வெள்ளி, 13 ஏப்ரல், 2018

மாமல்லபுரமும் காஞ்சியும் சோழநாடே!
கலிங்கத்துப் பரணி படித்தால் அறியலாம்!
-----------------------------------------------------------------------------
இலங்கை எறிந்த கருணாகரன்தன்
இசைவெஞ் சிலையின் வலி கேட்பீர்
கலிங்கம் எறிந்த கருணாகரன்தன்
களப்போர் பாடத் திறமினோ!
.....கலிங்கத்துப் பரணி கடைதிறப்பு......

பரணி என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களில்
ஒன்று. கலிங்கத்துப்  பரணியைப்  பாடியவர்
செயங்கொண்டார். பரணி பாடுவதெற்கென்றே
பிறவி எடுத்தவர் இவர். எனவே இவர் பரணிக்கோர்
செயங்கொண்டார் என்று பெயர் பெற்றார்.

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவர்க்கு வகுப்பது பரணி
என்பது பரணியின் இலக்கணம். எனவே
பெருவீரர்க்கே பரணி பாடப்படும்.

செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி
முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப்
போர் வெற்றியைப் பாடுவது. இது அசோகரின்
கலிங்கத்துப் போர் அல்ல. குலோத்துங்க சோழன்
வென்ற கலிங்கப் போர். கலிங்கம் என்பது இன்றைய
ஆந்திரா ஒடிஷா பகுதிகளை உள்ளடக்கியது.

கலிங்கப்போர் பன்னிரண்டாம் நூற்றாண்டின்
முற்பகுதியில் நடைபெற்றதாகக் கருதப் படுகிறது.

காஞ்சி இருப்பக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி இருப்பக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ.
(கலிங்கத்துப் பரணி கடை திறப்பு)

கலவியின் போது, பெண் உடுத்தியிருந்த  சேலை
இடுப்பில் நிற்காமல் அவிழ்ந்து விடுகிறது. ஆனால்
இடுப்பில் அணிந்த ஒட்டியாணம் கழன்று விடாமல்
இடுப்பிலேயே இருக்கிறது. பெண்ணே, அதே போல
எங்கள் மன்னன் குலோத்துங்கன் காஞ்சியிலே
தங்கியிருக்க, அவனின் படைத்தளபதி கருணாகரன்
கலிங்கம்  சென்று கலிங்கத்தை அழித்தான்.
அந்தப் போரின் வெற்றியைப் பாட இசைவாக
தாழிட்ட கதவைத் திறப்பாயாக.

இதுதான் மேற்கண்ட பாடலின் பொருள். காஞ்சி
கலிங்கம் என்ற சொற்கள் இடம் கருதி வெவ்வேறு
பொருள் தரும் நயம் இத்தாழிசையின் சிறப்பு.

கலிங்கத்துப் பரணியைப் படித்தால் என்ன தெரியும்?
சோழர் வரலாறு தெரியும். காஞ்சியும் மாமல்லபுரமும்
சோழரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் என்று
தெரியும்.

பல்லவர்கள் தமிழ் மன்னர்கள் அல்லர். அவர்கள்
அயலவர்கள். அவர்கலின் ஆட்சிக் காலம்
ஏறத்தாழ நானூறு ஐநூறு ஆண்டுகளே. கிபி 300
முதல் கிபி 630  வரை பல்லவர்கள் காஞ்சியை ஆண்டனர்.
மீதிக் காலம் முழுவதும் காஞ்சியும் மாமல்ல புரமும்
சோழரின் ஆட்சிக்கு உட்பட்ட நிலங்களே.

எனவே காஞ்சி சோழருக்கு உரித்தானதே. பல்லவருக்கு
உரியதன்று. டாக்டர் மா ராசமாணிக்கனார் அவர்கள்
பல்லவர் வரலாறு என்று ஒரு நூல் எழுதியுள்ளார்.
இது பெரிய நூல். பல்லவப் பேரரசர் என்று ஒரு சிறிய
நூலும் எழுதி உள்ளார். இவற்றைப் படித்தால்
பல்லவர் வரலாற்றை அறியலாம்.

பல்லவர் வரலாற்றை அறிந்த யாரும் காஞ்சி
பல்லவர்க்கு மட்டும் உரித்தானது என்ற மடமையை
ஏற்க மாட்டார்கள்.

கலிங்கத்துப் பரணியைப் படித்திராதோர்
இலக்கியம் என்னும் பெருங்கடலில் பயணம்
செய்யாதோரே! அதிலும் கடைதிறப்பு
அற்புதமான சிருங்காரச் சுவை நிரம்பியது.

கலவிக் களியின் மயக்கத்தால்
கலை போய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென்று எடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடம் திறமினோ.

இந்தப் பாடல் காதலுக்காக!

பொருதடக்கை வாளெங்கே மணிமார்பெங்கே
போர்முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோளெங்கே எங்கே என்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்!

இந்தப்பாடல் வீரத்துக்காக!
 -----------------------------------------------------------------------------------
           


      



     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக