ஞாயிறு, 29 அக்டோபர், 2017

done
1) அத்வைதம் என்பது ஒரு அருங்காட்சியகத் தத்துவம்.
இந்தியாவில் அது மியூசியத்தின் இருள் நிறைந்த
கடைசி அறையில் வைக்கப் பட்டுள்ளது. அரிஸ்ட்டாட்டில்
முதல் அயன் ராண்ட் வரை நீட்சே உட்பட மேலை
உலகினரின் தத்துவங்கள் இந்தியாவிலும் பிற
கீழ்த்திசை நாடுகளிலும் அறிமுகமான அளவுக்கு
ஆதிசங்கரரின் அத்வைதம் மேலை நாடுகளுக்குச்
சென்று சேரவில்லை. தத்துவங்களின் வரிசையில்
அத்வைதமும் ஒரு தத்துவமாக இடம் பெற்றுள்ளது
என்பதைத் தவிர உலகளவிலும் சரி, இந்திய
அளவிலும் சரி, வேறெந்த சிறப்பையும் அத்வைதம்
பெற்றிருக்கவில்லை.

2) தத்துவம் என்பது உலகை விளக்குவது
(interpreting the world).  உலகை விளக்கும்
தத்துவங்கள் அனைத்தும் கால எல்லைக்கு
உட்பட்டவை. அதாவது எந்தவொரு தத்துவமும்
அது தோன்றிய காலத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு
முழுவதுமாக உட்பட்டது. அந்தந்தக் காலத்தின்
அறிவியல் வளர்ச்சிக்கு உட்பட்டே தத்துவங்களின்
உலக விளக்கம் (interpretation of the world) அமையும்.
இதற்கு எந்தத் தத்துவமும் விலக்கல்ல.

3) எனவே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு
தத்துவம் அளித்த உலக விளக்கமானது காலப்
போக்கில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியில்
தவறானதாகி விடுவதும், அதன் காரணமாக
அத்தத்துவம் வழக்கு வீழ்ந்து விடுவதும் உண்டு.

4) அத்வைதம் அவ்வாறு வழக்கு வீழ்ந்துபோன
ஒரு தத்துவம் ஆகும். புறவுலகின் மெய்மையை
முரட்டுத்தனமாக மறுக்கும் தத்துவம் அத்வைதம்
என்பதை இங்கு நினைவு கூர வேண்டும். அறிவியல்
வளர்ச்சியின் விளைவாக, மனித சமூகம்
இயற்கையை, புறவுலகை நாளும் நாளும் அதிகமாக
அறிந்து கொண்டு, புறவுலகுடன் வினை புரிந்து,
இயற்கையைப் பெருமளவுக்கு மானுட  நலன்களுக்காகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்ட பிறகு, அத்வைதம்
மதிப்பிழந்தது.

5) மனித வாழ்க்கை என்பதே இயற்கையுடன்,
புறவுலகுடன் வினைபுரிவதுதான் என்று ஆன பிறகு,
புறவுலகையே மறுக்கும் அத்வைதம் எவ்வாறு
மானுட சமூகத்தால் ஏற்கப்படும்? இதனால்தான்
அத்வைதம் மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளது.

6) இதற்கு மாறாக, புறவுலகின் மெய்மையை ஏற்கும்
எல்லா விதமான பொருள்முதல்வாத மற்றும்
கருத்துமுதல்வாதத்  தத்துவங்கள் இன்றளவும்
நடைமுறையில் உள்ளன.

7) எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய அத்வைதம்
ராமாநுஜரிடம் தன் முதல் தோல்வியைச் சந்தித்தது.
ராமாநுஜர் பன்னிரண்டாம் நூற்றாண்டில்
முன்மொழிந்த விசிஷ்டாத்வைதம் அத்வைதத்துடன்
தத்துவப்போரில் ஈடுபட்டது. அத்வைதத்தை
வீழ்த்தியது.

8) சங்கரர் ராமானுஜர் இருவரும் கருத்துமுதல்வாதிகளே.
இருவரின் தத்துவமும் கருத்துமுதல்வாதமே.
என்றாலும் புறவுலகு முற்றிலும் பொய் என்ற சங்கரரின்
அப்பாலைக் கருத்தை ராமானுஜர் நிராகரித்தார்.
எனவே, கருத்துமுதல்வாதமே சரி என்ற கொள்கை
உடையவர்கள் கூட, அத்வைதத்தை நிராகரித்து
விஷிஷ்டாத்வைதத்தை ஏற்றனர். ஆக சொந்த
முகாமிலேயே 12ஆம் நூற்றாண்டு வாக்கில்
அத்வைதம் முதல் தோல்வியைச் சந்தித்தது.அன்று
தொடங்கிய சரிவில் இருந்து இன்றுவரை
அத்வைதம் மீளவில்லை.

9) 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஆங்கில
ஆட்சியின் விளைவாக, கிறிஸ்துவம் பெரும்
வேகத்துடனும், அரசின் ஆதரவுடனும் மொத்த
இந்திய சமூகத்தையும் ஆக்கிரமிக்கத்
தொடங்கியது. அப்போது ராமகிருஷ்ண பரமஹம்சர்,
விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி போன்றோர்
கிறிஸ்துவத்தைக் காலத்தில் சந்திக்க அத்வைதத்தைக்
கையில் எடுத்தனர். விவேகானந்தர் வெளிநாடெங்கும்
அத்வைதத்தை அறிமுகப் படுத்தினார். இதன்
விளைவாகவே அத்வைதம் தத்துவ அரங்கில்
ஒரு செகண்ட் ரவுண்ட் (second round) வந்தது.
அத்வைதத்திற்கு இன்றுள்ள கொஞ்ச நஞ்ச
மரியாதைக்கு ஆதிசங்கரர் விவேகானந்தர்
கடமைப் பட்டுள்ளார்.

10) எட்டாம் நூற்றாண்டு தொடங்கி, 19ஆம்
நூற்றாண்டு விவேகானந்தர் வரை, மற்றும்
20ஆம் நூற்றாண்டின் அத்வைதிகளான கேரளத்து
நாராயண குரு வரை அத்வைதம் பலராலும்
விளக்கப்பட்டு வந்துள்ளது. வெளிநாடுகளிலும்
தத்துவத் துறையின் பல்வேறு அறிஞர்கள்
அத்வைதம் குறித்து விரிவாக ஆராய்ந்து பல
நூல்களை எழுதியுள்ளனர்.

11)  பொருள்முதல்வாதத்திற்கு அதன்
ஒவ்வொரு அம்சத்திலும் நேர் எதிரான தத்துவம்
அத்வைதம் ஆகும். முற்றிலும் முரண்பட்ட இரண்டு
விஷயங்களுக்கு உதாரணம் கூற  வேண்டுமென்றால்
பொருள்முதல்வாதத்தையும் அத்வைதத்தையும்
கூறலாம்.

12) அஹம் பிரம்மாஸ்மி (ஆத்மாவே பிரம்மம், நானே பிரம்மம்), தத்வமஸி (நீயும் கடவுளே) ஆகியவை மகா வாக்கியங்கள்
(Grand pronouncements)
உபநிடதங்களின் இந்த மகா வாக்கியங்களின் மீதுதான்
அத்வைதம் எழுந்துள்ளது. அத்வைதம் மட்டுமல்ல,
விசிஷ்டாத்வைதம் போன்ற கருத்துமுதல்வாதப் 
பிரிவுகளும் இந்த மகா வாக்கியங்களை ஏற்பவையே.

13) உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பது
மார்க்சியத்தின் புகழ் பெற்ற வாக்கியம். இதற்கும்
அஹம் பிரம்மாஸ்மிக்கும் என்ன சம்பந்தம்? இவை
இரண்டும் எப்படிப் பொருந்த முடியும்?

14) முதலாளியும் தொழிலாளியும் ஒன்று (தத்வமஸி)
என்று எந்த முதலாளியாவது சொல்வானா?

20) அத்வைதமும் பொருள்முதல்வாதமும்
நீரும் நெருப்பும் போன்றவை. ஒன்று
மற்றொன்றுக்கு எதிரானது. *************************************************************                         


           
    




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக