சனி, 26 ஜூலை, 2014

வேண்டாத பொண்டாட்டி 
கைபட்டால் குத்தம்; கால்பட்டால் குத்தம்!
--------------------------------------------------------------------- 

     மதம் அபின் போன்றது; அது மக்களுக்கு
     வெறி ஊட்டுவது .
          ​​​    ------- காரல் மார்க்ஸ் ----- 


ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலம் ஆகி விட்டார்,
ஆனால் எதிர்மறையாக, சிவசேனைக்  கட்சியின் நாடாளுமன்ற 
உறுப்பினர்   தோழர் விச்சாரே! (தா பாண்டியனுக்கே 
தோழர் அடைமொழி கொடுக்கும்போது, விச்சாரேக்கு
ஏன் கொடுக்கக் கூடாது?)

   மகாராஷ்டிரா பவனில் உள்ள உணவகத்தில் 
வழங்கப்பட்ட சப்பாத்தி தரமாக இல்லை என்பதால் 
கோபம் கொண்ட விச்சாரே, மோசமான அந்தச் சப்பாத்தியை 
உணவக ஊழியரின் வாயில் திணிக்க முயன்றார்.
அந்த ஊழியரோ ஒரு முஸ்லிம்; மேலும் அவர் ரமழான் 
நோன்பு மேற்கொண்டு இருந்தார்.தம் செய்கையால் 
ஒரு இசுலாமியரின் நோன்புக்குப் பங்கம் விளைவிக்க 
முயன்றார் என்பது தோழர் விச்சாரே மீதான குற்றச்சாட்டு.

தாம் கோபித்துக் கொண்டது  உண்மைதான் என்றும் 
ஆனால் அந்த ஊழியர்   முஸ்லிம் என்றோ நோன்பு 
இருக்கிறார் என்றோ தமக்குத் தெரியாது என்று விளக்கம் 
அளித்த தோழர் விச்சாரே தம் செய்கைக்காக 
மன்னிப்புக் கோரினார்.

இந்தியாவைக் குலுக்கிய இந்நிகழ்வை ஊடகங்கள்
எவ்வாறு சித்தரித்தன? "உண்மையைக் கிடப்பில் 
போடு; TRP (TELEVISION RATING POINT) ஏறுகிறதா பார்"
என்ற அறத்தைப் பேணி  நின்றன ஊடகங்கள். 

பணத்திமிரும் அதிகாரத் திமிரும் கொண்ட ஒரு எம்.பி 
ஒரு கீழ்நிலை ஊழியரைத் துன்புறுத்திய இந்நிகழ்வு 
வர்க்க முரண்பாட்டின் ஒரு வெளிப்பாடு. பாட்டாளி 
வர்க்கத்துக்கும் பணக்கார வர்க்கத்துக்கும் இடையிலான 
இம்முரண்பாடு தெளிவானதொரு வர்க்க முரண்பாடு 
(  CLASS CONTRADICTION ). இதை முக்காடு  போட்டு 
 மறைத்து விட்டு,  பிரச்சினைக்கு மதச்சாயம் பூசி 
இந்து-முஸ்லிம் பிரச்சினையாகச் சித்தரித்தன    
ஊடகங்கள்.

உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரை 
அடையாள அரசியல் ஆதிக்கம் செலுத்தும் 
இந்தியாவில் வர்க்க அரசியல் ஒருநாளும் 
எடுபடாமல்  போய்விடுமோ என்று 
அஞ்ச வைக்கிறது இந்நிகழ்வு.

ஒரு ஊழியர் ரமழான் நோன்பு இருப்பது அவரது 
சொந்த விஷயம். அது எவ்விதத்திலும் அவருடைய 
அலுவலகக் கடமையைச் செய்வதில் குறுக்கே 
வரக்கூடாது. குறுக்கே வர அவர் அனுமதிக்கவும் கூடாது.
இதுதான் ஊழியரின் அறம்; உழைப்பாளியின் அறம்.
கோபத்தோடு புகார் கூறும் வாடிக்கையாளர்களை
இன்முகத்துடன் எதிர்கொண்டு, பொறுமை இழக்காமல் 
தக்க சமாதானம் சொல்லி அனுப்புவதுதான் ஊழியரின் கடமை.
அந்தக் கடமையைச் செய்யத் தவறி விட்டு நோன்பில் 
 புகலிடம் தேடுவது நியாயமற்றது .நோன்பு இருப்பது என்பது 
கடமையைச் செய்யாமல் இருப்பதற்கான கவசம் அல்ல.
( THE EMPLOYEE DOES NOT ENJOY ANY IMMUNITY FROM 
DISCHARGING HIS DUTY IN THE NAME OF "FASTING".)

உண்மையில், அந்த ஊழியரைப் பொறுத்த மட்டில்,
அவர் LACK OF DEVOTION TO DUTY என்ற குற்றச்சாட்டுக்கு 
இலக்காகி நிற்கிறார் என்பதே உண்மை. ஒரு 
வாடிக்கையாளரிடம் ஒரு  ஊழியர் எவ்வாறு நடந்து 
கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி  நாட்டுக்கே 
அறிவுரை கூறி உள்ளார்.

"A CUSTOMER IS AN IMPORTANT VISITOR IN OUR PREMISES;"
என்று தொடங்கும் மகாத்மா காந்தியின் அறிவுரைகள் 
எல்லா அரசு அலுவலகங்களிலும் சட்டம் போட்டுத் 
தொங்க விடப்பட்டு இருக்கும். நோன்பு இருக்கும்  
ஊழியருக்கும் அது பொருந்தும்.

முறைகேடாகவும் முரட்டுத் தனமாகவும் நடந்து 
கொள்ளும் வாடிக்கையாளர்கள் மீது மேலதிகாரியிடம் 
புகார் செய்ய வேண்டும்.தொழிற்சங்கத்திடம் 
சொல்ல வேண்டும்.இதுதான் முறை.இதை விட்டு விட்டு 
மதத்திடம் புகலிடம் தேடக்கூடாது.

நோன்பு என்பது அனேகமாக எல்லா மதங்களிலும் 
கூறப்பட்டுள்ளது.இறைவனின் அருளைப் பெற 
உடலை வருந்தச் செய்தல்  அவசியம் என்பதுதான் 
இதன் தத்துவம். ரமழான் நோன்பு போன்று, இந்து 
ஊழியர்கள் அமாவாசை நோன்பு இருக்கலாம்;
பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் நோன்பு இருந்து 
இறையருளைப் பெற முயலலாம். ஒரு ஆஞ்சநேய  
பக்தர் மௌன விரதம் இருக்கலாம். மக்கள் பிரதிநிதியான 
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மௌன விரதம் இருக்கும் 
ஆஞ்சநேய பக்தரான ஊழியரிடம் கேள்வி கேட்பாரேயானால் 
பதில் சொல்லுவதுதான் ஊழியரின் கடமையே தவிர,
மௌன விரதத்தைப் பேணுவது அல்ல.

அடையாள அரசியல் புகுந்ததால் உழைப்பாளர்களின் 
வேலைப் பண்பாடு (  WORK CULTURE  )    எந்த அளவு  
சீரழிந்து விட்டது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு உதாரணம்.

மனிதர்களுக்கு இடையே நிலவும் சமூக உறவுகள் 
சீர்குலைந்து வருகின்றன என்பதன் அடையாளம்தான் 
இந்நிகழ்வு. சகஊழியர்களுக்கு இடையிலான உறவு, 
ஊழியர்-மேலதிகாரி உறவு இவ்வாறான சமூக உறவுகள் 
அடையாள அரசியலால் நஞ்சூட்டப்பட்டு நீளம் பாரித்துக் 
கிடக்கின்றன.சமூக உறவுகள் சீர்கேடும்போது என்ன 
நடக்கும்? இணக்கம் இல்லாத இரு சமூகத்தினர் இடையே 
" வேண்டாத பொண்டாட்டி கைபட்டால் குத்தம்;
கால் பட்டால் குத்தம் " என்ற நிலைதான் ஏற்படும்.
அற்ப நிகழ்ச்சிகள் கூட ஈரைப் பேனாக்கி  பேனைப் 
பெருமாள் ஆக்கி என்பதுபோல் ராட்சசத் தன்மை     
அடைந்து விடும்.

எனவே அடையாள அரசியலை முறியடிப்போம்!
வர்க்க அரசியலைப் பேணுவோம்!
ஆணவமும் திமிரும் பிடித்த விச்சாரே 
போன்ற அரசியல்வாதிகளை முறியடிப்போம்!

*******************************************************      

      

   
  
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக