ஞாயிறு, 27 ஜூலை, 2014

அழியாச் சித்திரம் 
--------------------------------------------------------------  
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------- 
எந்த சைத்ரிகனும் 
இதுவரை வரைந்திராத 
கடவுளின் தூரிகை கூடத் 
தீட்டியிராத 
உயிரின் நிறங்களைக்
குழைத்துப் பூசிய 
யுகயுகாந்திரங்களின் 
காதலை சுவீகரித்துக் கொண்ட 
அதியற்புதமான ஒரு சித்திரம் 
என் நெஞ்சில் துலங்குகிறது

கன்னிமை  மாறாமல்  
பச்சைப் பசுமையாய்.

காலம் தன ஆற்றல் முழுவதும் செலவிட்டும் 
இருளின் ஒரு துகளைக் கூட 
அச்சித்திரத்துள் 
செலுத்த முடியவில்லை.

கொந்தளிப்புகள் சூறாவளிகள் 
புதைச் சுழல்களின் உள்ளிழுப்புகள் 
மனக்குழப்பத்தின் புகை மண்டுதல்கள் 
முடிவற்ற சோகத்தின் உப்பங்காற்று வீச்சு 
யாவும் முயன்று தோற்க
உலர்த்தவோ  நனைக்கவோ 
எரிக்கவோ விடாமல் 
அச்சித்திரத்தை 
நான் காத்து வருகிறேன்.

திசைகளின் திரண்ட துயர்கள் 
என்னுள் இடியாய் இறங்க 
வதைகளும் ரணங்களும் 
வலி பொறுக்காத அலறல்களும் 
விசும்பல்களும் தேம்பல்களும் 
என்னை மேவ 
மரணப் பள்ளத்தாக்கின் 
இருள் முற்றத்தில் 
 மூர்ச்சித்துக் கிடக்கும் 
என் ஜீவனைத் தேற்றி 
அமிழ்து புகட்டி 
உயிர் துளிர்க்கச் செய்கிறது 
அச் சித்திரம்.

சைனியங்களின் அரசர்கள் 
வெஞ்சினத்துடன் எறியும் அஸ்திரங்கள்
என் மேனியெங்கும் துளைத்து 
வெங்குருதி புனலாய்ப் பொங்க 
மண் வீழ்ந்து மடிந்தாலும் 
யார் எவராலும் 
என்னிடமிருந்து பறிக்க முடியாத 
அந்த அழியாச் சித்திரம் 
பிரியமானவளே ,
உன் முகம்தான்.

*****************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக