வெள்ளி, 30 செப்டம்பர், 2016

(5) சொற்காமுகர்களும் ரங்கநாயகம்மாவும்!
ரங்கநாயகம்மா நூல் பற்றிய திறனாய்வு!
அம்பேத்காரின் ஆளுமைக்குப் பங்கம் நேராமல்
அவரின் கோட்பாடுகளை மட்டும் விமர்சிக்கும் நூல்!
----------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------- 
"ஒரு தத்துவத்தைப் பரிசீலிப்பவர்களுக்கு அதன் மீது
சிறிதளவாவது பரிவு இருத்தல் வேண்டும்; இல்லாவிடில்
அதன் நல்ல அம்சங்கள் புலப்படாமலே போய்விடும்"
என்பார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். அம்பேத்கார் மீது மிகவும்
பரிவுடனே ரங்கநாயகம்மா  இந்த நூலை எழுதி இருக்கிறார்.
அம்பேத்காரின் ஆக்கபூர்வமான பங்களிப்பை
அங்கீகரித்தும், அம்பேத்கார் முன்வைத்த கோட்பாட்டுப்
பிரச்சினைகளில், தமக்கு முரண்பாடு உள்ள இடங்களில்
சமரசமற்றும் விமர்சிக்கிறார் ரங்கநாயகம்மா.

அதே நேரத்தில், அம்பேத்காரின் பல்வேறு நடைமுறைகளின் 
(what was practiced by Ambedkar)  மீது, கறாரான விமர்சனம்
வைப்பதற்குப் பதிலாக,  மிகவும் மென்மையான
அணுகுமுறையையே கையாள்கிறார் ரங்கநாயகம்மா.

மதமாற்றமே தீர்வு என்றும், தாம் மதம் மாறப் போவதாகவும்
1936ஆம் ஆண்டிலேயே அம்பேத்கார் அறிவித்தார். ஆனால்,
1956இல், தம் அந்திம காலத்தில்தான், அதுவும் தம்முடைய
மறைவுக்குச் சிறிது காலம் முன்புதான் அம்பேத்கார்
பௌத்த மதத்திற்கு மாறுகிறார். மதமாற்றமே தீர்வு
என்று உறுதியாக முடிவு செய்த அம்பேத்கார், ஏன்  
இருபது ஆண்டுகள் காத்திருந்தார்? 1936 முதல்
1956 வரையிலான இந்த இருபது ஆண்டுகளில் தாம்
எடுத்த முடிவைச் செயலாக்க முடியாமல் அம்பேத்காரைக்
கட்டிப் போட்ட காரணிகள் யாவை?

இந்தக் கேள்வியைக் கேட்கும் ரங்கநாயகம்மா இதற்கான
பதிலை வாசகர்களுக்குத் தருவதில் துளியும் அக்கறை
காட்டவில்லை. மெலிந்த குரலில் இக்கேள்வியைக் கேட்டு
விட்டுக் கடந்து சென்று விடுகிறார். இதற்கான பதிலை
ரங்கநாயகம்மா அறிவார்; மார்க்சிய வெளிச்சத்தில்
அம்பேத்காரைத் திறனாய்வு செய்யும் அனைவரும்
அறிவார்கள்.

இந்தக் கேள்விக்கு விடையளிப்பதானது அம்பேத்காருக்குள்
இருக்கும் ஒரு சராசரி அரசியல்வாதியை, சமரசம் செய்து
கொள்ளும் அரசியல்வாதியை வெளிக்கொண்டு
வந்து விடும் என்று அஞ்சிய ரங்கநாயகம்மா,
விடையளிப்பதைத் தவிர்த்து விடுகிறார்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

1936இலோ  அல்லது அதைத் தொடர்ந்த சில
ஆண்டுகளுக்குள்ளோ  மதம் மாறி இருப்பாரேயானால், அம்பேத்கார் சட்ட அமைச்சராகவோ, அரசியல் நிர்ணய
சபைத் தலைவராகவோ நியமிக்கப்பட்டு இருக்க மாட்டார்
என்ற  உண்மையை அரசியல் நோக்கர்கள் அறிவார்கள்.

ஆக, கோட்பாடு, நடைமுறை (theory and practice) என்ற
இரண்டில், அம்பேத்காரின் கோட்பாடுகள் மீது மட்டுமே
கூர்மையான விமர்சனத்தை ரங்கநாயகம்மா
முன்வைக்கிறார். அம்பேத்காரின் நடைமுறைகள் 
அனைத்தையும்  கணக்கில் கொண்டு விமர்சிப்பதை
உணர்வுபூர்வமாகவே தவிர்த்து விடுகிறார். ஒன்றிரண்டு
நடைமுறைகளைப் போகிறபோக்கில் மெலிதாக
விமர்சிப்பதைத் தவிர.

தாம் சமர் புரிவது அம்பேத்கார் முன்மொழிந்த
கோட்பாடுகளுடன்தானே தவிர, அவரின் ஆளுமை
மீதல்ல என்ற கருத்தில் உறுதியுடன் இருந்த
ரங்கநாயகம்மா, தமது நூலில் அதை வெளிப்படுத்தி
உள்ளார். அம்பேத்காரின் ஆளுமைக்கு எவ்வித பங்கமும்
நேராமல், தமது கோட்பாட்டுச் சமரில் வெற்றி அடைந்து
இருக்கிறார் ரங்கநாயகம்மா இந்த நூலில்.

ரங்கநாயகம்மாவின் இந்த நூல் சாதியம் குறித்த
ஓர் ஆய்வு நூல் அல்ல. மாறாக, இது சாதியம் குறித்த
அம்பேத்காரின் கோட்பாடுகள் மீதான ஒரு
திறனாய்வு நூல். ஆய்வு  வேறு; திறனாய்வு வேறு.
நன்கு கவனிக்கவும்: சாதியம் பற்றிய ரங்கநாயகம்மாவின்
ஆய்வு நூல் அல்ல இது; மாறாக, சாதியம் பற்றிய
அம்பேத்காரின் கோட்பாடுகளைத் திறனாய்வு செய்யும்
ஒரு நூல் இது.
 
தமது சொந்த முயற்சியில் ஏராளமான தரவுகளைச்
சேகரித்து, அவற்றின் நம்பகத் தன்மையை உறுதி 
செய்து, அவற்றைப் பகுத்து ஆய்ந்து, அவற்றின் மீது
கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விடை கண்டு,
விடைகளைத் தொகுத்து, தாம் தருவித்த முடிவுகளை
முன்வைப்பது ஒரு ஆய்வு நூலின் இலக்கணம் ஆகும்.
தமது நூல் ஓர் ஆய்வு நூல் என்று ரங்கநாயகம்மா
உரிமை கோரவில்லை. சாதியம் என்ற பிரச்சினையைக்
கையில் எடுத்து, அதன் தோற்றம், வளர்ச்சி, இயக்கம்
ஆகியவற்றை ஆய்ந்து அதற்குத் தீர்வும் கண்டு
விட்டேன் என்று ரங்கநாயகம்மா உரிமை கோரவில்லை.

தமது நூலைப் பற்றி, "அம்பேத்காரின் எழுத்துக்களை
அடிப்படையாகக் கொண்ட தலித் பிரச்சினைகள்
தொடர்பான விவாதம் இது" என்று ரங்கநாயகம்மா
தெளிவாகக்  கூறுகிறார். (பார்க்க: நூலின் தெலுங்கு
முதல் பதிப்பு முன்னுரை)

சாதியம் பற்றிய அம்பேத்காரின் கோட்பாடுகளைத்
திறனாய்வு செய்யும் நூல் இது. இதில் ரங்கநாயகம்மா
தெளிவாக இருக்கிறார்; வாசகர்களும் தெளிவாக
இருக்கிறார்கள். ஆனால் வினோத் மிஸ்ரா குழுவைச்
சேர்ந்த சில தோழர்கள் மட்டும் தாமும் குழம்பி
வாசகர்களையும் குழப்ப முயன்று தோல்வி
அடைகிறார்கள்.

ஆய்வுக்கும் திறனாய்வுக்கும் இடையிலான பாரதூரமான
வேறுபாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும். கம்ப
ராமாயணம் ஒரு நூல்; இதன் மீது ஆயிரம் திறனாய்வு
நூல்கள் வெளிவந்துள்ளன. "அரசும் புரட்சியும்" என்பது
லெனின் எழுதிய ஒரு நூல்; இதன் மீது ஆயிரம் திறனாய்வு
நூல்கள் வெளிவந்துள்ளன.

திறனாய்வு என்பதே முதலாளித்துவச் சமூகம்
வழங்கிய கொடை. நிலப்பிரபுத்துவ சமூகத்தில்
திறனாய்வு என்பதே கிடையாது. சிலப்பதிகாரத்தை
இளங்கோவடிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில்
எழுதினார். அக்காலத்தில் அதற்கு உரைதான் உண்டே
தவிர, திறனாய்வு எதுவும் கிடையாது. அடியார்க்கு
நல்லார் உரை எழுதினார். இயற்றப்பட்ட நூலுக்கு
உரை எழுதலாமே தவிர, திறனாய்வு எழுத இயலாது.

ஆக, ரங்கநாயகம்மாவின் நூல் ஒரு திறனாய்வு நூல்
என்ற உண்மையை இங்கு நிரூபித்து உள்ளோம். ஒரு
திறனாய்வு நூலை விமர்சனம் செய்கிற முறை வேறு;
அதற்கான அளவுகோல்கள் வேறு. ஆய்வு நூலை
விமர்சிக்கும் அதே அளவுகோல்களைக் கொண்டு
திறனாய்வு நூலை விமர்சிக்க முனைவது
எடைக்  கற்களைக் கொண்டு  தண்ணீரை அளக்க
முயல்வது போலாகும்.

லெனின் எழுதிய "என்ன செய்ய வேண்டும்?" என்ற
நூலைப் பலர் படித்து இருக்கக் கூடும். அந்த நூல்
ஒரு திறனாய்வு நூலே. அது polemical debatesஇன்   
தொகுப்பு. தம் சம காலத்தில் வாழ்ந்த
திருத்தல்வாதிகளான (revisionists) மார்ட்டினோவ்
போன்றோரின் கருத்துகளை,  முன்மொழிவுகளை
விமர்சித்து லெனின் எழுதிய கட்டுரைகளின்
தொகுப்பே அந்த நூல். ரபோச்சிய தேலா, ரபோச்சிய
மிஸில் ஆகிய ஏடுகளில் வந்த கட்டுரைகளுக்கு
லெனின் எழுதிய மறுப்பே பின்னாளில் "என்ன செய்ய
வேண்டும்?" என்ற நூலாக ஆக்கப் பட்டது.

ரங்கநாயகம்மாவின் இந்த நூல், லெனினைப்
பின்பற்றி, அவர் கடைப்பிடித்த பாணியில்,
அம்பேத்காரின் கருத்துக்களை விமர்சித்து
எழுதப்பட்ட நூல். முதலாளித்துவ உலகிலும் சரி,
மார்க்சிய உலகிலும் சரி, இத்தகைய விமர்சனப்
பாணி அங்கீகரிக்கப் பட்ட ஒன்றே; மேலும் நன்கு
நிலைநிறுத்தப்பட்ட முறைமையும் ஆகும்.
(well established methodology). எனவே ரங்கநாயகம்மாவின்
நூலில் பொருள்முதல்வாதப் பார்வை இல்லை
என்பது போன்ற குற்றச்சாட்டுகள் சொற்காமுகமே
ஆகும். (சொற்காமுகம்= phrase mongering).
---------------------------------------------------------------------------------------------------
தொடரும்
---------------------------------------------------------------------------------------------------   
பின்குறிப்பு: 1) நாங்கள் தற்போது மேற்கொண்டுள்ள பணிகள்
காரணமாக, எமது திறனாய்வு டிசம்பர் மாத வாக்கில்தான்
பிரசுரமாகக் கொண்டு வரப்படும். (32 பக்க pamphlet) 
2) இக்கட்டுரைத் தொடர்  இன்னும் சில கட்டுரைகளுடன்
இன்று அல்லது நாளையுடன் நிறைவு பெறும். எமது
முழுமையான திறனாய்வின் ஒரு சிறு பகுதியே
இங்கு முகநூலில் வெளியிடப் படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------                    

  

             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக