புதன், 21 பிப்ரவரி, 2018

உலக மகளிர் தினம் (மார்ச் 8)
----------------------------------------------------
ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் மார்ச் 8 அன்று
மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது.  1975 முதல்
ஐ நா சபை மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகிறது.

இன்றைய உலக மக்கள்தொகை 760 கோடி. இதில்
சரிபாதி பெண்கள்.வரலாறு நெடுகிலும் பெண்களின்
உரிமைக்குப் போராடிய பெண்கள் பலர். ஜெர்மனியைச்
சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்ற அம்மையார் இன்று நாம்
கொண்டாடும் உலக மகளிர் தினத்துக்கு வித்திட்டார்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
என்றார் பாரதியார்.பாரதியின் கூற்று மெய்யாகி
வருகிறது..

நம் நாட்டிலும் நம் அண்டை நாடுகளிலும் பெண்கள்
பிரதமர் பதவியை அலங்கரித்தனர். இலங்கையில்
சிறிமாவோ பண்டார நாயகா, சந்திரிகா குமார துங்க
ஆகியோர் நாட்டின் உயர்ந்த பதவிகளில் அமர்ந்தனர்.
இந்தியாவில் கொடி கட்டி ஆண்டார் இந்திரா காந்தி.

பாகிஸ்தானில் பெனாசிர் புட்டோ, வங்க தேசத்தில்
கலிதா ஜியா, இங்கிலாந்தில் மார்கரெட் தாட்சர்,
இஸ்ரேலில் கோல்டா மேயர் என்று பெண்கள்
வையத்தலைமை ஏற்றனர்.

விண்வெளியில் வலம் வந்த முதல் பெண் என்ற
பெருமையைப் பெற்றார் ரஷ்யாவின் வாலன்டினா
தெரஸ்கோவா. இந்தியாவில் பிறந்த கல்பனா
சாவ்லாவும் சுனிதா வில்லியம்சும் விண்வெளித்
துறையில் சாதனை படைத்தனர். இதன் விளைவாக,
அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு என்று
கேட்ட சமூகம் நாணித் தலை குனிந்தது.
பெண்புத்தி பின்புத்தி என்ற அவப்பெயர் அகன்றது.

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்
சற்றும் இளைப்பில்லை காண்
என்ற பாரதியின் கூற்று மெய்ப்பட்டது.

சட்ட மன்ற நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு
33 சதம் இட ஒதுக்கீடு எதிர்காலத்தில் நம் நாட்டில்
வந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பெண் அடிமைத்தனம் என்ற கற்காலக்
கருத்தோட்டம் காலாவதி ஆகும் நாள்
வெகுதொலைவில் இல்லை.
ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்து இன்று
வலுப்பட்டு வருகிறது. முழுமையான சமத்துவம்
என்பது இன்னும் எட்டப் படவில்லை. என்றாலும்
அதை நோக்கிய பயணத்தில் மனித குலம்
முன்னேறி வருகிறது.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற
உன்னத நிலையை எதிர்காலத்தில் சமைப்போம்.
அதற்காக  உழைக்க  இந்த உலக மகளிர்
தினத்தில் சூளுரைப்போம்.
******************************************************


   
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக