சனி, 24 செப்டம்பர், 2016

ரங்கநாயகம்மா அவர்களின் சாதியம் பற்றிய நூல்!
சமகாலச் சூழலில் இந்த நூல் தேவைப் படுகிறதா?
சாதிவெறி அரசியலையும் அடையாள அரசியலையும்
எதிர்த்து முறியடிக்க இந்த நூல் பயன்படுகிறதா?
அம்பேத்கரின் தீர்வுகள் மீதான விமர்சனம் சரிதானா?
-------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
--------------------------------------------------------------------------------------------------
ரங்கநாயகம்மா எழுதிய "சாதியப் பிரச்சினைக்குத்
தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது!
மார்க்ஸ் அவசியத் தேவை!" என்ற நூல்.
வெளியீடு: குறளி பதிப்பகம்,  ஜூன் 2016.
தெலுங்கு மூல நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே திறனாய்வு
செய்யப் படுகிறது. (தமிழில்: கொற்றவை அவர்கள்.)
--------------------------------------------------------------------------------------------------
வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல, ரங்கநாயகம்மா
அவர்களின் இந்த நூல் தமிழ் அறிவுத்தளத்தில் நிலவிய
வெற்றிடத்தை எளிதில் நிரப்பி விட்டது. சமூகத்தின்
தேவையை இந்நூல் நிறைவு செய்கிறது என்பதன்
வெளிப்பாடே இது.

வழிபாட்டு மனநிலையும்  துதிபாடுதலுமே அங்கிங்கு
எனாதபடி எங்கும் நிறைந்து தமிழ் அறிவுலகு மூச்சுத்
திணறிக்  கொண்டு இருக்கிறது. அடையாள அரசியல்
தனது உச்சகட்ட வளர்ச்சியை அடைந்து சாதிவெறி
அரசியலாக மாறி விட்டது.

தங்கள் சாதியைச் சேர்ந்த மறைந்த தலைவர்களை
அடையாளம்  கண்டு, தேடிப் பிடித்து, உயிர்த்தெழ வைத்து
குருபூஜைகள் வாயிலாக அவர்களை இளைய
தலைமுறையிடம் கொண்டுபோய்ச் சேர்க்க ஒவ்வொரு
சாதியினரும் காட்டும் ஆர்வத்தில் குறை காணத்
தேவையில்லை. ஆனால் இந்தப் போக்கின் தர்க்க
ரீதியான வளர்ச்சியானது , தங்கள் சாதியைச் சேர்ந்த
குற்றவாளிகளைக் காப்பாற்ற சட்டத்தை வளைக்கவும்
ஒவ்வொரு சாதியும்  தயாராகி விட்ட  சூழலில் முடிகிறது.

ஆக, சாதியைக் களத்தில் சந்திக்காமல் சமூகத்தை
ஒரு அங்குலமேனும் முன் நகர்த்த முடியாது என்ற
உண்மை சமகாலச் சூழலில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் சாதி எதிர்ப்புப் போருக்கு
ஒரு நீண்ட வரலாறு உண்டு. ஜோதிபா பூலே, ஈவெரா
பெரியார், நாராயணகுரு, அம்பேத்கர்  என்று
பல்வேறு போராளிகளின் அணிவரிசையும் உண்டு.
எனினும் இன்றளவும் சாதி ஒழிப்பு சாத்தியப் படவில்லை.

இவர்களுள் சாதி  பற்றி ஆராய்ந்து, சாதி ஒழிப்பு
குறித்து பல்வேறு தீர்வுகளை முன்வைத்த அம்பேத்கரின்
சாதி ஒழிப்பு பற்றிய கோட்பாடுகளைத் திறனாய்வுக்கு
எடுத்துக் கொண்டுள்ளார் ரங்கநாயகம்மா. கூடவே
புத்தரின் கொள்கைகள் சாதி ஒழிப்பில் மார்க்சியத்தை
விடச் சிறந்த தீர்வை வழங்குகின்றன என்று அம்பேத்கர்
கூறுவதால், புத்தம், அம்பேத்கரியம்,  மார்க்சியம்
ஆகிய மூன்றும் கூறுகிற சாதியம்பற்றிய  கருத்துகளை திறனாய்வுக்கு எடுத்துக்
கொண்டுள்ளார்  நூலாசிரியர்.

தம் திறனாய்வின் இறுதியில், சாதியை ஒழிக்க
வேண்டுமெனில், புத்தரும் அம்பேத்கரும் மட்டும்
போதாது; மார்க்சும் அவசியத் தேவை என்ற முடிவுக்கு
வந்துள்ளார் நூலாசிரியர்.

ஆக, புறக்கணிக்க முடியாத ஒரு உள்ளடக்கத்தை
இந்த நூல் கொண்டுள்ளது. எனவே அது சாதிய
ஒழிப்பில் அக்கறை கொண்டுள்ள அனைவரின்,
கவனத்தையும்  குறிப்பாக மார்க்சிஸ்டுகளின்
கவனத்தை ஈர்க்கிறது. சாதி ஒழிப்பில் மார்க்சியத்தின்
பாத்திரம் என்ன என்பது தொடர்பான ஒரு விவாதம்
மேலெழுந்து உள்ளது. இந்தப் பின்னணியில்
ரங்கநாயகம்மா அவர்களின் இந்த நூலை
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் திறனாய்வு
செய்துள்ளது.

இந்தச் சுருக்கமான முன்னுரையுடன், இனி
நூலுக்குள் செல்வோம்.
--------------------------------------------------------------------------------
தொடரும்
----------------------------------------------------------------------------------
*************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக