புதன், 18 அக்டோபர், 2017

கொண்டாட்டம் தேவையா ?

கூடிக் களிப்பதும் கூடிக் கொண்டாடுவதும் மானுட இயற்கை . 


மதமும் கடவுளும் உருவாக்கப்படும் முன்பே பலவேறு கொண்டாட்டங்களை பல்வேறு இனக் குழுக்கள் தங்களின் தனித்த பண்பாடாய் வரித்துக் கொண்டன . 

புவியியல் சார்ந்து , பருவமாற்றம் சார்ந்து , வேளாண்மை சார்ந்து , இதர உழைப்பு சார்ந்து கொண்டாடிய அப்பண்டிகைகளுக்கு ஒரு பொருள் இருந்தது . தேவையும் இருந்தது . 

மதங்கள் தலையெடுத்தபோது இந்த கொண்டாட்டங்களை மெல்ல மெல்ல தன் வசமாக்கி சடங்குகளை ,கட்டுக்கதைகளை , புராணப் புளுகுகளை அத்துடன் சேர்த்து குழைத்து , குழப்பி பண்டிகைகளாக்கிவிட்டன . 

“கொண்டாட்டம்,” என்பது “கும்பிடுவது.” என்றாகிவிட்டது . ஆடிப்பாடி உண்டு களித்து மகிழ்திருப்பது என்பதற்கு பதில் ; வழிபாடாகவும் , தன் கவுரவத்தை ,பெருமையைக் காட்டுவதாகவும் கொண்டாட்டங்கள் சிதைந்து பண்டிகைகளாகிவிட்டன.பெரும் சுமையாகிவிட்டன .

பண்டமாற்றிலிருந்து பணப்பரிவர்த்தனை தொடங்கிய போது ; சந்தைகள் பொருள் விற்பனையின் மையமானபோது ; பண்டிகைகள் சந்தையோடு பிணைக்கப்பட்டன . எதை எதை சந்தைப் படுத்தவேண்டுமோ அததற்கு ஏற்ப பண்டிகைகள் , திருவிழாக்கள் வடிவம் பெறலாயின ; அதற்கேற்ப கதைகள் ,மூடநம்பிக்கைகள் சேர்க்கப்பட்டு ; அது வேர்விடலாயின .

ஆட்சியாளர் தங்களுக்கு எதிராக மக்கள் கொதித்தெழாமல் இருக்க மத நம்பிக்கைகளைக் கெட்டிப் படுத்த ; மக்களை மேலும் மேலும் மூடச்சகதியில் புதைய வைக்க பண்டிகைகளை ஆயுதங்களாய் கூர்மைப்படுத்தின ; மத பீடமும் , தத்துவ ஆசான்களும் விதவிதமாய் வியாக்கியானங்கள் செய்யலாயினர் .

உலகெங்கும் எல்லா மதம் சார்ந்த எல்லா பண்டிகைகளுக்கும் இது பொருந்தும் ; ஒன்றுக்கொண்று சற்று ஏற்ற இறக்கமாக இருக்கலாம் அவ்வளவுதான் .

மூலத்தை தேடிப்போனால் அது அவர்களால் உருவாக்கப்பட்ட கொண்டாட்டமல்ல ; எங்கோ ஒரு இனக்குழு கொண்டாடிய ஒன்றுக்கு இவர்கள் மதமுலாம் பூசி பண்டிகைகளாய் வரித்துக் கொண்டது விளங்கும் .

இப்போது புராண புனைவு இல்லாத பழைய கொண்டாட்டத்தை மீட்டெடுப்பது என்பது இயலாத ஒன்று . அதே நேரம் மன இறுக்கத்திலிருந்து சற்று விடுபட கொண்டாட்டங்களை நாடும் சமூக உளவியலை நிராகரிக்கவும் முடியாது . என்ன செய்வது ?

அ ] இருப்பதில் மதத்தின் தலையீடு , மூடநம்பிக்கை மிகக் குறைவாக இருக்கும் பண்டிகைகள் / கொண்டாட்டங்கள் / திருவிழாக்கள் எவை என அலசி அதனை முதன்மைப் படுத்த வேண்டும் . எடுத்துகாட்டு பொங்கல் , ஆடிப்பெருக்கு , சில உள்ளூர் விழாக்கள் 

ஆ] பிறந்த நாள் , திருமணநாள் , , போன்ற குடும்பம் நட்பு சார்ந்த விழாக்களையும் , சுதந்திர தினம் , மேதினம் போன்ற நாட்களையும் பண்பாட்டு கூடலாக வடிவமைக்க பெருமுயற்சி தேவை .

இ] புதிய பொருள் பொதிந்த மற்றும் மதச்சார்பற்ற விழாக்களை வட்டார அளவில் முன்னெடுக்க வேண்டும் .

ஈ] மனிதர்களின் கொண்டாட்ட மனப்பண்மை தங்களில் லாபவெறிக்கு பலியாக்கும் பன்னாட்டு நிறுவன முயற்சிகளுக்கு கடிவாளம் போடவேண்டும் .

அதுவரை எந்தப் பண்டிகையாயினும் , “ கொண்டாடுவோரோடு,” நாம் உரச வேண்டாம் ; “ கும்பிடுவோரை,” சட்டை செய்ய வேண்டாம் . மாற்று முயற்சிகளை மெல்ல ஆனால் மிக நுட்பமாக ; சமூக உளவியலை வென்றெடுக்கும் விதமாக வடிவமைப்போம் ; முன்னெடுப்போம் .
--------------------------------------------------------------------------------------------
பண்பாடும் பண்டிகைகளும் தட்பவெப்ப நிலை அதைசார்ந்த நிலப்பிரபுத்துவ உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது.

உலகில் தோன்றிய அனைத்து மதங்களும் பண்பாட்டை, பண்டிகைகளை தனதாக்கிக் கொண்டன.
அதானால் அதுமதங்களின் பண்டிகைகளாக மாறிப்போனது.
எனவே மதங்களை பண்பாட்டிலிருந்தும் பண்டிகைகளிலிருந்தும் பிரித்து தனிமை படுத்தி அழித்திடுவோம்.

=========================================
பழம் பண்டிகை
.......... ..............
இது விவசாயிகளின் பண்டிகை.இக் கார் காலத்தில் பயிர்களை
பன்றிகள் அழிக்கும் .நரகம் நரகல் பன்றியை குறிப்பது.
ஆதியில் அதை விரட்ட பறைகள்....ஜெண்டை மேளங்களை
ஒலித்து இரைச்சலிட்டு விரட்டினர்.
பின்பு புத்த பிக்குகள் சீனாவிலிருந்து வெடிமருந்து...பட்டார் என வெடிக்கும் வெடிகளை இறக்கினர்.வெடியோசையில்
நரகாசுரர்கள் ஓடினர்.
மடிந்த நரகரை தின்று தீர்த்தனர்.
பயிர்களை அழிக்கும் விட்டில்களை அழிக்கும் விளக்குப் பொறிகளே
அதன் வரிசையே தீப ஆவளி
பிற்காலத்தில் பிராமணீயம் பன்றியை நரகாசுரனாக்கி
கதைவிட்டு பண்டிகையை தனதாக்கிக் கொண்டது.
இதுபற்றி விரிவான கட்டுரை எனது காலமெனும் பெருநதி நூலில் உள்ளது.
======================================================    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக