புதன், 8 ஏப்ரல், 2015

(8) சூத்திரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி 
ஊற்றிய மனுதர்மமும், கோபுரத்தின் மேலேறி 
சூத்திரனின் காதில் வேதத்தை ஓதிய ராமானுஜரும்!

கலைஞரின் ராமானுஜ காவியக் காட்சிகளாய்........! 
---------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------------------------
ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களை மட்டுமல்ல,
வேறு எந்தப் புனித வாசகங்களையும் (holy text) பார்ப்பனர்கள் 
ஓதும்போது, அந்த வேத கோஷங்கள் சூத்திரனின் காதில் 
விழுந்து விடக் கூடாது. விழுந்து விட்டால் சூத்திரனின் 
காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். இது 
மனுவின் சட்டம். மனுதர்ம சாஸ்திரம் என்பது காவியமோ 
நீதிநூலோ அல்ல. அது தண்டனைச் சட்டத் தொகுப்பு.
இந்தியன் பீனல் கோட், கிரிமினல் புரசீஜர் கோட் (IPC, CrPC )
என்பது போல அது அந்தக் காலச் சட்டத் தொகுப்பு.
**
ராமானுஜர் தம் குருவான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் 
மிகவும் முயன்று நாராயண மந்திரத்தைக் கற்றார்.
யாருக்கும் அந்த மந்திரத்தைக் கூறக் கூடாது என்ற 
நிபந்தனையுடன்தான் ராமானுஜருக்கு அதைக் கற்றுக் 
கொடுத்தார் குரு. ஆனால் நிபந்தனையை மீறி, நாராயண 
மந்திரத்தை அனைவருக்கும் தெரியப் படுத்த ராமானுஜர் 
எண்ணினார். சூத்திரர், தீண்டப்படாதோர், தாழ்குலத்தோர் 
உள்ளிட்ட அனைவரையும் திருக்கோஷ்டியூர் கோவிலில் 
திரட்டினார். கோவிலின் முன்வாசல் கோபுரத்தின் மேலேறி,
அனைவரும் கேட்கும்வண்ணம் உரத்த குரலில் 
நாராயண மந்திரத்தை முழங்கினார்.
**

செய்தி கேள்வியுற்று ஓடோடி வந்த ராமானுஜரின் குரு 
ராமானுஜரை நரகத்துக்குப் போவாய் என்று சபித்தார்.
"நான் நரகத்துக்குப் போனாலும் பரவாயில்லை, மந்திரத்தைக் 
கேட்டவர்கள் சொர்க்கத்துக்குப் போவதே எனக்கு வேண்டும்" 
என்று உறுதிபட நின்றார் ராமானுஜர்.
**

ராமானுஜர் வாழ்ந்த பதினொன்று-பன்னிரண்டாம் 
நூற்றாண்டுகளில் மனுவின் சட்டங்களை எதிர்ப்பது 
என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாதது.
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில், ராமானுஜருக்கு
முன்பு வேறு எந்த மதாச்சாரியாரும், மூர்க்கமான 
மனுதர்மத்தை எதிர்த்து நின்றது இல்லை. ராமானுஜரே 
முதல் முதல் மனு-எதிர்ப்புப் போராளி.
**
இத்தகு சிறப்பும் மேன்மையும் படைத்த ராமானுஜரைக் 
கண்டெடுத்து காவியம் ஆக்கும் கலைஞரைக் கைகூப்பி 
வணங்குகிறேன்,
"பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை 
இகழ்தல் அதனிலும் இலமே"
என்ற புறநானூற்றுக் கொள்கையையும் மீறி!
------------------------------------------------------------------------------------------
தொடரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக