வியாழன், 19 பிப்ரவரி, 2015

அமெரிக்காவுடன் அணுஉலை ஒப்பந்தம்
செய்த வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சிகள்!
-------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
-----------------------------------------------------------------------------------------
நினைவு இருக்கிறதா 123 ஒப்பந்தம்?
டாக்டர் மன்மோகன்சிங்கின் UPA -1 ஆட்சிக் காலத்தின்
இறுதியில், அமெரிக்காவுடன் செய்து கொள்ள இருந்த
அணுஉலை ஒப்பந்தம்! ( அமெரிக்கச் சட்டத்தின் 
123ஆவது பிரிவின்கீழ் வருவதால் இது 123 ஒப்பந்தம்).

டாக்டர் மன்மோகன் சிங் இதில் மிகவும் தீவிரம் காட்டி,
123 ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தீர்மானித்தார். 
இதனால்  ஐ.மு.கூ-1அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 
பிரகாஷ் காரத் விலக்கிக்கொண்டதும், நாடாளுமன்றத் 
தேர்தல்(2009) வந்ததும், அதில் மீண்டும் ஐ.மு.கூ வெற்றி 
பெற்றதும் ஆகிய வரலாற்றை இங்கு நினைவுகூர 
வேண்டும்.

ஆனால், வியட்நாம் மிகச் சுலபமாக, அமெரிக்காவுடன்
அணுஉலை ஒப்பந்தம், அதாவது 123 ஒப்பந்தம் செய்து
கொண்டது. இது பற்றி  எந்த முனகலோ முணுமுணுப்போ
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியிடமோ மக்களிடமோ 
இல்லை. IT WAS A CAKEWALK FOR VIETNAM COMMUNIST PARTY. 

அமெரிக்க-வியட்நாம் 123 ஒப்பந்தம் அக்டோபர் 2013இல்
கையெழுத்தானது. வியட்நாமின் வெளியுறவு அமைச்சர்
பாம் பின் மின் (Pham Binh Minh) மற்றும் அமெரிக்க அரசுச்
செயலர் ஜான் கெர்ரி இருவரும் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டனர். 10 பில்லியன் அமெரிக்க டாலரில் 
தொடங்கும் இந்த அணுஉலை வணிகம் 50 பில்லியன்
டாலரில் முடியும்.( ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).

வியட்நாம் என்பது பூகோள ரீதியாக, நிலநடுக்க முறிவுப்
பாதையில் ( SEISMIC FAULT LINE) அமைந்துள்ளது. மேலும்
3260 கி.மீ  நீண்ட கடற்கரையை உடையது. இதனால் 
சுனாமி ஆபத்து ஒட்டு மொத்த வியட்நாமிலும் 
பெருமளவுக்கு உள்ளது.

இருப்பினும், இது பற்றித் துளியும் கவலைப் படாமல்,
வியட்நாம், அமெரிக்காவுடன்  அணுஉலை 
ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று மார்க்சியத்தில் 
ஒரு கோட்பாடு உண்டு. இது மார்க்சியத்தின் 
அடிப்படையான கோட்பாடுகளில் ஒன்று. இதை 
வெளிப்படுத்தும் "சர்வதேச கீதம்" என்ற இசைப்பாடலும் 
உண்டு. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் 
என்றுதானே மார்க்ஸ் அறைகூவல் விடுத்தார்!
ஆக, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்பது 
புறக்கணிக்க முடியாத ஒரு கோட்பாடு.

ஆனால், 123 ஒப்பந்தத்தைப் பொருத்தமட்டில், உலகக்
கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே சர்வதேசியம் கடைப்
பிடிக்கப் பட்டதா?

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி 123 ஒப்பந்தத்தை ஏற்றுக்
கொள்கிறது. ஆனால் இந்தியாவின் இரண்டு கம்யூனிஸ்ட்
கட்சிகளான CPI, CPM ஆகியவை இதே 123 ஒப்பந்தத்தை
எதிர்க்கின்றன. 123 ஒப்பந்தத்தை முன்வைத்து மன்மோகன்
சிங்கின் ஆட்சிக்கு ஆதரவை மறுக்கிறது CPM. இதே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அமெரிக்காவை மகிழ்விக்கிறது வியட்நாம் கட்சி. அப்படியானால், 
பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ன ஆனது?

ஒரே பிரச்சினையில் (123 ஒப்பந்தம்) வியட்நாம் கம்யூனிஸ்ட்களும் இந்தியக் கம்யூனிஸ்ட்களும் 
எதிர் எதிர் நிலை எடுப்பது ஏன்?
ஏன் இந்தப் பாரதூரமான வேறுபாடு?

இதில், எது சரி? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை
சரியானதா? அல்லது, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின்
நிலை சரியானதா?

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியானது, பிரெஞ்சு 
ஏகாதிபத்தியத்தின் அடிமை விலங்கை ஒடித்து,
வியட்நாமுக்கு விடுதலை பெற்றுத் தந்தது.
இருபதாண்டு காலம் தங்கள் மண்ணை ஆக்கிரமித்து 
இருந்த  அமெரிக்காவை விரட்டி அடித்து நாட்டுக்கு 
சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும்  
புரட்சிகரப் பாரம்பரியம் உண்டு. அதோடு 
95 ஆண்டுகளாய், ஒரு மிகப் பெரிய நாட்டில் 
கட்சி நடத்தி வரும் அனுபவமும் 
உண்டு. இருப்பினும் ஏன் இந்த முரண்பாடு?

இதற்குக் காரணம் வாக்கு வங்கி அரசியலைப்
பின்பற்றி நிற்பதுதான். இதன் காரணமாக, 
மக்களின் பின்தங்கிய உணர்வு நிலைக்கு வால் 
பிடிக்க வேண்டிய அவலம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 
ஏற்பட்டது.

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய 
வியட்நாம், இன்று பழசை எல்லாம் மறந்து,
அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் (அணுஉலை ஒப்பந்தம்)
செய்து கொண்டது ஏன்? ஏன்? ஏன்?

வியட்நாமில் வாக்கு வங்கி அரசியல் கிடையாது.
எனவே அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, தான் எடுத்த 
நிலைபாட்டைச் செயல்படுத்துகிறது. இந்தியாவின் 
நாடாளுமன்றக் கம்யூனிஸ்டுகள் வாக்கு வங்கி 
அரசியலில் மாட்டிக் கொண்டதால், திணறிப் போய் 
நிற்கிறார்கள். பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தைக் 
காவு கொடுத்து விடுகிறார்கள்.   
------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக