புதன், 10 பிப்ரவரி, 2016

2016 தேர்தலில் எந்தக் கூட்டணியை ஆதரிப்பது?
போகாத ஊருக்கு வழிகாட்டும் பார்ப்பன அறிவுஜீவிகள்!
----------------------------------------------------------------------------------
அதிமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்து
விட்டது. திருமண ஜோடிகளின் தலையில் கூட ஜெயலலிதா
ஸ்டிக்கர் ஓட்டுகிற  அளவுக்கு அதிமுக ஆட்சி
கோமாளித்தனமும் வக்கிரமும் கொண்ட ஆட்சி ஆகிவிட்டது.
ஹெலிகாப்டரை, கார் டயரைக் கும்பிடுகிற அமைச்சர்கள்,
மக்கள் மத்தியில் அறவே மதிப்பிழந்து பொய் விட்டார்கள்.

இந்தியாவிலேயே வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு
ஊழல் தலை விரித்து ஆடுகிறது. ஊழல் என்பது நிறுவனமயமாகி
விட்டது. அமைச்சர்கள் கேட்கும் லஞ்சப் பணத்தைப் பெற்றுத் தர முடியாமல் அதிகாரிகள் தற்கொலை செயது கொள்வது
இந்த ஆட்சியில் வாடிக்கை  ஆகி விட்டது.   

சட்டமன்றம் தன் வரலாற்றில் காணாத இழிவைச் சுமந்து
கொண்டு நிற்கிறது. மழை  பெய்தபோது நள்ளிரவில் ஏரித்
தண்ணீரைத் திறந்து விட்டு மக்களின் உயிருக்கு உலை
வைக்கிற இந்த ஆட்சி வேண்டாம் என்று மக்கள் தீர்மானித்து
விட்டார்கள். பாரம்பரியமாக அதிமுகவுக்கு ஆதரவு அளித்து
வரும் சமூகத்தினர் கூட இன்று அதிமுக வேண்டாம் என்று
முடிவெடுத்து விட்டார்கள்.

ஆக  ஆட்சி மாற்றம் உறுதி ஆகி விட்டது. அப்படியானால்
அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? திமுகதான்.
திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டின்
பெரிய கட்சிகள். அதிமுக ஆட்சியை இழக்குமேயானால்,
திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும்.

அரசியல் என்பது பைனரியாகவே உள்ளது. அமெரிக்காவில்
குடியரசுக் கட்சி ஆட்சியை இழக்குமானால் ஜனநாயகக்
கட்சிதான் ஆட்சிக்கு வரும். பிரிட்டனில் கன்சர்வேட்டிவ்
கட்சி ஆட்சியை இழக்குமானால் லேபர் கட்சிதான்
பதவிக்கு வரும். இதுதான் உலகம் முழுவதும் உள்ள நிலவரம்.
மற்றக் கட்சிகள் இருக்கலாம்; இருக்கும்; அவை தங்களுக்கான
இடங்களைப் பெறும். ஆனால் ஆட்சியைப் பிடிக்க இயலாது.

கேரளத்தில் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும்தான் மாறி மாறி
ஆட்சியைப் படிக்கின்றன. மூன்றாவதாக உள்ள பாஜக
அங்கு ஆட்சியைப் பிடிப்பதை விடுங்கள், ஒரு நாடாளுமன்ற
இடத்தைக் கூட இன்று வரை பிடிக்க முடியவில்லை.

ஆக, அதிமுக ஆட்சியை இழக்கும் என்பது உறுதியாகி விட்டது
என்பதன் பொருள் திமுக ஆட்சியைப் பிடிக்கிறது என்பதுதான்.
ஏனெனில் திமுக அதிமுக  இரண்டும் ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்கள். ஒன்று தலை விழும். அல்லது பூ விழும்.
மூன்றாவது வாய்ப்பு என்பது கிடையாது.

இந்த உண்மை உறைக்கத் தொடங்கியதுமே பார்ப்பன
அறிவுஜீவிகள் நிலைகுலைந்து போய் விடுகிறார்கள்.
சோ ராமசாமி, ஞானி சங்கரன், பத்ரி சேஷாத்ரி ஆகியோர்
வயிற்றில் கத்தியால் குத்துப்பட்டது  போல அலறுகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று
நரித்தனமாகச் சிந்திக்கிறார்கள். அப்படி அவர்கள் சிந்தித்துக்
கண்டு பிடித்ததுதான் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு
தேடும் முயற்சி. அதிமுகவுக்கு எதிரான வாக்குகள்
(anti incumbency) திமுகவுக்கு முழுவதும் போய் விடாமல்,
அதில் கொஞ்சத்தை ம.ந.கூட்டணிக்கு மடைமாற்றி
விடுவதன் மூலம் திமுகவை பலவீனப் படுத்துவது
என்பதுதான் இவர்களின் திட்டம்.

அதிமுகவும் வேண்டாம்; திமுகவும் வேண்டாம்; மூன்றாவதாக
உள்ள ம.ந.கூட்டணியை ஆதரியுங்கள் என்று இவர்கள்
வேண்டுகோள் விடுப்பது சாராம்சத்தில் அதிமுகவுக்கு
ஆதரவு தேடும் முயற்சியே.

ம.ந.கூட்டணி நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது என்பது
இந்தப் பார்ப்பன அறிவுஜீவிகளுக்கு நன்கு தெரியும்.
ஞானியும் பத்ரியுமே ம.ந.கூட்டணிக்கு வாக்களிக்க
மாட்டார்கள். அவர்கள் அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள்.
இருந்தாலும் மக்களை ஏமாற்ற இப்படி நயவஞ்சமாகப்
பேசுகிறார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக (3.6),
கம்யூனிஸ்ட் (0.5), மார்க்சிஸ்ட் (0.5), விசிக (1.25)
என்று இந்த நான்கு கட்சிகளும் சேர்ந்து பெற்ற வாக்குகள்
6 சதம் மட்டுமே. இதுதான் இவர்களின் வாக்கு வங்கி.
இதை வைத்துக் கொண்டு 234 தொகுதிகளிலும்
போட்டி இட்டால், அத்தனை தொகுதியிலும் டெப்பாசிட்
இழப்பது உறுதி. இவர்களுடன் தேமுதிக (5.1) சேர்ந்தாலும்
மொத்த வாக்குகள் 12 சதம்தான் வரும். இந்த 12 சதத்தை 
வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது.
234 தொகுதியிலும் டெப்பாசிட் பெறலாம். அவ்வளவுதான்.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது.
மக்கள் நலக் கூட்டணி ஒருநாளும் ஆட்சியைப் பிடிக்க
முடியாது. திமுக அல்லது அதிமுக மட்டுமே 2016இல்
ஆட்சியைப் பிடிக்கும். இவ்விரண்டில், திமுக ஆட்சிக்கு
வருவதற்கான வாய்ப்பே மிகவும் அதிகம்.
------------------------------------------------------------------------------------------ 
பின்வரும்   இணைப்பைப் படியுங்கள்.   
இணைப்பு
-------------------- 
2014 ஏப்ரல்-மே நாடாளுமன்றத் தேர்தல்:
கட்சிகள் பெற்ற வாக்குகளும் சதவீதமும்:
மாநிலம்: தமிழ்நாடு 
-------------------------------------------------------------------
கட்சி           வாக்குகள்          சதவீதம் 
 --------          ------------------       ----------------  
அதிமுக    1,74,87,733                44.3

திமுக          92,56,923                 23.4 

தேமுதிக   20,19,796                  5.1

பாமக          17,69,970                  4.5

மதிமுக      14,16,035                  3.6

CPI                   2,15,455                  0.5

CPM                 2,06,904                  0.5

******************************************************* 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக