப்படும் இவ்விபத்து உண்மையில் நிலக்கரிச் 
சுரங்கம், இரும்புச் சுரங்கம் போன்ற சுரங்கங்களில் 
ஏற்படும் விபத்து போன்றதல்ல. நிலக்கரி, இரும்புச் சுரங்கங்கள் 
அதிக ஆழம் தோண்டப் படுபவை. தென்னாப்பிரிக்காவில் 
சில நிலக்கரிச் சுரங்கங்கள் 4 கிமீ ஆழம் தோண்டப்பட்டவை.
ஆனால் சில்கியாரா சுரங்கப்பாதையானது சாலை அமைப்புத் 
தொடர்பான ஒரு சுரங்கப் பாதை (tunnel and not a mine) ஆகும்.
இது ஆழமாகத் தோண்டப் படுவதற்கான எந்தத் 
தேவையும் இல்லாத ஒன்று.

மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், சாலைகள் என்னும் மூன்று 
கூறுகளால் ஆனவை நவீன நெடுஞ்சாலைகள். சாலைகளின் 
பிரிக்க முடியாத பகுதிகளாக ஆகிவிட்ட சுரங்கப் பாதைகள்
பொதுவாக 15 அடி, 20 அடி என்று மேம்போக்கான ஆழம் உடையவை.
தேவையை ஒட்டி அதிகபட்சமாக 30 அடி ஆழத்திற்கு மேல் இச்சுரங்கப் பாதைகளின் உயரம் பொதுவாக அமைவதில்லை.  

உத்தரகாண்ட் மாநிலத்தில் "சார் தம் தேசிய நெடுஞ்சாலைத் 
திட்டம்" (Char Dham National Highway Project) என்னும் சாலை அமைப்புத் 
திட்டம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் 
(இந்திய மதிப்பில் தோராயமாக ரூ 10,500 கோடி) 2016ல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் நெடுஞ்சாலையின் மொத்த 
நீளம் 889 கிமீ ஆகும். கேதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி 
ஆகிய நான்கு கோவில் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையை   
அமைப்பதே "சார் தம்" திட்டம் ஆகும். சார் தம் என்ற இந்திச் சொல் 
நான்கு ஸ்தலங்கள் என்று பொருள்பட்டு மேற்கூறிய நான்கு 
கோவில் நகரங்களைக் குறிக்கும்.

உச்சநீதிமன்றம் அனுமதி!
---------------------------------------
இந்திய மாநிலங்களில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் முதலிடம்  
பெற்றுள்ள மாநிலம் உத்தரகாண்ட் ஆகும். 2022ஆம் ஆண்டில் மட்டும் 
ஐந்து கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரகாண்டிற்கு வருகை 
புரிந்துள்ளனர் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த ஐந்து 
கோடியில், அரைக்கோடிப்பேர்  கேதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி  ஆகிய கோவில் நகரங்களுக்கு பக்திச் சுற்றுலா வந்தவர்கள்.
சுற்றுலா வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், பக்தர்களுக்கு 
வசதி செய்து தரும் நோக்கிலும் மக்களின் தேவை சார்ந்து 
"சார் தம்" தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.  

திட்ட வேலைகள் ஆரம்பித்ததுமே இத்திட்டத்தால் சுற்றுச்சூழல் 
பாதிக்கப்படும் என்று புகார்கள் எழுந்தன. பலர் நீதிமன்றங்களில் 
வழக்குத் தொடுத்தனர். வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் 
இத்திட்டத்தைச் செயல்படுத்த அனுமதித்தது.  அதே நேரத்தில்,
இச்சாலை அமைப்பின்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் 
கண்காணிக்க உச்சநீதிமன்றம் ஒரு மேற்பார்வைக் குழுவை 
(oversight committee) அமைத்துள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் 
ஏ கே சிக்ரி (Justice A K Sikri) அக்குழுவின் தலைவர் ஆவார். 

உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்புடனே  திட்டம்  தொடர்ந்தது.
"சார் தம்"  திட்டப்படியான மொத்தமுள்ள 889 கிமீ நீள சாலையில் 
578.6 கிமீ தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு விட்டதாக நீதியரசர் 
சிக்ரி குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. 

சுரங்கத்தினுள் சிக்கிய 41 பேர்!
-------------------------------------------------
விபத்து நிகழ்ந்த சில்கியாரா-பர்கோட்  சுரங்கப்பாதையானது 
(Silkyara-Burkot Tunnel) 4.5 கிமீ நீளம், 13 மீட்டர் அகலம், 9 மீட்டர் உயரம் 
என்னும் அளவுகளைக் கொண்டது. இச்சாலை அமைப்பதில் 
முக்காலே அரைக்கால் பாகம் வேலை முடிந்துவிட்ட நிலையில்,
அதாவது 4 கிமீ நீளத்திற்கான சாலை அமைக்கப்பட்டுவிட்ட 
நிலையில், வேலையின் இறுதிக் கட்டத்தில், இன்னும் 500 மீட்டர்   
நீளத்திற்கான சாலை மட்டுமே எஞ்சியுள்ளது என்ற 
நிலையில் விபத்து நிகழ்ந்து வெளியேறும் பாதை அடைபட்டு 
விட்டது. விபத்து நிகழ்ந்த இடம்  சில்க்யாராவில் இருந்து  200 மீட்டர் தொலைவில் உள்ளது.

நவம்பர் 12 அதிகாலை 5.30 மணிக்கு மண்சரிவு நிகழ்ந்து 
55 மீட்டர் நீளத்திற்கு வெளியேற்றப் பாதையை கான்கிரீட்
மூடிவிட்டது. 41 தொழிலாளர்களும் சுரங்கத்தினுள் 
சிக்கிக் கொண்டனர். எனினும் இதில் நமது அதிர்ஷ்டம் 
என்னவெனில், தொழிலாளர்கள் மாட்டிக்கொண்ட பகுதி 
மின்சார வசதி படைத்ததும், ஆக்சிஜன் வழங்கும் குழாய்களின் 
இருப்பும் உடைய 2 கிமீ நீளமான நன்கு கட்டி முடிக்கப்பட்ட 
பகுதியாகும். இங்கு தண்ணீர் இருந்தது. இது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை அளித்தது.  எனவே சிக்குண்ட ஆரம்ப நாட்களில் தொழிலாளர்களுக்கு இன்னல்கள் பெரிதாக எழவில்லை. 

ஆனால் மீட்புப் பணியின் காலம் நீட்டிக்க நீட்டிக்க  
ஆக்சிஜன் சப்ளை குறைந்து கொண்டே செல்லும்
அபாயம் இருந்தது. இருப்பினும் நிலைமை முற்றிலும் மோசமாவதற்குள் 
மீட்புப் பணியில் ஒரு பெரிய முன்னேற்றம் ஒன்பதாம் நாளன்று 
ஏற்பட்டது. சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்டோருக்கு 
உணவு அனுப்புவதில் மீட்புக்குழு அன்றுதான் வெற்றி அடைந்தது.  
சிக்கிக்கொண்ட தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர், 
ஆக்சிஜன் ஆகியவை வேண்டிய அளவு குழாய் மூலம் அனுப்பப் 
பட்டன. இதைத் தொடர்ந்து சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்ட 
அனைவருக்கும் தாங்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவது 
உறுதி என்ற நம்பிக்கை பிறந்தது.


உயரமே இங்கு விதியானது!
-------------------------------------------
உத்தரகாண்ட் மாநிலம் இமயமலைச் சரிவில் அமைந்த உயரமான 
மாநிலம். இங்குள்ள இடங்களும் ஊர்களும் உயரமானவை.
அதாவது கடல் மட்டத்திற்கு மேல் (above MSL = Mean Sea Level) 
சராசரியாக 2 கிமீ உயரம் உடைய ஊர்களைக் கொண்ட மாநிலம் உத்தரகாண்ட். இம்மாநிலத்தின் அதிகபட்ச உயரம் 
(maximum elevation) ஏழரை கிமீ (துல்லியமாக 7442 மீட்டர்)..

தமிழ்நாடு போன்று மிகப்பெரிதும் சமதளமான 
மாநிலம் அல்ல உத்தரகாண்ட். சென்னை, தூத்துக்குடி, 
கடலூர் போன்று கடல்மட்டத்தை விடச் சிறிதளவே உயர்ந்திருக்கும் நிலப்பரப்பைக் கொண்டதல்ல உத்தரகாண்ட். இங்கு எதைத்
தொட்டாலும் எங்கு தொட்டாலும் எப்படித் தொட்டாலும் 
உயரம்தான்; அதுவும் கிலோமீட்டர் கணக்கில்தான். எனவே 
இம்மாநிலத்தின் சுரங்கப்பாதை முதல் மேம்பாலம் வரையிலான 
கட்டுமானம் அனைத்திலும் இமயமலையின் அதிஉயரப் 
புவியியலானது மிகவும் சக்தி வாய்ந்த தாக்கத்தைச் செலுத்தி 
வருகிறது. எனவே தமிழ்நாடு போன்ற சமதள மாநிலங்களின் 
கட்டுமான நடைமுறைகள் உத்தரகாண்டில் பொருந்தாது.

தவிர்த்திருக்கக்கூடிய விபத்து!
-------------------------------------------------
ஐதராபாத்தைச் சேர்ந்த நவயுகா பொறியியல் நிறுவனம் 
(Navayugha Engineering Company Limited) என்னும் நிறுவனமே 
சில்கியாரா சுரங்கப்பாதைக்குப்  பொறுப்பேற்று 
கட்டுமானத்தை மேற்கொண்டு வந்தது. நடைபெற்ற விபத்து 
தவிர்த்திருக்கக் கூடிய விபத்தே தவிர மனித முயற்சிக்கு 
அப்பாற்பட்ட ஒன்றல்ல.  இமயமலையின் புவியியலை 
நன்கறிந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுரங்கப் 
பாதையின் கட்டுமானம் நடந்திருக்கும்பட்சத்தில், இந்த 
விபத்துக்கு இடமே இல்லாமல் போயிருக்கும். 

இந்த விபத்தை அடுத்து, மாநிலத்தில் நடைபெறும் 
அனைத்து சுரங்கப்பாதைகளின் கட்டுமானமும் 
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும்வண்ணம் 
உரிய விதத்தில் பரிசீலிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படும் 
என்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி 
அறிவித்துள்ளார். விபத்துக்கள் மீண்டும் தொடரக்கூடாது 
என்ற மாநில அரசின் அக்கறையை முதல்வர் வெளிப்படுத்தி 
உள்ளார். இது மிகப் பெரிதும் வரவேற்கக்கூடிய முடிவாகும். 
இதை நூறு சதம் கறாராகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மீட்புப் பணிகள்:
------------------------- 
நவம்பர் 12 தீபாவளியன்று அதிகாலை 5.30 மணிக்கு, கட்டப்பட்டு வரும் சில்கியாரா-பர்கோட்  சுரங்கப்பாதையில் சில்கியாரா முனையில் 
60 மீட்டர் நீளத்துக்கு மண்சரிவு ஏற்பட்டது. சுரங்கத்தில் இருந்து 
வெளியேறும் பாதையை (exit) இம்மண்சரிவு மூடிவிட்டது.  இதனுள் 
41 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் சிக்கிக்கொண்ட பகுதி 
(area of entrapment) 2 கிமீ நீளமும் 8.5 மீட்டர் உயரமும் உடைய கான்கிரீட் 
போட்டு நன்கு கட்டி முடிக்கப்பட்ட சுரங்கப்பாதையின் 
(built up portion of the tunnel) பகுதியாகும். அங்கு மின்சாரமும் தண்ணீரும்  
இருந்தன. 
 
முதல் வேலையாக மண்சரிவை அகற்ற மீட்புக் குழு முடிவு செய்தது. 
இதற்காக ஜேசிபி எந்திரங்கள் (JCB machines) பயன்படுத்தப்பட்டன. 
இடிபாடுகளைத் துளைத்து அவற்றின் ஊடாக 90 செமீ விட்டம் 
உடைய ஒரு குழாயை (900 mm pipe) நுழைப்பதற்கு திட்டமிடப்  
பட்டது. ஆனாலும் இம்முயற்சி வெற்றியளிக்கவில்லை. 

அடுத்ததாக ராட்சச எந்திரங்களைப் பயன்படுத்தி மணல்குவியலை  
அறுத்துத் துளையிட்டு உயிர் காக்கும் குழாய்களை (lifeline pipes)  உள்ளே அனுப்பும் முயற்சி தொடங்கியது. இதில் பயன்பட்ட பல்வேறு 
எந்திரங்கள் பழுதடைந்து விட்டன. அமெரிக்க எந்திரமான ஆகர் எந்திரம் (Augur machine)  மட்டும் பழுதடையாமல் தொடர்ந்து கிடைமட்டமாகத் துளையிட்டது (horizontal drilling). தொடர்ந்து 4.7 மீட்டர் நீளமுள்ள 
10ஆவது உயிர் காக்கும் குழாய் உள்செலுத்தப் பட்டது. 24.11.2023 மாலை 
5.50 மணியளவில் இக்குழாய் 2.2 மீட்டர் நீளத்திற்கு உள்செலுத்தப்பட்டது.
இதன் மூலம் உள்செலுத்தப்பட்ட மொத்த நீளம் 46.9 மீட்டர் ஆனது.
60 மீட்டர் நீளத்துக்கு அடைத்துக் கொண்ட இடிபாடுகளில் 47 மீட்டர் 
நீளம் வரை அடைந்தாயிற்று. தொடர்ந்து சில தடங்கல்கள் தோன்றி  அமெரிக்காவின் ஆகர் எந்திரமும் பழுதடைந்தது.

தொடர்ந்து செங்குத்தாகத் துளையிடும் பணி (vertical drilling)
தொடங்கியது. ஒரு மீட்டர் விட்டமுள்ள (1.0 m dia) குழாயை 
உள்ளே செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 26.11.2023 பகல் 
12.05 மணிக்குத் தொடங்கிய துளையிடும் பணி 30.80 மீட்டர் நீளத்திற்கு  
குழாயை உள்ளே செலுத்தியது.

தொடர்ந்து சுரங்கப்பாதையின் பர்கோட் முனையில் (Barkot side)
இருந்து கிடைமட்டமாகத் துளையிடுதலும் (horizonal drilling),
அடுத்து செங்குத்தான கிடைமட்டத் துளையிடுதலும்  
(perpendicular horizontal drilling) மேற்கொள்ளப் பட்டன.  
இவ்வாறு தேவைக்கேற்ப மாறி மாறி வெவ்வேறு அளவு விட்டத்துடன்
சில்கியாரா முனையில் இருந்தும் பர்கோட் முனையில் 
இருந்தும் செங்குத்தாகத் துளையிடும் பணிகள் மேற்கொள்ளப் 
பட்டன. இப்பணிகளில் மற்றவர்களுடன் இந்திய ராணுவத்தின் படைவீரர்களும் அதிகாரிகளும் செயலூக்கம் மிக்க பங்காற்றினர்.          
(தகவல் ஆதாரம்: நெடுஞசாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் 
துறை அமைச்சகத்தின் செய்தியாளர்களுக்கான வெளியீடு:
Uttarkashi Tunnel Rescue Operation Media brief, Ministry of Road transport and 
Highways).  

மீட்புப் பணியின் இறுதிக் கட்டத்தில், 60 மீட்டர் நீளத்துக்கு 
அடைத்துக்கொண்ட இடிபாடுகளில் 47 மீட்டர் நீளம் வரை
முன்னேற முடிந்தபோதிலும், சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் 
கொண்டோரை அடைவது  கடினமாக இருந்தது. இந்நிலையில் 
எலிவளைச் சுரங்கத் தொழில்நுட்பம் (Rat hole mining) எனப்படும் 
மற்றுமொரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மீட்புக்குழு 
முடிவு செய்தது. அதன்படி டெல்லி, ஜான்சி ஆகிய ஊர்களில் 
இருந்து எலிவளைச் சுரங்கப் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.

எலிவளைச் சுரங்கம் என்பது மிகவும் குறுகலாகத் தோண்டப்படும் 
ஒரு சுரங்கம் ஆகும். ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவு விட்டத்துடன்
ஒருவர் சுரங்கத்தைத் தோண்டிக்கொண்டே செல்வார். தோண்டப்பட்ட மண்ணை ஒருவர் டிராலியில் அள்ளுவார். மூன்றாமவர் டிராலியை
அப்புறப் படுத்துவார். மிகப்பெரிய எந்திரங்களோ நவீனமான 
கருவிகளோ தேவையின்றி, மரபான எளிய கருவிகளைக் கொண்டு 
(மண்வெட்டி போன்றவை) மனித முயற்சியால் தோண்டப்படும் 
சுரங்கமே எலிவளைச் சுரங்கம் ஆகும்.

மாபெரும் நவீன எந்திரங்களைப் பயன்படுத்துவதில் தடங்கல்கள் 
ஏற்பட்டுவிட்ட நிலையில், மனித முயற்சியால் எலிவளைச் 
சுரங்கத் தொழிலாளர்கள் இடிபாடுகளின் ஊடே வழி ஏற்படுத்திக் 
கொண்டு சென்று மீட்புக் குழாய்களைப் பொருத்தினர்.
சிக்குண்ட 41 பேரும் இருந்த இடத்தை எலிவளை சுரங்கப் 
பணியாளர்கள் விரைவிலேயே அடைந்து விட்டனர். பொருத்தப்பட்ட 
குழாய்களின் வழியே அவர்கள் அனைவரும் நவம்பர் 28 மாலை 
ஏழு மணியளவில் வெளியே வரத் தொடங்கினர். 41 பேரையும் 
மீட்டெடுத்த எலிவளைச் சுரங்கப் பணியாளர்கள் கதாநாயகர்களாகப் போற்றப் பட்டனர். 17 நாள் அவலம் முடிவுக்கு வந்தது.

தேசிய சர்வதேச சுரங்க நிபுணர்கள் பலர் மீட்புக்குழுவிற்கு 
ஆலோசனை வழங்கினர்.   ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்கத்துறை 
நிபுணர் பேராசிரியர் ஆர்னால்டு டிக்ஸ் (Prof Arnold Dix, underground 
tunnelling expert) சில்கியாரா களத்திற்கு வந்து மீட்புப் பணிகளை 
வழிநடத்தினார். சிக்குண்ட தொழிலாளர்கள் அனைவரையும் 
பாதுகாப்பாக மீட்டுத் தருவதாக அவர்களின் குடும்பத்தாருக்கு 
உறுதி அளித்திருந்தார் பேராசிரியர் டிப்ஸ். தாம் உறுதியளித்தபடியே 
அனைவரையும் மீட்டெடுத்த மீட்பர் ஆனார் ஆர்னால்டு டிக்ஸ்.   

41 பேரும் துளி சேதமின்றி முழுமையாகவும் பாதுகாப்பாகவும்
மீட்கப்பட்டது அறிவியலின் வெற்றி மட்டுமின்றி, மகத்துவம் மிக்க 
மானுடமுயற்சிகளின் உச்சபட்ச சாதனையும் ஆகும்.
******************************************************  
  

   

   

   
 

 
      






   
  




        


     
   
   





        



 




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக