வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

எதிரி முகாமில் உள்ள முரண்பாடுகளை
நமக்கு ஆதாயமாகக்  கையாளுவது எப்படி?
பன்னீர்-சசி முரண்பாட்டைக் கையாளுதல்!
குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்களின் மடமை!
-----------------------------------------------------------------------------------------------------
1) "முரண்பாடுகள் பற்றி" என்று மாவோ ஒரு நூல்
எழுதி உள்ளார். எதிரிகளுக்கு இடையிலான
முரண்பாட்டைச் சரியாகக் கையாள்வது என்பதற்கு
மார்க்சியம் மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கிறது.

2) மார்க்சியம் மட்டுமல்ல, சாணக்கியர், திருவள்ளுவர்
உள்ளிட்டு உலகின் பல்வேறு சிந்தனையாளர்கள்
சமூக வளர்ச்சியின் பல்வேறு காலக்கட்டங்களில்,
முரண்பாடுகளைக் கையாளுவது பற்றி
போதனை செய்துள்ளனர்.

3) "எதிரிக்கு எதிரி நண்பன்" என்ற ஒரு பழமொழியை
நாம் அறிந்திருக்கலாம். இது என்ன? எதிரிகளுக்கு
இடையிலான முரண்பாட்டைக் கையாளுவது பற்றிய
ஒரு அறிவுரைதானே!

4) "தன்துணை இன்றால் பகைஇரண்டால் இன்துணையாக்
கொள்க அவற்றுள் ஒன்று.
இது ஒரு குறள். இதன் பொருளை அறியவும்.
திருக்குறள் தெளிவுரை புத்தகம் இருக்கிறதா?
அதைப்படித்துப் பொருள் அறியவும்.

5) வள்ளுவர் கூறியதும், எதிரிகளுக்கு இடையிலான
முரண்பாட்டைக் கையாளுவது பற்றிய சிறந்தவோர்
அறிவுரை அது.

6) இவ்வாறு அநேக உதாரணங்களைக் கூறலாம்.
புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: எதிரிகளுக்கு
இடையிலான முரண்பாட்டைக் கையாளுவது என்பது
உலகளாவிய செயல்: அது இயல்பானதும்கூட.

7) பன்னீர்-சசிகலா முரண்பாடு வரலாறு வழங்கிய ஓர்
அரிய வாய்ப்பு. ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த
பின்னால், வாராது வந்த மாமணி போன்றது.
அரசியல்ரீதியாக, 1) திமுக 2) பாஜக 3) பாமக ஆகிய
மூன்று கட்சிகளுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு.
மற்றக் கட்சிகளில் பல அல்லது அனைத்துமே
அதிமுகவை அண்டிப் பிழைப்பவை. எனவே
முரண்பாட்டைக் கையாளும் தேவை அவற்றுக்கு
எழவில்லை.

8) 1987-88இல் ஜானகி-ஜெயலலிதா முரண்பாட்டைச்
சிறப்பாகக் கையாண்டு ஆட்சியைப் பிடித்தார்
கலைஞர்; கட்சியையும் வளர்த்தார். அதுபோல,
பன்னீர்-சசி முரண்பாட்டைச் சிறப்பாகக் கையாண்டு
2018இல் முதல்வராக வேண்டியது ஸ்டாலினின்
பொறுப்பு. அதை அவர் எவ்வாறு சிறப்பாகச்
செய்யப் போகிறார் என்பதை எதிர்காலம் கூறும்.

9)பன்னீர்-சசி மோதலால், அதிமுக அழிந்தாலோ
அல்லது வெகுவாக பலவீனப்பட்டாலோதான்
தமிழகத்தில் பாஜக வளர முடியும். திமுகவில் இருந்து ஒருவரைக்கூட பாஜகவால் இழுக்க முடியாது. ஆனால்
அதிமுக அப்படி அல்ல. எந்தக் கொள்கையும் இல்லாமல்,
சினிமாக் கவர்ச்சியின் அடித்தளத்தில் கட்டப் பட்ட
ஒரு தளர்வான கட்டுமானம் உடைய கட்சி அதிமுக.
(ADMK is a loosely knit body). அக்கட்சி உடைந்து பலவீனம்
அடையும்போது, அக்கட்சியின் தலைவர்களையும்,
அதைவிட முக்கியமாக, அக்கட்சியின் வெகுஜன
அடித்தளத்தையும் பாஜக கைப்பற்ற வேண்டும்.
அப்படிக் கைப்பற்றினால்தான் பாஜகவுக்கு
தமிழ்நாட்டில் எதிர்காலம். இது சாத்தியமானதே.

10) ஆனால், குறைவான IQ உடைய தமிழிசை,
வெகுஜன உளவியலுக்கு எதிராகவே எப்போதும்
பேசும், செயல்படும் ஹெச் ராஜா, ஹோமியோபதிச்
செயல்பாடு கொண்ட பொன்னார் ஆகியோரை
வைத்துக் கொண்டு, பாஜக இந்தப் பணியை எவ்வளவு
தூரம் வெற்றிகரமாகச் செய்யும்? இதற்கு
எதிர்காலம் பதில் கூறும்.

11) அன்புமணி, ராமதாஸ் இருவரும் அதிமுக பிளவில்
தங்கள் பங்கான கேக்கை வெட்டிச் சாப்பிட வாய்ப்பு
அதிகம்.

12) ஸ்டாலின் 2018இல் அல்லது 2017 இறுதியில் (தேர்தல்
மூலம்) முதல்வர் ஆகாமல், அதிமுகவின் வீழ்ச்சி
சாத்தியமல்ல. எனவே பாஜக, பாமக ஆகிய
கட்சிகளுக்கும் ஸ்டாலின் முதல்வராவது அவசியம்.
ஸ்டாலின் முதல்வர் ஆகாமல் பாஜக, பாமக
கட்சிகளால் அதிமுகவின் இறைச்சியை உண்ண
முடியாது.

13) இதுதான் தமிழகத்தின் அரசியல். இதைப் புரிந்து
கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் கூர்மதியும்
நுண்மாண் நுழைபுலமும் தேவை. அவை இல்லாத
அரைவேக்காட்டு, அரைக்கால் வேக்காட்டு
நுனிப்புல்லர்களால் இதை புரிந்து கொள்ள இயலாது.

14) குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்களுக்கு
முரண்பாட்டைக் கையாளுவது பற்றி ஆனா ஆவன்னா
கூடாது தெரியாது. அதற்குக் காரணம் அவர்களை
வளர்த்த குட்டி முதலாளித்துவ மூடத் தத்துவமே.
எனவே அவர்கள் பன்னீர் ரசிகர் மன்றம் அல்லது
சசிகலா ரசிகர் மன்றங்களை அமைத்துக் கொண்டு,
பன்னீர்-சசியின் ஆளுயர கட்-அவுட்டுகளை
மாலைகளால் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
***********************************************************************
                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக