வியாழன், 3 ஜூலை, 2014

ஸ்டாலின் காலத்தில் 
ரஷ்யாவில் நிகழ்ந்த படுகொலைகள் பற்றிக் கூறுகிறார் மூத்த கம்யூனிஸ்ட் எழுத்தாளர்!
----------------------------------------------------------------------  

----------------------------------------------------------------------------------------------
"ஒரு தத்துவத்தைப் பரிசீலிக்கும்போது 
அதன்மீது குறைந்தபட்சப் பரிவு 
கொண்டிருந்தால்தான், அதன் நல்ல 
அம்சங்கள் புலப்படும்"  என்கிறார் அறிஞர் 
பெர்ட்ரண்ட்  ரஸ்ஸல்.

ரஷ்ய அதிபர் மறைந்த ஸ்டாலின் குறித்து 
எதிர்மறையான பல்வேறு விமர்சனங்கள் 
எழுந்துள்ளன. இவற்றுள் பல கம்யூனிச எதிர்ப்பு 
எழுத்தாளர்கள் கூறியவை.இவற்றை இகழ்ச்சியுடன் 
நிராகரித்து விட்டு, கம்யூனிசத்தின்பால் 
பரிவு கொண்ட எழுத்தாளர்களின் கருத்துகளை 
மட்டும் பரிசீலிப்போம்.

தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான 
மூத்த பத்திரிகையாளரும், மார்க்சியக் கம்யூனிஸ்ட் 
கட்சியில் முழுநேர ஊழியராகச் சிலகாலம் 
பணியாற்றியவரும், பழமைப்பிடிப்புள்ள
(கன்சேர்வேட்டிவ்) மார்க்சியவாதியாக 
இன்றும் இருப்பவராகவும் உள்ள 
திரு. இரா. ஜவஹர் ஒரு முக்கியமான நூல் 
எழுதிஉள்ளார்.

"கம்யூனிசம்: நேற்று, இன்று, நாளை"  என்ற 
அந்நூல்( முதல் பதிப்பு)  டிசம்பர் 2003 இல் 
நக்கீரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
448 பக்கங்களைக் கொண்டது அந்நூல்.
இந்நூலில் பகுதி ஒன்றில்,ரஷ்யாவில் 
நடந்தது என்ன என்ற தலைப்பிலான 
எட்டாவது அத்தியாயத்தில்,
"ஸ்டாலின் நல்லவரா கெட்டவரா"
என்ற கட்டுரையில் இருந்து 
நூலாசிரியர் திரு இரா ஜவஹர் அவர்களின்  
ஸ்டாலின் குறித்த கணிப்பைக் கீழே 
படியுங்கள்: (பக்கங்கள்: 160, 161).

"ஆனால் ஸ்டாலினோ, 
மக்கள் மீது அரசின் சர்வாதிகாரம்,
அரசின் மீது கட்சியின் சர்வாதிகாரம்,
கட்சி மீது தலைமையின் சர்வாதிகாரம்,
தலைமை மீது தனிநபருடைய (ஸ்டாலினின்)
சர்வாதிகாரம்  என்ற விபரீத நிலையை 
உருவாக்கி விட்டார்.

மாற்றுக் கருத்துச் சொன்னவர்களும்,
மாற்றுக் கருத்தை வைத்திருப்பவர்கள் என்று 
சந்தேகிக்கப் பட்டவர்களும் கூட 
ஏராளமானோர் கொல்லப்பட்டார்கள்;
சிறையிடப்பட்டார்கள்; சித்திரவதை 
செய்யப்பட்டார்கள்.

கட்சியின் மாநாடு 1934ஆம் ஆண்டில் 
நடந்தபோது, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 
மத்தியக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 139 பேர்.
இதில் 98 பேர் (அதாவது எழுபது சதவீதம் பேர்)
உளவாளி, துரோகி, மக்கள் விரோதி என்றெல்லாம் பட்டம் சூட்டப்பட்டு, 
"விசாரணை" நடத்தப்பட்டு 
சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

அதேபோல் இந்த மாநாட்டில் பிரதிநிதிகளாகக் 
கலந்து கொண்ட 1966 பேரில் 1108 பேர் 
கைது செய்யப்பட்டுப் பெரும்பாலோர் 
கொல்லப்பட்டார்கள்.இந்தச் சர்வாதிகார 
ஒடுக்குமுறை அனைத்து மட்டங்களுக்கும் 
பரவியது."

"மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச்செண்டாலே"
என்பதுபோல் மிக மிக மென்மையாக 
நூலாசிரியர் ஸ்டாலினைக் கண்டித்த போதிலும்,
அவர் தந்திருக்கும் விவரங்களில் 
எத்தகைய மென்மையும் இல்லை.


ஸ்டாலின் நடத்திய  படுகொலைகளின் 
அழுத்தமான சாட்சியங்களாக 
இரா ஜவஹரின் எழுத்துக்கள் அமைந்துள்ளன.
கடிது ஓச்சி மெல்ல எறிவதை 
நாம் கண்டு இருக்கிறோம்.
ஆனால் திரு ஜவஹரோ,
மெல்ல ஓச்சிக் கடிது எறிந்துள்ளார்.    

உண்மைகள் சுடுகின்றன.
"WORSHIPPING THE FALSE GODS" 
என்ற மயக்கம் என்று நீங்கும்?         

**************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக