திங்கள், 16 அக்டோபர், 2017

done (6) யாரும் பார்க்காதபோது ஆகாசம் நீல நிறமாக
இருக்குமா  என்கிறார் ஆதிசங்கரர்!

அத்வைதம் பற்றிய கட்டுரையில் அயர்லாந்து
நாட்டைச் சேர்ந்த பெர்க்லி பாதிரியார் நம்
அக்கறைக்கு உரியவர் ஆகிறார். பெர்க்லி
பாதிரியார் (Bishop George Berkeley 1685-1753) பதினெட்டாம்
நூற்றாண்டின் தத்துவஞானி.

Great men think alike என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு.
இதற்கு இணங்க ஆதிசங்கரரும் பெர்க்லி பாதிரியாரும் 
ஒரே மாதிரியாகச் சிந்தித்தார்கள். சரி சமமான 
அத்வைத சிந்தனை!

எட்டாம் நூற்றாண்டின் ஆதிசங்கரரும், அவருக்கு
ஆயிரம் ஆண்டுகள் பிந்திய பதினெட்டாம்
நூற்றாண்டின் பெர்க்லி பாதிரியாரும் ஒரே
வகையான கருத்து முதல்வாதத்தை வெவ்வேறு
காலக்கட்டத்தில் பெற்றெடுத்தார்கள்; முற்றிலும்
சுயேச்சையாக, ஒருவரை ஒருவர் சாராமல்.
மேற்கத்திய தத்துவ ஞானம் கீழ்த்திசை நாடுகளின்
தத்துவ ஞானத்திற்கு காலத்தால் பிந்தியதே
என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

மார்க்சிய மொழியில் கூறுவதானால், ஆதிசங்கரரின்
அத்வைதமும் பெர்க்லி பாதிரியாரின் தத்துவமும்
அகநிலைக் கருத்து முதல்வாதம் (subjective idealism)
என்று வகைமை பெறும். எப்படி என்று பார்ப்போம்.

புறவுலகம் (objective world) என்பது உண்மையில்
நின்று நிலவவில்லை (does not exist) என்பதைத்தான்
ஆதிசங்கரரும் பெர்க்லி பாதிரியாரும் ஒரே குரலில்
கூறுகின்றனர். மனத்தைச் சாராத (mind independent reality)
யதார்த்தம் என்பது இல்லை என்கின்றனர்
இருவரும். யாரும் பார்க்காதபோது  ஆகாசம்
நீல நிறமாக இருக்குமா என்று கேட்டார்
ஆதி சங்கரர்.

பொருள் என்பது மனத்தைச் சார்ந்தது; மனத்தைச்
சாராமல் பொருள் இருக்க முடியாது என்று
அடித்துக் கூறுகின்றனர் இருவரும். பொருளின்
நிலைக்களன் மனமே; மனமே பொருள் நின்று
நிலவுகிற களம்; மனத்தின் எல்லைக்கு
அப்பால் பொருள் நின்று நிலவுவதில்லை.
மனத்தைத் தாண்டிய எந்த இருப்பும் பொருளுக்கு
இல்லை. ஆக மொத்தத்தில் மனமே பிரதானம்;
பொருள் என்பது இரண்டாம்பட்சமே. சகலமும்
மனமே. அதாவது அனைத்தும் கருத்தே;
அனைத்தும் சிந்தனையே.பொருள் என்பது சிந்தனைக்குக் கட்டுப்பட்டது; பொருள் என்பது சிந்தனைக்குக் கீழ்ப்பட்டது.

பொருள் என்பதற்கு எவ்விதமான பௌதிக இருப்பும்
(physical existence) கிடையாது; பொருளுக்கு மானசீக
இருப்பு மட்டுமே உண்டு. ஆதிசங்கரர் மற்றும்
பெர்க்லி பாதிரியாரின் அகநிலைக்
கருத்துமுதல்வாதம் என்பது இதுதான்.

ஆதிசங்கரர் பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை
முன்மொழிகிறார். பெர்க்லி பாதிரியார் அப்படி
எந்த ஒரு பிரம்மத்தையும் முன்மொழியவில்லை.
சிற்சில வேறுபாடுகள் இருவருக்கும் இருந்த
போதிலும், சாராம்சத்தில் இருவரின் தத்துவமும்
அகநிலைக் கருத்துமுதல்வாதமே.

ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது சிந்தனையே;
கருத்தே. அதாவது ஆன்மாவே. நீயும் பிரம்மம்,
நானும் பிரம்மம்; எல்லாமே பிரம்மம், பிரம்மத்தைத்
தவிர வேறு ஒன்றும் இல்லை என்று முழங்குகிறார்
ஆதிசங்கரர்.

சரி, ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது எங்கு
இருக்கிறது? அதன் இருப்பிடம் என்ன? பிரம்மம்
என்பது மனத்தில் இருக்கிறது. மனமே பிரம்மம்;
சிந்தனையே பிரம்மம்; கருத்தே பிரம்மம்.
இதுதான் அத்வைதம் தருகிற விடை.

கருத்தை அதன் உச்சபட்ச உயரத்தில் வைத்து
விடுகிறார் ஆதிசங்கரர். எவராலும் எப்போதும்
தொட முடியாத உயரம் அது. சிந்தனையைத் தவிர
மீதி அனைத்தின் இருப்பையும் ஒரேயடியாக
நிராகரித்து விடுகிறார் ஆதிசங்கரர். இருப்பது
ஒன்றுதான்; அதுதான் பிரம்மம், அதாவது சிந்தனை.
அதைத்தவிர வேறு எதுவும் இந்த பிரபஞ்சத்தில்
இல்லை. இதுதான் அத்வைத சாரம்.

அப்படியானால் பிரம்மம் என்பது கடவுளா?
நிச்சயமாக இல்லை. பரிபூரண சர்வ சுதந்திரமான
தூய அறிவே (pure reason) பிரம்மம். ஆக கடவுளுக்கும்
மேலாக பிரம்மத்தை சிருஷ்டித்தார் ஆதிசங்கரர்.
ஏனைய கருத்துமுதல்வாத தத்துவங்களுக்கும்
அத்வைதத்திற்குமான வேறுபாடு இதுதான்.
எனவேதான் கருத்துமுதல்வாதத்தின் அதிஉச்சமாக
அத்வைதம் திகழ்கிறது.

அத்வைதத்தின் மாயக்கவர்ச்சி இந்த பிரம்மத்தில்தான்
உள்ளது. கடவுளுக்கோ சடங்குகளுக்கோ அத்வைதம்
எந்த விதமான சிறப்பிடத்தையும் அளிக்கவில்லை.
இதன் மூலம் அத்வைதம் கடவுள் மறுப்புத் தத்துவம்
என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. ஆயின்
அத்வைதம் என்பது என்ன? அது ஒரு பொருள்மறுப்புத்
தத்துவம் (immaterialism). பெர்க்லி பாதிரியார் தமது
தத்துவத்தை பொருள்மறுப்புத் தத்துவம் என்றே
அழைத்தார்.

உலகில் எந்த தத்துவஞானியும் அளிக்காத சிறப்பை,
உச்சத்தை சிந்தனைக்கு அளித்தவர் ஆதிசங்கரர்.
அ) சிந்தனைக்கும் அதன் விளைவான தூய
அறிவுக்கும் கட்டற்றதும்  சர்வ சுதந்திரத்துடன்
கூடியதுமான உச்சத்தை அத்வைதம் வழங்குவதாலும்
ஆ) கடவுள், சடங்குகள், பக்தி ஆகியவற்றை ஒரு
பொருட்டாகக் கொள்ளாமல் இருப்பதாலும்
இ) பிரம்மம் என்பதற்கு ஒரு பிரபஞ்சத் தன்மை
(universal) இருப்பதாலும் ஈ) பிரம்மத்தை அறியும் எவர்
ஒருவரும் முக்தி அடையலாம் என்று அத்வைதம்
உறுதி தருவதால் இது ஒரு கோட்பாட்டு ரீதியான
சமத்துவம் கொண்டதாக இருப்பதாலும்
இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு
அறிவுஜீவிகள் அத்வைதத்தை ஏற்கத் தலைப்பட்டனர்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், தயானந்த
சரஸ்வதி, கேரளத்தின் நாராயண குரு, பாரதியார்
உள்ளிட்டோர் அத்வைதிகளாகத் திகழ்ந்தனர்.
ஆதிசங்கரரோடு கடுமையாக முரண்பட்ட
ராமானுஜரும்  அத்வைதத்தையே சிற்சில திருத்தங்களுடன் "சிறப்பிக்கப்பட்ட
அத்வைதம்" என்ற பெயரில் போதித்தார்.
ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் புறநிலைக்
கருத்துமுதல்வாதம் (objective idealism) ஆகும். ராமானுஜரின்
கருத்துமுதல்வாதம் கிரேக்கத்தின் பிளேட்டோவின்
கருத்துமுதல்வாதத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

இந்தியத் தத்துவ அரங்கில் கணிசமான காலத்திற்கு
கருத்துமுதல்வாதம் குழந்தைப் பருவத்திலேயே
இருந்தது. அதுவும் சவலைப் பிள்ளையாகவே
இருந்தது. கருத்துமுதல்வாதம் அதன் வளர்ச்சியையும்
உச்சத்தையும் தொட்டது ஆதிசங்கரரின்
அத்வைதத்தில்தான். பொருள்முதல்வாதத்துடன்
ஒப்பிடும்போது, கருத்துமுதல்வாதம் பல மடங்கு
பின்தங்கியே நின்றது.

2500 ஆண்டுகளுக்கு முன்பே, கெளதம புத்தரின்
பொருள்முதல்வாதம் முரசறைந்து வெற்றியைக்
கொண்டாடியது. புத்தர் ஆன்மா  என்ற ஒன்று இல்லை
என்று திட்டவட்டமாக மறுத்தார். அவரது நிராத்மவாதம்
(theory of no soul) மிகவும் புகழ் பெற்றது. ஆயிரம்
ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதிசங்கரர் அத்வைதத்தை
முன்மொழிந்து ஆன்மாவே அனைத்தும் என்று
சொல்கிறவரை புத்தரின் நிராத்மாவாதமே
(நிர் ஆத்மா = ஆத்மா இல்லை) தத்துவ அரங்கில் 
மறுக்கப்படாமல் நிலவி வந்தது. 

பௌத்த  தத்துவ ஞானிகளான நாகார்ஜுனர்,
திக்நாகர், தர்மகீர்த்தி ஆகியோரின்
தத்துவங்களுக்கும் அத்வைதத்திற்கும் உள்ள
ஒற்றுமை வேற்றுமைகள் குறித்து அடுத்த
கட்டுரையில் காண்போம்.
-------------------------------------------------------------------------------------

 
             

 



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக