திங்கள், 2 ஏப்ரல், 2018

அத்வைதம் பிரம்ம சூத்திரம் 
பிரம்ம சூத்திரம்: ஒரு கருத்தியல் பிரதியின் உருவாக்கம்
                                                 
 இந்த முறை மதுரை புத்தகக் கண்காட்சியில், சென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன். இந்நூலை மொழிபெயர்த்து விளக்கவுரையும் எழுதியவர் சுவாமி ஆசுதோஷானந்தர் எனப் பதிப்புரையில் சொல்லப்பட்டுள்ளது. பிரம்ம சூத்திரத்திற்குத் தமிழில் பல மொழிபெயர்ப்புகள் உள்ளனவெனினும், புதிதாக வந்த தமிழ் மொழிபெயர்ப்பு என்பதனால் விருப்புடன் அதனைப் படித்தேன். இந்நூலைப் படிக்கும் போது, குறிப்பிட்ட சில பிரச்சினைகள் உறுத்தலாகத் தென்பட்டதால், அதனை இக்கட்டுரையில் பதிவு செய்யலாம் என விழைகிறேன்.
பிரஸ்தான திரயம்
பண்டைய இந்தியாவில் வேதாந்தத் தத்துவம் உருவானதற்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. வேதாந்தத் தத்துவத்திற்கு மூவகை நூல்கள் அடிப்படை நூல்களாக விளங்குகின்றன. இம்மூவகை நூல்களை ப்ரஸ்தான த்ரயம் என்று வைதீகர்கள் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் வேதங்கள், உபநிடதங்கள் முதல் வகைப் பட்டவை. இவற்றை சுருதி பிரஸ்தானம் என்பர். சுருதிகள் என்பவை யாராலோ இயற்றப்பட்டவை என்றோ, எழுதப்பட்டவை என்றோ வைதீகர்கள் ஒப்புக்கொள்வது கிடையாது. பிரபஞ்ச வெளியில் ஒலி வடிவில் நிலவிய பாடல்களை வேத ரிஷிகள் “காதுகளால் கேட்டுப்” பதிவு செய்தார்கள் என்பது சுருதிகளுக்கு அவர்கள் வழங்கும் விளக்கம். இப்படிப்பட்ட ஒரு விளக்கம் நிச்சயமாகப் பிற்காலத்தியது என்று யூகிக்க முடியும். வைதீக மரபு உருவெடுத்த பின், அதற்குப் பல வகை நூல்களும்  பல வித விளக்கங்களும் உருவான பின்னர், ஏதோ ஒரு வகையில் அதன் தொன்மையையும் புனிதத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே சுருதி பிரஸ்தானம் என்ற, அதாவது ரிஷிகளால் “கேட்கப்பட்ட” பூர்வீகத்தை, வைதீகர்கள் உருவாக்கியிருக்க வேண்டும் என்று யூகிக்கலாம். அதாவது இது மற்ற நூல்களைப் போல “மானுடப் பிறவிகளால்” எழுதப்பட்ட நூல் அல்ல (அபௌருஷ்ய) என்ற ஒரு புனித அந்தஸ்தை ஏற்றியுள்ளார்கள்.
 வேதாந்தத்தின் இரண்டாவது முக்கியமான நூலாக பகவத் கீதை சொல்லப்படுகிறது. இதனை ஸ்மிருதி பிரஸ்தானம் என்பர். வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் மிகப் பிந்திய காலத்தைச் சேர்ந்தது பகவத் கீதை. பிராமண இலக்கியங்களான வேத உபநிடதங்கள், அவற்றிற்கு இணையாக சிராமணத் தத்துவங்கள் எனப்படும் ஆசீவகம், சமணம், பௌத்தம், இவற்றுக்குப் பின் தோன்றிய ராமாயண மகாபாரதம் என்ற வரிசையில் கடைசியாகத் தோன்றியது பகவத் கீதை. இத்தனை காலங்கள் பின்னால் தோன்றியது என்பதைக் குறிப்பதற்கும், அது பல விஷயங்களில் வேத உபநிடதங்களிலிருந்து விலகிச் சென்றது என்பதைக் குறிப்பதற்குமே, அது ஸ்மிருதி பிரஸ்தானம் என்ற இரண்டாம் நிலை அந்தஸ்தில் வைத்துச் சொல்லப்படுகிறது.
 மேற்குறித்த இருவகை நூல்களைக் கடந்து, மூன்றாவது நிலையில் தோற்றம் பெற்ற நூலே பாதராயணரின் பிரம்ம சூத்திரம் ஆகும். உண்மையில் வேதாந்தம் என்ற தத்துவம் உருவானதில் இந்நூலே முடிவான பாத்திரம் வகித்தது. வேதங்களின் முடிவு, வேதங்களின் சாரம் என்ற அர்த்தங்களைக் கொண்டதாக இத்தத்துவம் பெயரிடப்பட்டுள்ளது. சிராமணத் தத்துவங்கள் மட்டுமின்றி, சார்வாகம், சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் போன்ற தத்துவங்களும் இக்காலத்தில் நிலைபெற்றுவிட்டதால், வைதீக மரபுக்கென ஒரு தத்துவத்தை உருவாக்கிக் காட்டவேண்டிய அவசியம் இக்காலத்தில் ஏற்பட்டு விட்டதென்று இங்கு நாம் கணக்கிட முடியும்.
தர்க்க பிரஸ்தானம்
 வேத உபநிடதங்கள் சுருதி பிரஸ்தானம் என்றும் பகவத் கீதை ஸ்மிருதி பிரஸ்தானம் என்றும் அழைக்கப்படுவது போல, பிரம்ம சூத்திரம் இதே வரிசையில் தர்க்க பிரஸ்தானம் அல்லது நியாய பிரஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. நியாயம் என்பது இந்தியத் தத்துவங்களில் அறிவின் ஆதாரங்களையும் தர்க்க விதிகளையும் பற்றிப் பேசுகிற விரிவான ஒரு தத்துவம் ஆகும். இது வைசேடிகத்தோடு இணைத்துப் பேசப்படும் சிந்தனை ஆகும். பிரம்ம சூத்திரம் நியாய பிரஸ்தானம் என்று பெயரிடப்பட்டதிலிருந்து வேதாந்தத் தத்துவத்தைப் பிற தத்துவங்களைப் போலத் தர்க்கபூர்வமாக உருவாக்க வேண்டும் என்று அதன் ஆசிரியரான பாதராயணர் ஆசைப்பட்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது. அப்படிச் செய்தால்தான் வைதீக மரபின் சிந்தனை ஒன்றுக்கு தத்துவம் என்ற அந்தஸ்து கிடைக்கும் என்பதைப் பாதராயணர் புரிந்திருக்கிறார். பாதராயணரின் ஆசையைத் தவறென்று சொல்லமுடியாது. நியாயமான ஆசைதான்.
 இந்நிலையில், பிரம்ம சூத்திரம் நியாய பிரஸ்தானம் என அழைக்கப்படுவதைப் பற்றி, சுவாமி ஆசுதோஷானந்தர் கூறும் விளக்கத்தை இங்கு எடுத்துக்காட்டுவோம். “நியாய பிரஸ்தானம் என்றால் யுக்திபூர்வமான அடிப்படை நூல். யுக்திபூர்வமானது என்றால், யுக்திபூர்வமான கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பது என்றோ விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் எழுதப்பட்டது என்பதோ பொருள் அல்ல. ‘யுக்திபூர்வமானது’ என்று கூறுவதன் மூலம் ‘நேரடியாக உபநிஷதங்களை அடிப்படையாகக் கொண்டது’ என்பது சுட்டிக்காட்டப்படுகிறது” (பக். XV). ஆசுதோஷானந்தரின் விளக்கம் நமக்கு சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நூலுக்கு தர்க்க பிரஸ்தானம் என்று பெயர் வைத்துவிட்டு, அடுத்த வரியிலேயே அது தர்க்கபூர்வமானது அல்ல என்று விளக்கமளித்தால் ஏமாற்றம் ஏற்படத்தான் செய்யும். பிரம்ம சூத்திரம் விஷயத்திலும் அதுதான் நடக்கிறது.
 சரி, அது தர்க்கபூர்வமானது அல்ல என்றால், பின் எப்படிப்பட்டது? அது நேரடியாக உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதே சுட்டிக்காட்டப்படுகிறது என்கிறார் ஆசுதோஷானந்தர். அதாவது வேதாந்தத்தின் உபநிடதத் தொடர்பை நிலைநாட்டுவதுதான் பாதராயணருக்கு முக்கியம். உபநிடதத் தொடர்பு வைதீகத் தொடர்பு. அது ஒரு கூட்டத்தின் அடையாளம். அதுதான் பாதராயணருக்குத் தேவை. அதை அவர் செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் அப்படிப்பட்ட நூலுக்குத் தர்க்க பிரஸ்தானம் அல்லது நியாய பிரஸ்தானம் என்று ஏன் பெயர் வைக்க வேண்டும்? குறிப்பிட்ட அக்காலத்தில் நியாயத்திற்கும் தர்க்கத்திற்கும் ‘மௌசு’ ஏற்பட்டு விட்டது என்பதற்காக அப்படி பெயர்வைத்து விடலாமா, என்ன?
 கொஞ்சம் வேறுவிதமாகச் சிந்திப்பதானால், உபநிடதங்களை அடியொற்றி எழுதப்பட்ட பிரம்ம சூத்திரம் என்ற இந்நூல், அந்தக் காரியத்தைச் செவ்வனே செய்வதற்காக தர்க்கவியலை ஒரு கருவியாகப் பயன்படுத்தப் போகிறதோ, என்ற சந்தேகம் எழுகிறது. உண்மையில் பிரம்ம சூத்திரம் நூலுக்குள் அதுதான் நடக்கிறது. இதனைப் பின்னால் காண்போம். இப்போதைக்கு ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். பிரம்ம சூத்திரத்தின் நோக்கம், அறிவின் அடிப்படை ஆதாரங்கள் பற்றிய நியாயத்தைக் கொண்டோ அதன் தருக்கவியலைக் கொண்டோ வேதாந்தம் என்ற ஒரு தத்துவத்தை உருவாக்குவதல்ல, மாறாக ஏற்கனவே வழக்கிலிருந்த உபநிடத வரிகளிலிருந்து வைதீக மரபுக்கென ஒரு தத்துவக் கட்டிடத்தைக் கட்டி எழுப்புவதே என்பதைப் புரிந்து கொள்ளுகிறோம். தருக்கவியல் இங்கு உண்மையைத் தேடும், உண்மையைக் கண்டறியும், பின் அதனை உரசிப் பார்க்கும் சாதனமாகப் பயன்படவில்லை, மாறாக ஏற்கனவே கைவசம் உள்ள முன்முடிவை வலியுறுத்தும் கருவியாக மட்டுமே பயன்பட்டுள்ளது. தர்க்க பிரஸ்தானம் எனப்படும் பிரம்ம சூத்திர நூலில் தர்க்கத்திற்கு முதன்மையிடம் வழங்கப்படவில்லை, அது உபநிடதக் கருத்துக்களை நியாயப்படுத்துவதற்கான உபகருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நமது ஏமாற்றம் பெரிதாகிறது.
வேத உபநிடதங்களின் உரையாசிரியர்கள்
 வேதாந்தத்தின் வரலாற்றில் இதுதான் வேதாந்தம் என்று விளக்கவந்த பலர் தத்தமது முன்முடிவுகளுக்கு ஏற்ப, வேத உபநிடத நூல்களைத் தம் மனம் போலப் பிரித்தும் திரித்தும் மிகவும் அசம்பாவிதமாகப் பொருள் கூறியுள்ளனர் என்று ஆசுதோஷானந்தர் வருந்துகிறார். இது குறித்து விவேகானந்தரின் வருத்தத்தையும் ஆசுதோஷானந்தர் எடுத்துக்காட்டுகிறார். “விவேகானந்தரின் வீரமொழிகள்” என்ற தலைப்பிலான நூல் தொகுதிகளின் ஐந்தாம் பகுதியில் இடம்பெறும் விவேகானந்தரின் சொற்களை அவர் எடுத்தாளுகிறார், “அத்வைத உரையாசிரியர் என்ன செய்கிறார்? அத்வைதப் பகுதி வரும்போது, அதை அப்படியே வைத்துக் கொள்கிறார். ஆனால் துவைதப் பகுதி வருமானால் அதே உரையாசிரியர், அவரால் முடியுமானால், அந்தப் பகுதியைப் பிரித்தும் திரித்தும் மிகவும் அசம்பாவிதமாகப் பொருள் கொள்ளுகிறார். “பிறப்பற்றது” [என்ற சொல்] சில இடங்களில் “ஆடு” என்றாகிவிடுகிறது. இத்தகைய வினோத மாற்றங்களை எல்லாம் [உரையாசிரியர்களின் எழுத்துக்களில்] காணமுடியும். உரையாசிரியர் தமக்கு ஏற்றவாறு பொருள் தருவதற்காக, “பிறப்பற்றது” என்ற பொருள் தருகின்ற “அஜ:” என்ற வார்த்தையை, “பெண் ஆடு” என்று பொருள் படுகின்ற “அஜா” என்ற வார்த்தையாகக் கொள்ளுகிறார். இதைவிட மோசமாக இல்லையென்றாலும், இவ்வாறு தான் துவைத உரையாசிரியர்களும் வேதப்பகுதிகளைக் கையாளுகிறார்கள். துவைதப் பொருள் தரும் பகுதிகளை அப்படியே வைத்துக் கொண்டு, அத்வைதப் பொருள் வரும் பகுதியை விருப்பம் போல் திரித்துப் பொருள் தருகிறார்கள்.”
 விவேகானந்தரின் இந்தச் சொற்களை எடுத்தாளும் ஆசுதோஷானந்தர், வேதாந்த உரையாசிரியர்களைப் பற்றிக் கூடுதலாக ஒரு வரி எழுதிச் செல்லுகிறார், “பாதராயணரின் கருத்துக்களையே மறைக்கும் அளவிற்கு இவர்கள் தங்கள் கருத்துக்களைத் திணிப்பதில் முனைந்து நிற்பதைக் காணமுடிகிறது.” (பக். XVIII-XIX).
 விவேகானந்தரும் ஆசுதோஷானந்தரும் “பிரித்தும் திரித்தும் எழுதும் வேதாந்த உரையாசிரியர்கள்” என்று இங்கு யாரைக் குறிப்பிடுகின்றனர்? யாரோ இப்போதுள்ள அரைகுறை வேதாந்திகளை அவர்கள் இங்கு குறிப்பிடவில்லை. சாட்சாத் சங்கரர், ராமானுஜர், மத்வர் போன்ற முதல் ஆச்சாரியார்களையே திரித்து எழுதியவர்களென்று விவேகானந்தரும் ஆசுதோஷானந்தரும் குறிப்பிடுகின்றனர். அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? இன்னும் இருக்கிறது!
சமன்வய விளக்கங்கள்
 பிரம்ம சூத்ரம் நூல் நான்கு பெரும் அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் முதல் அத்தியாயம் ஸமன்வய அத்தியாயம் என அழைக்கப்படுகிறது. ஸமன்வயம் என்றால் என்ன?
 “ஸமன்வயம் என்ற வார்த்தையை ‘ஒரே விதமான கருத்து’ என்று ஓரளவிற்கு மொழிபெயர்க்கலாம். வேதங்கள், குறிப்பாக உபநிஷதங்கள் கூறுகின்ற ஒரேவிதமான கருத்து இறைவனே (பிரம்மம்).. உபநிஷத வாக்கியங்கள் சில இடங்களில் தெளிவற்றுத் தென்படுகின்றன. அத்தகைய மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவையும் மேற்கண்ட கருத்தையே கூறுகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறார் பாதராயணர். இவ்வாறு உபநிஷதங்கள் சமன்வயத்தை அதாவது, ‘ஒரேவிதமான’ கருத்தையே கூறுகின்றன என்பதை எடுத்துக் கூறுவதால் இந்த அத்தியாயம் ‘ஸமன்வய அத்தியாயம்” என்று பெயர் பெறுகிறது.” (பக். 3-4) என்கிறார் ஆசுதோஷானந்தர். உபநிடதங்கள் வேறுபட்ட கருத்துக்களைப் பேசவில்லை, அவை ஒரே பொருளைத்தான் (பிரம்மம் குறித்து மட்டுமே) பேசின என்று நிறுவுவதே சமன்வயம்.
 சமன்வயம் என்ற சொல்லை ஆசுதோஷானந்தர் பிறிதோரிடத்திலும் விளக்குகிறார். “சாஸ்திரங்களில் பல கருத்துக்கள் காணப்படுகின்றன; அவற்றுள் எதை நிரூபணமாகக் கொள்ளுவது? எதை நிரூபணமாகக் கொள்வது என்ற கேள்விக்கு இங்கே பாதராயணர் கூறும் பதில் மிகவும் ஆழமானது. ‘சமன்வயத்தின் வாயிலாக’ என்று அவர் பதில் கூறுகிறார். சமன்வயம் என்றால் ‘சமன்படுத்துதல்’.. மேலோட்டமாகப் பார்த்தால், வேத உபநிஷங்களில் இதற்கு [பிரம்மம் என்ற கருத்தாக்கத்திற்கு] மாற்றுக் கருத்துக்களைக் காணமுடியும். ஆனால் அவை மாற்றுக் கருத்துக்கள் அல்ல; அவற்றைச் சமன்படுத்திப் புரிந்து கொண்டால் குழப்பம் நேர்வதற்கு வாய்ப்பில்லை.” (பக். 24-25).
 ஆசுதோஷானந்தர் இங்கு சிறிது சிரமப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. உபநிடத வாக்கியங்கள் சில இடங்களில் தெளிவற்றுக் காணப்படுகின்றன, பல கருத்துக்கள் உள்ளன; பலவகைப்பட்ட கருத்துக்களில் எதைக் கொள்ளுவது?, பிரம்மத்திற்கு மாற்றுக் கருத்துக்களும் உபநிடதங்களில் உள்ளன, ஆனால் அவை மாற்றுக் கருத்துக்கள் அல்ல.
எத்தனைத் தடுமாற்றங்களோடு ஆசுதோஷானந்தர் பிரம்ம சூத்திரத்தின் “தருக்கவியலை” விளக்குகிறார் பாருங்கள்!
இருப்பினும் ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகிறது. பிரம்ம சூத்திரம் மிக முக்கியமான, “மிகவும் ஆழமான” ஒரு நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது. உபநிடதங்களில் தெளிவில்லை. வரலாற்றின் முந்திய காலக்கட்டத்தில், வரையறுக்கப்பட்ட முன்முடிவுகள் இல்லாமல், சில வேளைகளில் முரண்பட்ட கருத்துநிலைகளும் வேத உபநிடதங்களில் பதிவாகியுள்ளன. பிரம்மத்தைப் பற்றிய கருத்துக்களும் அந்நூல்களில் உள்ளன, மாற்றுக் கருத்துக்களும் அந்நூல்களில் உள்ளன. வரலாற்றின் அடுத்தக் கட்டத்தில், தமக்கு வரையறுக்கப்பட்ட தத்துவம் ஒன்று வேண்டும் எனக் கருதிய வைதீகர்கள், அப்பழைய நூல்களிலிருந்து குறிப்பான மந்திரங்களைத் தேர்வு செய்து, விளக்கமளித்து “பிரம்மம் என்ற ஒரேவிதமான கருத்தை” முன்னிலைப்படுத்துவதற்காக பிரம்ம சூத்திரம் என்ற நூலை உருவாக்கியுள்ளார்கள். இதனைச் செய்வதற்காகவே சமன்வயம் அல்லது சமப்படுத்தல் என்ற உத்தியை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பின்னை நவீனத்துவ சிந்தனையாளர்கள் குறிப்பிடும் ஒரு கருத்தை இங்கு நினைவுபடுத்துவோம். எல்லா மூலப் பிரதிகளுமே உள்ளுக்குள்ளாக முரண்பாடு கொண்டவையே, உள்ளுக்குள் வேறுபாடுகள் (பிசிறுகள், சிதறல்கள்) கொண்டவையே, ஆயின் ஒரு மதம் அல்லது சிந்தனை முறை நிறுவனப்படும்போது, அந்த முரண்களும் வேறுபாடுகளும் உள்ளமுக்கப்பட்டு ‘மொழு மொழு’ என அமுல்பேபி போன்ற சித்திரம் உருவாக்கப்படுகிறது. இது ஒரு கருத்தியல் (Ideology) செயல்பாடு. கருத்தியல் என்பதற்கு கார்ல் மார்க்ஸ், அது ஒரு பொய்யுணர்வு என்று கூறியதையும் இங்கு நினைவில் கொள்வோம்.             
பிரம்ம சூத்திரம் சமப்படுத்துகிறதா, வீழ்த்த முனைகிறதா?
 ஆசுதோஷானந்தர் சொல்லுகிறார், “பாதராயணரின் காலத்தில் சாங்கியம் மிகவும் பிரபலமான தத்துவமாக இருந்திருக்க வேண்டும். எனவே சாங்கியக் கருத்தைத் தவறென்று நிரூபிப்பதையே அவர் முதலில் எடுத்துக்கொள்கிறார். உலகின் மிகச் சிறந்த மல்யுத்த வீரனை வீழ்த்துகின்ற ஒருவன் மற்ற வீரர்களை எதிர்கொள்ளாமலேயே மிகச்சிறந்த வீரன் என்ற பட்டம் பெறுவான். அதுபோலவே சாங்கியத்தை எதிர்கொண்டால் அது மற்ற தத்துவங்களையும் எதிர்கொண்டதற்குச் சமமே என்பதால் பல சூத்திரங்களை சாங்கியத்தை எதிர்கொள்வதற்காகவே எழுதியுள்ளார் பாதராயணர். இத்தகைய தமது நிலையை ‘ப்ரதான மல்ல நிபர்ஹண நியாயம்’ என்று குறிப்பிடவும் செய்கிறார்.” (பக். 26).
 முன்பு சொல்லியதன்படி, உபநிடத வாக்கியங்களுக்குள் தென்படும் உள்முரண்களை அப்புறப்படுத்தவே பாதராயணர் தனது சமன்வயத்தைப் பயன்படுத்தப் போகிறார் என நாம் எதிர்நோக்கும் நேரத்தில், பாதராயணர் வேறொரு வேலைத்திட்டத்தை இங்கு முன்மொழிகிறார். வெறுமனே உபநிடதங்களில் காணப்படும் சின்னஞ்சிறு முரண்களை, பிசிறுகளை, வளைவு நெளிவுகளைத் தட்டி நேர்ப்படுத்துவதற்காக பாதராயணர் இங்கு சமன்வயத்தைக் கையாளவில்லை. ஓர் அடிப்படையான தத்துவப்பிரச்சினையைக் கையாளுவதற்காக சமன்வயம் இங்கே பயன்படப்போகிறது. அதாவது அவரது காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த சாங்கியத்தின் செல்வாக்கை உபநிடதங்களிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான வேலையிலேயே அவர் ஈடுபடுகிறார்.
 வேதாந்தத்திற்குள்ளேயே சில நெளிவு சுழிவுகளை பாதராயணர் சரிசெய்ய முனைந்தால் நாம் அது குறித்து பெரிதும் கவலைப்படவேண்டியதில்லை. இது அத்வைதமல்ல, விசிட்டாத்வைதம், இல்லை, இல்லை, இது துவைதம் என உபநிடத வரிகளைப் “பிரித்தும் திரித்தும்” விளக்கமளித்தால் கூட நாம் அதனை “அசம்பாவிதம்” எனக் கொள்ளப்போவதில்லை. ஆனால் பாதராயணர் பிரம்ம சூத்திரத்தில் வேதாந்தத்தின் உள்பிரச்சினைகளை விட முக்கியமாக சாங்கியம் என்ற பிரதான மல்லனை வீழ்த்துவதற்கு இறங்கியுள்ளார். இது சமப்படுத்தல் அல்ல, வீழ்த்தும் அரசியல். தத்துவத்தில் வர்க்கப் போராட்டம் என்று அல்த்தூசர் குறிப்பிடும் கருத்து நினைவுக்கு வருகிறது.
சாங்கியம்/வேதாந்தம் என்ற தீவிர எதிர்வு
 பிரம்ம சூத்திர நூல் சாங்கியத்தை வீழ்த்தி வேதாந்தத்தை எப்படித் தூக்கிப் பிடிக்கிறது என்பதை விளக்க சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடுவோம். உபநிடத வரிகளில் சாங்கிய செல்வாக்கு கொண்டவை என்று எவை எவையெல்லாம் தென்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பிரம்ம சூத்திரம் முரட்டுத்தனமாக மோதி உடைக்கிறது.
சாந்தோக்ய உபநிடதத்தில் உலகப் படைப்பு பற்றிய பகுதியில், “கடவுள் என்ற ஒருவர் இல்லை; படைப்பு என்பது தானாக நிகழ்ந்தது என்று சிலர் கூறுகிறார்கள்” (6:2.1) என்று ஒரு வரி இடம் பெறுகிறது.
“முதலில் நெருப்பு தோன்றியது. அந்த நெருப்பு “நான் பலராக ஆவேனாக! நான் மகோன்னதமாக விரிவடைவேனாக!” என்று சிந்தித்தது. அது தண்ணீரைப் படைத்தது. அந்த தண்ணீர் “நான் பலராக ஆவேனாக! நான் மகோன்னதமாக விரிவடைவேனாக!” என்று சிந்தித்தது. அது காற்றைப் படைத்தது..” (6:2.3,4). இவை சாந்தோக்ய வரிகள். இப்பாடல் வரிகள் சாங்கிய செல்வாக்குக் கொண்டது என பாதராயணர் கருதுகிறார். நம்மைப் பொறுத்தமட்டில், இந்த வரிகள் சாங்கிய செல்வாக்கு கொண்ட பகுதியாக இருக்கலாம், அல்லது பழங்கால இந்திய மரபின் இயற்கை வழிப்பட்ட சிந்தனைப் போக்காகவும் இருக்கலாம். ஆனால் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல இயற்கை வழிப்பட்ட சிந்தனையை சாங்கியம் எனக் கொண்டு, அதனை அடித்துத் துவைத்து அப்புறப்படுத்த பிரம்ம சூத்திரம் முனைகிறது.
சாந்தோக்ய வரிகளில் நெருப்பு சிந்தித்தது, தண்ணீர் சிந்தித்தது என்று சொல்லப்பட்டிருப்பதால், சிந்தித்தல் என்ற பண்பு சடப்பொருளுக்குப் பொருந்தாது, எனவே பிரம்மம் என்ற இறைக்கருத்தே இங்கு நெருப்பு, தண்ணீர், காற்று என்ற பெயர்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்று பிரம்ம சூத்திரம் வாதிடுகிறது.
மிகப்பழங்காலச் சிந்தனை இயற்கை சக்திகளை உயிரற்ற வெற்றுச் சடப்பொருட்களாகக் கொண்டது கிடையாது. பஞ்சபூதங்கள், இயற்கை, மரம்-செடி-கொடிகள், மலைகள், நதிகள் ஆகிய அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உயிர்ப்பண்பு கொண்டவை என்றே பழங்கால மனிதர்கள் கருதினார்கள். சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் கூட இத்தகைய வர்ணனைகள் உண்டு. எனவே நெருப்பு சிந்தித்தது, தண்ணீர் சிந்தித்தது என்ற சித்தரிப்புகள் வியப்புக்குரியன அல்ல. இயற்கை சக்திகளுக்கு சொந்த இயக்கம் உண்டு, அவை ஒன்றிலிருந்து ஒன்றாக மாறுபடுகின்றன என்றே அன்றைய சிந்தனை முறை கருதியது. இயற்கையிலிருந்து மனிதர் அந்நியப்படாத அன்றைய சூழலை இவ்வகைச் சிந்தனை குறித்து நிற்கிறது.
ஆயின் வேதாந்தத் தத்துவம் இயற்கையிலிருந்து மனிதன் துண்டுபட்டுப் போனச் சூழலைத் தன்னில் கொண்டுள்ளது. அது இயக்கம், மாறுபடுதல், வளர்ச்சியடைதல் போன்ற பண்புகள் மனிதருக்கு மட்டுமே உரியவை என்று கருதுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்லுவதானால், வேதாந்தம் இங்கு அதன் சொந்த அந்நியமாதலை உபநிடத வரிகளின் மீது திணிக்கிறது. நெருப்பு, நீர், போன்ற பஞ்சபூதங்களையும் இயற்கையையும் சடப்பொருளாக்குதல் (Objectification) என்ற நிகழ்வுக்கு பிரம்ம சூத்திரம் ஆட்படுத்துகிறது. இயற்கையைச் சடப்பொருளாக்கும் போது, பிரம்மம் உயிர்ப்பொருளாக்கப்படுகிறது (Subjectification).
வேதாந்தத்தில் பிரம்மம் மட்டுமே ஒரே உயிர்ப்பொருள், உணர்வுப் பொருள், அறிபவன், செயல்படுபவன். மிஞ்சிய எல்லாமே சடப்பொருளாக்கப்படுகின்றன. ஒன்றைச் சடமாக்காமல் மற்றொன்றை உயிர்ப்பொருளாக்க முடியாது. அடிமைப்படுத்தாமல் ஆண்டை உருவாவது இல்லை. பிரம்மத்தின் நிலைப்பாடு பின்னால் இந்தியத் தத்துவங்களில் ஏராளமாகப் பேசப்படக்கூடிய ஆணவம், அகங்காரம் கொண்ட நிலைப்பாடு. இந்தியத் தத்துவங்களிடையில் தனிமனிதமும் அதன் ஆணவமும் உருவான வரலாற்றின் முதல் பக்கங்களை வேதாந்தம் தன்னில் கொண்டுள்ளது. வேதாந்தத்தில் சடம்/கருத்து, சடம்/உணர்வு என்ற எதிர்வு அதன் தீவிர வடிவில் உருவாக்கப்படுகிறது. மேலே எடுத்தாளப்பட்ட உபநிடத வரிகளில் இல்லாத அந்நியப்பட்ட நிலையை வேதாந்தம் உண்டாக்கிக் காட்டுகிறது. மார்க்சின் சொற்களில் சொல்லுவதானால், உலகின் சொந்த இயக்கத்தை, உலகின் உயிரை பிரம்மம் களவாடிக் கொள்ளுகிறது.
இதேபோல, தைத்திரிய உபநிடதம் (2:1) கூறும் “வெளி(Space)யிலிருந்து காற்று, காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி, பூமியிலிருந்து செடிகொடிகள், செடிகொடிகளிலிருந்து உணவு, உணவிலிருந்து மனிதன் தோன்றினான்” என்னும் வரிகளையும் சாங்கியம் என்ற “சந்தேகத்”தின் பேரில் பிரம்ம சூத்திரம் சின்னாபின்னப் படுத்துகிறது. உபநிடதங்களில் பல இடங்களில் பிரம்மமே எல்லாவற்றையும் படைத்ததாகச் சொல்லப்பட்டிருப்பதால், அதற்கு மாற்றான கருத்துக்களை எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என பிரம்ம சூத்திரம் வாதிடுகிறது. பிரம்ம சூத்திரத்தில் பல இடங்களில், பெரும்பான்மையான இடங்களில் பிரம்மமே முதன்மைப்படுத்தப்படுகிறது என்பதை நாம் ஒத்துக் கொள்வோம். ஆனால், அக்காலத்தில் சில வேறுபட்ட கருத்துக்களும் இருந்தன, அவை இயற்கை சார்ந்த கருத்துக்களாக இருந்தன என்பதை பிரம்ம சூத்திரம் ஒத்துக்கொள்ள மறுக்கும் அகங்காரத்தைத்தான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒரு பழைய நூலில் அன்றைய காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் உள்முரண்கள் ஆங்காங்கே இருக்க வாய்ப்புண்டு என்ற அளவில் கூட பிரம்ம சூத்திரத்தால் வேறுபாடுகளைச் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதையே காண்கிறோம்.
சாந்தோக்ய உபநிடதத்தில் சில பகுதிகள் (1:9.1-2; 8:14.1). “ஒரு முனிவர் கேட்கிறார், இந்த உலகின் ஆதாரம் எது? இன்னொரு முனிவர் பதில் சொல்லுகிறார், “ஆகாயம். ஏனெனில் பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஆகாயத்திலிருந்தே தோன்றுகின்றன. அவை இறந்த பிறகு ஆகாயத்திற்கே மீண்டும் செல்கின்றன. ஆகாயம் இவை எல்லாவற்றையும் விட உயர்ந்தது. எனவே ஆகாயமே அறுதி லட்சியம்.”” இந்த வரியும் பிரம்ம சூத்திரத்தால் மறுக்கப்படுகிறது. ஆகாயம் என்ற பெயரில் இங்கு பரம்பொருளே குறிக்கப்படுகிறார் என்று பாதராயணர் வாதிடுகிறார் (பக்.51-52).
கதா உபநிடத்தத்தில் ஒரு பாடல் வரி (1:3.10-11), “புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை, பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது, மனத்தைவிட புத்தி வலிமை வாய்ந்தது, புத்தியைவிட மகத் வலிமை வாய்ந்தது, மகத்தைவிட அவ்வியக்தம் வலிமை வாய்ந்தது, அவ்வியக்தத்தைவிட புருஷன் வலிமை வாய்ந்தது”.
இவ்வரிகளில் உள்ள மனம், புத்தி, மகத், அவ்வியக்தம், புருஷன் என்ற எல்லா கருத்தாக்கங்களும் அவற்றின் பரிணாம வரிசையும் சாங்கியத்தினுடையவை. இங்கு சொல்லப்பட்டுள்ள சாங்கியம் ஈஸ்வர சாங்கியம், அதாவது வேதாந்தத்திற்கு வளைந்து கொடுக்கக்கூடிய பிற்கால சாங்கியம் தான். அப்படி இருந்த போதிலும், பிரம்ம சூத்திரம் விடுவதாக இல்லை. மேற்படி உபநிடதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள, சாங்கியத்திற்கே உரிய “அவ்வியக்தம்” என்ற சொல் வேதாந்தக் கருத்தைக் குறிப்பிடுகிறதே தவிர சாங்கியத்தை அல்ல என்று பிரம்ம சூத்திரம் வாதிடுகிறது (187-190). அவ்வியக்தம் என்பது சாங்கியம் சார்ந்த சொல் அல்ல என நிரூபிப்பதற்காக, அச்சொல்லுக்கு உடம்பு என்பதே பொருள் என்று பாதராயணர் இங்கு நீண்ட விளக்கம் வரைகிறார்.
பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் சொல்லிவரும் ராமகிருஷ்ண மடத்தின் ஆசுதோஷானந்தருக்கே பாதராயணர் செய்யும் அட்டகாசங்களைப் பொறுக்கமுடியவில்லை. அவர் சொல்லுகிறார், “அவ்வியக்தம் என்பதற்கு உடம்பு என்று பொருள் கொள்கிறார் பாதராயணர். மிகவும் சுற்றி வளைத்தே அவர் இந்தப் பொருளைக் கூறுகிறார் என்பது தெளிவு. அவ்வியக்தம் என்ற சொல்லிற்கு வெளிப்படாதது என்பதுதான் நேரடிப்பொருள். ஆனால் உடம்பு என்பதோ அனைவருக்கும் வெளிப்பட்டுத் தோன்றுவது.. அவ்வியக்தம் என்றால் உடம்பு என்று பொருள் காண்பது, கறுப்பு என்றால் வெள்ளை என்று பொருள் கூறுவது போன்றது.. இவ்வாறு சாங்கியர்கள் கூறும் கருத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே போல் சுற்றி வளைத்து இத்தகைய பொருளைத் தருகிறார் பாதராயணர்.” (பக். 189-191).
பாதராயணர், கறுப்பு என்றால் வெள்ளை என பொருள் கூறும் முறைமைக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு. ஆசுதோஷானந்தர் சொல்லுகிறார், “உபநிஷதங்களில் பல இடங்களில் உலகின் காரணம் பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் உலகின் காரணம் வெவ்வேறா?” (பக். 210).
சாந்தோக்ய உபநிடதம் (6:2.2,3) கூறுகிறது, “ஆரம்பத்தில் ‘ஸத்’ (இருப்பு, Existence) மட்டுமே இருந்தது. அதைத்தவிர வேறு எதுவும் இல்லை. அந்த ஸத் அக்கினியைத் தோற்றுவித்தது, அக்கினி தன்ணீரைத் தோற்றுவித்தது..”
தைத்திரிய உபநிடதம் (2:7.1) கூறுகிறது, “ஆரம்பத்தில் இல்லாமை (அஸத்) இருந்தது. அதிலிருந்து ஸத் உண்டாகியது.”
முதலில் எது இருந்தது? என்பதில் சாந்தோக்யமும் தைத்திரியமும் முரண்படுகின்றன. இங்கு தென்படும் முரண், சில நூறு ஆண்டுகளாக உபநிடதங்கள் நடத்திய தேடலின் விளைவாக இருக்கமுடியும். அப்படித் தேடி, உபநிடதங்கள் தமது பிரம்மம், ஆன்மம் போன்ற முடிவுகளுக்கு வந்து சேர்ந்தன என்றே நாம் கருதுகிறோம். ஆனால் அப்படி ஒரு தேடல் நடந்ததற்கான தடயங்களை அழிக்கும் முயற்சியில் பிரம்ம சூத்திரம் ஈடுபடுகிறது. தேடல் என்பதை ஒத்துக்கொண்டால், அவை மானுட முயற்சிகள் என்பதை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். குறிப்பிட்ட அச்சமூகச் சூழலில் வெவ்வேறு திசைகளில் விவாதங்கள் நடந்திருக்கின்றன என்ற உண்மையை ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும். உபநிடதங்களைத் தெய்வீக நூல்கள் என்று சொல்லமுடியாமல் போய்விடும். எனவே ஸத்தோ, அஸத்தோ, இந்த வார்த்தைகள் அனைத்துமே இறைவனின் (பிரம்மத்தின்) பல்வேறு பெயர்களே என்று பிரம்ம சூத்திரம் அறிவிக்கிறது. கறுப்பை வெள்ளையாக்கும் பிரம்ம சூத்திரத்தின் வித்தையை எந்த இலக்கணத்தைக் கொண்டு தருக்கவியல் என்று கூறமுடியும்? கறுப்பை வெள்ளையாக்குவதை எந்த லட்சணத்தின் படி சமவயம் என்று கூறமுடியும்? பிரம்ம சூத்திரத்தை தருக்க பிரஸ்தானம் என்று கூறுவது நியாயமாகுமா?
முடிவாக
 பிரம்ம சூத்திரம் என்ற அந்த நூலில் பல தத்துவார்த்த விஷயங்கள் ஆழமாகப் பேசப்பட்டிருக்கின்றன என்றே இன்னும் நாம் நம்புகிறோம். ஆயின் நாம் இங்கு எடுத்துக்காட்டிப் பேசியுள்ள பிரச்சினை பிரம்ம சூத்திரத்தின் தத்துவ ஆற்றலைச் சுட்டிக்காட்டவில்லை. மாறாக, பிரம்ம சூத்திரம் என்ற பிரதி அதற்கு முந்திய பிரதிகளான உபநிடதங்களில் தென்படும் உள்முரண்களை இல்லாமலாக்க முயற்சி செய்வதையே அது காட்டுகிறது. இந்தப் பொருளில்தான் அதனை ஒரு கருத்தியல் பிரதி என்கிறோம். அது வைதீகம் என்ற ஓர் அதிகார மையத்தை உருவாக்குவதற்கான முயற்சியாகவே நமக்குப் படுகிறது. வேதாந்தம் என்ற ஒற்றைத் தத்துவ அதிகாரத்தைக் கட்டியெழுப்பவே பிரம்ம சூத்திரம் முயற்சி செய்திருக்கிறது என்றே நமக்குப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக