சனி, 4 பிப்ரவரி, 2017

வாளி என்பது தொழில்நுட்பம் அல்ல!
எண்ணூர் கடற்பகுதியில் பெட்ரோலிய
எண்ணெய் சிந்திய விவகாரம்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
திரவ நிலையில் உள்ள பெட்ரோலியமே எண்ணெய்
எனப்படுகிறது. உடனடிப் பயன்பாட்டுக்கு ஏற்ற
விதத்தில் இது பண்படுத்தப்படாத நிலையில்
உள்ளபோது கச்சா எண்ணெய் (crude oil) எனப்படுகிறது.

ஆறேழு நாட்களுக்கு முன்பு, சென்னை எண்ணூர்
அருகே, கடலில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதை
அடுத்து, கச்சா எண்ணெய் கடலில் சிந்தி விட்டது.
அதிர்ஷ்ட வசமாக இவ்வாறு சிந்திய எண்ணெயின்
அளவு அதிகமாக இல்லை. அதிகமாக இருந்திருந்தால்
உடனடியாகத் தீப்பிடித்துக் கொண்டிருக்கும்.
தீப்பிடிக்கவில்லை என்பது பெரிய ஆறுதல்.

கடலோரக் காவல்படையினர், துறைமுகப் பணியாளர்
ஆகியோர் தனியார் நிறுவனங்கள், உள்ளூர் மீனவர்கள் பொதுமக்கள் ஆகியோரின்  உதவியுடன் சிந்திய
எண்ணெய்க் கழிவுகளை அகற்றி வருகின்றனர். சிந்திய எண்ணெய் அகற்றப் பட்டு வருவதாக கடலோரக்
காவல்படை தலைமை அதிகாரி தெரிவிக்கிறார்.

இங்கு ஒரு விஷயத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
சிந்திய எண்ணெய்க் கழிவுகளை அகற்றுவதில்
மனித முயற்சி குறைவாக இருப்பினும், அல்லது
அறவே இல்லாமல் இருப்பினும்கூட, சிந்திய எண்ணெய்
ஆவியாகி காலப்போக்கில் வளிமண்டலத்தில் கலந்து விடும்.

ஏனெனில் திரவ பெட்ரோலியம் வேகமாக ஆவியாகும்
தன்மை உடையது. (highly evaporative). இது ஆவியாகும் வேகம்
சாதாரண வேகத்தில் ஆவியாவதில்லை; மாறாக,
நேரத்தைப் பொறுத்து பத்தின் மடங்குகளான வேகத்தில்  ஆவியாகும் (at a logarithmic rate w.r.t time).

இவ்வாறு ஆவியாவதில் கடல் ஒரு முக்கியமான
பாத்திரத்தை வகிக்கிறது. கடல் நீர் என்பது
கிணற்று நீரைப்போல தேங்கிக் கிடப்பதல்ல.
கடல் நீர் சதா ஓடிக்கொண்டே இருப்பது. மேலும்
அலைகள் அடித்துக் கொண்டே இருக்கும். இதனால்
தண்ணீர் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.
மேலும் கடலில் வீசும் காற்றும், சூரிய வெப்பமும்
விரைவில் ஆவியாவதற்குத் துணை புரியும்.

பெட்ரோலியத்தின் ஆவியாகும் இயல்புடன், சரியான
மனித முயற்சியும் சேரும்போது, சிந்திய எண்ணெயை,
படர்ந்த எண்ணெய்ப் படலத்தை அகற்றுவது
எளிதானதாகி விடுகிறது.

வாளிகளுடன் பலரும் எண்ணெய் கலந்த ஈரப்பதமான
மண்ணை (sludge) அள்ளுவதைப் பார்த்த பலரும்,
"வாளிதான் கிடைத்ததா, வேறு நவீன தொழில்நுட்பம்
எதுவும் இல்லையா" என்று அங்கலாய்த்து வருகின்றனர்.
இத்தகைய புலம்பல்கள் அறியாமையால் விளைபவை.

வாளி என்பது ஒரு கருவி; ஒரு பாத்திரம் (container). அது
தொழில்நுட்பமோ தொழில்நுட்பத்தின் குறியீடோ
அல்ல. எவ்வளவு நவீன தொழிநுட்பமாக இருந்தாலும்
வாளி போன்ற பாத்திரங்கள் தேவைப்படும்.
சோதனைக்குழாய் (test tube) , குவளை(mug),
வாளி, பீப்பாய் ஆகிய இவை யாவுமே பாத்திரங்கள்தான்.
வாளி என்பது frustum வடிவிலான, கையாள்வதற்கு லகுவான
ஒரு பாத்திரம். எனவே வாளியைப் பயன்படுத்துவதால்,
பழங்காலத் தொழில்நுட்பம் என்று கருதுவது அறியாமையே.

சிந்திய எண்ணெயை அகற்றுவதில் பயன்பட்ட
தொழில்நுட்பம் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
*******************************************************************  
  



     



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக