இயற்பியல் நோபெல் பரிசு 2024.
---------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------
2024ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபெல் பரிசு
1) அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலை
பேராசிரியர் ஜான் ஹாப்ஃபீல்டு (வயது 91)
2) இங்கிலாந்தில் பிறந்து கனடாவில் வாழும்
டொரொன்டோ பல்கலை பேராசிரியர்
ஜியோஃப்ரி ஹிண்டன் (வயது 77)
ஆகிய இருவருக்கும் அறிவிக்கப் பட்டுள்ளது.
பரிசுத் தொகை 11 மில்லியன் ஸ்வீடிஷ்
குரோனார்,ஆகும் (இந்திய மதிப்பில் ரூ 9 கோடி
சற்றுத் தோராயமாக). இத்தொகை இருவருக்கும்
சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
டிசம்பர் 10 ஆம் நாளில் சுவீடனின் தலைநகர்
ஸ்டாக்ஹோமில் நோபெல் பரிசு வழங்கும் விழா
நடைபெறும். அன்றுதான் நோபெல் பரிசின்
நிறுவனர் ஆல்பிரட் நோபெலின் நினைவுநாள்.
2024 இயற்பியல் நோபெல் பரிசு சர்ச்சைக்கு
இடமளித்து உள்ளது. இயற்பியல் பிரிவின்கீழ்
இப்பரிசு வழங்கப் பட்டிருப்பினும், சாராம்சத்தில்
செயற்கை நுண்ணறிவு சார்ந்த கணினி
அறிவியல் சாதனைகளே பரிசு கிடைப்பதற்குக்
காரணமாக அமைந்துள்ளன என்பது கண்கூடு.
அறிவியலின் அனைத்துத் துறைகளையும்
ஆள்வது இயற்பியல் என்ற அடிப்படையில்
கணினி அறிவியல் (computer science) சாதனைகளும்
இயற்பியலின்கீழ் வருவது இயற்கையே
அதில் குறைகாண எதுவுமில்லை.
அதே நேரத்தில் தனியொரு துறையாக தன்னை
நிறுவிக் கொண்டுவரும் சமகால அறிவியலான
கணினி அறிவியலுக்கு தனியாக ஒரு நோபல் பரிசு
வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்பது அறிவியல்
ஆர்வலர்களின் விருப்பமாய் உள்ளது.
1895ல் எழுதப்பட்ட ஆல்பிரட் நோபெலின் மூல
உயிலின்படி ஐந்து துறைகளுக்கு மட்டுமே
நோபெல் பரிசு வழங்க வேண்டும். மருந்தியல்,
இயற்பியல், வேதியியல், இலக்கியம், உலக
சமாதானம் ஆகிய ஐந்து துறைகளே அவை.
இந்த ஐந்தில் பொருளாதாரம் கிடையாது. 1901 முதல்
மேற்கூறிய ஐந்து துறைகளிலும் பரிசு வழங்கப்
பட்டு வருகிறது. இயற்பியலுக்கான முதல் நோபெல்
பரிசு எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்த
ரியன்டஜனுக்கு (Wilhelm Roentgen 1845-1923) 1901ல்
வழங்கப்பட்டது.
சுவீடன் அரசின் மத்திய வங்கியானது நோபெலின்
நினைவாக பொருளாதாரத்திற்கு ஒரு பரிசு வழங்க
வேண்டும் என்று விரும்பி அதற்கான
நன்கொடையையும் வழங்கி பொருளாதார
நோபெல் பரிசை உருவாக்கியது. 1969ல்
பொருளாதாரத்திற்கான முதல் நோபெல் பரிசு
வழங்கப்பட்டது.
ஆலபிரட் நோபெலின் மூல உயிலில் குறிப்பிடாத
நிலையிலும், பொருளாதாரத்தின் முக்கியத்துவம்
கருதி அதற்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. அது
போல சமகாலத்தில் வளர்ந்து வரும் கணினி
அறிவியல் துறைக்கும் ஒரு நோபெல் பரிசை
வழங்க வேண்டும் என்று சுவீடன் நாட்டின்
ராயல் சுவீடிஷ் அகாடமியை நாம் கேட்டுக்
கொள்கிறோம்.
======================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக