ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

கடவுள் இல்லை என்று தர்க்க ரீதியாக
ஆராய்ந்து ஒருவர் முடிவுக்கு வருதல் வேண்டும்.
வெறுமனே வறட்டு நம்பிக்கை சார்ந்து
கடவுள் மறுப்பாளர் என்று உரிமை கோருவது
போலி நாத்திகத்திற்கே இட்டுச் செல்லும்.


கடவுளை வீழ்த்திய பாவேந்தர்!
-------------------------------------------------------
எழுப்புசுவர் உண்டெனில்
எழுப்பியவன் ஒருவன் உண்டே
இவ்வுலகு கண்டு
நீ யாம் உண்டென அறிக
என்றார் கடவுள்.

கனமான கடவுளே
உமைச் செய்த சிற்பியெவன் காட்டுவீர்
என்றவுடன்
கடவுளைக் காண்கிலேன்
அறிவியக்கப் புலமை கண்ட
என் அன்னை நாடே!
------பாவேந்தர் பாரதிதாசன்--------------- 
**************************************************
பின்குறிப்பு: பொழிப்புரை தேவையில்லை என்று
கருதுகிறேன்.
----------------------------------------------------------------------------------------

இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லும் உரிமை!
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் உரிமை!
---------------------------------------------------------------------------------------
பெருவாரியான தேவேந்திரர்களின் குரலையே
டாக்டர் கிருஷ்ணசாமி பிரதிபலிக்கிறார். பல
ஆண்டுகளாக இதைப் பொதுவெளியில் சொல்லாமல்
தவிர்த்து வந்தார். தற்போது சொந்த சாதி மக்களின்
வற்புறுத்தல் காரணமாக பொதுவெளியில்
கூறியுள்ளார்.

கிறிஸ்துவர்களுக்கு 3.5 சதம் இடஒதுக்கீட்டை கலைஞர்
வழங்கினார். அச்சமூகத்தின் தலைவர்கள்
இடஒதுக்கீடு வேண்டாம் என்று
திருப்பிக் கொடுத்தனர். இது போலவே, ஒரு சமூகமாக
இட ஒதுக்கீடு வேண்டாம்  என்று சொல்வதற்கு
தேவேந்திரர் சமூகத்திற்கு உரிமை உள்ளது.
அச்சமூகத்தின் குரலை அவர்களின் தலைவரான
டாக்டர் அவர்கள் ஒலிப்பதற்கு எல்லா உரிமையும் உண்டு.

நான் மதிப்புக்குரிய குருசாமி சித்தர் ஐயா அவர்களுடன்
இது பற்றி மணிக்கணக்கில் உரையாடியவன்.
செந்தில் மள்ளரின் மீண்டெழும் பாண்டியர் வரலாறு
என்ற நூலைப்படித்தவன். இன்னும் நிறைய என்னால்
சொல்ல முடியும்.


தோழர் செந்தில் மள்ளரின் இரண்டாவது நூல் வெளியீட்டு
விழா சென்னை எழும்பூரில் சில ஆண்டுகளுக்கு
முன்பு நடந்தபோது, காவல் துறை வெளியீட்டு
விழாவைத் தடை செய்தது. அப்போது இக்சா மையத்தில்   
குருசாமி சித்தர் மற்றும் பலர் உட்கார்ந்து
மணிக்கணக்கில் இப்பிரச்சினையை (இடஒதுக்கீடு
வேண்டாம் என்பது) விவாதித்தனர். இந்த விவாதத்தில்
நானும் பங்கேற்றேன். டாக்டர்
கிருஷ்ணசாமி அவர்களிடம் இதை வலியுறுத்த
வேண்டும்  என்று முடிவு செய்து அதற்காக ஒரு
குழுவும் அமைக்கப் பட்டது.

டாக்டர் அவர்கள் தேவேந்திர குல  மக்களின்
இதயஒலியை பிரதிபலிக்கிறார். இது அவரின்
கடமை. இதற்காக பலர் அவரைத் திட்டலாம்;
அவதூறு செய்யலாம். ஆனால் டாக்டர் அவர்கள்
தேவேந்திர குல மக்களின் குரலாக ஒலிப்பதை
எவராலும் தடை செய்ய முடியாது. அதற்கு
எவருக்கும் உரிமை இல்லை.

தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா
என்பதை தேவேந்திர குல மக்களும் அம்மக்களின்
தலைவராகிய டாக்டர் அவர்களும் முடிவு
செய்வார்கள். இது அம்மக்களின் உரிமை.
இந்த உரிமைக்கு வேறு எவரும், மற்றவர்கள்
எவரும் தடை போட  முடியாது. தேவேந்திர குல
மக்களின் மனப்போக்கிற்கு எதிராக டாக்டர்
அவர்கள் முடிவு செய்வாரேயானால், அம் மக்களே
அவரைத் தூக்கி எறிவார்கள். இதில் மற்றவர்கள்
தலையிட்டு அவதூறு செய்வதை ஏற்க இயலாது.
**************************************************************

கிறிஸ்துவப் பெருமக்கள் கலைஞர் வழங்கிய
3.5 சத இட ஒதுக்கீட்டை ஏற்க மறுத்து, அரசிடமே
திருப்பிக் கொடுத்தனரே, ஏன்? என்ன காரணம்?
என்றாவது சிந்தித்துப் பார்த்தது உண்டா?

தோழர் செந்தில் மள்ளர் எழுதிய "வேந்தர் குலத்தின்
இருப்பிடம் எது?" என்ற நூலைப் படியுங்கள்.
தேவேந்திரரை பட்டியல் இனத்தில் சேர்த்தது
பற்றிய வரலாற்றை விரிவாக எழுதி இருப்பார்.

டாக்டர் குருசாமி சித்தர் யார் என்று தெரியுமா?
(இவர் சாமியார் அல்ல, படித்த பொறியாளர்,
அரசு அதிகாரி). தோழர் செந்தில் மள்ளர்
யார் என்று தெரியுமா? இவர்களின் நூல்களைப்
படித்து, இவர்களின் கருத்தை அறியாமலே,
விமர்சனம் செய்வது சரியா?

கொடுத்த இடஒதுக்கீட்டை வேண்டாம் என்று
மறுக்கிற உரிமை கிறிஸ்துவர்களுக்கு மட்டும்தான்
உண்டா? தேவேந்திரர்களுக்கு அது கிடையாதா?

ஓட்டரசியலில் இருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்
முட்டாள் அல்ல. தன சொந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாத
ஒன்றை பொதுவெளியில் பேசுகிற அளவுக்கு அவர்
விவரம் தெரியாதவர் அல்ல. தேவேந்திர சமூகத்தின்
உள்ளக் கிடக்கையைத்தான் அவர் பேசுகிறார்.
டாக்டரை முட்டாளாக எடை போட  வேண்டாம்.
அவர் ஒட்டு அரசியலின் நுணுக்கம் தெரியாமல்
பேசுபவர் அல்ல.

தோழர் செந்தில் மள்ளர் எழுதிய "வேந்தர் குலத்தின்
இருப்பிடம் எது?" என்ற நூலைப் படித்தவர்களுக்கு 
மட்டுமே டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின்
கருத்தை விமர்சனம் செய்யும் தகுதி உண்டு.
டாக்டர் அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்
என்பதற்கான நியாயங்கள் அந்த நூலில் உள்ளன.
அந்த நூலில் உள்ள கருத்துக்களையே டாக்டர் அவர்கள்
பேசுகிறார்.

ஆம், பட்டியல் இனம் என்னும் அடிமைத் தனத்தில்
இருந்து வெளியேற வேண்டும் என்பதே தேவேந்திர
குல  மக்களின் கோரிக்கை. அதையே டாக்டர் அவர்கள்
பிரதிபலிக்கிறார். 
 

உள்நுழைவதும் வெளியேறுவதும் இயற்கையே!
---------------------------------------------------------------------------------------
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு
சாதிகள் BC, MBC, SC, ST பட்டியலில் புதிதாக நுழைந்து
கொண்டுதான் இருக்கின்றன. கலைஞர் ஆட்சியில்
எத்தனையோ சாதிகள் BC பட்டியலிலும் MBC பட்டியலிலும்
சேர்க்கப் பட்டன.
**
குஜராத்தில் பட்டேல் சமூகம் BC ஆக்கச் சொல்லிப்
போராடுகிறது. ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகம்
போராடுகிறது, ஹரியானாவில் ஜாட் சமூகம்
போராடுகிறது. இவையெல்லாம் இயற்கையே.
அதேபோல, தேவேந்திரர் சமூகம் BC பட்டியலில்
சேருங்கள் என்கிறது. இதில் தவறு என்ன?

BC பட்டியலில் சேரலாமா அல்லது MBC பட்டியலில்
சேரலாமா என்பது பற்றித்தான் தற்போது தேவேந்திர
சமூக இளைஞர்கள் பட்டி மன்றம் நடத்திக் கொண்டு
இருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.

தேவேந்திர குல சமுதாயத் தலைவர்கள் பலர்  இதே
கருத்தை நீண்ட  காலமாகச் சொல்லி வருகிறார்கள்.
டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமே இதை ஏற்க
மறுத்து வந்தார். தற்போது அவரும் தன் சொந்த
சாதி மக்களின் குரலை ஒலிக்கத்  தொடங்கி
உள்ளார்.

எனக்குத் தெரிந்து டாக்டர் குருசாமி சித்தர் அவர்கள்
25 ஆண்டு காலமாக இந்தக் கருத்தைப் பேசியும்
எழுதியும் வருகிறார். முதலில், படித்த, வெளிநாடு
சென்று சம்பாதிக்கிற தேவேந்திரர்களின் கருத்தாக
மட்டுமே இது இருந்தது. இன்று அப்படியல்ல.
படிக்காத அல்லது SSLC மட்டுமே படித்த வயல் வேலை
செய்து வரும் இன்றைய தலைமுறை கூட,
இக்கருத்தை ஆதரிக்கிறது. இதுதான் கள யதார்த்தம்.
  

பட்டியல் இனச் சிறை எங்களுக்கு வேண்டாம் என்பதே
டாக்டர் அவர்களின் கருத்து. BC அல்லது MBCயில்
சேர்க்க வேண்டும் என்பதே உள்ளக் கிடக்கை. 

SC பட்டியலில் இருப்பதால்தான் வளர்ச்சிக்கான
எல்லாக் கதவுகளும் அடைபட்டதாக தேவேந்திர
குல  மக்கள் கருதுகிறார்கள். அதற்கான ஆய்வு
முடிவுகளையும் அவர்கள் வைத்து இருக்கிறார்கள்.

தோழர் செந்தில் மள்ளரின் நூல்களைப் படியுங்கள்.
அவர்கள் தரப்பு நியாயங்களை அறிந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு விமர்சனம் செய்யுங்கள்.

பெரியாரைத் தலைவராக ஏற்ற வைகோ தொடர்ந்து
ஆர் எஸ் எஸ்சிடம் விலை போகவில்லையா?
ஆர் எஸ் எஸ் அமைப்பின் கைக்கூலி ஆகவில்லையா?
DEMONETISATION ஐ சமீபத்தில் ஆதரிக்கவில்லையா?  

வெறும் கெரவத்திற்காக மட்டும் அல்ல. பொருளியல்
வணிகம் ஆகிய துறைகளில் முன்னேற, பட்டியல்
இனத்தான் என்ற அடையாளம் தடையாக இருப்பதாக
அச்சமூகம் உணர்கிறது. ஆக இவர்களின்
கோரிக்கையின் பின்னால் ஒரு வலுவான பொருளியல்
அடித்தளம் இருக்கிறது. பல்வேறு உதாரணங்களை
என்னால் சொல்ல முடியும். அந்த சமூகத்தின்
கோரிக்கை என்ன, அது நியாயமா என்று மட்டும்தான்
மற்றவர்கள் பார்க்க வேண்டும். சாதியரீதியாக
அவமானப் படுத்தும் நோக்கில் அச்சமூகத்தின்
கோரிக்கையை உதாசீனம் செய்யக் கூடாது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக