வியாழன், 7 டிசம்பர், 2017

நம்முடைய மனத்தில் சிந்தனை என்பதே மானுட விடுதலைக்கானது என்ற மரபான கருத்து ஆழப்பதிந்திருப்பதனால் இந்த முடிவுகளுக்கு சட்டென்று வந்துவிடுகிறோம். அந்த முன்முடிவுகள் இல்லாமல் தான் இந்த விஷயத்தை அணுக வேண்டும். சிந்தனை என்பது எப்போதும் அபப்டி இருபப்தில்லை. அது ஒரு தேடலாகவும் எதிர்வினையாகவுமே முன்னகர்கிறது. ஆகவே இம்மாதிரி விஷயங்களை ஒருபோதும் ஒற்றைவரியாக குறுக்கிக் கொள்ளலாகாது.
1. நவீனத்துவம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான ஒரு மாபெரும் மானுடவிடுதலைப்போக்கு. ‘மானுடம்’ என்ற கருதுகோளை உலகளாவிய தளத்தில் பரப்பியது அது. அதேபோல தனிமனித உரிமை, ஜனநாயகம், பகுத்தறிவு போன்ற கருத்துக்களை மனிதகுலத்துக்கு எடுத்துச் சென்றதும் நவீனத்துவமே. அதன் விளைவாகவே இன்று நாம் காணும் உலகளாவிய மானுட மேம்பாடு சாத்தியமானது அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் போக்குவரது உரிமை அடிப்படை மானுட உரிமைகள் போன்ற இன்று சாத்தியமாகியிருக்கும் எல்லா விஷயங்களும் நவீனத்துவத்தால் உருவாக்கப்பட்டவையே. நவீனத்துவமா பின் நவீனத்துவமா எது மானுட இனத்துக்கு அதிக பங்களிப்பை ஆற்றியது என்று கேட்டால் வரலாற்று நோக்குள்ளவர்கள் நவீனத்துவத்தையே சுட்டிக்காட்டுவார்கள்
2 நவீனத்துவம் என்றால் முதலாளியம் மட்டுமல்ல பொதுவுடைமையும்கூடத்தான். மையப்படுத்தல், உலகளாவப்பொதுமைப்படுத்தல் , புறவய அறிவியல் நோக்கை முன்னிலைப்படுத்தல் ஆகிய அம்சங்கள் மேலோங்கி இருந்தால் அது நவீனத்துவப் பண்புக்கூறு கொண்டது. ஆகவே பின்நவீனத்துவம் மார்க்ஸியத்தையும் பெருமொழிபாக பார்த்து கட்டவிழ்க்கவே முயல்கிறது.
3 பின் நவீனத்துவம் என்பது நவீனத்துவத்தின் மேற்கண்ட மூன்று இயல்புகளால் விடுபடும் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டும் ஒரு போக்கு மட்டுமே. நவீனத்துவம் ஒரு செயல் அறிக்கை என்றால் பின்நவீனத்துவம் ஓர் அடிக்குறிப்பு. அல்லது திருத்தல்குறிப்பு மட்டுமே.
4 ஆகவே பின் நவீனத்துவத்திற்கு ‘சுயமான கருத்துக்கள்’ என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். நவீனத்துவம் உருவாக்கியதை அது அவிழ்த்துப்பார்க்கும், அவ்வளவுதான். மையமழிக்கும்,பிராந்தியப்படுத்தும்,அதர்க்கமாக்கி பார்க்கும்.
5. பின்நவீனத்துவம் எப்போதும் முற்போக்கானதாக இருக்குமா என்றால் அதுவும் இல்லை. பலசமயம் உயர்ந்த விழுமிய மையங்களை கவிழ்த்துவிடுகிறது. ஆபத்தான பிராந்திய வாதங்களை முன்வைத்துவிடுகிறது. எளிமையான பொதுப்புத்திக்கு எதிராகவும் திரும்பி விடுகிறது. மேல்நாட்டு பின்நவீனத்துவம் கட்டற்றது, படைப்பூக்கம் கொண்டது. அதேசமயம் ஆபத்தானதும் கூட. அதை மிகக் கவனமாகவே அணுக வேண்டும். அது எந்த விஷயத்தை கவனப்படுத்துகிறது, அதன் விளைவுகள் என்ன என்ற கவனத்துடன் மட்டுமே அணுகப்படவேண்டியது அது. பின்நவீனத்துவம் ஒற்றைப்பெரும்போக்கு அல்ல என்று அதனாலேயே சொன்னேன். அதற்குள் பல வழிகள் உள்ளன.
6 நவீனத்துவம் உயரிய கருத்தாக்கங்களையும் இலட்சியங்களையும் மானுடகுலத்துக்கு முன்வைக்கிறது. ஆனால் அவற்றை பெரும் அமைப்புகளாக ஆக்கிவிடுகிறது. அந்த அமைப்புகள் அழிவுத்தன்மை கொண்டவை என்று வரலாறு காட்டுகிறது. ஆகவே அமைப்புகளை கட்டவிழ்த்துப்பார்க்க பின்நவீனத்துவம் முயல்கிறது அமைப்புகளால் வெளியே நிறுத்தப்படும் விஷயங்களை கவனப்படுத்துகிறது. பெரிய விஷயங்களுக்குப் பதில் சின்னவிஷயங்களை முன்னிறுத்துகிறது.
சரியான உதாரணம் வேண்டும் என்றால் நாம் நம் பள்ளியையே எடுத்துக்கொள்வோம். பள்ளி என்பது எவ்வளவு முற்போக்கான அமைப்பு . சென்றகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட கோடானுகோடி மக்களுக்கு கல்வியை அளித்தது பள்ளி அல்லவா? அவர்களுக்கு முன்னேறும் வாய்ப்பை உரிமைக்கான வாய்ப்பை அளித்தது பள்ளிதானே. அதன் பங்களிப்பை எவராவது மறுக்க முடியுமா என்ன? பள்ளி நவீனத்துவத்தின் ஒரு முகம் என்று உருவகிக்கலாம்.
ஆனால் அத்தனை மாணவர்களையும் அது சமமாக நடத்துகிறது. அனைவருக்கும் ஒரே கல்வியை அளிக்கிறது. அதனுடன் உடன்படாதவர்களை தண்டிக்கிறது. அதில் நல்ல திறமை காட்டும் மாணவர்களுக்கு அது முன்னுரிமை கொடுக்கிறது. அவர்களின் அதிகாரத்தை உருவாக்குகிறது. அந்த முறையுடன் ஒத்துப்போகாதவர்களை அது வெளியே தள்ளுகிறது. அவர்களை அன்னியர்களாக ஆக்கி கீழே நிறுத்துகிறது. அவர்களை ஒடுக்குகிறது. [நானும் அப்படி ஒடுக்கப்பட்டு வெளியே தள்ளப்பட்ட மாணவன்]
இவ்வாறு வெளியே தள்ளப்படுபவர்களை கூர்ந்து கவனித்து பள்ளி என்ற அமைப்பின் சிக்கல் என்ன, அதில் உள்ள அதிகாரமும் வன்முறையும் என்ன என்று ஆராய்வது பின்நவீனத்துவ நோக்கு. பள்ளியால் வெளியே தள்ளப்படுபவர்களில் மேதைகளும் உண்டு, முட்டாள்களும் உண்டு. அவர்களை வெளியேதள்ளாமல் பள்ளி செயல்பட முடியாது. அவர்களுக்கும் இடமுள்ள ஒரு கல்வியமைப்பை கற்பனைசெய்வதே சரியான பின்நவீனத்துவம். மையமான கல்விக்கொள்கை, அனைவருக்கும் உரிய பாடத்திட்டம் எதுவும் இல்லாத கல்வியமைப்பு ஒன்றை அது உருவாக்க முனைகிறது.
அதேசமயம் பள்ளியே தேவையில்லை என்பதும் பின்நவீனத்துவமே. பள்ளியின் ஒழுங்கை ஒரு அராஜமாக ஆக்கவேண்டும் என்று சொல்வதும் பின்நவீனத்துவம். பள்ளிக்குப் பதிலாக தந்தை மகனுக்குக் கற்றுக்கொடுத்தால்போதும் குலக்கல்வியே போதும் என்றோ என்றோ பிள்ளைகளை அவர்களாக வளரவிடலாம் என்றோ சொல்லும் பின்நவீனத்துவப் போக்குகளும் இருக்கலாம். எது உபயோகமானது என்பதே அளவுகோல்
7 ஆகவே அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு அந்த கருத்துநிலைகளும் இலட்சியங்களும் இயங்க முடியுமா என்று பார்ப்பதே தேவை. பின்நவீனத்துவத்தில் உள்ள அந்தப்போக்கே எனக்கு உவப்பானது. ஆகவே அது கெட்டது இது நல்லது என்று எளிமைப்படுத்திக்கொள்ள வேண்டாம்.
ஜெ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக