வியாழன், 31 ஜூலை, 2014

பொய்யும் பொய் சார்ந்த பொழுதும் 
---------------------------------------------------------- 

வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------
  
இத்தகைய விழாக்களில் 
உண்மை பேசப்படுவதில்லை 
எப்போதும் எவராலும்
மரபு பேணி 

உண்மை வெப்பம் நிறைந்தது  
அசவுகரியமானது  
சூழலை கனம்  செய்வது  என்பதாலும்.   

மாற்றாக மாயப்பொய்கள் 
வாரி இறைக்கப் படுகின்றன 
சூழலை நெகிழ்வித்து விடும் என்பதால் 
புரைதீர்ந்த நன்மை 
பயக்கவும் கூடும் ஆதலால்.

பணி  நீத்தவருக்கு
விடை கொடுக்கும் விழாவில் 
தத்துவமும் சித்தாந்தமும் 
தேவையற்றவை என்கிறார்கள் 
குட்டி முதலாளித்துவ 
இடதுசாரித் தலைவர்கள்.

சந்தனம் சவ்வாது  சால்வை பரிசு 
கூடவே சரிகை வேய்ந்த பொய்கள் 
போதுமே என்கிறார்கள்.

விழா முடிந்து 
வீட்டு வாசலில் கார் நிற்க 
விடைபெற்றுக்  கொண்டு 
பணி நீத்தவர் 
உள்ளே நுழையும் 
அந்த பிரும்ம முகூர்த்தத்தில்    
அவரை வரவேற்கும் உண்மையை 
அவர் எதிர்கொள்ள வேண்டியவர் ஆகிறார்.

************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக