வியாழன், 2 ஏப்ரல், 2015

(13) கமலின் தசாவாதாரம் படத்தில் ராமானுஜர்!
இஸ்லாமியப் படையெடுப்பும் ராமானுஜரும்!
கலைஞரின் ராமானுஜர் பற்றி.....!
-------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-----------------------------------------------------------------------
தசாவாதாரம் படத்தின் தொடக்கக் காட்சி ராமானுஜர் 
காலத்து  வரலாற்று நிகழ்வு ஒன்றைப் பற்றியது ஆகும்.
இரண்டாம் குலோத்துங்க சோழன்  சமயப்பொறை அற்றவனாக 
(மத சகிப்புத் தன்மை இல்லாதது) இருந்தான் என்றும், 
தீவிர சைவ சமயப் பற்றும் வைணவ வெறுப்பும் கொண்ட அவன்,  
திருவரங்கம் கோவிலில் உள்ள கோவிந்தராஜர் சிலையைப் 
பெயர்த்து எடுத்து அகற்றினான் என்பது தசாவதாரம் 
படத்தில் காட்டப் படுகிறது.
**
காட்சித் தொடக்கத்தில் இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் 
(1101-1200) நடந்தது என்று கமல் கூறுவார். அது உண்மையே.
சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனை கர்வம் தவிர்க்கச் சொல்"
என்று கமல் பேசும் வசனம்,  சிலையை அகற்றிய மன்னன் 
இரண்டாம் குலோத்துங்கனே என்பதை உறுதி செய்யும்.
முதலாம் குலோத்துங்கன் கி.பி 1120இல் இறந்ததும், அவன் 
மகன் விக்கிரம சோழன் அரசன் ஆகிறான். இவன் இறந்ததும் 
1136இல் இரண்டாம் குலோத்துங்கன் அரசன் ஆகிறான்.
இவன் சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனே.எனவே கமல் 
கூறியதில் தவறில்லை.
**
ஆயினும் சில வரலாற்றாசிரியர்கள் இதில் முரண்படுகிறனர்.
முதலாம் குலோத்துங்கன் காலத்திய நிகழ்வு இது என்று 
அவர்கள் கூறுகின்றனர்.  எது நிகழ்வு, எது புனைவு என்று 
அறுதியிட்டுக் கூற இயலாத நிலையில்தான் இந்திய 
வரலாறு எழுதப் பட்டிருக்கிறது.
**
இரண்டாம் குலோத்துங்கனாக நடித்திருக்கும் நடிகர் 
நெப்போலியன், கூரத்தாழ்வான் கண் குருடான கதை 
தெரியாதா என்று கமலிடம் எச்சரிப்பார். ராமானுஜரின் 
சூத்திரச் சீடரான கூரத்தாழ்வான் கண் இழந்தது கதை அல்ல 
உண்மை என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.     
புனைவும் உண்மையும் கலந்த கலவையாக இலக்கியம் 
இருப்பது சிறப்பு. வரலாறு அவ்விதம் இருப்பது சிறப்பல்ல.,      
**
கலைஞரின் ராமானுஜ காவியத்தில் இக்காட்சி இடம் பெறுவது 
உறுதி என்று நான் எண்ணுகிறேன். தமிழக  வரலாற்றை 
நன்கு கற்றறிந்த அறிஞர்கள் மிகச் சிலரே. அவர்களுள் 
கலைஞரும் ஒருவர். எனவே மிகுந்த வரலாற்றுத் 
துல்லியத்துடன் ராமானுஜ காவியம் இயற்றப்படும் 
என்று நம்புகிறேன்.
**
ராமானுஜர் இசுலாமியப் படையெடுப்பை வெற்றிகரமாக 
எதிர்கொண்டார் என்று சிலர் பேசவும் எழுதவும் 
செய்கின்றனர். இது முற்றிலும் உண்மைக்குப் 
புறம்பானது. ராமானுஜர் காலத்தில் தென்னிந்தியாவில் 
எவ்விதமான இசுலாமியப் படைஎடுப்பும் கிடையாது. 
ராமனுஜரின் காலம் 1017-1137. தமிழ்நாட்டின் முதல் 
இஸ்லாமியப் படையெடுப்பு கி.பி 1311இல்தான் 
நடந்தது. அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதியான  
மாலிக் காஃபூர் பாண்டிய நாட்டின் மீது, மதுரையின் மீது 
படையெடுத்த வந்தது 1311இல். அதாவது, ராமானுஜர் 
மறைந்து 174 ஆண்டுகள் கழிந்த பின்னரே, மாலிக் காஃபூரின்
படைஎடுப்பு நிகழ்கிறது.
**
எனவே இசுலாமியப் படையெடுப்பை ராமானுஜர் எதிர்கொண்டார் 
என்பது முற்றிலும் பொய்யான செய்தி.
---------------------------------------------------------------------------------------------------
தொடரும் (அடுத்த கட்டுரையுடன் முடியும்)
*************************************************************************      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக