வியாழன், 7 ஜனவரி, 2021

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள் தேர்தலில் பங்கேற்கலாமா?

மார்க்சியத்தின் வழிகாட்டுதல் என்ன?

---------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------------- 

சட்ட மன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் 

கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கலாமா?

மார்க்சியம் என்ன சொல்கிறது? மிகத் தெளிவான 

பதிலை மார்க்சியம் வைத்திருக்கிறது.


அதாவது ஒரு நாட்டில் நிலவும் குறிப்பான சூழ்நிலைக்கு 

ஏற்ப, கம்யூனிஸ்ட் கட்சியானது தேர்தல்களில் 

பங்கேற்கலாம் அல்லது புறக்கணிக்கலாம். 

பங்கேற்பு அல்லது புறக்கணிப்பு என்பதை 

அந்தந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியே தீர்மானிக்கும்.

இதுதான் மார்க்சிய இலக்கணம்.


ஜெர்மனியில் காரல்  லீப்னஹெட் நாடாளுமன்றத்திற்குத் 

தேர்ந்தெடுக்கப் பட்டு இருந்தார். ஜாரின் ரஷ்யாவில்

டூமா எனப்படும் நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் 

பங்கேற்கவும் செய்தனர்; புறக்கணிக்கவும் செய்தனர்.


எனவே புறக்கணிப்புதான் புரட்ச்சிகர மார்க்சியம் 

என்று அதை பிடித்துக் கொண்டு தொங்க வேண்டியதில்லை.

ஆனால் 1969ல் தொடங்கி தேர்தல் புறக்கணிப்பே 

அதீத புரட்சிகரமானது என்ற நிலைப்பாடு நக்சல்பாரி 

இயக்கத்தால் முன்வைக்கப் பட்டது. இதற்கு 

சாரு மஜூம்தாரின் முழுமையான சம்மதம் இருந்தது.


மிகப்பெரிதும் அடிமுட்டாள்தனமான நிலைபாடாகும் 

இது. பங்கேற்பு புறக்கணிப்பு இரண்டில் எதை 

வேண்டுமானாலும் சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளலாம் 

என்பதுதான் மார்க்சிய போதனை. இதை மீறி 

பங்கேற்பது பிற்போக்கானது என்றும் புறக்கணிப்பதே

புரட்சிகரமானது என்றும் ஒரு முட்டாள்தனமான 

நிலையை நக்சல்பாரி இயக்கத்தின் அத்தனை 

குழுக்களும் மேற்கொண்டிருந்தன.


தமிழ்நாட்டில் இதில் அதீத உச்சத்தைக் கண்டது SOC 

எனப்படும் மகஇக அமைப்பாகும். தேர்தல் பாதை 

திருடர் பாதை  என்று ஒரு சுவர் விடாமல் எழுதிய 

இம்முட்டாள்கள் போன தேர்தலிலேயே திமுகவை 

ஆதரித்துச் செயல்படத் தொடங்கினர்.


அப்படியானால் இன்றைய நிலையில் தேர்தலில் 

பங்கேற்கலாமா? எதிர்வரும் 2021 தமிழக சட்டமன்றத் 

தேர்தலில் பங்கேற்கலாமா? ஒட்டுப் போடலாமா?

நமக்குத் பிடித்த கட்சியை ஆதரித்துத் தேர்தல் 

வேலை செய்யலாமா?


 தாராளமாக தேர்தலில் பங்கேற்கலாம். அதற்கு 

மார்க்சியம் எந்தத் தடையையும் விதிக்கவில்லை.

ஆனால் 20021 தமிழகத் தேர்தலில் பங்கேற்பதால் 

ஒரு அணுவளவும் பயன் விளையாது. எனவே ஏதேனும் 

ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ ஆதரவு 

தெரிவித்து தேர்தல் காலத்தில் இறங்குவது 

அடிமுட்டாள்தனம் தவிர வேறில்லை.


மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள் தேர்தலில் பங்கேற்பதற்கு 

முன்னால், தேர்தல் முறையின் நிலப்பிரபுத்துவக் 

கூறுகள் நீகாபி பட்டிருக்க வேண்டும். முதலில் 

அதற்காக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள் போராட 

வேண்டும்.

1) இந்தியாவின் தற்போதைய தேர்தல் முறை  First past the post

எனப்படும் முறையாகும். அதாவது போட்டி இடுகிறவர்களில் 

மற்றவர்களை விட அதிக வாக்குகள் பெற்று, வெற்றிக் 

கம்பத்தை முதலில் தொடுபவரே வெற்றியாளர் என்னும் 

மறைதான் இந்தியாவில் செயல்படுகிறது. இது இந்தியாவுக்குப் 

பொருத்தமற்றது.


2) விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் என்னும் தேர்தல் முறை 

இந்தியாவில் கொண்டு வரப்பட வேண்டும். சின்னஞ் சிறிய

நாடான இலங்கையில் கூட, இம்முறை வெற்றிகரமாகச் 

செயல்பட்டு வருகிறது.


3) தேர்ந்தெடுக்கப் பட்டவர் தவறிழைத்தால் அல்லது 

ஊழல் புரிந்தால், அவரைத் திருப்பி அழைக்கும் உரிமை 

(Right to recall) தொகுதி மக்களுக்கு இருக்க வேண்டும்.


4) பணம் கொடுத்து ஒட்டு வாங்கும் இழிவைத் தடை 

செய்ய வேண்டும்; பெருமளவு கட்டுப்படுத்த வேண்டும்.

திருமங்கலம் பார்முலா போன்ற வரலாற்றுக் 

களங்கங்களைத் துடைத்தெறியாமல் தேர்தல் 

நடத்துவது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.


இன்னும் சில உள்ளன. குறைந்தது விகிதாச்சாரப் 

பிரதிநித்தித்துவம் உறுதி செய்யப் படாமல் 

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள் தேர்தலில் பங்கேற்பது 

அடுத்த முட்டாள்தனம் ஆகும்.


விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், முஸ்லீம் லீக் 

போன்ற கட்சிகள் திமுக அதிமுகவின் அடிமைகளாக 

இருக்காமல், சுய பலத்தில், சொந்த செல்வாக்கில் 

ஒன்றிரண்டு இடங்களை எப்போது பெற முடியும்?

விகிதாச்சாரப்  பிரதிநிதித்துவம் வந்தால்தான் பெற 

முடியும். அதுபோல யார் தயவும் இல்லாமல் மார்க்சிஸ்ட் 

லெனினிஸ்டுகள் தங்களின் செல்வாக்கின் மெய்யான 

பிரதிபலிப்பைப் பெற வேண்டுமெனில் விகிதாச்சாரப் 

பிரதிநித்துத்துவம் உறுதிப்பட வேண்டும்.

*********************************************            

 


 

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக