செவ்வாய், 7 அக்டோபர், 2014

அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின்
தலைகீழ் மாற்றம் நியாயமே!
----------------------------------------------- 
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று (07.10.2014)
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனு 
விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய 
அரசு வழக்கறிஞர் பவானிசிங்  ஜெ .வுக்கு ஜாமீன் 
வழங்கக் கூடாது என்றும் அப்படி வழங்கினால் 
ஜெ . நாட்டை விட்டே ஓடி விடுவார் என்றும்    
தெரிவித்தார். இது நடந்தது காலை 12 மணி அளவில்.

உணவு இடைவேளைக்குப்பின் பிற்பகலில் 
நீதிமன்றம் மீண்டும் கூடியது. அப்போது தமது முறை 
வந்தபோது வாதாடிய பவானிசிங் தலைகீழ் மாற்றத்தை 
வெளிப்படுத்தினார். பாமர மக்கள் மொழியில் 
சொல்வதானால், அந்தர் பல்டி அடித்தார். 

இது சரியா, நியாயமா என்ற கேள்வி அனைவரின் 
உள்ளத்திலும் அலை மோதுகிறது. இதைப் பரிசீலிப்போம்.

அரசு வழக்கறிஞர் என்பவர் அரசின் கருத்தைப் பிரதிபலிப்பவர்.
பிரதிபலிக்கக் கடமைப் பட்டவர். கர்நாடக அரசைப் 
பொருத்தமட்டில், ஜெ .வின் வழக்கில் தலையிட 
விரும்பவில்லை.  ஜெ. வின் ஜாமீனை எதிர்க்க விரும்பவில்லை.
இந்தப் பிரச்சினையால் தமிழர்களுக்கும் கன்னடியர்களுக்கும் 
இனமோதல் ஏற்படுவதை விரும்பவில்லை. சித்தராமையா 
தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு, ஜெ.வின் ஜாமீனை 
எதிர்க்க விரும்பவில்லை, எதிர்க்கவில்லை என்கிற வலுவான 
செய்தியை (strong message ) நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் 
பவானிசிங் பட்டவர்த்தனமாகத் தெரிவித்தார்.  

இதன் மூலம் கன்னட-தமிழர் இனமோதலைத் தூண்டிவிட்டு
குளிர்காய நினைத்த தீய சக்திகளின் திட்டத்தை முறியடித்தார் 
கர்நாடக முதல்வர் சித்தராமையா.

ஜெ.வுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், அதற்குக் 
காரணம் நீதிமன்றமே தவிர, கர்நாடக அரசு அல்ல என்ற 
விஷயத்தை இந்தியா முழுவதும் தெரியப்படுத்தி உள்ளார் 
சித்தராமையா.ஜெ.வின் வழக்கில் எந்த விதத்திலும் 
அரசியல் தலையீடோ பழிவாங்கலோ இல்லை என்பதை 
ஜெ.வின் ஜாமீன் மனுவை எதிர்க்காமல் இருந்ததன் மூலம் 
நிரூபித்துள்ளது கர்நாடகா அரசு.

இது (பவானிசிங்  ஜெ.வின் ஜாமீன் மனுவை எதிர்க்காமல் விட்டது) ஜெயலலிதா தரப்புக்கு ஒரு மாபெரும் பின்னடைவாகவே 
சட்ட நிபுணர்களால் கருதப் படுகிறது. இதன் மூலம் தமிழர்-கன்னடர் இனமோதல் தவிர்க்கப் படுகிறது.


எனவே, பவானிசிங்கின் தலைகீழ் மாற்றம் நியாயமே.   

********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக