திங்கள், 19 பிப்ரவரி, 2018

டார்வினும் கம்பனும் தியாகராஜ கீர்த்தனையும்!
ஸாமஜ வர கமனா!
---------------------------------------------------------------------------------------
இன்று நாம் காணும் யானைகளின் தும்பிக்கை
நீளமானது; கால்கள் வரை நீண்ட தும்பிக்கைகளை
இன்றைய யானைகள் கொண்டுள்ளன.

ஆனால் ஆரம்ப கால யானைகளின் தும்பிக்கைகள்
நீளம் குறைந்தவை. இன்றைய தும்பிக்கையின்
நீளத்தில் பாதிக்கும் குறைவானவை.

தடாகத்தின் ஆழத்தில் இருக்கும் நீரை அருந்தவோ,
மரத்தின் உயரமான கிளைகளில் இருக்கும்
காய்களைப் பறிக்கவோ குட்டையான தும்பிக்கை
யானைகளுக்குப் பயன்படவில்லை. எனவே தமது
தும்பிக்கையை நீட்டி நீட்டி வேண்டியவற்றைப் பெற
யானைகள் முயன்றன. காலப்போக்கில் பரிணாம
வளர்ச்சியில் யானைகள் நீண்ட  தும்பிக்கையைப்
பெற்றன.

டார்வினுக்கு முந்திய பிரெஞ்சு பரிணாமவியல்
அறிஞர் லமார்க் தமது பரிணாமக் கொள்கையில்
USE AND  DISUSE THEORY என்ற கோட்பாட்டின் மூலம் 
யானைகளின் தும்பிக்கை வளர்ந்ததை விளக்குகிறார்.
லமார்க்கின் பரிணாமக்  கொள்கை காலப்போக்கில்
தோற்று விட்டது.டார்வினின் கொள்கையே
சரியென்று நிரூபிக்கப் பட்டது. எனினும் லமார்க்கின்
USE AND DISUSE THEORY சரியானதே என்று டார்வின்
ஏற்றுக் கொண்டார்.

தடாகத்தில் நீர் அருந்தி விடாய் தீர்க்கும் ஒரு
யானையைக் கற்பனை செய்து பாருங்கள்.
தாகம் தீர்ந்த யானை மிகவும் கம்பீரமாக நடை
போடும். அதன் கம்பீரத்தை அறிய கம்பனிடம்
செல்ல வேண்டும்.

வனவாசத்தின்போது ராமனும் சீதையும் உலாவச்
செல்வார்கள். சீதையின் நடையைக் கண்ட ஓர்
அன்னம், தன் நடை சீதையின் நடைக்கு ஈடாகாது
என்று வெட்கி .ஒதுங்கும். இக்காட்சியைக் கண்ட  
ராமன் சீதையைக் கண்டு முறுவல் செய்வான்.

அப்போது ஒரு தடாகத்தில் நீர் அருந்திய யானை
மிகுந்த நிறைவுடன் கம்பீரமாக நடந்து செல்லும்.
இக்கட்சியைச் சுட்டிக் காட்டும் சீதை ராமனைக்
கண்டு முறுவல் செய்வாள்.  இவ்விரு காட்சிகளையும்
ஒரே விருத்தத்தில் காட்டுகிறான் கம்பன்.

ஓதிமம் ஒதுங்கக் கண்ட
    உத்தமன் உழைய ளாகும்
சீதைதன் நடையை நோக்கிச்
    சிறியதோர் முறுவல் செய்தான்
மாதவன் தானும் ஆண்டு
    வந்து நீருண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்
    புதியதோர் முறுவல் பூத்தாள்.

(ஒதிமம் = அன்னம்; போதகம்= யானை)   

கம்பன் மட்டுமல்ல, தியாகையரும் தமது பிரசித்தி
பெற்ற ஒரு கீர்த்தனையில்  யானையின் கம்பீர
நடையைப் பாடலாக்கி உள்ளார்.

"ஸாமஜ வர கமனா" என்று தொடங்கும் அந்தக்
கீர்த்தனை வெகுவாகப் புகழ் பெற்றது. அடிக்கடி
பாடப்பெறுவது. (ஸாமஜ = யானை; கமனா = கம்பீர நடை)

இந்தக் கீர்த்தனையைப் பலரும் மிகச் சிறப்பாகப்
பாடியுள்ளனர். என்றாலும் எனக்குப் பிடித்த ஜேசுதாசின்
குரலில் இப்பாடலை வாசகர்கள் கேட்கலாம்.
(முதல் பின்னூட்டத்தில் காண்க)

இங்கிலாந்தின் டார்வினையும் காவிரிக்கரை
தியாகையரையும்  அயோத்தி ராமனையும்
ஒரே கட்டுரையில் கொண்டு வந்து .காண்பித்துள்ளேன்.
கூடவே பலரும் அறியாத use and disuse theoryயையும் 
சேர்த்துள்ளேன்.படித்தும் சுவைத்தும் பயன் பெறுக!
********************************************************     
   
    

   

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக