வியாழன், 1 ஜனவரி, 2015

ஆண்டாளின் புகழ் பாடிய 
கிருஷ்ண தேவராயர்!
------------------------------------------ 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------- 

வரலாற்றுப் பாடத்தில் கிருஷ்ண தேவராயரை 
நாம் அறிந்து இருப்போம். அவர் இலக்கியப் பாடத்திலும் 
இடம் பெறும் தகுதி வாய்ந்தவர் ஆவார்.

விசயநகரப் பேரரசை இருபது ஆண்டுகள் 
ஆண்டவர் ராயர். (கிபி 1509 முதல் 1529 வரை ).
நாட்டுக்கு அரசர் மட்டுமின்றி அவர் கல்விக்கும் 
அரசர் ஆவார். பெரும் புலவர், பெருங்கவிஞர் அவர்.

ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப் பட்ட 
பாடல் பெற்ற தமிழகத் திருத்தலங்கள் பலவற்றுக்கும் 
சென்று வழிபட்டவர் ராயர். கும்பகோணத்தில் மகாமகத்தில் 
குளித்தவர் அவர் என்பவை எல்லாம் வரலாறுகள். 

ஆண்டாளின் புகழ் பாடும் காவியம் 
--------------------------------------------------------- 
ஆண்டாள் தமிழை ஆண்டாள்! இறைவனையும் 
ஆண்டாள்! ஆண்டாளின் வரலாற்றை "ஆமுக்த மால்யதா"
என்ற நூலாகத் தெலுங்கில் எழுதி உள்ளார் ராயர்.

ஆமுக்த மால்யதா என்றால் சூடிக் களைந்த மாலையைத் 
தந்தவள் என்று பொருள். ஆண்டாள் சூடிக் கொடுத்த 
சுடர்க்கொடிதானே!

இந்நூலை பன்மொழிப் புலவர் மு.கு.செகன்னாத ராசா 
தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். அதில் இருந்து 
ஒரு சிறிய எடுத்துக் காட்டைப் பார்ப்போமா!

"நங்கை தன்  இரு கைகளாலும் தலையரிசி 
வாரி எடுத்தபோது, ஏந்திள வனமுலைகள்பால் 
திருமாலின் பார்வை சென்றது; நிலைத்தது.
இதனால் நாணமுற்று, தோள்களை மேலே தூக்காமலே 
நங்கை விரல்களைக் குவித்துத் தலையரிசி சொரிந்தாள் ".

மேற்கண்ட பகுதி சுவையாகவும் தமிழ் மரபை 
ஒட்டியும் இருக்கிறது அல்லவா! செகன்னாத ராசாவின் 
மொழிபெயர்ப்பில் இருந்த குறைகளைக் களைந்தும்
திருத்தியும் மேற்கண்ட தொடரை அமைத்து உள்ளேன்.

"வனமுலைகள் மேல் ஏந்தல் திருமால் விரைந்து 
கண் போடவே " என்பது செகன்னாத ராசாவின் மொழிபெயர்ப்பு.          
 எனவே எனது திருத்தம் ராயருக்கும் தமிழுக்கும் 
பெருமை சேர்க்கும் என்று நம்புகிறேன்.

***************************************************************  
  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக